ஜெஸிலா பானு
இல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஏதாவதொன்று எல்லாரிடத்திலும் இருக்கதான் செய்கிறது. எனக்குத் தேவையில்லாதது வேறொருவருக்கு அவசியமானதாக இருக்கலாம். அவருக்குத் தேவையற்றது என்று கருதுவது மற்றவருக்கு வேண்டியதாகிவிடலாம். எல்லோரிடமும் ஏதோ ஒரு தேவையற்றது மற்றவருக்குத் தேவையானதாக இருக்கதான் செய்கிறது.
இன்று நமக்குத் தேவை என்று வாங்கிய பொருள் சில காலம் கழித்துத் தேவையற்றதாகிவிடும். அப்படியாகும் போது அதனைத் தேவையில்லாமல் வீட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக இன்னாருக்கு உதவக் கூடுமென்று நினைப்பவருக்குக் கொடுத்து விடலாம். அல்லது கொடுப்பவருக்குக் கொடுத்தால் வேண்டுபவருக்குப் போய்ச் சேரும் என்று தோன்றுபவருக்கு அனுப்பி வைக்கலாம்.
சிலர் சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காகவே தனக்கு அவசியமானது என்று இல்லாதபோதும் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
சிலர் பெரிய trolley எடுத்து விட்டோம் என்பதற்காகவே அதனை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தன் தோழி வாங்குகிறாள் என்பதற்காகத் தனக்கும் வேண்டும் என்று நினைப்பார்கள். ஏன் அப்படி?
குழந்தைகளும் அப்படிதான் ‘இதை எடுத்துக் கொள்ளவா?’ என்று அத்தியாவசியம் இல்லாததைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு கேட்பார்கள். ‘வேண்டாம்’ என்றால், அதன் விலை ‘சொற்பமானதுதான்’ என்று வலியுறுத்துவார்கள். விலையைப் பற்றி அல்ல..பணம் இருப்பதற்காகப் பார்ப்பதையெல்லாம் வாங்க முடியாது என்று பேருரையாற்ற ஆரம்பித்தால். தெரியாமல் கேட்டுவிட்டேன் என்று வைத்துவிடுவார்களே தவிர அதன் உட்பொருளை புரிந்து கொள்வதில்லை.
எனக்கு முன்பொரு காலத்தில் மேலாளரக இருந்த ஸைனா என்பவர் தனக்கு வேண்டியவற்றை மட்டுமே கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்குவார். அப்படி வாங்கும் பொருளில் ஏதேனுமொரு பொருளை ஆறு மாதங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் அலுவலகத்திற்கு எடுத்து வந்து யாருக்காவது வேண்டுமா என்று கேட்டு அப்படியே கொடுத்துவிடுவார். இருவருக்குத் தேவையென்று கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசாகத் தந்துவிடுவார். மிக விலை உயர்ந்த பொருட்களையுமே அப்படிதான் செய்வார்.
ஒரு புதிய ஆடை வாங்கினால் ரொம்பக் காலம் அலமாரியில் அணியாமல் தூங்கும் ஆடைக்காவது விடுதலை தரலாம். இல்லாதவருக்குக் கொடுக்கலாம். இல்லாதவர்கள் என்று எவருமில்லை தான். இப்போது ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் என்கிறீர்களா? நேற்று சில trolleyகளை அவதானித்ததின் விளைவு. தேவையற்றதெல்லாம் மலையாக எங்கேயோ குவிந்து கொண்டே இருப்பதாக ஒரு பிரம்மை என்னை நெருக்குகிறது. உங்களுக்கு யாருக்காவது அப்படித் தோன்றுமா அல்லது எனக்கு மட்டும்தானா?
– ஜெஸிலா பானு
One comment on “இல்லாதவர்கள் என்று எவருமில்லை – ஜெஸிலா பானு”
kumar
சிறப்பானதொரு கட்டுரை... வாழ்த்துகள்.