(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 11
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார். லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள்.
நடப்பது:
தர்ஷிகாவின் கையில் மோதிரம் இல்லாததைப் பார்த்த பொன்னம்பலம் குற்றவாளியை நெருங்கிவிட்ட சந்தோசத்தில் மெதுவாக சுகுமாரனின் காதைக் கடித்தார். அவரும் ஏதேச்சையாக திரும்புவது போல் தர்ஷிகாவைப் பார்த்து விரலை நோட்டமிட்டார். மோதிர விரலில் மோதிரம் அணிந்த தடம் இருக்க மோதிரம் இல்லை.
“வாங்க இன்ஸ்பெக்டர்… வாங்க சார்…” என்றபடி வருணுக்கு அருகே அமர்ந்தாள். அப்போதுதான் குளித்திருப்பாள் போல சந்தன சோப்பின் வாசமும் ஷாம்பின் வாசமும் சேர்ந்து வந்தது.
“என்ன சார்… நான் வரும்போது சார் என்னமோ உங்ககிட்ட குசுகுசுன்னு சொன்னாரே… என்னவாம்…?” என சுகுமாரனைப் பார்த்துக் கேட்டாள் தர்ஷிகா. காவல் நிலையத்துக்கு வந்த போது பார்த்ததைவிட இப்போது முகத்தில் நல்ல தெளிவு இருந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீங்க அன்னைக்கு இருந்ததுக்கு இன்னைக்கு நிறைய மாறிட்டீங்கன்னு சொன்னார்… ஆமா கையில மோதிரம் போட்ட தடம் இருக்கு, ஆனா மோதிரத்தைக் காணோம்? எங்கயாவது மிஸ் ஆயிடுச்சா..? இல்ல குளிக்கும் போது கழட்டி வச்சிருவீங்களா..?” அவளைப் பார்த்து எதேச்சையாகக் கேட்பது போல் கேட்டார்.
தர்ஷிகா சிரித்துக் கொண்டே, “ஏன் எங்கப்பா கொலையான அறையில் மோதிரம் எதுவும் கிடந்ததா?” எதிர்க்கேள்வி கேட்டு சிரித்தாள்.
தணிகாசலம் இறந்த அன்று பார்த்த தர்ஷிகாவா இவள் என்று அவரை யோசிக்க வைத்தது.
“இல்ல தடம் இருக்கு… சமீபத்துல மிஸ் ஆன மாதிரி தெரியுதேன்னு கேட்டேன்…”
“எம்மேல சந்தேகம்..? ஓ இவரு அதைப் பார்த்துத்தான் உங்க காதைக் கடித்தாரோ…?. குளிக்கும் போது கழட்டி வச்சேன்… மேல ரூம்லதான் இருக்கு… இருங்க எடுத்துக்கிட்டு வாறேன்… உங்க சந்தேகம் போகணுமில்ல…” என்றபடி எழுந்து சென்றாள்.
“இல்லங்க பரவாயில்லை…”
“இந்தா வாரேன் சார்… எம்மேல சந்தேகம் வந்தாச்சுல்ல…” என்றபடி மீண்டும் மாடிப்படி ஏறினாள்.
அவளைப் பின்புறமாக பார்த்த சுகுமாரனுக்கு ஏனோ ‘இடையில் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட இனிய தம்புராவை மீட்டிச் சென்றாள்’ என்ற பாட்டு ஞாபகத்தில் வந்தது. மெதுவாக பொன்னம்பலத்திடம் திரும்பி, “என்னய்யா… இந்தக் கதை ஓர்க் அவுட் ஆகலையே..?” என்றார்.
“சே… நம்பிக்கையோட வந்தேன்… ஏமாற்றம் ஆயிருச்சு சார்…”
“என்ன இன்ஸ்பெக்டர் தர்ஷ்… மேல அப்படி ஒரு சந்தேகம்..? அவ எதுக்காக கொல்லணும்..? அதுவும் அப்பாவை கொல்லணுமின்னா அவ இங்கயே பண்ணியிருக்கலாமே ஏன் ஊட்டிக்குப் போகணும்..? அப்பா கொலை நடந்த அந்த வாரம் புல்லாவே அவளுக்கு எக்ஸாம்… படிக்கிறதுக்காகவே வீட்டைவிட்டு அவ வெளிய கூட போகலை… ஆமா ஏதாவது தடயம் கிடைச்சதா..?” என்று வருண் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, திரும்பி வந்த தர்ஷிகா சிரித்துக் கொண்டே தனது மோதிரத்தைக் காட்டினாள். அச்சு அசலாய் பொன்னம்பலத்திடம் இருக்கும் மோதிரம். ‘அப்படின்னா அது யாரோடது?’ குழம்பினார் பொன்னம்பலம்.
“சாரிங்க… ஒரு சந்தேகம்… இதே மாதிரி மோதிரம் ஒண்ணு கிடைச்சது…அதான்… நாங்க வரும்போது நீங்களும் மோதிரம் இல்லாம இருக்க… மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டுட்டோம்…”
“போலீஸ் புத்தி அது..” என்று சிரித்தாள்.
“என்னங்க… அப்பா செத்த கவலை அதுக்குள்ள உங்களை விட்டுப் போயிருச்சா…?”
“கவலை… ம்… அது இருக்கத்தான் செய்யுது… அதுக்காக அழுதுக்கிட்டு கிடந்து என்னாகப் போகுது… அப்பா திரும்பி வரப்போறாரா…? அம்மா உயிரோட இருக்கும் போதே இழந்துட்டு நிக்கிறோம். நிறைய இழப்புக்களை பார்த்துப் பழகிட்டோம். அதனால இழப்புகளை ஈசியா எடுத்துக்கப் பழகிட்டோம்… இல்லேண்ணா… ” என்று வருணைப் பார்த்ததும் அவன் ஆமோதிப்பதுபோல் தலையாட்டினான்.
“அடேயப்பா அன்னைக்கு அழுதுக்கிட்டு மூக்கைச் சிந்திக்கிட்டு இருந்த பொண்ணா நீங்க… இப்படியெல்லாம் பேசுவீங்களா…?” பொன்னம்பலம் ஆச்சர்யப்பட்டார்.
“நான் நல்லாப் பேசுவேன் இன்ஸ்பெக்டர்… அன்னைக்கு அப்பாவோட இழப்பு… ரொம்ப வலி தெரியுமா..? எம்மேல எம்புட்டு பாசம் தெரியுமா…? நான் செத்தா நீ அழுதுக்கிட்டு கிடக்கக் கூடாது… எதையும் துணிஞ்சு சந்திக்கிற திறமை உங்கிட்ட இருக்கு… எப்பவும் போல்டா இருக்கணுமின்னு சொல்வார். ஹி ஈஸ் எ ஜெம் சார்… அவர் பணம் பணம்ன்னு போனதால அம்மா போனதாச் சொல்லுவாங்க, ஆனா அவரோட பாசத்தை அனுபவிக்கத் தெரியாம பொயிட்டாங்கங்கிறதுதான் உண்மை சார். அன்னைக்கி அவர் பணம் பணம்ன்னு இருந்திருக்கலாம், ஆனா அவரோட பாசத்துக்கு முன்னால மத்ததெல்லாம் சும்மா சார். உக்கார நேரமில்லாதவர்ன்னு எல்லாம் சொல்ல முடியாது… ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாலும் என்னோட அறைக்கு வந்து பாத்துட்டு, எனக்கு போர்த்திவிட்டு, உடம்புக்கு முடியாத நேரத்துல மருந்து தேய்ச்சி விட்டு… அதெல்லாம் போச்சு சார்…. எல்லாத்தையும் இழந்துட்டேன்…” இதுவரை சிரித்தவள் அழுக ஆரம்பித்தாள்.
“சாரிங்க… உங்க வேதனை புரியாம…”
“ஏய் தர்ஷ்… என்ன இது… விடு… நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை… விடு….”
“அழுகாதீங்க…” என்றபோது வருணின் செல்போன் அடித்தது.
எடுத்துப் பார்த்தவன் கட் பண்ணிவிட்டான்.
மீண்டும் அடிக்க… கட் பண்ணினான்.
மூன்றாவது முறை வந்த போது “ஏதோ அர்ஜெண்ட் போல… உங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தானே இருக்கும்… சும்மா பேசுங்க…” என்றார்.
சிரித்தவன், “இல்ல இன்ஸ்பெக்டர்… இது வாழ்க்கைத் தொந்தரவு… நான் கட்டிக்கப் போறவ… என்னைய வரச்சொல்லியிருந்தா… நீங்க வந்ததால போக முடியலை… அப்பா இறந்ததால ஒரு வாரமா எங்கிட்டும் போகலை… அதான்… அடிச்சிக்கிட்டேதான் இருப்பா…”
“ஓ… அண்ணியா… இங்க வரச்சொல்லு…” என்றாள் தர்ஷிகா.
“சும்மா இரு… காத்திருந்துட்டு போகட்டும்…”
“ஆமா அப்புறம் நீதான் அவளைத் தொங்கிக்கிட்டுக் கிடக்கணும்…” என்று சிரித்தாள்.
“சரி வருண்… எதாவது துப்புக் கிடைத்தால் சொல்றோம்… அபீசியலா வரலை… நாங்க கிளம்புறோம்…” என்றார் சுகுமாரன்.
“ஓகே சார்….” என்று எழுந்த வருண், அவர்கள் பின்னாலே வந்து காரில் ஏறப்போன சுகுமாரனிடம் மெதுவாக “சார் நீங்க எதுவோ குளூ கெடச்சித்தான் வந்திருக்கீங்க… தர்ஷோட மோதிரம் பற்றி கேட்டீங்க… மோதிரம் எதுவும் கிடைச்சதா..?”
“அப்படியெல்லாம் இல்லைங்க… அவங்க கையில தடம் கிடந்ததைப் பார்த்துக் கேட்டேன்… அவ்வளவுதான்…”
“எது எப்படியோ… மோதிரம்தான் அப்பா கொலையோட முக்கியமான தடயமா இருந்தா இதே மாதிரி மோதிரம் இன்னொருத்தர்க்கிட்டயும் இருக்கு. நாம கொஞ்சம் பிரியா பேசினா நல்லாயிருக்கும்… நீங்க ஹோட்டல் பாண்டியன் போங்க… உங்களுக்காக அங்க ஒரு அறை புக் பண்ணச் சொல்லிடுறேன். போயி குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க… தர்ஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்… ஈவினிங் நான் வர்றேன்… பேசலாம்…” என்றான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(திங்கள்கிழமை – விசாரணை தொடரும்)