பரிவை சே.குமார்
இது ஒரு கல்லூரி மாணவியின் முதல் கவிதைத் தொகுப்பு.
இக் கவிதைத் தொகுப்பை புத்தகமாகும் முன் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தன் வாழ்வின் பக்கங்களை இதில் கவிதை ஆக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஐஸ்வர்யா சிவலிங்கம்.
எதை வேண்டுமானாலும் கவிதை ஆக்கலாம்… வாசிப்பவரை ஈர்க்கும் வார்த்தைகள் இருந்தால் போதும் என்பதைவிட இதை கவிதையாக்கி வாசிப்பவரை கொஞ்சம் சுவாசிக்கவும் வைக்கலாம் என்று நினைத்திருப்பதற்கே எழுத்தாளரை வாழ்த்தலாம்.
இங்கு சமூகம் சார்ந்து எழுதப்படும் கவிதைகளை விட காதல் கொண்டு எழுதப்படும் கவிதைகளுக்கே வாசம் அதிகம். ஒரு கல்லூரி மாணவியின் கவிதைகள் என்ற போது காதல் கவிதைகளும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து ரசிக்கக் கொடுத்திருக்கிறார்… ஆம் இவை எல்லாமே வாழ்க்கைக் கவிதைகள்… வாழ்வில் நாம் ரசித்து அனுபவித்தவையின் கவிதை வடிவமே.
இந்தப் புத்தகம் நான் எனக்குள் இருக்கும் கவிஞரைத் தட்டி எழுப்பி உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சியல்ல என்று ஆரம்பத்திலேயே ஆசிரியர் சொல்லி இருப்பதால் இது கவிதையா..? இப்படி எழுதினால் போதுமா..? அழகியல் வார்த்தைகள் சேர்க்காமல் எழுதலமா..? என்றெல்லாம் யோசனைக்கு ரெக்கை கட்டி விடத் தேவையில்லை. எப்படி இருக்கிறதோ அப்படியே வாசிப்போம்… வாழ்ந்து பார்ப்போம்… அதுதானே எதார்த்தம்.
‘சிறுமியின் டைரி’யில் ஆரம்பித்து பல இடங்களுக்குப் பயணித்துக் ‘கவலையின் போது’ என்னும் கவிதையில் முடியும் இந்தப் புத்தகம் நூறு பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே மூச்சில் வாசித்து விட முடிகிறது.
பத்து வரிகளுக்குள் இருக்கும் இவரின் கவிதைகள் எல்லாமே ஏதோ ஒரு வாழ்வியல் கதையைப் பேசுகின்றன. வாசிக்கும் போது நாமும் அதை வாழ்ந்து பார்த்துக் கடந்து போகத்தான் அதிகம் வாய்ப்பிருக்கிறது. கவிதையாக அல்ல, நம்மோடு நெருக்கமான கதையாய்.
இங்கே சில வரிகள்…
‘நான் என் பேனாவிடம் சொன்னேன்…
நானும் பறக்க நினைத்திருக்கிறேன்
பட்டமாக அல்ல பட்டாம்பூச்சியாக.’
‘இரவு தன் நிலவை
இருட்டின் பக்கங்களில் எல்லாம் தேடுகிறது’
‘என் நிழல் எப்படி
என்னைப் போல் இல்லாதிருக்கும்’
‘எல்லாக் காடுகளும்
வானத்திலிருந்து விழும் ஒரு துளி
மழையிலிருந்தும், சிறு பறவையின்
எச்சத்திலிருந்தும் தான்
உருவாகியிருந்திருக்கும்’
‘இன்றும் கூட காத்திருப்பு என்பது
என்னைப் பொறுத்தவரை யாரும்
கடைபிடிக்க முடியாத பெரும் தவம்’
‘மிகப்பெரிய மலைமுகடுகளிலிருந்து தோன்றும்
ஊற்றின் குறைந்தபட்ச ஆசை என்னவாக இருக்கும்?’
‘என் இரவுகள் எல்லா நேரங்களிலும்
இருளாகவே இருப்பதில்லை’
‘எல்லாப் பயணங்களும் குறித்த
இடத்தை அடைவதில்லை
இருப்பினும் ஒவ்வொரு பயணமும்
முடிவில் ஏதோ ஒரிடத்தில்
நம்மைச் சேர்க்கிறது’
‘இந்த நட்சத்திரங்கள் ஏன்
என்னை வாழச் சொல்லி
ஊக்குவிக்கிறது…
ஒருவேளை அவை இப்பூமியில்
வாழ்வதை எளிதானதாக
நினைத்திருக்கலாம்.’
‘இப்பூக்கள் தோன்றிய மரத்திடமே
அதைக் கொடுத்துவிட்டேன்…
பூக்கள் மிகவும் பிடித்த என்னால்
வேறென்ன செய்ய முடியும்..?’
‘நான் வெகுநாட்களுக்குப் பின்
அவளைச் சந்தித்த போது
அவள் முன்பே கடவுளை
சந்தித்து விட்டதாகச் சொன்னாள்’
‘நான் ஒரு பட்டாம்பூச்சி
எப்போதும் எனக்கென ஒரு
முகவரி இருந்ததேயில்லை’
‘இங்கு எல்லாருக்கும் விடியல்
ஒன்றாக இருப்பதில்லை’
‘சற்று முன் வீசிய காற்று
ஏதோ ஒரு மரத்தின்
இலைகளையும் பூக்களையும்
அதிலிருந்து விழச்
செய்திருக்கும்தானே’
‘அவரால் மட்டும் எப்படி
எல்லாச் சாலைகளிலும்
வண்டி ஓட்டமுடிகிறது
என்று கேட்டதற்கு
என் பின்னால் இருக்கும்
நம்பிக்கை என்றார்.’
கவிதைகளை இன்னும் செப்பனிட்டிருந்தால் எதார்த்தங்கள் இப்படித்தான் என்ற பெயருக்கு ஏற்ப கவிதைகள் எதார்த்தமாய் எல்லோரையும் கவர்ந்திருக்கும் என்றாலும் எழுத்தாளர்கள் இப்படித்தான் தங்கள் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள் என்ற வகையில் காதல் கவிதைகளைத் தூக்கி வராமல் வாழ்வியலை வாரியணைத்து வந்திருக்கிறார் ஜஸ்வர்யா.
இவர் கவிதைகளை விடுத்து வாழ்வியல் கதைகளை எழுதலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிதைக்குள் அடக்கி இருக்கும் கதைகளை, அடங்கி இருக்கும் கதைகளை இன்னும் விரிவாகக் காட்சிப்படுத்தினால் அழகான சிறுகதைகள் கிடைத்துவிடும். ஜஸ்வர்யா முயற்சிக்கலாம்.
ஜிகினா வார்த்தைகள்… அழகியல் முயற்சிகள்… எதுகை மோனை… வார்த்தை ஜாலம் எதுவுமின்றி கவிதைகள் நம்மை ஈர்ப்பதில் ஜெயித்திருக்கிறார். ஐஸ்வர்யா.
தொடர்ந்து எழுதுங்கள்…
இன்னும் கவனமாய் நிறைவாய் வார்த்தைகளைக் கொண்டு வாருங்கள்… வரிகளை உடையுங்கள்… வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு எழுதுங்கள்… உங்கள் கவிதைகளின் அழகும் அழுத்தமும் இன்னும் அதிகரிக்கும்… வாசிப்போரை வசீகரிக்கும்.
உங்களுக்கு வரும் காலங்களில் கவிதை மட்டுமல்ல வானமும் வசப்படும்.
வாழ்த்துகள்.
——————————————
எதார்த்தங்கள் இப்படித்தான்
ஐஸ்வர்யா சிவலிங்கம்
கலக்கல் ட்ரீம்ஸ்
விலை. ரு. 100/-
—————————————–