பகுதி – 12
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1 : பகுதி-2 : பகுதி-3 : பகுதி-4 : பகுதி-5 : பகுதி-6
பகுதி-7 : பகுதி-8 : பகுதி-9 : பகுதி-10 : பகுதி-11
*********
ஐப்பசி மாதக் காலை! வானம் மந்தமாகவே இருந்தது.
மதிக்கு இதை நம்பி வெளியே போகலாமா என்று யோசனை பலமாய் எழ,
“அக்கா டிஃபன் ரெடி பண்ணிட்டியா?” என்று கேட்டபடியே வீட்டிற்குள் மறுபடியும் ஒரு முறை வந்துப்பார்த்தான்.
‘பல்லு தேய்க்க தெரியாது… தேச்சி விட்டது நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டிவிட்டது நீதான்
அங்கங்க மருதாணி அப்பிவிட்டது நீதான்
நா ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்
மஞ்சத்தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாமங்காரன் எனக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்ப சரி செஞ்ச மவராசன் நீயேதான்
நெத்தியில பொட்டு வச்ச ஒத்த விரல் நீதான்
சின்னச் சின்ன கண்ணம்மா
என்னிரெண்டு வருஷமா
உன்னை எண்ணிக் காத்திருக்கா …’
“ஏய் தவமணி..! என்னடி பண்ணிட்டு இருக்க? மாமா வெயிட் பண்ணுதுல! வந்து இலைய போடுடி!”
அதுவரை லீவியின் சினிமா பாடலில் மூழ்கிக் கிடந்த தவமணிக்கு தனது அம்மா ராஜாத்தி அழைத்தச் சத்தம் அப்போதுதான் அந்த இலங்கை வானொலியையும் மிஞ்சி அவள் காதுகளில் விழுந்தது.
“வர்றேன் வர்றேன் ஏன் இவ்வளவு சத்தம் போடுறியோ! இங்கதான இருக்கேன். ஏம் மாமா, காலேலயிருந்து வெளியே எட்டிப்பாக்குறதும் உள்ள வர்றதுமா இருக்கியே… இன்னைக்கு லைனுக்கு ஏதும் போறியா..?”
“இல்ல பாப்பா..” என்று வாயெடுத்தவன் முடிப்பதற்குள், கோபப்பட்டவளாய்,
“உன்ன எத்தனை முறை சொல்றேன் மாமா, பாப்பா பாப்பானு கூப்பிடாதன்னு!” அவளது குழந்தைத்தனமான கோபத்தைக் கண்டு சிரிப்புதான் வந்தது மதிக்கு. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ரசித்தான்.
தவமணிக்கு தன் மாமன் என்றால் அவ்வளவு இஷ்டம்! அவனுக்கு சேவைகள் புரிவதென்றால் போதும் அவளுக்கு பரம சந்தோசம்! அவளைக் கட்டிக்க போறவன் இல்லையா!
தனது பளப்பளப்பான முகம், கழுத்து என கமகமக்கும் கோகுல் சாண்டல் பவுடர் டப்பியைப் பன்னீர் தெளிப்பது போல் அசைத்து அசைத்து அங்குமிங்கும் கொட்டிப் பூசிக்கொண்டிருந்தவனை நெருங்கி, அவன் உருவம் ,மொத்தமும் அவளது நாசிக்குள் புகுந்துவிடுவது போல் இழுத்து நுகர்ந்து “ம்..ம்..மாமா சூப்பர்!”என்று துள்ளாட்டத்தோடு இலை போட சென்றாள்.
பருவமடைந்திருந்தாலும் இன்னும் சிறுமி போலத்தான் அப்போது சுற்றிக்கொண்டிருந்தாள். தன்னை ஒத்த பெண்பிள்ளைகளெல்லாம் தாவணியில் பளிச்சென பள்ளிச் சென்று வர, இவள் மட்டும் இன்னும் பாவாடை சட்டையிலேயே திரிகிறாள். ஒரே மகள் என்பதால் அப்பாவுக்கு செல்லம். அம்மாக்காரி மட்டும் அவ்வப்போது அவளது போக்கைச் சுட்டிக்காட்டி வைது வந்தாள்.
நெசவாளர் குடும்பம் என்றாலும் அவளுடைய தந்தை சோழன் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகவும் பணி புரிந்து வந்தார். மதியழகன் தறியோடு உபரியாக சீவல் வியாபாரமும் செய்து வந்தான். பார்வைக்கு மாமியார் வீட்டிலேயே தவமணியின் தந்தை செட்டில் ஆனது போல தோன்றினாலும், அவர் வீட்டில்தான் தன் மைத்துனனையும் மாமியாரையும் மனைவிக்கும் மகளுக்கும் உதவியாக வைத்திருந்தார்.
முக்கியமாக ஆரம்பத்திலிருந்தே ‘அத்தான் அத்தான்’ என்று மதியழகன் காட்டி வந்த அவனது பணிவிலும் பாசத்திலும் தன் பங்கின் பொறுப்பையும் உணர்ந்து அவனையும் ஒரு பிள்ளை போலவே பார்த்துப் பார்த்து வளர்த்து விட்டுக் கொண்டிருந்தார்.
அவன் சீவல் போடும் தொழில் ஆரம்பிக்கவும் ஆரம்பப் பணம் அவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்தது. வசதியில் குறைந்த அவனுக்கு, தனது மகளை கட்டி வைப்பதில் எந்த தயக்கமும் இல்லையென்றாலும், நேருக்கு நேர் அதைச் சொல்லிக்கொண்டதில்லை. எந்த மருமகன்களுக்கும் கடைசி வரை ஒரு மிடுக்கு இருக்கத்தானே செய்யும்!
பருமடைந்துவிட்ட பின்னரும் தனது தாய்மாமன் மதி தன்னை இன்னும் பாப்பா பாப்பா என அழைத்து வந்ததுதான் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இவனுக்காகவே தாவணி கட்ட உள்ளூற ஆசை என்றாலும், அதையும் மீறிய அவளது பிடிவாதம் இருக்கிறதே… அதை என்னவென்று சொல்வது!
“மாமா சாப்பிட வா” பொங்கலில் ஆவி பறந்தது.
“லைனுக்கு இவ்வளவு சீக்கிரம் போக மாட்டியே..! எங்க மாமா போற..?”
“வண்டிப்பேட்டையில ஒரு சின்ன வேல இருக்கு பாப்பா…” அந்த பாப்பாவில் மீண்டும் அவளுக்கு முனுக்கென்று கோபம் வந்தாலும், அவனோடு சென்று வரும் எண்ணம் மேலிடவே வந்த கோபம் சட்டெனத் தணிந்தது.
“சரக்கா கொண்டு போறே..?”
“இல்ல பாப்பா… சீட்டுக்குப் பணம் கட்டணும்!”
“மாமா நானும் உங்கூட வரட்டா..?” கெஞ்ச ஆரம்பித்தாள்.
அம்மாக்காரிக்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும் சிடுசிடுக்க தொடங்கினாள்.
“சடங்கு சுத்தியாச்சி நியாபகம் இருக்குல்ல?” என்று மகளை அடக்குவது போல் முறைத்தாள்.
“பொய்ட்டுதான் வரட்டுமே..!யாரு கூட போறா..?” பாட்டி பேத்திக்கு ஒத்து ஊதினாள்.
“என்ன இருந்தாலும் தவமணி அப்பா இல்லாத நேரத்துல அப்படியெல்லாம் நாமளா அனுப்ப முடியாது!”
மதி பதிலேதும் சொல்லாமல் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“எலே… நீ எதாவது சொல்லுலெ!” என்று சரஸ்வதியம்மாள் தனது மகன் பக்கம் அமர்ந்தபடி திரும்பினாள்.
“பாப்பா… இன்னொரு நாள் மாமா கூட்டிட்டு போறேன்”
“எங்கப்பா கூட்டிட்டு போற..?” இரவுப்பணி முடிந்து தவமணி அப்பாவும் வந்தாச்சு.
இனி தவமணி என்ன செய்திருப்பாள், என்ன நடந்திருக்கும் என்பது எல்லாம் கொஞ்சம் யூகிக்க கூடியதுதான். தவமணியின் அப்பா எதையும் அவ்வளவாக மறுத்து பேசும் குணம் இல்லாதவர் என்றாலும், அவர் அனுமதி தர நேரம் எடுத்தது. அதனாலேயே பெரும்பாலும் தவமணி அம்மா ராஜாத்தியும் அவரை எந்தவித தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்க விரும்புவதில்லை.
ஆனால் எதிர்பாராத இன்னொரு ஆச்சர்யமும் அங்கே நடந்தேறியிருந்தது; அப்பாவின் சம்மதம் கிடைத்த நிமிடத்தில் தவமணி தாவணிக்கு மாறியிருந்தாள்! மற்ற அனைவருக்கும் ஏக சந்தோசம் என்றாலும் அது தவமணி அப்பாவை மேலும் சற்று தடுமாறவே வைத்தது. சுதாரித்துக் கொண்டு ஒரு சிரிப்பின் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு வரவழைத்துக் கொண்டார்.
மதி அவள் பிறந்திருந்தபோது எத்தனை பிரம்மிப்பாய் பார்த்தானோ அது போல ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியை அன்றும் உணர்ந்தான். மதி டிவிஎஸ் 50ஐ ஸ்டார்ட் செய்ய, மாமனோடு செல்லும் குதூகளத்தில் தவமணி எல்லோருக்கும் டாட்டா காட்டினாள்.
அந்த டாட்டா மதிக்கு பிரபாவின் ஞாபகத்தை வரழைக்கச் செய்தது. ஏனென்றால் அவனும் இவனிடம் இதே போல அவ்வளவு உரிமையெடுத்து பின்னிப் பிணைந்துக் கொண்டிருந்தவன். இப்படி அவனை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுவதில் அவனும் அவ்வளவு சந்தோசப்படுவான். அவனோடு சைக்கிளில் சுற்றிய அந்த தருணங்கள் கண்முன் வந்துப் போயின. அதுவும் கொஞ்சம் வீட்டிலிருந்து வளைவிலிருந்த சுவீட் மற்றும் காரங்கள் பாட்டில்களில் அடைப்பட்ட அந்த ஸ்டால் கடையைக் கண்ட போது, “எங்கடா இருக்க பிரபா?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட்டான். ஆனால் அது அவள் காதுகளுக்கு எட்டவில்லை.
வண்டி சாரநாதர் திருக்கோயிலை நெருங்கியதும் சற்று நிறுத்த சொன்னாள். இறங்கி மனமார ஏதோ வேண்டிக் கொண்டாள். ஏதோ என்ன ஏதோ மாமாவை கைப் பிடிக்கதான் அவ்வளவு உருக்கமும்!
அப்படியே கிழக்கே திரும்பி ஆஞ்சேநேயர் கோயிலுக்கும் ஒரு கும்பிடு போட்டாள். இந்த தாவணி போட்ட பெண்கள்தான் எவ்வளவு அழகு! வளர்ந்த வாழை மரம் போல!
இவளும் இளம் பச்சை தாவணி, டிசம்பர் கலர் ஜாக்கெட்டில் அப்படிதான் இருந்தாள். ஏன் கிளி என்று சொல்ல கூடாதா? ஏன் சொல்ல கூடாது, கிளி என்றும் சொல்லலாம் அழகிய மயில் என்றும் சொல்லலாம் மாமனை பின்தொடர்ந்து செல்லும் வண்ணமயமான வாத்து என்றும் சொல்லலாம். அழகிற்கா இல்லை உவமைகளும் ஒப்பீடுகளும்!
உறங்கிய கண்களை ஒரு வெளிச்சம் அப்படியே தட்டி எழுப்புமே அப்படி இருந்தது மதிக்கு அவளை அன்று அப்படிக் காண்கையில்.
ஆர்ச்சைத் தாண்டி கும்பகோணம் ரோட்டில் உற்சாக மேகமாய், வேகமாய் நகர்ந்தது அவர்களின் அழகியத் தேர். ஒரு புறம் தூங்கு மூஞ்சி மரங்களும் மறுபுறம் பச்சை பசேலென வயல்களும் தொடர்ந்திருக்க, அந்தக் காலைவேளைதான் எத்துனை அருமை! குளுமை!
இதற்கு யார் தூங்கு மூஞ்சி மரமென பெயர் வைத்தார்களோ..! பூக்களின் இளம் நெருப்புப் போன்ற கவர்ச்சி பறக்கும் பிருந்தாவனம் போலல்லவா பார்க்க பார்க்க ஈர்க்கிறது!
“மாமா மாமா நிறுத்து நிறுத்து!”
“என்ன பாப்பா…” அந்த பாப்பாவை சட்டை செய்யும் நேரமில்லை இப்போது அவளுக்கு.
“திரௌபதி அம்மன் கோயில் பொய்ட்டு போவோமா?”
“பாப்பா டைம் ஆச்சி!”
“ஒரே ஒரு நிமிசம் மாமா…” கெஞ்ச, வேறு வழி! ரோட்டை கடந்து உள்ளே சென்றாள். இவன் வாயிலேயே நின்று கொண்டான். சுவற்றில் துகிலுரிக்கும் காட்சி தத்ரூபமாக வரையப்பட்டிருந்ததை இம்முறையும் வியந்துப் பார்த்தான்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு முத்திரை படம் அமைந்துவிடுகிறது. பெருமாள் என்றால் பாற்கடலில் உறங்குவது போன்றும், பத்ரகாளி என்றால் அரக்கனை வதை செய்வது போன்றும் ராமன் என்றால் சீதை, லட்சுமணன் மற்றும் அனுமாரோடு காட்சியளிப்பது போன்றும் இங்கே திரௌபதி என்றால் இந்த காட்சிதான் எல்லோருடைய கண்களிலும் விரிந்து நிற்கிறது. ஒரு ஓரத்திலிருந்து ஒளிவட்டத்தோடு அவளை தன் கரத்திலிருந்து ஆடையை புடவை ஊற்று போல் அனுப்பி காத்துக் கொண்டிருக்கும் அந்த கிருஷ்ணரை கண்டதால்தான் குழந்தைகளுக்கும் பக்தர்களுக்கும் அந்த அந்த காட்சியின் வீரியம் சற்று தணிவதாக உள்ளது.
ஓவியமோ சிற்பமோ எத்தனை நிர்வாணத்திலும் அதன் கலைத்தன்மையை இழப்பதில்லை. வடிக்கும் கரங்களில் ரசனையும் பக்தியும் இருக்குமே தவிர அரக்கன் என்றால் வெறுப்போ அம்மணம் என்றால் விரகமோ அதில் ஓங்கிவிடுவதில்லை.
செம்பருத்தி பூவொன்றை பறித்து தலையில் வைத்துக் கொண்டு வந்தாள். பெண் சிவன் தலையில் சிவப்பு கங்கை ஒன்று முளைத்திருந்தது.
“பாப்பா ஒரே வேண்டுதலா இருக்கு..!” தாவணிக்கு மாறிய உடன் குறும்புத்தனங்களும் அடங்கிவிடுமோ என நினைத்துக் கொண்டான்.
“பாப்பான்னு கூப்புடாத மாமா!” மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்தவள் போல அவன் தன்னை பாப்பா என்று அழைப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“பின்ன?” என்று அவளை அர்த்ததோடு பார்த்துச் சிரிக்க,
‘ஏ புள்ள…’ன்னு கூப்பிடச் சொல்லதான் வாயெடுத்தாள், வெட்கம் தடுத்தது.
“வேற எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்க” என்று சிரித்தாள், அவனும் சிரித்தான்.
“ஓ அப்படியா… சரி உனக்கு ஏன் தவமணின்னு பேரு வச்சோம்னு தெரியுமா?”
“எதுக்கு?
“அக்காக்கு ரெண்டு மூணு வருசமா புள்ள இல்ல. நம்ம ஆளுங்க எல்லா அத்தான்ட்ட அப்படி இப்படின்னு ஏதேதோ தூண்டி விட்டாங்க. அதெல்லாம் பாத்திட்டு நாங்கெல்லாம் ரொம்ப தவிச்சு பொய்ட்டோம். ஆனா அத்தான், அக்காவ எந்த குறையும் சொல்லாம எங்கள்ட்டயும் எப்போதும் போலவே நடந்துக்கிட்டாங்க…” என்று மதி முடிப்பதற்குள்,
“சரி சரி உன் அத்தான் புராணமெல்லாம் போதும். இந்த பேரு எதுக்கு வச்சீங்க அத சொல்லு”
“உனக்காகதான் நாங்க எல்லாம் தவம் கிடந்தோம்… அக்கா விசேசத்துக்கு எங்கேயும் போவாம வீட்லேயே இருந்துக்கிரும். அம்மாவும் வராது. நானும் அத்தானும்தான் பெரும்பாலும் போற மாதிரி இருக்கும். அப்படி போனா கூட இத பத்தின பேச்சாத்தான் இருக்கும். அத்தானுக்கு கூட அவ்வளவு சங்கடம் இருக்காது. அக்காவ பத்தி எங்கிட்ட விசாரிக்கும்போது அவ்வளவு வலியா இருக்கும் பாப்பா… நீ பொறக்க நான் அவ்வளவு தவங்கிடந்தேன்!” சற்று கலங்குவது அவனது தோள்கள் காட்டிக் கொடுத்தன.
“மாமா…!” என்று அவன் தோளை லேசாக தடவினாள். அவள் வயசுக்கு அந்த வெள்ளை சட்டையை மீறிய அவனது உள் பனியன் ஏதோ செய்யவே சட்டென கையை எடுத்துக் கொண்டாள். ஆனால் அவன் சொன்ன அந்த கடைசி வார்த்தை அவளை மேலும் பரவசமடையச் செய்தது.
‘நீ பொறக்க நான் அவ்வளவு தவங்கிடந்தேன்…’
‘நீ பொறக்க நான் அவ்வளவு தவங்கிடந்தேன்…’ என மீண்டும் மீண்டும் அவளது காதுகளில் ரீங்காரமிட்டது!
“தவமணின்னு பேரு குறிச்சீங்களே… சரி, பொறக்க போறது பொண்ணுன்னு எப்படி தெரியும்?”
“பையனா இருந்தாலும் இதே பேர்தான் வச்சிருப்போம். அதான் நீ ஆணுக்கு ஆணா பொண்ணுக்கு பொண்ணா சுட்டியா இருக்கியே… நீ எங்க வம்சத்த பொழைக்க வச்ச தாயி… உன் மூலமாதான் எங்க வம்சம் வளரப் போவுது!”
‘உன் மூலமாதான் எங்க வம்சம் வளரப்போவுது!’
‘உன் மூலமாதான் எங்க வம்சம் வளரப்போவுது!’ மறுபடியும் அவளது காதுகளில் இன்னொரு காதல் ரீங்காரம்! அவனை அப்படியே பின்னாலிருந்து கட்டியணைத்து முத்தமிட ஆசைகள் ஊற்றெடுக்க, பெண்ணுக்குரிய வெட்கம்! இருந்தாலும் சற்று இறுக்கமாக ஒட்டிக்கொண்டாள். அவன் முதுகை புதுவித அழகு அழுத்தியது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்
Leave a reply
You must be logged in to post a comment.