மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

எழுத்தாளர் மோகன் ஜி

விதை, கதை, நாடகம் என எழுத்திலும்… வழக்காடு மன்றம், கவியரங்கம், ஆன்மீகச் சொற்பொழிவு எனப் பேச்சிலும் தொடர்ந்து கலக்கலாய் இயங்கி வருபவர். இவரின் படைப்புகள் அமுதசுரபி, தினமணிக்கதிர்,கலைமகள், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இதுவரை ‘வானவில் மனிதன் கவிதைகள்’, ‘என் பரணில் தெறித்த பரல்கள்’, ‘பொன்வீதி’, ‘தொழுவத்து மயில்’ மற்றும் ‘ஸ்வாமி ஐயப்பன்’ பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். மூன்று புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். வலைப்பூ மற்றும் முகநூலில் சுவராஸ்யமாய், வாசிப்போரை ஈர்க்கும்படியாய் தொடர்ந்து எழுதி வருகிறார்.

******************

மிழ்ச் சிற்றிலக்கியங்களில் ‘பிள்ளைத்தமிழ்’ வகைமை மிகச் சிறப்பாக கையாளப்பட்ட ஒன்றாகும்.

கடவுளரையோ அல்லது மேம்பட்டவர்களையோ, பாட்டுடைத் தலைவன்/தலைவியாக வைத்தும் அவர்களை சிறுபிராயத்தினராக பாவித்தும் இயற்றப்படும் பாடல்களே பிள்ளைத்தமிழ் ஆகும்.

பிள்ளைத்தமிழ் இலக்கியத்திலே மிகச்சிறப்பான இடம்பெற்றது குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

பதினேழாம் நூற்றாண்டில் பிறந்த குமரகுருபரர், மதுரையில் வாழ்ந்த காலத்து இயற்றியது இந்நூல்.

102 பாடல்கள் கொண்ட தீந்தமிழ் பெட்டகம் இது.

திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் இந்த நூலை அரங்கேற்றிய போது, மீனாட்சியம்மையே சிறுபெண்ணாக வந்து குமரகுருபரருக்கு தாம் அணிந்திருந்த அழகிய முத்து மாலையை பரிசளித்து மறைந்தாள் என்பது வரலாறு.

இந்த நூலில் மதுரையின் சிறப்பு, அழகு தமிழின் இயல்பு அகப்பொருள் நலம், பாண்டிநாட்டு வளம் போன்ற பல செய்திகளை ஆவணப்படுத்தி இருக்கிறார் குருபரர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

இது நீராடல் பருவத்திலிருந்து அங்கயற்கண்ணி நீராடும் அழகைப் போற்றும் ஒரு அழகான பாடல் காட்சி :
தூய சிறு பொற்குடங்கள் போன்ற அழகிய தனங்களைக் கொண்டிருக்கும் மீனாட்சியம்மை தன் தோழிகளோடு வைகையில் நீராடுகிறாள்.

தாங்கள் பொற்கிண்ணங்களில் கொண்டுவந்திருக்கும் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து விளையாடுகிறார்கள்.

அவர்கள் இறைத்த வண்ணங்களோ வானத்திலே அழகிய சிவந்த ஓவியம் போல் மூண்டு நின்றதாம்.

ஒருவாறு குளித்து முடித்து, தலையைத் துவட்டியபின் அகிற்புகை மூட்டி, கூந்தலுக்கு வாசம் சேர்க்கின்றனராம்.

அவ்வாறு மூட்டிய புகையோ, ஆற்றின் கரையோரத் தோப்பில் காய்த்திருந்த வாழைக்காய்களை பழுக்கச்செய்து விட்டனவாம்.

கனிந்துவிட்ட அந்தப் பழங்களிலிருந்து ஒழுகும் ரசத்தை மாந்த மொய்த்திருக்குமாம் வண்டுகள்.

அதே வண்டுகள், அங்கயற்கண்ணியின் கூந்தல் வாசத்தால் கிறக்கமுற்று, அம்மையின் கூந்தலை மொய்க்க கூடி விட்டனவாம்.

அந்த வண்டினங்கள் மொய்க்கும் அழகு எப்படி இருந்தது தெரியுமா?

சுந்தரேசன் மேனியழகில் மயங்கி, அவன் மேலேயே எப்பொழுதும் மொய்த்துக்கொண்டிருக்கும் மீனாட்சியின் கரிய கண்மலர்கள் போல இருந்தனவாம்.

இனி பாடல் :
துங்க முலைப் பொற்குடங் கொண்டு
தூநீர் நீந்தி விளையாடும்
துணைச் சேடியர்கள் மேல் பசும் பொற்
சுண்ண மெறிய அறச் சேந்த
அங்கண் விசும்பல் நின்குழல் காட்டு
அறுகாற் சுரும்பர் எழுந்தார்ப்பது
ஐயன் திருமேனியில் அம்மை
அருட்கட் சுரும்பு ஆர்த்தெழல்மானச்
செங்கண் இளைஞர் களிர்காமத்
தீமுண் டிடக்கண்டு இளமகளிர்
செழுமென் குழற்கு கூட்டு அகிற்புகையாற்
திரள் காய்க் கதலி பழுத்துநறை
பொங்கு மதுரைப் பெருமாட்டி
புது நீராடி அருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
புது நீராடி யருளுகவே.


சில சொற்களுக்கு அர்த்தம் :
துங்கம்- தூய
அம்கண்- கண்ணைக்கவரும்
அறச்சேந்த- முற்றாகச் சிவந்த
சுரும்பு -வண்டு
நறை- வாசம்
பொருனை_ தாமிர பரணி ஆறு
துறைவன்- உரிமையுள்ளவன் ( மலையத்துவச பாண்டியன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *