பரிவை சே.குமார்
‘தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு… பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும். கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றது’ன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி.
பணம் போட்டு விடுறேன்னு சொன்ன அவளோட புருசன் மலையப்பனும் இதுவரைக்கும் பணம் அனுப்பலை. நேத்துக்கூட போன்ல அவன் கூட சண்டை போட்டாள். ‘என்ன பண்ணச் சொல்றே… பணந்தர்றேன்னு சொன்ன மொதலாளி ஊருக்குப் போகும்போது வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு… ரெண்டு மூணு நாளக்கி முன்னாலயே வந்திருவேன்…. வந்ததும் எல்லாம் வாங்கலாம்’ என்று பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அவனை நம்பியும் இருக்க முடியாது… தீபாவளி சமயம் கடையில் வியாபாரம் அதிகமாக இருக்கும். இருடா நாளைக்குப் போகலாம்ன்னு முதலாளி சொன்னா தட்டமாட்டான். அவனைக் கட்டிக்கிட்டு வந்த இந்த பத்து வருசத்துல ஒரு தீபாவளி கூட அவளுக்குச் சந்தோசமான தீபாவளி கிடையாது. ஆரம்ப காலங்கள்ல தண்ணியைக் குடிச்சிட்டு ஊதாரியாத் திரிஞ்சான். இப்பத்தான் திருந்தி திருப்பூர் பக்கம் சுவீட் கடையில வேலை பாக்குறான். அதனால பெரும்பாலும் தீபாவளிக்கு முதநாள் ராத்திரித்தான் வருவான். இப்ப பிள்ளைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சாச்சு. எல்லாரும் புதுத்துணி கட்டும்போது அப்பா வரட்டும்ன்னு காத்திருக்குங்களா என்ன… யார்க்கிட்டயாச்சும் கடனாக் கொஞ்சம் வாங்கித் துணிமணிகளையும் மளிகைச்சாமான்களையும் வாங்கிட்டா அவன் வந்ததும் கொடுத்துடலாம்ன்னு நினைச்சா. யாருக்கிட்ட கேக்குறது..? எல்லாரும் மழையை நம்பி வயல்ல காசைப் போட்டுட்டு மழையுமில்லாம இருந்த விதையும் போச்சேன்னு வருத்தத்துல இருக்காங்க… இப்பப் போயி ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கிடைக்குமான்னு யோசிச்சா.
நல்லநாள் பெரியநாள்ன்னா அவளோட அண்ணன் மகாலிங்கந்தான் அவ செலவுக்குன்னு காசு கொண்டாந்து கொடுத்துட்டுப் போவான். அவனுக்கு கிளியை வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்துட்டோமேன்னு ஒரு வருத்தம். அவனோட பொண்டாட்டி கூட அவளுக்குச் சேலை எடுத்தா இவளுக்கு ஒண்ணுன்னு எடுத்துக் கொடுத்து விடுவா. கட்டுனவன் பாக்குறானோ இல்லையோ பொறந்தவன் இவளை பெத்த பிள்ளையாட்டம்தான் பாப்பான். இந்தத் தடவை அவனுக்கிட்டயும் காசில்லை ரொம்ப மொடையா இருக்குத்தான்னு சொன்னான். பணம் வந்துட்டா கொண்டாந்து தாறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். கையில காதுல கெடக்கதை வச்சிட்டு வாங்கலாம்ன்னா இருக்கதே அது மட்டுந்தான்… அதையும் வச்சிட்டா… நல்லது கெட்டதுக்குப் போற இடத்துல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாளுங்க. பேசாம அழகர்சாமி மாமாக்கிட்ட கேக்கலாம். அவருக்கிட்ட வாங்கினாத்தான் முன்னப் பின்ன கொடுக்கலாம். காசை வச்சிட்டு மறுவேலை பாருன்னு கறாராப் பேசமாட்டாரு.
“அம்மா… அம்மோவ்…” மூத்தவன் சுந்தரத்தின் அழைப்புக்கு நினைவுகளை புறந்தள்ளி “என்னடா..?” என்றாள்.
“ஹரீஸ் வீட்ல எல்லாருக்கும் புதுத்துணி வாங்கிட்டாங்களாம்… நமக்கு எப்பம்மா வாங்குறது..?”
“அப்பா காசு கொடுத்து விடணுமில்லய்யா…”
“ஆமா… அப்பா எப்பக் கொடுத்துவிட்டு எப்ப வாங்குறது… போங்கம்மா…”
“அம்மா வாங்கித் தாறேன்ய்யா… நீ ஒண்ணு செய்யி நம்ம அழகர்சாமி ஐயாக்கிட்டப் போயி அம்மா கேட்டேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு வா…”
“போங்கம்மா….” அவன் மறுத்தான்.
“போ ராசா… அம்மாதானே வாங்கியாரச் சொல்றேன்..”
“வேண்டாம்மா… அப்பா வந்துரட்டும்…”
“அப்பா… வந்தோடனே கொடுத்துடலாம்… அதைச் சொல்லியே வாங்கிட்டு வா…”
“நீங்களே போயிக் கேளுங்க… நான் போகலை..”
“சொன்னதை செய்யிதுகளா… எல்லாத்துக்கும் நாந்தான் ஓடணும்….” கத்தினாள்.
“எதுக்குத்தா மாப்பிள்ளையை திட்டுறே…?” என்றபடி வந்தான் மகாலிங்கம். “மாமா” என்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டான் சுந்தரம். சின்னவனும் ஓடியாந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் கிடந்த சேரில் அமர்ந்தான்.
“வாண்ணே… எதுக்குத் திட்டப்போறேன்… உம்மச்சினைப் பத்தித்தான் தெரியுமே… அவரு வந்து எப்ப தீபாவளிக்கு டிரஸ் எடுக்கிறது…. இந்த செல்வி மகன் வந்து எங்க வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்தாச்சின்னு சொல்லியிருப்பான் போல இவன் உடனே புடுங்க ஆரம்பிச்சிட்டான்… அதான் அழகர்சாமி மாமாக்கிட்டயாச்சும் வாங்கி எடுத்துடலாம்ன்னு நினைச்சேன். அவருக்கிட்ட கேட்டு வாங்கிட்டு வாடான்னா போகமாட்டேங்கிறான்… ஆமா நீ வந்ததே தெரியலை… சத்தமில்லாம வந்து நிக்கிறே…?.”
கையில் இருந்த பைகளை கீழே வைத்து விட்டு சிரித்துக் கொண்டே “அவரு இருந்தா இல்லைன்னு சொல்லாமக் கொடுப்பாரு… அவருக்கும் இப்பக் கொஞ்சம் கைமொடைதான்… மகனோட பிரச்சினையில நிறைய இழந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்… பிள்ளை கேக்கப் போயி இல்லைன்னு சொல்லிட்டாருன்னா வருத்தப்படுவானா இல்லையா…?” என்றான்.
“இல்லண்ணே… அவரு வந்ததும் கொடுத்துடுறோன்னு கேட்டா கொடுப்பாக அதான்… நாந்தேன் போகணுமின்னு இல்லை”
“ம்… என்னமோ போ உன்னைய செல்லமா வளர்த்து நல்ல குடும்பமுன்னு இங்க கட்டுனா… நல்லநாள் கெட்டநாள்ன்னு இல்லாம எல்லா நாளும் தரித்திரம் பிடிச்சி ஆட்டுது. தம்பி தங்கராசு கூப்பிட்டப்போ உம்புருஷன் சிங்கப்பூர் போயிருந்தா இன்னைக்கு உங்குடும்பமும் நல்ல நிலையில இருந்திருக்கும். அன்னைக்கு போகமாட்டேனுட்டான்… குடிதானே அவனைக் கெடுத்துச்சு… என்னவோ இப்பத்தான் புத்தி வந்து பிழைக்கிறான். தம்பிக்கிட்ட சொல்லி கூட்டிக்கச் சொல்லலாம்ன்னா அவன் முன்னமாதிரி இல்லை. மாமனார் சொல்றதுதான் வேதவாக்கா இருக்கு. இப்பல்லாம் வந்தாலும் ஏதோ கடமைக்குத்தான் வந்து பாத்துட்டுப் போறான். பாப்போம் எப்பத்தான் உனக்கு நல்ல நேரம் வருதுன்னு…”
“என்னத்த சொல்லி என்னண்ணே பண்ண… இப்படி கஷ்டப்படணுமின்னா கட்டிக் கொடுத்தீக… அன்னைக்கி நெலமையில இருபத்தஞ்சு பவுனு நகை போட்டுத்தான் கட்டிக் கொடுத்தீக… எல்லாத்தையும் வித்துத் தின்னுட்டாரு… இப்பத்தான் கொஞ்சம் திருந்தியிருக்காரு… மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறாம இருந்தாச் சரிதான்… எந்தலையெழுத்து இது… நீங்க என்ன பண்ணுவீங்க. எனக்கு காசுமொடை தெரியாம வளர்த்தாரு அப்பா. அதான் இன்னைக்கி அஞ்சுக்கும் பத்துக்கும் உறவுக்கிட்ட தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறேன்…”
“எல்லாம் சரியாகும் விடு…”
“இருண்ணே… காபி போட்டுக்கிட்டு வாறேன்… இனி பேசி என்னாகப் போகுது…?”
“இந்தா உனக்கும் மாப்பிள்ளைகளுக்கும் டிரஸ் இருக்கு…” காலுக்கடியில் இருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.
“காசு இல்லைன்னு சொன்னே…?”
“அதுக்காக… எப்பவும் செய்யிறதை விட்டுற முடியுமா…? எப்பவும் காசு கொடுத்து எடுத்துக்கச் சொல்லுவேன். நேத்து அண்ணி துணி எடுக்கப் போனா அவகிட்ட உங்களுக்கும் எடுத்தாரச் சொன்னேன். சின்னப்பயலுக ஏங்கிப் போகமாட்டானுக… வெள்ளச்சாமிக்கிட்ட கொஞ்சம் காசு வாங்கினேன். அதுலதான் எல்லாருக்கும் டிரஸ், தீபாவளிக்கு வீட்டுச்சாமான் எல்லாம் வாங்கியிருக்கு….”
“எதுக்குண்ணே கடன் வாங்கி எங்களுக்கும் வாங்கணுமாக்கும்…”
“கடமையின்னு ஒண்ணு இருக்குல்லத்தா….”
“நல்லாத்தேன்… டிரசுன்னதும் உம்மாப்பிள்ளைக முகத்தைப் பாரு…”
“சின்னப்பயலுகதானே….” என்றபடி அவள் கொடுத்த காபியைக் குடித்தான்.
“இந்தாத்தா… இதுல ஆயிரம் ரூபா இருக்கு, மளிகைச் சாமான் பாத்து வாங்கிக்க…” என்று பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.
“எதுக்குண்ணே இதெல்லாம்… வேண்டாம் போ… அவருதான் வந்துருவாருல்ல… வந்தவுடனே வாங்கிக்கிறேன்… நீ வச்சிக்க…”
“அட சும்மா பிடி கழுத… அள்ளியா கொடுக்கிறேன்… இருக்கதுல கிள்ளித்தானே கொடுக்கிறேன்… அப்புறம் நல்லநாள் செலவுக்கு யாருக்கிட்டயும் தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்… இந்தாப் பிடி…”
“கடன் மேல கடன் வாங்கி வைக்காதே… பின்னால உனக்குத்தான் சிரமம்…”
“தெரியுது… என்ன செய்ய… முன்னமாதிரி விவசாயம் இல்லை… செம்மறி ஆடுகளும் பாதிக்கு மேல சீக்குல போயிருச்சுக… இருக்க ஆடுகளை வித்துட்டு கடனை அடைச்சிட்டு எதாவது வேலைக்குப் போக வேண்டியதுதான். இனிமே வேலைக்குப் போயி சம்பாதிக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டந்தான் என்ன செய்ய ரெண்டு பொட்டப்புள்ளைக வெளஞ்சி நிக்கிதுகளே…. சரி வர்றேந்த்தா…” என்றபடி கிளம்பினான்.
தன்னோட வாழ்க்கையை நினைச்சி அழுவதா… கஷ்டப்பட்டாலும் தங்கச்சிக்கு ஏதாவது செய்யணுமின்னு கொண்டுக்கிட்டு ஓடியார அண்ணனை நினைச்சி சந்தோஷப்படுவதான்னு தெரியாம அவன் பின்னாலேயே வாசலுக்கு வந்தவளுக்கு எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ் பிப்டி இல்லாமல் மகாலிங்கம் வேகமாக நடந்து போவதைப் பார்த்தபோது கையிலிருந்த பணமும் சுவரோரம் சாத்தி வைத்திருந்த துணிப்பையும் விவரத்தை வெளிச்சமிட, கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
நன்றி : படம் இணையத்திலிருந்து