(அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள்)
பாடல் விளக்கம் : மோகன் ஜி
படமும் பாடலும் : தேவா
ராகம் : மோஹனம்
பல்லவி
அதெ சூடரே மோஹன ரூபம்
பதி கோட்லு கல பாவஜ ரூபம்
சரணம் – 1
வெலயக பதஹாரு வேலு மகுவலனு
அலமின கன மோஹன ரூபம்
வலசின நந்த வஜ்ரமு கொல்லெதல
குலுகு சூபுலகு குரியகு ரூபம்
சரணம் – 2
இந்த்ர வனித நெப்புடு தன வர
மந்து நிலிபின மோஹன ரூபம்
கண்டுவ பூஸதி கோகிட ஸொம்புல
விந்துலு மரிகின வேடுக ரூபம்
சரணம் – 3
த்ருபுர ஸதுல போதிஞ்சி ரமிஞ்ச்சின
அபுரூபபு மோஹன ரூபம்
கபுருல ஶ்ரீ வேங்கட பதியை இல
உபமிஞ்ச கரானி வுன்னத ரூபம்
கீர்ரத்தனையின் பொருள் :
பல்லவி
மோகனமாக ஈர்த்திடும் பேரழகைப் பாருங்கள்.
பத்துகோடி மன்மதர்களின் அழகையும்கூட விஞ்சியதே அவன் சௌந்தரி்ய ரூபமல்லவா?
சரணம் – 1
பதினாராயிரம் கோபியர்களையும்
மயக்கியது அந்தப் பேரழகு ரூபம்.
பிருந்தாவனத்தின் கன்னிகையரையும்,
இடைவிடாது வெறித்து நோக்க வைத்தது நந்த வம்ச இரத்தினமான கிருஷ்ணனின் அழகிய ஸ்வரூபம்.
சரணம் -2
அரம்பையரும் எந்நேரமும் தம் நெஞ்சில் நிறுத்திய அழகிய ரூபம்.
அவன் அணைப்பெனும் அன்பின் விருந்தை வழங்கும் விந்தை ஸ்வரூபம்.
சரணம் 3
நினைத்துநினைத்து ஒன்றி வணங்கும்படியாக, மூவுலகங்களிலும் உள்ள பெண்டிர்தம் இதயங்களைக் கவர்ந்ததும் அந்த அழகிய ரூபம்.
அந்த பேரழகு ஸ்வரூபமே இப்போது நம்மெதிரே ஶ்ரீவேங்கடேஸ்வரனாக வடிவெடுத்து நிற்கிறது.
சில விளக்கங்கள்:
கிருஷ்ணரின் ஈடில்லாத அழகை எண்ணியெண்ணி மாய்ந்து போகிறார் அன்னமாச்சார்யார்.
கோபிகைகளும், அரம்பையரும், மூவுலகைச் சேர்ந்த மங்கையரும் கிருஷ்ணரின் அதிரூப லாவண்யத்தில் மயங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
தத்துவபரமாக, ஶ்ரீகி்ருஷ்ண பரமாத்மா ஒருவனே ஆண். ஜீவர்களாகிய நாம் யாவரும் பால்பாகுபாடின்றி, அவனில் மயங்கியிருக்க வேண்டிய பெண்மக்களே! அந்தக் கிருஷ்ணனே வேங்கடவனாகவும் இருக்கிறான்.
கோடி மன்மத ஸ்வரூபம்: காமதேவனான மன்மதன் பிரம்மனின் மானசப்புத்திரன் ஆவார்.
மனிதகுலம் அறாது தொடர, ஆண் பெண் இருவரிடையே நிலைக்க வேண்டிய ஈர்ப்பையும் காமத்தையும் தூண்டுகின்ற தேவனாக படைக்கப்பட்டார். இவரை திருமாலின் புத்திரன் என்றுகூட குறிப்பிடுவதும் உண்டு.
ஈடுயிணையற்ற சௌந்தர்யத்தை உடையவன் மன்மதன். ‘மனதை உன்மத்தம் கொள்ளச் செய்பவன்’ என்பது அவன் பெயரின் அர்த்தம்.
யோகத்திலிருந்த பரமசிவனார் மேலேயே தன் புஷ்ப பாணத்தைப் பிரயோகித்ததால், சிவனும் சினங்கொண்டு நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்க, காமதகனம் ஏற்பட்டது.
பராசக்தியின் அருளால், அனங்கனாக (உருவமற்றவனாக) ரதிதேவி கண்களுக்கு மட்டும் தெரிகின்றபடியாக மாறினான்.
இந்தப் பாடலில், அன்னமாச்சாரியார் ஸ்ரீகிருஷ்ணனை ‘பத்துகோடி மன்மதர்களின் மொத்த அழகையும் ஒருங்கே பெற்றவன்’ என்று பாடுகிறார்.
ஶ்ரீகிருஷ்ண சௌந்தர்யம் மகத்தானது. விவரிக்கவொண்ணாதது.
ஸ்ரீ கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், முருகன், பரதன் முதலானோராக மன்மதனே மீண்டும் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ணனின் பேரழகை ஆழ்வார்களும் சலிக்காமல் பாடி துதிக்கிறார்கள்.
அழகுக்கு பெயர்போனவர்கள் கந்தனும் கண்ணனும் அவர். அவர்களின் பேரழகை, சிறந்த கவிஞர்களும் ஓவியர்களும்கூட தமது கற்பனையின் எல்லைவரை மட்டுமே தொட முடியும்.
மன்மதனையும் பழிக்கும் அந்த பரம்பொருளின் எல்லையற்ற சௌந்தர்யத்தை, நம் ஊனக் கண்களாலும் மனக்கண்ணாலும்கூட காண முடியுமோ?!
இத்தனை பேரழகின் இருப்பிடமான நாராயணன், மோகினியாக பெண்ணுரு தாங்கி வந்து பஸ்மாசுரனை அழித்த கதை அறிவோம்.
ஆனானப்பட்ட சிவனே மோகினியின் ரூப லட்சணத்தில் மனம் பறிகொடுத்ததினால் ஹரிஹர புத்ரனாக சாஸ்தா பிறந்தார்.
மகாகவி பாரதியார் கண்ணனை காதலிக்கும் பெண்ணாக தன்னை வரித்துக்கொண்டு எழுதிய கண்ணன் பாடல்களில் ஒன்றைப் பார்ப்போம்.
‘ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி!’ என்று தொடங்கும் பாடலில்,‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்அதில் கண்ணன் அழகு முழுதில்லை
நன்னு முகவடிவு கானில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்!
கண்கள் புரிந்து விட்ட பாவம்-உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே-ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ…’
என்றும்,
‘கண்ணன் முகம் மறந்து போனால்- இந்தக்
கண்கள் இருந்தும் பயன் உண்டோ?
வண்ணப் படமும் இல்லை கண்டாய் –
இனி வாழும்
வாழும் வழி என்னடி தோழி?’
என்றும் நொந்து கொள்கிறார்.
மறக்கக் கூடியதா கண்ணன் அழகு? ஆனாலும், மனித மனத்தின் நினைவுகூர்தலில் உள்ள மாய விளையாட்டை இப்பாடலில் மஹாகவி காட்சிப்படுத்துகிறார்.
கோபியரும் கிருஷ்ணனும் :
கோகுலத்தில் வாழ்ந்த கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவின்மேல் வைத்த எதிர்பார்ப்புகள் இல்லாத தூய பேரன்பும், திடமான பக்தியும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்று இருக்கிறது. அந்தப் பரம்பொருளை அடைய வேண்டி, நாமும் அவ்விதம் தூயபக்தியைச் செலுத்துவது ஒன்றே உண்மையான ஆன்மீகமாகும்.
பிரார்த்தனை என்பது தூப தீபம் காட்டி, மனதை இறைவன் பாதத்தில் வைக்காமல், வாய் மட்டும் முணுமுணுக்கும் தோத்திரங்களால் பயனில்லை. நாம் யாவருமே மனதால் கோபியர்களாகவே இறையன்பு கொண்டு வணங்கினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் கண்ணன்.
முற்பிறவிகளில் ஶ்ரீமன் நாராயணன்பால் பெரும் பக்திசெய்த பக்திமான்கள் கோபியர்களாக மண்ணுலகுக்கு வந்து, கிருஷ்ணர் உடன் கலந்து வாழ்ந்த பாக்கியம் அடைந்தவர்கள்.
இந்திரவனிதை:
ஸ்ரீமன் நாராயணனின்மேல் கொண்ட பக்தியால், தேவர்களாக பதவி பெற்ற பக்திமான்களே கோகுலத்துக்கு வந்தார்கள் என்று ஒரு தொன்மம் உண்டு ( சுவாமி சிவானந்தரும் கோபியர்கள் தேவமங்கையர் என்பார்). அவர்களையே ‘இந்திர வனிதா’ என்று அன்னமாச்சாரியார் குறிப்பிடுவதாக யூகிக்கலாம். இந்திரலோகத்தை சேர்ந்த அரம்பையரும் கிருஷ்ணபக்தி கொண்டு இருந்தவர்களாகவும் கொள்ளலாம். ஆனாலும், ஸ்ரீகிருஷ்ணனின் அணைப்பில், தூய அன்பின் சுகம் கண்டவர்கள் என்று பாடலின் அடுத்த அடியில் குறிப்பதால், அவருடன் ராச லீலை புரிந்த கோபியரையே குறிப்பிடுகிறார் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது
திருவேங்கட ரூபம் :
உற்றுக் கேட்டால், கடலலைகளின் ஓசை கேட்கும் வேங்கடவன் சிலாரூபம்.
குளிர்காலத்திலும் வெம்மையான திருமேனி; சுருள்சுருளான அளகபாரம்; அதன் மேல் ஒளிரும் கிரீடம்; அரைக்கண் வரையில் மூடிய பெரிய திருமண்; அழகிய நாசி; உதடுகளில் குமிண் சிரிப்பு; பாஞ்சஜன்யம் போலும் வடிவக் கழுத்து; திண்தோள்கள்; தோளினின்று நான்கு கரங்கள்; வலது மேற்கரம் சுதர்சனம் தாங்க, வலது கீழ்கரம் அபய ஹஸ்தம் காட்ட ; இடது மேற்கரம் பாஞ்சஜன்யம் ஏந்த, இடது கீழ்கரமோ இடது தொடையில் பதிந்து, ‘கத்யவலம்பிதம்’ எனும் முத்திரையில் இருக்கும் ;வீரம் செறிந்த மார்பு; மார்பின் இருபக்கங்களிலும் பதிந்த பத்மாவதியும் லஷ்மியும்; கச்சிதமாகக் குழைந்த வயிறு; கடிபந்தம் எனும் அரைக்கச்சு அணிந்த இடுப்பு; திடமான கால்கள்; பேரழகில் பதிய நின்ற பாதங்கள்.
கழுத்தில் சுவர்ண மாலைகள், சாளக்கிராம மாலை, விதவிதமாய் நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், முப்புரி நூல்; வாகுவலயங்கள், கட்கம், கங்கணம், பாதச் சிலம்புகள்இவ்விதமாய் பெரு மன்னர்களும், தனவந்தர்களும் சமர்ப்பித்த கணக்கிலடங்காத ஆபரணங்கள் தாங்கிய பேருருவம் திருவேங்கடவனின் சுந்தர ரூபம்.வேங்கடவனின் பேரழகைப் பலவிதமாய் ஆழ்வார்களும் வாக்கேயக்காரர்களும் அருளியிருக்கிறார்கள்.
அவனுடைய வாயின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுதல் செய்த குலசேகர ஆழ்வார் பாசுரத்தைப் பார்ப்போம்.
‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.‘
இந்தப் பாடல் கேட்ட அக்கணமே வேங்கடவன் இரங்கித் திருவுளம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஒரு பாடலின் தெய்வீகத் தன்மையாலே, திருமலையில் வேங்கடவன் சன்னதியின் படியை, ‘குலசேகரப் படி’ என்றழைக்கும் பேறு பெற்றார்.
நிவேதனத்திற்கான ததியன்னம் கொண்ட மண்கலயம் ஒன்றைத் தவிர, குலசேகரப் படியைத் தாண்டி வேறு பொருள் கருவறை புக அனுமதியில்லை.
மோட்சத்தை அளிக்கவல்ல அந்த மோகன ரூபத்தை மனவரதமும் எண்ணியபடி இருப்போம்.