ஆர்.வி.சரவணன்
முன்கதை:
காதல் பிரச்சினையால் ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்காத மாதவன் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு போக, அங்கே போனதும்தான் தெரிகிறது தனது முன்னாள் காதலி மீராவின் குடும்பம்தான் பெண் வீட்டார் என்பது. அங்கிருந்து போய்விடலாம் என்றால் நண்பனின் நண்பன் விடாமல் இழுத்துச் செல்ல, மீரா பூக்களுடன் வருவதைப் பார்க்க நேரிடுகிறது. அவளோ இவனைப் பார்க்காமல் நடந்து போகிறாள்.
****
இனி…
போட்டோகிராபர் ஓகே சொன்ன பின் எல்லாரும் விலக, மாதவன் மட்டும் விலகாமல் நின்றான். மீராவை பார்த்து அதிசயித்தவன் தான் சூழ்நிலை மறந்து போனவனாய் அப்படியே நின்றிருந்தான்.
‘மாதவா’ என்று அவன் தோள் பிடித்து சேகர் அசைக்கவும் தான் சுய நினைவுக்கு வந்தான்.
அவனை அழைத்து வந்த இளைஞன் “சார் நாம கீழே வெயிட் பண்ணுவோம் வாங்க” என்ற படி முன் சென்றான்.
“ம்” என்று தலையாட்டி அவனை தொடர்ந்தாலும் மாதவனது பார்வை மீராவின் மீதே இருந்தது. சும்மாவா அவளை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சி ஏழு வருசம் ஆச்சே. ஒரு விநாடி கூட விடக்கூடாது என நினைத்தவன் அவளை பார்த்தபடியே மெல்லப் படியிறங்கினான்.
எதிரெதிரே வந்தாலும் மீரா பேச்சு சுவாரஸ்யத்தில் அவனை கவனிக்கவில்லை. அவனை தாண்டி மணமக்கள் இருக்கும் மேடையின் படியேறினாள். படியேறுவதில் கூட எவ்வளவு நளினம். தன்னை அவளோடு சேர விடாமல் தடுத்த அவளது அப்பாவின் மீது கோபம் வந்தது.
ஒரு வரிசை முழுக்க உட்கார்ந்திருந்த நண்பர்கள் குழு மாதவனை வரவேற்றது.
“வாங்க.6 மணிக்கே வந்துருவீங்கனு மாப்பிள்ளை சொன்னாரே” என்றபடி அவர்கள் அருகில் இருந்த காலியான இருக்கையில் அமர வைத்தனர்.
“பஸ் லேட் பண்ணிடுச்சு” என்றான்.
“எப்படி கரெக்டா பிடிச்சே” மாதவனை அழைத்துச் சென்ற இளைஞனை கேட்டார்கள்.
“டயமாகிட்டிருக்கு போய் அழைச்சிட்டு வானு சேகர் மேடையிலிருந்த படியே சைகை கொடுத்தான். அவனோட பிடுங்கல் தாங்க முடியாததால ஓடினேன். போன் நம்பரும் வாங்கிட்டு போக முடில. ஒரு சிகரெட் பிடிக்கிற நேரம் வரைக்கும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பார்த்திட்டு வரேன். சார் என்னடான்னா மண்டப வாசல்ல உள்ளே வெளியே விளையாடிட்டு இருக்காரு. அப்புறம் விளையாடலாம் வாங்கன்னு பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டேன்” சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்த அந்த இளைஞன் மீராவையே மாதவன் பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
மாதவனின் காதருகில் குனிந்து “அவங்கதான் பொண்ணோட அக்கா, நீங்க வேணா ட்ரை பண்ணிப் பார்க்கலாம். ஏன்னா அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. பெரிசா ரீசன் ஏதுமில்ல. ரெண்டு தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணிட்டு தான் நான் பண்ணிக்குவேன்னு சபதம் போட்டுருக்காம்.”
அவளை பார்த்ததில் கல்யாணம் ஆனதற்கான அடையாளங்கள் இல்லாமல் இருந்ததை கவனித்திருந்தாலும் இந்த இளைஞன் அதை உறுதிப்படுத்தியதில்
மாதவனின் உள்ளுக்குள் உற்சாகம் வெடித்து சிதறியது. முகத்தில் பரவசம் திடீரென்று உதயமானது.
மேடையில் பாடகர் பாடி கொண்டிருந்தார்.
‘என் மீது அன்பையே பொன்மாரியாய் தூவுவாள். என் நெஞ்சை பூவாகவே தன் கூந்தலில் சூடுவாள்…..’
“அய்யய்யோ… நீங்க வேறங்க… சுத்திப் பாக்கும் போது அவங்க கவர்றமாதிரி இருந்தாங்களா… அதான் சும்மா பார்த்தேன்” என மாதவன் மழுப்பலாய்ச் சொல்லவும் அந்த இளைஞன் கண்ணடித்த படி சிரித்து கொண்டான்.
மீராவை யாரோ ஒரு வயதான அம்மா கன்னத்தை பிடித்து கொஞ்சிய படி பேசி கொண்டிருக்க, அன்றொரு நாள் நடந்த சம்பவம் மாதவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
“ம்ம்ம். கன்னத்தை இப்படி இறுக்கி பிடிச்சா எனக்கு வலிக்காதா..?” மாதவன் சிணுங்கினான்.
“வலிக்கட்டும். என்னை சினிமாவுக்கு அழைச்சிட்டு போக சொல்றேன். மாட்டேங்குறீல்ல.”
“யாராவது பார்த்து என்னாகிறது..?”
“பயந்தாங்கொள்ளி. இந்த டயலாக்கை நான் சொல்லணும். நானே பரவால்லங்கிறேன்”
“எப்படி இவ்வளவு தைரியமா இருக்க முடியுது உன்னாலே”
“என் காதல் எனக்கு கொடுத்த தைரியம் இது” அவனை விழுங்குவது போல் பார்த்த படி சொன்றாள் மீரா.
“நான் என்ன சொன்னாலும் செய்வியா..?”
“ம்”
“அப்ப நீ எனக்கு வேணாம். கீழே குதிச்சிடு”
மீரா அவர்கள் உட்கார்ந்திருந்த அந்த சின்ன பாலத்தின் கீழே ஓடி கொண்டிருந்த வாய்க்காலில் உடனே குதித்து விட்டாள். நடுங்கி போய் விட்டான் மாதவன். அவனும் குதித்தான்.
நீரில் மூழ்கி எழுந்தவன் கைகளால் தண்ணீரை அலைந்தபடி சிரித்து கொண்டிருந்த அவளை நெருங்கினான்.
“ஆழம் இருந்தா என்ன ஆவறது”
” அதை சொல்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கணும்”
“இப்படி என் மேல உயிரா இருக்கியே. நான் உனக்கு என்ன பண்ண போறேன்” கண. கலங்கினான்.
“எனக்கு தாலி கட்டு. அது போதும்”
இதோ இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள். எனக்காக தான் காத்திருக்கிறாளோ. ஆசை தோசை என்றது மனது.
நம்மை பார்த்ததும் என்ன செய்வாள்.
ஆசையாய் ஓடி வருவாளா ? அல்லது பிரிந்ததற்கு கோபப்படுவாளா?
ரிசப்சன் முடிந்து விட்டதன் அறிகுறியாக ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மூட்டை கட்ட தொடங்கியிருந்தார்கள்.
மாப்பிள்ளையும் பெண்ணும் டைனிங் ஹால் செல்ல தயாரானார்கள்.
மணப்பெண் திவ்யாவின் அலங்காரத்தை மீரா சரி பண்ணி கொண்டிருக்க, திவ்யா மாதவனைப் பார்த்தபடி அக்காவின் காதோடு ஏதோ சொல்லவும் மீரா திரும்பினாள்.
மாதவனை பார்த்து விட்டாள்.
ஷாக் அடித்தது போன்ற அதிர்ச்சி அவளது முகத்தில்.
அவளின் கையிலிருந்த பையை ஒரு சிறுமி பிடுங்கி கொண்டு ஓட ஆரம்பிக்க, அதை கூட உணராமல் அவனைப் பார்த்தபடியே நின்றாள். சில விநாடிகள் வரை இது நீடித்தது.
திடீரென்று வேகமாக நடந்து வந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தாள். அவள் கோபத்தோடு இருக்கிறாள் என்பது அவள் உடல் மொழியில் நன்றாக தெரிந்தது. அவனை நோக்கி வர ஆரம்பித்தவளின் வேகத்தை பார்த்தால் வந்து சட்டையை பிடித்து விடுவாள் என்று தான் தோன்றியது. அவளது குணம் அவன் அறிந்தது தான்.
பக்கத்தில் இருந்த நண்பர்கள் குழு இதை எல்லாம் அறியாமல் அரட்டையில் இருந்தார்கள்.
யாருடைய செல்போனிலோ ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள். அவள் வந்து விட்டாள்…’ ரிங்டோன் ஒலிக்க ஆரம்பித்திருக்க,
மாதவன் எது நடந்தாலும் பரவாயில்லை என்று மீராவை எதிர் கொள்ள தயாரானான்.
செவ்வாய்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.