பெண்ணாகடம் பா.பிரதாப்

எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக மோகினி பாகம்-1, பொக்கிஷம், ஒரு கடிதத்தின் கதை, பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள்,உன் கண்ணில் என் கவிதைகள்(கவிதை தொகுப்பு) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமானுஷ்யக் கதைகள் எழுதுவதில் கில்லாடியான இவர் ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ ‘அஷ்ட நாகன்’ போன்ற தொடர்களை இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார், எழுதி வருகிறார். சிந்தனை சிற்பி ‘சிங்கார வேலர்’ என்னும் விருதைப் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் திரு.இந்திரா செளந்தர் ராஜன் அவர்களின் மானசீக மாணவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் இவர். கேலக்ஸியில் இவரின் முதல் கட்டுரை இது.
*********
ஒரு மனிதனுக்கு உடல் நலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மனநலம் மிக முக்கியம். இங்கே மனிதர்களை முன்னிலைப்படுத்தி மனம் பற்றி கூறுவதற்கு காரணம் உண்டு. ஏனெனில்,மனம் கொண்ட உயிர்கள் தான் ‘மனதன்’ என்றாகி பின்னர், ‘மனிதன்’ என்று திரிந்ததாக ஒரு கூற்று உள்ளது.
மனிதனுக்கு மட்டும் தான் சிந்தித்து செயல்படும் ஆறாம் அறிவு இருக்கிறது.அதனால் தான் பிற உயிர்களை விட மனிதர்களை சற்று உயரத்தில் வைத்து பார்க்கிறோம்.
மனம் மற்றும் மன நலம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சமயம், இலக்கியம்,தத்துவங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் பலதரப்பட்ட நபர்களால் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
‘மனம் என்பது மனித உடலில் எங்குள்ளது?’ என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதிலை யாராலும் கூற இயலவில்லை. மனம் பற்றி ‘சிக்மண்ட் பிராய்ட்’ முதல் பல உளவியல் நிபுணர்கள் ஆராய்ந்து பல அனுபவ ரீதியான கருத்துக்களை கூறியுள்ளனர், கூறியும் வருகின்றனர்.
‘உன் மனசை தொட்டு சொல்லு?’ என்று ஒருவர் மற்றவரிடம் கேட்கும் போது, தன் நெஞ்சில் கை வைத்து;அதாவது மனம் என்ற ஒன்று இதய பீடத்தில் இருப்பது போல கூறுவர்.வேறு சிலர் மனம் என்ற ஒன்று நம் மூளையில் இருப்பதாக கூறுவர்.மனம் பற்றி பலரால் பலவிதமாக கூறப்பட்டாலும், மனம் என்ற ஒன்று நம் எண்ணங்களின் தொகுப்பு என்று பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து ஆகும்.
நம் மனதின் செயல்பாடானது…நம் மன நிலை, சூழ்நிலை மற்றும் உடல்நிலை ஆகியவற்றை சார்ந்துதான் உள்ளது.
மனம் பற்றி ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு கருத்து கூறப்பட்டாலும்,’மனோநாசம்’ என்னும் மனம் அற்ற மனம் என்ற நிலையை அடைவதே பேரின்பம் என்பது அனைத்து மதங்களிலும் பொதுவான கருத்து ஒற்றுமையாக உள்ளது தனிச்சிறப்பு.
அறிவியல் ரீதியாக நம் மனதை அளக்க இதுவரை ஒரு அறிவியல் கருவிக்கூட கண்டுபிடிக்க இயலவில்லை என்பது துரதிர்ஷ்டமே !
நம் வாழ்வில் நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம். ஆனால்,மன நிம்மதியாக வாழ விரும்புவதில்லை.
‘சந்தோஷத்திற்கும்,மன நிம்மதிக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா?’ சொல்கிறேன்.
சந்தோஷம் என்பது நாம் ஒரு விஷயத்தை நாடி ஓடிச் செல்லும் போது அந்த குறிப்பிட்ட விஷயம் வெற்றி அடைந்தால், நமக்கு கிடைக்கும் மன நிறைவை தான் சந்தோஷம் என்கிறோம். அதே மாதிரி நாம் விருப்பப்பட்ட ஒரு விஷயம் கை கூடவில்லை என்றால் நம் மனம், மன நிறைவின்றி துக்கம் அடையும்.
மேற்கூறப்பட்ட கருத்துக்களில் இருந்து சற்று மாறுபட்டு, நம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு, நமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் மன நிறைவு காண்பதே ‘மன நிம்மதி’ என்கிறோம்.
இந்த உலகில் வாழும் மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் ‘ஸ்ட்ரெஸ்’. அதாவது மன அழுத்தம் ஆகும்.
மன அழுத்தம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
மன அழுத்தம் வருவதற்கு பிரதான காரணம் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல் இருப்பது தான்.
ஒரு நபருக்கு தன் வேலைப் பளுவினால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், ‘தனக்கு எதனால் மன அழுத்தம் ஏற்படுறது?’ என்பதைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக, தனக்கு உண்டான பிரச்சனைகளைத் தன் துணையுடனோ அல்லது தன் நம்பிக்கைக்கு பாத்திரமான நபருடனோ பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பிரச்சனைகளைப் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். குறைந்தபட்சம் மன பாரமாவது குறையும்.
மன பாரம் ஏற்படுவதற்கு காரணம் ‘இயலாமை’ ஆகும்.
தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை.அவரவர் அவரவர்களின் பொறுப்பு உணர்ந்து பரஸ்பரப் புரிதலோடு வாழ்ந்தாலே மன அழுத்தம் இன்றி உள ஆரோக்கியத்தோடு வாழலாம்.
உள ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்று மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைந்திட முடியும்.’
மன அழுத்தம் இன்றி பல்லாண்டு காலம் வாழ்வோம். வாழும் வரை உயிர்ப்புடன் உள-உடல் ஆரோக்கியத்துடன் திகழ்வோம்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.