மார்ச்-05.
மதுரை மக்கள் கொண்டாடும் ஒரு நிஜ நாயகனின் நினைவு தினம்.
ரோசாப்பூ துரை என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உற்ற நண்பரும் விடுதலை போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான ஜார்ஜ் ஜோசப்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுரை வட்டாரத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தி, சட்டம் கொண்டு வந்து இழிவுபடுத்தியபோது அச்சமூக மக்களுக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர். அது மட்டுமல்ல, அந்தக் காலத்திலயே தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர். மகாத்மா காந்தியின் நண்பர், சமூகப் போராளி, பத்திரிகையாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான கேரளத்தைச் சேந்த ரோசாப்பூ துரை என்ற ஜார்ஜ் ஜோசப்புக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு, அவருடைய பெயரை மதுரை தேனி மாவட்ட மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவது ஏன்? அரசும் ஆட்சியாளர்களும் அவரை மறந்த நிலையில், மதுரை வட்டார மக்கள் மட்டும் ஏன் இவரை கொண்டாடுகிறார்கள்?
கேரள மாநிலம் செங்கானூரில் 1887-ல் பெரும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜார்ஜ் ஜோசப். சிறு வயதிலயே கல்வியில் சிறந்து விளங்கியவர், பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் முடித்து, சட்டப்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்ற நேரத்தில்தான் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. தான் படித்த சட்டப்படிப்பால் பிரிட்டிஷ் அரசிடம் கிடைத்த வேலை வாய்ப்பை உதறிவிட்டு தேச விடுதலைக்குப் பயன்படுத்துவேன் என்று முடிவு செய்து நாடு திரும்பினார்.
முதலில் சென்னையில் குடும்பத்துடன் குடியேறியவருக்கு அங்குள்ள சூழல் ஒத்துவராததால், 1909-ல் மதுரையில் குடியேறி வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும், பல்வேறு சமூக பிரச்னைகளுக்காகக் களத்தில் இறங்கி போராடவும் செய்தார்.
1918-ல் கைரேகை சட்டத்தை பிரமலைக்கள்ளர் சமூக மக்களுக்கு எதிராக ஆங்கில அரசு கொண்டு வந்தபோது, பாதிப்பட்ட அம்மக்களுக்கு சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, இவரும் கலந்து கொண்டார்.
‘கிறிஸ்துவரான இவர் ஏன் இந்து மத பிரச்சினையில் தலையிட வேண்டும்..?’ என்று காங்கிரசிலுள்ள சனாதனவாதிகள் கேள்வி எழுப்பியபோது, ‘ தீண்டாமை என்பது மதத்தின் உள் பிரச்சினை அல்ல. அரசியல் உரிமையை அனைத்து மக்களுக்கும் தர மறுக்கும் செயல்’ என்று கூறினார்.
1918-ல் அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் கல்லூரி மணவர்கள், இளைஞர்கள் சேரக் கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்தரவு போட்டபோது அதை எதிர்த்துப் போராடினார்.
மதுரையில் நூற்பாலைகளை ஆங்கிலேயர் நிறுவிய நேரத்தில் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சங்கங்களை நிறுவி, கூலி உயர்வுக்கும் சலுகைகளுக்கும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
மகாத்மா காந்திக்கும் மோதிலால் நேருவுக்கும் அரசியலைக் கடந்து நண்பராக இருந்தார். நேருவின் சகோதரி விஜயலட்சுமியின் காதலுக்கு அவர் குடும்பத்தினரை சம்மதிக்க வைக்கும் அளவுக்கு நேரு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். நேருவின் ‘இன்டிபென்டன்ட்’, காந்தியின் ‘யங் இந்தியன்’ உட்பட அப்போது வந்த ஐந்து முன்னணி நாளிதழ்களில் ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராக பணியாற்றினார். விடுதலைப் போராட்டம் பற்றியும், சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் அழுத்தமான கட்டுரைகளை எழுதினார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து எழுதிய கட்டுரைக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததால், சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாத்மா காந்தியுடன் நட்பில் இருந்தாலும், அவருடைய சில கொள்கைகளுக்கு எதிர் கருத்தும் கொண்டிருந்தார். கதர் அணிய வேண்டும் என்று காந்தி வலியுறுத்தியபோது, பொருளாதார ரீதியாக அது மக்களுக்கு அதிக செலவை உண்டாக்கும் என்று அதற்கு மாற்று யோசனையையும் கூறினார். அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மீது கோபமடைந்து விலகி இருந்திருக்கிறார். ஆனால், அப்படி இருந்தபோது காந்தி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்கிச்செல்வார். மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் வறுமை நிலையை பார்த்து காந்தி அரையாடைக்கு மாறும்போது உடனிருந்தவர் ஜார்ஜ் ஜோசப். அவர்தான் காரணமான மக்களின் நிலையை எடுத்துக் கூறினார்.
இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கும் மக்களுக்கும் பாடுபட்டவரை, மதுரை நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்கடித்து மகிழ்ச்சி அடைந்தனர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால், சிறிது காலத்தில் சென்னை மாகாண சட்டசபைக்கு எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டு குறைந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டார். நாடு விடுதலை அடைவதைக் காணும் முன்பே 1938 மார்ச்சில் மறைந்தார் ஜார்ஜ் ஜோசப். கேரளாவில் பிறந்து நாடறிந்த பத்திரிகையாளர், விடுதலை வீரராகத் திகழ்ந்து மதுரை மக்களுக்கு நன்மை செய்து மதுரையிலேயே மறைந்தார். இவருடைய சிலை மதுரை யானைக்கல்லில் அப்போது அமைச்சராக இருந்த கக்கனால் அமைக்கப்பட்டது.
அவர் சட்டையில் தினமும் ரோஜா பூ ஒன்றை அணிந்திருப்பார் என்றும், ஜார்ஜ் ஜோசப் என்ற அவர் பெயரை உச்சரிக்கத் தெரியாமல் மக்கள் ‘ரோசாப்பூ துரை’ ஆக்கிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மக்கள் மனதில் வாழ்கின்ற தலைவர்களை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு ரோசாப்பூ துரை ஓர் உதாராணம்.
சிலை இருக்கும் இடம் : யானைக்கல் மதுரை.
நன்றி : கட்டுரையும் படமும் மதுரை வரலாறு முகநூல் பக்கத்தில் இருந்து.