(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 1
‘பாடி எங்க இருக்கு..?’
‘யார் முதலில் பார்த்தது..?’
‘ஏதாவது தடயம் கிடைத்ததா..?’
என்ற ரெடிமேட் கேள்விகளையெல்லாம் கேட்காமல் “அந்தப் பெண் என்ன சொல்றா…?” என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன் – வயது 32, உயரம் 6 அடிக்கு சற்றே குறைவு, தொந்தி இல்லாது உடற்பயிற்சியால் கட்டுக்கோப்பான உடம்பு, இடது பக்கம் வகிடு எடுத்துச் சீவிய, போலீஸ் கட்டிங்கையும் மீறித் தெரியும் சுருள் முடி, லேசாக முறுக்கி விடப்பட்ட மீசை – போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரர்கள் தூக்கிச் சுமக்கும் கடுமை சற்றே அதிகமாகத் தெரிந்தது.
“மேலதான் சார் இருக்கா?” என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடனும் இருபுறம் அருவி வழிவது போல் முட்டுவாயை நோக்கி இறங்கிய மீசையுடன் இருந்தார். முகத்தில் லேசான புன்னகை தொக்கி நிற்பதால் கடுமை தெரியவில்லை.
“ம்… எதாவது சொன்னாளா..?” கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.
பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி “அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கலை சார்…” என்றார்.
திரும்பிப் பார்த்தவர் “நாமதான் சார் உருப்படியான தகவலை வாங்கணும்.” என்றவர், “சரி உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?” எனக் கேட்டார்.
“அப்படித் தோணலை சார்… காலையில காபியோட போயிருக்கா… அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா…”
“ம்… இதை அவதானே சொன்னா..?”
“ஆ… ஆமா சார்…”
“அப்ப இதை அப்படியே நம்பிடலாமா..? போலீஸ் புத்தி வேற மாதிரி யோசிக்கணும்”
“அப்படிச் சொல்லல சார்… ஆனா அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு… இப்பவும் திரும்பத் திரும்ப அதைத்தான் சொல்றா… அவளோட பேச்சும், பயப்படாத கண்ணும் அதுதான் உண்மைன்னு சொல்லுது”
“ம்… பாக்கலாம் எது உண்மைன்னு” என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார்.
அங்கே…
மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்… தொழிலதிபர் தணிகாசலம்.
“என்ன வெறியோ தெரியலை… இப்படி கொன்னிருக்காங்க…. கத்தியால குத்திட்டு அப்புறம் எதுக்குய்யா கழுத்தயும் அறுத்திருக்கானுங்க. ஆமா இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா…. பொரன்சிக் ஆட்கள் எங்கே…?”
“ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்… பொரன்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்…”
“சரி… அடுத்து ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க… இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா…?”
“சொல்லியாச்சு சார்…”
“கிளம்பிட்டாங்களாமா…?”
“பையனும் பொண்ணுந்தான்… வந்துக்கிட்டு இருக்காங்க…”
“மனைவி…?”
“இல்லையாம் சார்…”
“இல்லைன்னா இறந்துட்டாங்களா… இல்ல… பிரிஞ்சிட்டாங்களா?”
“சரியான விவரம் தெரியலை சார்… இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்…”
“ம்… நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க… நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்…” என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.
ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து, சுவரோடு ஒண்டினாள். உதடு துடித்துக் கொண்டிருந்தது.
சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார்.
அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை… கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க… அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் ‘ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்கா… தணிகாசலம் தனிமையை…’ என யோசித்து, உடனே சுதாரித்துத் தன் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அவரோட மனசு சட்டென போலீஸ் பார்வைக்கு மாறி அவரின் பார்வையில் உதித்த எண்ணத்தைச் சற்றே மாற்றி, ‘இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்…?’ என்ற வினாவை முன் வைக்க, கொஞ்சம் நேரம் அதே பார்வையில் யோசித்து அவளைப் பார்த்தவர் ‘சேச்சே… இவள் அப்படியானவள் இல்லை’ என ஒருமனதாக முடிவு செய்து ‘சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது சுகுமாரன்’ என அவருக்கே சொல்லிக் கொண்டு அந்தக் கேள்வியைத் தூக்கி வீசிவிட்டு அவளைப் பார்த்து “இங்க வா…” என்றார்.
அருகே வந்து நின்றவள் அழ ஆரம்பித்தாள்.
“ஏய்… இப்ப நீ எதுக்கு அழுறே..? அப்ப நீதான் கொன்னியா..?”
“இ….இல்லங்க… சார்…” பதறினாள். அழுகையை நிறுத்தியவளால் தேம்பலை நிறுத்தமுடியவில்லை.
“அப்ப அழுகாம நான் கேக்குற கேள்விக்கு உண்மையான பதிலச் சொல்லணும்… சரியா..?”
“ம்…” தலையாட்டி விட்டு இடது புறங்கையால் மூக்கையும் கண்ணீரையும் சேர்த்துத் துடைத்துக் கொண்டாள்.
அவளைப் பார்க்கும் போது பாவமாய் தெரிந்தது.
இவள் செய்திருப்பாளென்ற நம்பிக்கை இல்லை என்றாலும் இவளோடு சேர்ந்து வேறு யாரும் செய்திருந்தால்…?
இவள் நடித்தால்..?
இந்த வீட்டோடு நேரடித் தொடர்பில் இருப்பவள் இவள்தானே…?
என யோசித்துக் கொண்டே ஒரு வில்ஸ் பில்டரை எடுத்து உதட்டில் பொருத்தி, பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு லைட்டரை எடுத்துப் பற்றவைத்து, புகையை உள்ளிழுத்து மூக்கு மற்றும் வாய்வழி வெளியேற்றியபடி “ம்… நாங்கேக்குற கேள்விக்கு எனக்கு உண்மையான பதில் வேணும்… பொய் சொன்னேன்னு வச்சுக்கோ… மவளே… தூக்கிட்டுப் போயி லாடம் கட்டிருவேன்” என மிரட்டலாய் சொல்லிவிட்டு, கையை முறுக்கிக் கொண்டு கோபமாய் அவளைப் பார்க்க,
அவளோ பயத்தில் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் ஒடுங்கி நின்றபடி உண்மையைச் சொல்லிடுறேன் என்பதாய் தலையாட்டினாள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(வெள்ளிக்கிழமை – விசாரணை தொடரும்)