பகுதி – 2
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முதல் பகுதி வாசிக்க… பகுதி-1
****
“அங்கயா வேல? இந்த பக்கம் பாரு..!” குமார் காட்டிய இடத்தில் நீலி பெக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர் என்ற விளம்பரம் தாங்கிய காலெண்டர் ஒன்றுத் தொங்கி கொண்டிருந்தது. நீலி என்று அச்சிடப்பட்டிருந்த லோகோவேப் பார்ப்பதற்கு வித்தியாசமாகயிருந்தது.
இன்டர்வியூவிற்குச் சென்றிருந்தபோது கூட அதையேதான் அவ்வப்போது நோக்கிக் கொண்டிருந்தேன். நீலி என்ற எழுத்துகளை உன்னிப்பாக கவனித்தேன். இரண்டே இரண்டு எழுத்துக்கள் என்றாலும் சூலத்தின் கூர் முனைகளை போல நீட்டியும் வளைத்தும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
பிஸ்லெரியைக் கொஞ்சம் பின்னுக்கு தள்ளிவிட்டு மற்ற கார்ப்பரேட் நிறுவங்களான பெப்சியின் அக்குவாஃபினாவும், கோக்கோகோலாவின் கின்லேவும் சந்தையில் முத்திரைப் பதிக்க தொடங்கியிருந்த வேளையில், நீலி.. இந்த காலத்தில் யார் இப்படியெல்லாம் பேர் வைக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டேன்.
ஆனால் இதே போல் பல வாட்டர் கம்பெனிகள் சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் இதைப் போலவே சட்டென பரிச்சயப்படாத பல பெயர்களில் குறிப்பாக சிறிய- பெரிய அலுவலகங்கள், கடைகள் மற்றும் குடிநீர் தட்டுபாடுள்ள பகுதி மக்களின் தேவைகளை அதுவும் சகாய விலைகளில் பூர்த்தி செய்து வந்தன என்பதும் இத்தொழிலின் ஒரு சாதனைதான்.
அதுவும் நான் வேலை செய்யவிருக்கும் கம்பனியின் காலெண்டர், குமார் அண்ணனின் கடை வரை வந்திருப்பது தற்செயலான ஆச்சர்யம் என்றாலும் உள்ளூர ஆறுதலடைந்தேன். ஓரளவு சர்குலேஷன் உள்ள பிராண்டுதான் என்று அதுவரை புலம்பிக் கொண்டிருந்த மனதைத் தேற்றிக்கொண்டேன்.
“ஓனரைப் பாத்திருக்கியா?” ஆம் என்று பதில் சொன்னதும் அவருக்கு தலைகால் புரியவில்லை. முப்பத்தி ரெண்டு பல்லையும் ஆவெனக் காட்டினார். அவர் என்ன அவ்வளவு பிரபலமான ஆளா என்று நானும் வியந்தேன்.
ஓனர் பார்க்க நடுத்தர உயரத்தில் தொப்பையும் தொந்தியுமாக மாநிறத்திற்கும் சற்று கூடுதலான காப்பி கலரில் இருப்பார். வடக்கிலிருந்து வந்து ஒரு பாடலுக்கெல்லாம் கவர்ச்சி நடனமாடி, பின் குடும்ப குத்து விளக்காகி முன்னணியிலிருந்த அந்த நடிகை ஒரு நாள் அனைவருக்கும் அதிர்ச்சிக்கு கொடுக்கும் விதமாக இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து சுவரேறிக் குதித்துச் சென்று தனது அழகிற்கும் அந்தஸ்த்திற்கும் சம்மந்தமேயில்லாத ஒரு அறிமுக இயக்குனரை திருமணம் செய்துக் கொண்டு சினிமா அபிமானிகள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை எல்லோரையும் ஒரே இரவில் வாய் பிளக்க வைத்தார்.
ஓனரைப் முதன்முதலில் பார்த்தபோது குறிப்பிட்ட நடிகையின் கணவரான அந்த இயக்குனரின் ஞாபகம்தான் வந்துபோனது. அதே வட்ட முகம், பேசும் போதும், சிரிக்கும்போதும் வெளிப்படும் சற்றே பெரிய பற்களின் சீரான வரிசை பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்துவிடும்; மற்ற குறைகளை மறைத்துவிடும். என்ன அந்த இயக்குனர் அணிந்திருக்கும் கண்ணாடி மட்டும்தான் மிஸ்ஸிங்.
“உனக்கு சரியா விசயம் தெரியாதுன்னு நினைக்கிறேன்; அங்கே போய் பார் எல்லாம் புரியும். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதும் தெரியும்!” குமார் ரொம்பவும்தான் பீடிகைப் போட்டார்.
‘அப்படியா..!’ என்று நானும் சற்று புருவத்தை உயர்த்தினேன்.
ஒரு முறை என்னைக் கூர்ந்துப் பார்த்தார்.
“அவரைப் பற்றி சொல்ல வந்த விசயத்தை சொல்லுங்கள்” என்றேன்.
“நீயே பார்த்துத் தெரிந்து கொள்” என்றார்.
சரி என்பது போல் புன்னகை செய்தேன்.
டீக்கு காசு கொடுத்துவிட்டு வருகிறேன் என்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். அவரதுப் பார்வை என்னைத் தொடர்கிறதோ என்று அனிச்சையாகத் ஒரு முறை அவரைத் திரும்பிப் பார்த்தேன். அந்த சிரிப்பில் ஏதோ ரகசியம் புதைந்திருந்தது போல் தோன்றியது.
எத்தனையோ நாளாக அந்த கடைக்குச் செல்கிறேன், அந்த காலண்டரை அதுவரை நானும் கூட கவனித்ததில்லை. அது சற்று உள்ளே மாட்டியிருந்ததும் காரணமாக இருக்கலாம். திடீரென எழுந்த புதிர்கள் விடைகள் பற்றிய சுவாரஸ்யங்களைக் கூட்டின. தினந்தோறும் உபயோகப்படுத்தும் மேசையின் டிராயரில் திடீரென, எந்தவித துருப்பும் இல்லாமல் ஒரு ரகசிய சாவி தென்பட்டது போல சில தேடல்கள், கற்பனைகள் என்னையுமறியாமல் உள்ளுக்குள் உருவாகத் தொடங்கின.
ஆமாம் இந்த சாவி எதற்கானது? சன் டிவியில் என்றோ ஒரு ஞாயிறு இரவில் கண்ட ஹாரிப்பாட்டர் திரை விமர்சனத்தின் ஞாபகம் வந்துப்போனது. அந்த படத்தில் நாயகனின் கையிலிருந்த மந்திரக்கோல் போல் நீல வானத்தில் ஒரு மெர்குரி மின்னல் கிளைத்துக் கொண்டு எழுவதைப் போல எழுந்து அது மானின் கொம்புகளாகி, அதுவே ஏழு ஜோடிகளாகி, ஏழு மான்களாகி அதை யாரோ ஓட்டுவது போல மனத்திரையில் என்னென்னவோ ஓடின. அக்கணம் புழுதியைக் கிளப்பியபடி தடதடவெனக் கடந்துச் சென்ற நகரப் பேருந்து முகத்தில் ஒரு அனலைப் பாய்ச்சி நிகழ் உலகத்திற்குக் கொண்டு வந்தது.
நகரம் அதன் அசுர வேகத்தில் எப்போதும் போல சுழன்றுக் கொண்டிருக்க, சிலர் அதன் தலையிலும், தோள்களிலும், இடுப்பிலும், காலிலும், ஏன் செருப்புகளிலும் கூட தனது ஓட்டங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொன்றையும் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவன் போல வேடிக்கை பார்த்தபடி ஏதோ ஒரு தேடலில், ஏதோ ஒரு வாழ்க்கையை அசைப்போட்டவனாக அந்த எறும்புக்கூட்டத்தில் நானும் ஒருவனாக ஊர்ந்து கொண்டிருந்தேன்.
அன்னாசி, பப்பாளி, தர்பூசணிப் பழங்களை சதுர அல்லது சற்றே நீள் சதுர வாக்கில் துண்டுகளாக்கி, சிறிய சிறிய தட்டுகளில் நிரப்பி வைத்துக் கொண்டு அடுத்த விற்பனை எப்போதென வருவோர் போவோரை வெறித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான் அந்த தள்ளுவண்டிக்காரன்.
முனைகளில் நூல் பிசிறுள்ள; தைக்கப்படாத நீலக் கைலியைத் தொடை வரை ஏற்றிக் கட்டியபடி, வண்டிக்குத் தனது கீழ் வயிற்றால் முட்டுக்கொடுத்தவாறு நின்று கொண்டிருந்தவனை உச்சி மரக் கூட்டிலிருந்த காகமொன்று குனிந்து குனிந்து பார்த்தது. அவன் காலடியில் பழங்களின் தோல்கள் படகுகள் போல சீவப்பட்டுக் கிடந்தன.
பழத்துண்டுகளின் வெளிர்-அடர் மஞ்சளும், கொழுந்த செம்மையும், தள்ளுவண்டிக்காரனின் கருத்த உடலும், இளம் நரையும், நான்கு விரல் வரி சந்தன பட்டையும், நடுவில் நின்றும் உதிர்ந்தும் கொட்டிக்கொண்டிருந்த குங்குமப்பொட்டும், நீலக் கைலியும், மஞ்சள் சட்டையும் இந்த காலை வேளையிலும் மாலைக் கருக்கலை நினைவூட்டின. காகம் கா.. காவெனக் கத்த, மேலே குருவிகள் போல சில பறவைகள் பறந்தன.
செஞ்சூரியன் மறையும் மேற்கு மலைத் தொடரொன்றை சென்னைக் கடற்கரையில் அந்நேரம் தேடினேன்.
நடக்க நடக்க தலைக்கு மேல் வானமும் மேகங்களும் நீலக்கடலின் பனிக்கட்டிகள் போல கிரீடமாய் காட்சித் தர, எதிர்ப்பட்ட ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியை மறைத்தபடி பிரமாண்டமான அகன்ற ஃப்ளக்ஸ் ஒன்றில் ‘சந்திரமுகி’ விளம்பரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்குகளில் என்று நிறுவப்பட்டிருந்தது. தானே அதற்கு முழு முதலாளி என்பது போல் ரஜினி கூலிங் கிளாஸை மீறி மோனாலிசா புன்னகையொன்றை காண்போரின் மீது வீசிக்கொண்டிருந்தார்.
நான் அப்போது அந்த படத்தின் தலைப்பிலிருந்த பூட்டிய கதவுகளின் மேல் பார்வையை செலுத்தினேன்.
அது என்னை ஒரு புது அனுபவத்திற்கு தயாராக்குவது போல எனக்குள் நான் உணர்ந்தேன்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்
One comment on “குறுந்தொடர் :நீலி”
rajaram
சிறப்பு, விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
அடுத்த பகுதிக்காக காத்திருப்போம். பிறகு, அந்த நடிகை ஏதோ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுவதாய்ச் செய்திகள் வந்தது. நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.