மோகன் ஜி
“தோசைக்கு அரைச்சவுடனே அந்த மாவுல ‘சப்’புன்னு தோசை வார்த்துப் போட்டா எம்பிள்ளைக்கு ரொம்ப பிடிக்கும்.”
” உம்…”
” அதுக்குன்னு ஒரே மட்டா நாலஞ்சு வார்த்து ஒண்ணா தட்டுலே போட்டுடாதே! அப்படி மொத்தமாப் பார்த்தாலே வயிறு ரொம்பிடுச்சும்பான். ஒவ்வொண்ணா தட்டுல போடணும் அவனுக்கு. ஒண்ணை சாப்பிட்டானதும் அடுத்தது”
“சரியத்தே”
” அவனுக்கு அடை வார்த்தா மொத்து மொத்துனு வார்த்துடாதே. சன்னமா ரோஸ்டா வார்க்கணும். விண்டா படபடன்னு உடையணும்”
“உம்”
“மோர்க்குழம்பை பண்ணியானா உனக்குக் கனகாபிஷேகமே பண்ணிடுவான். கெட்டியான குழம்பா இல்லாம தளர இருக்கணும். அதுல பூசணிக்காய்த் ‘தான்’ ரொம்ப இஷ்டம்.”
“உம்”
” மோர்க்குழம்புக்கு தொட்டுக்க சேப்பங்கிழங்கு ரோஸ்ட், கருணைக்கிழங்கு சிப்ஸ், கொத்தவரங்கா இல்லேன்னா பீன்ஸ் போட்டு பருப்புசிலி ஏதாவது ஒண்ணு கூட இருந்தா கச்சேரி தான் எம்பிள்ளைக்கு.”
“உம்ம்”
“புடலங்காய்க் கூட்டு பண்ணினா தொட்டுக்க கடாரங்காய் இல்லைன்னா எலுமிச்சங்காய் ஊறுகாய் கேட்பான்.”
“சரி”
” ரசம் வச்சவுடனே தெளிவா அவனுக்குன்னு தனியா எடுத்து வச்சுடு. கலக்கிப் போட்டுடாதே”
“உம்”
” கெட்டியா தயிரா இல்லாம சிலுப்பின மோரா தான் போட்டுப்பான். தனியா உப்பு கொஞ்சம் கேப்பான்”
“உம்ம்”
” மோர் சாதத்துக்குத் தொட்டுக்க கிளாக்காய் ஊறுகாய் , மோர் மொளகாய், பருப்பு சாம்பார் எதேனும் இருக்கணும்”
“உம்”
“எப்பவாவது பிள்ளத்தாச்சி மாதிரி நார்த்தங்கா இருக்காம்மான்னு கேட்பான். இல்லேன்னு சொல்லாம எப்பவும் ஸ்டாக் வச்சிருப்பேன்” அம்மாவின் குரல் நெகிழ்ந்தது.
“கரகரன்னு குணுக்கு பண்ணினா அந்த வாசனைக்கே சமையல்கட்டுக்கு வந்துடுவான். குணுக்குல கொஞ்சமா ஊறவச்ச அரிசி நொய், தேங்காப்பல்லு போட்டா ரொம்ப இஷ்டம். இடதுகையில சாண்டில்யன் புஸ்தகம், வலப்பக்கமா குணுக்குப் பிளேட்டுன்னு செட்டிலாயிடுவான்”
” ஒண்ணு கேக்கலாமா அத்தே?”
“அதுக்கென்ன? கேளும்மா… இன்னமே நீ தானே அவனைப் பாத்துக்கணும்?”
” சமையல் நல்லா இல்லேன்னா கோபம் வருமா உங்கப் பிள்ளைக்கு?”
“அது தாண்டி அங்க பியூட்டி ! சாது மாணிக்கம்டி என்பிள்ளை ! நல்லா பண்ணினா ரசிச்சு சாப்பிடுவானே தவிர, சமையல்லே உப்பு போடலைன்னாகூட சொல்லாம சாப்பிட்டுட்டு எழுந்துடுவான். சரியாயில்லைன்னு தெரிஞ்சப்புறம் எனக்குத்தான் அட ராமான்னு ஆயிடும்”
“அப்ப சரி”
” அது இருக்கட்டும்…. நீ உங்க வீட்ல சமையற்கட்டுப் பக்கம் போவியா?”
“எப்பவாச்சும் அத்தே! அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னா….”
” உணக்கையா சீரா ரசம் வச்சுக் குடுப்பையாக்கும்?”
” இல்லே அத்தே…. வெந்நீர் மட்டும் வச்சுக் கொடுப்பேன் “
திகைத்த அம்மா சுதாரித்துக் கொண்டு சொன்னாள்… “கொடுத்து வச்சவடி நீ! அவனே எட்டூருக்கு சமைப்பான். ஒரே வாரத்துல கத்துக்கலாம். அவன் புத்தக அலமாரிலயே மூணு மீனாக்ஷி அம்மாள் ‘சமைத்துப் பார்’ இருக்கு. அதைப் பாத்து டிரை பண்ணு.
மழை வரும்போல இருக்கு. மொட்டமாடில காயிற துணியை எடுத்துட்டு வந்துடு!”
“சரியத்தே!” என்றபடி அவள் மாடிக்குப் போனாள் .
“அம்பிகே!” என்று அம்மா எழுந்தாள் . இந்த ‘அம்பிகே’ ஒரு தினுசாக ஒலித்தது.
(முகநூலில் எழுதிய கதை)
படத்துக்கும் கதைக்கும் திரு. மோகன் ஜி அவர்களுக்கு நன்றி.
Leave a reply
You must be logged in to post a comment.