பரிவை சே.குமார்.
சனிக்கிழமை (16/09/2023) மாலை துபை கராமாவில் நடந்த ‘தூங்கநகர் நினைவுகள்’ நூல் திறனாய்வுக் கூட்டத்தில் ஆறு பேர் நூல் குறித்த தங்கள் பார்வையை தங்களின் வாழ்வியலோடு இணைத்துப் பேசினார்கள்.| அவர்கள் பேசிய பின் அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் திரு முத்துக்கிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது :
இந்த தூங்காநகர் நினைவுகள் என்பது மதுரைக்கு மட்டுமான புத்தகம் அல்ல, அதைச் சுற்றி இருக்கும் பல மாவட்டங்களுக்கான புத்தகம்தான் என்றும், பசுமை நடை குறித்தும் இந்தப் பதினாலு வருடத்தில் அதற்கென தாங்கள் பட்டிருக்கும் பாடுகளையும் கிட்டத்தட்ட பதினோரு வருடங்களாகத் தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் கான்சாகிபு பள்ளி உள்ளிட்ட சில இடங்களைப் பார்ப்பதற்கு இதுவரை தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் கொரோனா காலத்தில் தாங்கள் வசூலித்த பணங்களை வைத்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் யார், இதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள், தெருவில் தங்கள் மேல் சாட்டையால் அடித்துக் கொண்டு யாசகம் பெறுபவர்கள், திருவிழாக்களில் தள்ளுவண்டிகளில் கடை போடுபவர்கள் என மளிகைச் சாமான்களைக் கொண்டு சேர்த்ததையும், அவர்களைப் போய் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தை அறிய முடிந்ததையும் நரிக்குறவர்களுக்கு ஒரு செண்ட் நிலம் சொந்தமாய் இருப்பதையும் அதை திரு. சகாயம் ஐ.ஏ,எஸ் அவர்கள் செய்ததையும் சொன்னதுடன் அந்த மக்கள் தனித்தனியே வீடு கட்டாமல் அவர்கள் எப்பவும் இருப்பது போல் கூட்டமாய்த்தான் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார். அதேபோல் திருவிழாக்களில் கடை போடுபவர்களில் ஆண்கள் எல்லாம் ஏதாவதொரு கேஸில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் அவர்களுக்காக ஒரு கம்யூனிச வழக்கறிஞர் போராடி வருவதையும் பகிர்ந்து கொண்டார். மேலும் கொரானாவால் தமிழகத்துக்கு முதல் பலியாய் மதுரையில் நிகழ்ந்த ஒரு இஸ்லாமியரின் மரணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
தூங்காநகர் நினைவுகளை இன்னும் விரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததையும், எழுத்தாளனே மிகச் சிறந்த சோம்பேறி என்பதால் அது நிகழவில்லை என்பதையும் சொல்லி, இதை இன்னும் விரிவாக எழுத வேண்டும், அதுவும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனச் சொன்னார். அப்போது திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தொல்லியல் நூலைப் பற்றியும் அதில் தனது பங்கும் கொஞ்சம் இருப்பது குறித்தும் அதற்காக எப்படி அவர் உழைத்தார் என்பதையும் அது ஆங்கில நூலாக எல்லா இடத்திலும் எப்படிச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதையும் சொன்னார். மேலும் தனது காலத்து மதுரையை, அதாவது 1948க்குப்பின்னான மதுரையைக் குறித்து தூங்காநகர் நினைவுகள் தொகுதி இரண்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள், காலம் வாய்ப்பளித்தால் எழுதி முடிக்க வேண்டும் எனச் சொன்னார். அதற்கான குறிப்புகள் முப்பதுக்கு மேல் தன் கைவசம் இருப்பதாகச் சொன்னார்.
கோட்டோவியங்கள் அதாவது பாறை ஓவியங்கள் நம்நாட்டில் பாதுகாக்கப்படாமல் இருப்பதையும் மற்ற நாடுகள் அவற்றை எப்படிப் பாதுகாக்கின்றன, அவற்றை சுற்றுலாத்தளங்களாக எப்படி மாற்றி வைத்திருக்கின்றன என்பதையெல்லாம் சொல்லி நாம் பாதுகாக்கவில்லை என்பதை வருத்தத்துடன் சொன்னார். மேலூருக்கு அருகில் இருக்கும் கீழவளவு என்னும் ஊரில் மலைகளை எல்லாம் வெட்டி எடுத்து பெரு ம்பெரும் குழிகளாகப் போட்டு வைத்திருப்பதுதான் ஞாபகத்தில் வந்தது. அப்படியான ஒரு நிலை கீழ்க்குயில்குடியிலிருக்கும் மலைகளுக்கும் வந்துவிடக்கூடாது எனத் தோன்றியது. ஏனென்றால் கீழ்க்குயில்குடியில் இருக்கும் மலைகளைக் குறித்தும் அங்கிருக்கும் பாறை ஓவியங்கள் குறித்தும் சிலாகித்தார். அப்போது அந்த மலைகளைப் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பதாகவும் ஒரு ஊழியருக்கு கிட்டத்தட்ட இருபது மலைகள் என நிர்ணயித்திருப்பது குறித்தும் அவர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் என்பதைப் பற்றியும் சொன்னார். திருப்பரங்குன்றம் மலையில் வேலை பார்த்த பெருமாள் என்பவர் இப்போதும் இங்கு வராமல் என்னால் வீட்டில் இருக்கமுடியாதெனத் தினமும் மலைக்கு வருவதையும் சொன்னார்.
தான் இருபத்தி ஓரு வயது வரை தமிழ் படிக்கவில்லை என்றும் தனது பெற்றோர் தன்னை தமிழ் படிக்க வைக்க் நினைத்தபோதும் அது நடக்கவில்லை என்றும் மும்பையில் இருந்தாலும் இந்தியை இரண்டாவது மொழியாகத்தான் படித்ததாகவும் சொன்னவர், இருபத்தியோரு வயதில் மதுரையில்தான் வாழ்க்கை என்ற போது சில காரணங்களுக்காகத் தமிழைப் படிக்க் ஆரம்பித்தேன். அதன்பின் அதில் லயித்து நான் எழுத்தாளனாய் மாறினேன். எனது முப்பதெட்டாவது வயதில்தான் மதுரையைக் குறித்து, அதன் பாறை ஓவியங்கள் குறித்துத் தெரிந்து கொண்டேன் என்றார். பென்னிகுக் குடும்பத்துடன் தான் நட்பாய் இருப்பதையும், அவர்கள் வருடா வருடம் கம்பத்தில் வைக்கப்படும் பொங்கல் குறித்தும் அதற்கு பென்னிகுக்கின் வாரிசுகள் வருவது பற்றியும் சொன்னார். அதேபோல் ஒரு தேவலாயத்தில் இருக்கும் சமாதி குறித்தும் அது அத்தேவாலயத்தின் கீழே இருப்பதையும், படியிறங்கி உள்ளே போனால் பத்து பேர்தான் நிற்க முடியும் என்பதையும் அந்த இடத்துக்குச் செல்லவும் அனுமதி இல்லை என்றும் சொன்னார்.
தன் வாழ்நாளுக்குள் பாறை ஒவியங்கள் இருக்கும் இடங்களைப் பற்றிய தகவல் பலகையேனும் அந்தந்த இடங்களில் நிறுவ வேண்டும் என்ற ஆசையையும் அதை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் சொன்னார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்த வருடம் புதிதாய் வந்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வை பசுமை நடையில் பாறை ஓவியங்கள் நிறைந்த ஒரு மலையடிவாரத்தில் வைத்ததைச் சொன்னார்.
தூங்காநகர் நினைவுகள் கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதிய போது பலர் தனக்கு அது குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், படங்கள் எனக் கொடுத்து உதவியதையும், ஒருவர் இந்த இடத்தில் நீங்கள் இதை விட்டு விட்டீர்கள் எனப் போன் பண்ணியதையும் வெளிநாட்டில் இருந்து மதுரையைப் பற்றி ஆங்கிலேயர் வரைந்த இந்த ஓவியங்கள் உங்களுக்கு உதவுமென அனுப்பியதைப் பற்றிப் சொன்னார். அப்போது தான் பல பேராசியர்களிடம் போய் தனக்குத் தெரியாத விபரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டதையும் இன்று வரை தான் ஒரு மாணவனாய் கற்றுக் கொண்டிருப்பதையும் தனது பேச்சில் சொன்னார். கீழடி பற்றிச் சொல்லி அதைக் கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டும் என்றார். இந்தப் புத்தகம் எழுத கிட்டத்தட்ட 90 புத்தகங்களையும் ஆவணங்களையும் தான் வாசித்ததாகச் சொன்னார். வரலாறு அல்ல என்றாலும் வரலாற்றில் இருந்து எடுத்து என் பாணியில் நான் கொடுத்திருப்பதுதான் இப்புத்தகம் என்றார்.
பவா செல்லத்துரை கொடைக்கானலில் இருந்து தனது டிரைவருடன் சூட்டிங்கில் இருந்த போது எங்காவது போகவேண்டும் எனச் சொல்லி மதுரைக்கு வந்து எம்.ஏ.பெருமாள் அவர்களைத் தூரத்தில் இருந்த பார்த்துச் சென்றதையும் அவ்வளவு தூரம் வந்தும் அவரை அருகில் போய் பார்த்துப் பேசாமல் போனதற்கான காரணமாய் பவா சொன்னதையும் சொன்னார். சசி அண்ணன் மூவாயிரம் ஆண்டு இருக்கச் சொன்னதுக்குப் பதிலாய் நான் மதுரையை எழுதிட்டேன். நீங்க மூவாயிரம் வருடம் இருந்து உங்க மாவட்டங்களைப் பற்றி எழுதுங்கள் என்றும் சொன்னார்.
இப்படியாக இன்னும் நிறைய விசயங்களை மிக விரிவாகப் பேசிய முத்துக்கிருஷ்ணன் அவர்களிடம் சிலர் தங்கள் கேள்விகளை முன்வைக்க, அதற்கும் மிகச் சிறப்பாக, விரிவாகப் பதிலளித்தார்.
முன்னதாக திரு.பிலால் அலியார் அவர்கள் நமது கேலக்ஸி நிறுவனத்தின் சார்பாக எழுத்தாளருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் நினைவுப் பரிசொன்றை எழுத்தாளருக்கு வழங்கினார். திறனாய்வு செய்த எழுத்தாளர்களுக்கு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கீழடி குறித்த புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.
படங்களுக்கு நன்றி : புகைப்படக் கலைஞர் திரு. சுபஹான்