வெங்கட் நாகராஜ்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நாற்பத்தியிரண்டு வயது வரை திருமணம் நடக்கவில்லை. நீண்ட காலமாக அவருக்கு ஒரு வரன் அமையாததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த வயதில் கல்யாணம் இனிமேலும் அவசியம் தானா என்ற எண்ணமும் அவருக்கு வலுவாக இருந்தது. இப்படியே இருந்துவிட்டு போலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு முறை தமிழகம் வந்தபோது தானாக வந்த ஒரு பெண்ணின் சம்பந்தம் அவருக்குப் பிடித்துப்போனது.
ஜானகி என்ற அந்த பெண் மிகுந்த திறமைசாலி. கர்நாடக சங்கீதத்திலும் அவருக்கு புலமை இருந்தது. நிறைய திறமைகள் இருந்தும் அவருக்கு ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டேயிருந்தது.
எந்தக் குறையுமில்லாமல் பிறந்து விட்டு பிறகு ஏதோ ஒரு விபத்திலோ அல்லது நமக்குப் புரியாத காரணங்களிலோ நமக்கு உடலில் குறை ஏற்படுவது என்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.
கல்லூரியில் ஜானகி படித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் மாலையில் கண் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களில் பார்வையில் கோளாறு ஏற்பட்டு அருகிலே இருப்பவர்களைக் கூட பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது.
கண் மருத்துவர்களிடம் காண்பித்தபோது கண்களில் ஏதோ குறை இருப்பதாகச் சொல்லி மருந்துகள் கொடுத்து இருக்கின்றனர். ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது பார்வை சுத்தமாகப் போய்விட்டது. பல கண் மருத்துவர்களிடம் காண்பித்த போது இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் பெறுவதுதான் என்று தெரிவித்துவிட்டனர் .
இந்த குறையின் காரணமாக ஜானகிக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே வந்தது. கண் பார்வை தெரியாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை, இந்த நிலையில்தான் நண்பர் தமிழகம் சென்ற போது, ஜானகியைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனக்கும் ஜானகிக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லாததால் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களின் வாழ்த்துக்களோடு அவரை திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த நல்ல குணத்தைப் பாராட்டாத ஆளில்லை.
தில்லிக்கு அழைத்துவந்த பிறகு இங்குள்ள பெரிய கண் மருத்துவர்களிடம் ஜானகியை அழைத்துச் சென்று காண்பித்த போதும் கண் தானம் தான் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்க ஒரே வழி என்று கூறி விட்டனர்.
கண் தானம் பெறுவதற்கு பலர் காத்திருக்கும் நிலையில் இவரது முறை வருவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை சுலபமாக அறுதியிட்டுக் கூற முடியாது.
இந்நிலையில் நண்பரின் தாயார் அவரது வயது காரணமாய் மரணம் அடைந்து விட, அவருடைய கண்களை எடுத்து ஜானகிக்கு வைத்து இருக்கலாமே என்று எனக்கு தோன்றியது. நேரம் கடந்துவிட்டதால் அது முடியாத காரியமாகிவிட்டது.
இறந்த சில மணி நேரத்திற்குள் அவரது கண்களை எடுத்து ஜானகிக்குக் கொடுத்திருந்தால்…இழந்திருந்த கண்பார்வை கிடைத்திருக்கும் அல்லவா?
கண் தானம் செய்வது பற்றி பலருக்கும் பெரிய பயம். உயிருடன் இருக்கும்போதே நம் கண்களைத் தானம் கேட்டு யாரும் வரப்போவதில்லை. நாம் மரணம் அடைந்த பின் நமது கண்களைத் தானம் செய்வதால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை. மாறாக நமக்குப் பிடித்த இவ்வுலகினை வேறு ஒருவர் அல்லது இருவர் மூலம் பார்க்க நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை நம்மில் பலரும் சிந்திக்க மறந்து விடுகிறோம் .
இப்போதெல்லாம் இரத்த வங்கிகள் போலவே கண் தானம் செய்ய விழையும் நபர்களுக்காகவே பல நகரங்களில் கண் வங்கிகளும் செயல்படுகின்றன.
ஆகையால் வாருங்கள் நண்பர்களே, இன்றே நாமும் நம் கண்களை தானம் செய்வதாய் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் கண் வங்கியில் நமது பெயரைப் பதிவு செய்து, அந்த விவரத்தினை நமது குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment on “சுடும் நிஜம்”
venkatnagaraj
எனது பதிவை இங்கே பகிர்ந்ததற்கு நன்றி குமார்.