புதுவெள்ளம்: பாகம் 1
இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட, ‘காந்தியம்’ என்ற வெள்ளத்தில் குதித்துத் தீமையைச் சாடப் புறப்பட்டதையும், காந்தியடிகளின் உபதேசத்தின் வழியில் அவர்கள் நடந்துகொண்டதையும், அவர்கள் மனதில் உத்வேகம் பிறந்ததையும் எழுத்தாளர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். வழக்கமாக ஒரு கதையில் மூன்று அல்லது நான்கு முதன்மைக் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். ஆனால், இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் வலம் வருகின்றனர்.
கதைக்களம் சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிறது. கதையின் நாயகன் முருகையன், மங்களூர் விரைவு வண்டியில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் மேற்கொண்டான். முருகையனின் சொந்த ஊர், திருச்சியிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் பெரியபாளையம் என்ற சிறிய கிராமம்.
கதையின் நாயகன் ஏன் சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டு, இந்தத் தொடர்வண்டியில் பயணம் செய்கிறான்? அவன் வாழ்வில், கதையின் நாயகியான சித்ரா (அவனது அத்தையின் மகள்) எப்படி வந்தாள் என்பதை யதார்த்தமாகக் கூறியுள்ளார் எழுத்தாளர்.
பெருமாள்சாமி என்பவரின் மனதில் காந்தியத்திற்கு எதிரான கருத்துக்கள் எப்படி உதித்தன, அவர் பெரியபாளையத்தில் எப்படி மக்களைத் திரட்டி வெள்ளையரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார் என்பதை உணர்ச்சிபொங்க எடுத்துச் சொல்லியிருப்பார்.
சிவப்பிரகாசம், முருகையனின் தந்தை. இவர் தாராள குணம் உடையவர்; பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவர். பெரியபாளையத்தில் உள்ள மாடி வீடு இவர்களுடையதுதான். ஆனால், சிவப்பிரகாசத்திடம் ஒரு கெட்ட குணமும் உண்டு. அது, உறவினர்களுக்காகக் கடன் வாங்கிச் செலவு செய்வதுதான்.
குமரவேல், சிவப்பிரகாசத்திற்குப் பணத்தை வட்டிக்குக் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏமாற்றி, அவரிடமிருந்த அனைத்துச் சொத்துக்களையும் தன்வசமாக்கியதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார் எழுத்தாளர்.
முருகையன் தன் பெரியபாளையம் கிராமத்தில் அனைத்தையும் இழந்து சென்னைக்கு வந்தபோது, சுந்தரம் எப்படி அவனுக்கு இந்த மாநகரில் உதவி செய்கிறான் என்பதையும், சென்னையில் முருகையன் எப்படிப் போராடினான், பிறகு ஒரு சிறிய தற்காலிக வேலையை அவனே தேடிக்கொண்டான் என்பதையும் அற்புதமாகக் கூறியுள்ளார்.
கதையின் நாயகி சித்ரா எப்படி முருகையன் மீது காதல் கொண்டாள் என்பதையும், முருகையன் எப்படிச் சித்ரா மீது காதல் கொண்டான் என்பதையும் ரசிக்கத்தக்க வகையில் எடுத்துரைத்திருப்பார். சாந்தா எப்படியெல்லாம் முருகையனுக்கு உதவினாள், சிறிது காலம் கழித்து அவள் மனம் மாறி எப்படி முருகையனிடம் பற்றுக்கொண்டது போன்ற சம்பவங்களைத் தெளிவாகக் கூறியுள்ளார் அகிலன்.
-
முருகையன் சித்ராவுடன் சேர்ந்தானா?
-
சாந்தாவின் ஒருதலைக் காதல் கைகூடியதா?
-
சாந்தா முருகையனிடம் பழகியதைப் பக்கத்து வீட்டு மக்கள் என்ன நினைத்தார்கள், எப்படியெல்லாம் வசை பாடினார்கள்?
-
அதற்கு முருகையன் என்ன முடிவு எடுத்தான்?
-
முருகையன் அந்தக் குடியிருப்பில் அதன்பிறகு இருந்தானா? என்ன செய்தான் கதையின் நாயகன்?
இவற்றை முதல் பாகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
புதுவெள்ளம்: பாகம் 2
முதல் பாகத்தின் முடிவில், முருகையன் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து சாந்தாவிற்காக வெளியேறினான். அவனுக்குச் சென்னையில் எங்குப் போவதென்று புரியவில்லை. ஒரு கணம் சித்ராவின் வீட்டிற்கே போகலாமா என்று நினைத்து, அவனது கால்கள் அவள் வீட்டை நோக்கிச் சென்றன. வீட்டின் வாயிலை அடைந்ததும், அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. சித்ராவும் குமரவேலும், சித்ராவின் அண்ணன் மாணிக்கமும் ஒரு வாகனத்தில் வெளியே சென்றுகொண்டிருந்தனர்.
அந்த நிகழ்வைக் கண்டவுடன் அவனது கால்கள் சித்ராவின் வீட்டுக்குப் போகாமல் வேறெங்கோ சென்றன. பசி மயக்கம் அவனை நடக்கவிடாமல் தடுத்தது. பொழுதும் சாய்ந்தது. அவன் எந்த இடம் என்று கூடப் பார்க்காமல் உறங்கிவிட்டான். அடுத்த நாள் பொழுது விடிந்தது, ஆனால் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு கை அவனைத் தட்டி எழுப்பியது. அவன் தூக்கக் கலக்கத்துடன் யார் என்று பார்க்கையில், அவனால் நம்ப முடியவில்லை. அவனை எழுப்பியது ரிக்ஷா இழுக்கும் முனியாண்டி!
முனியாண்டி, முருகையனைப் பார்த்து, “உங்களுக்குத் தூங்குவதற்கு வேறு இடம் இல்லையா? சற்று இடத்தைப் பாருங்கள், குப்பைத் தொட்டியின் அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள், எங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்று வற்புறுத்தி முருகையனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சில நாட்கள் அங்கு கழிந்தன. முனியாண்டி ஒருநாள் தன் காலில் ஆணி ஏறியதால், வலி தாங்காமல் வீட்டில் புலம்பிக்கொண்டிருந்தான். அவனது மனைவி, குழந்தைகளை வைத்துக்கொண்டு கண்ணீருடன் அழுதுகொண்டிருந்தாள்.
முருகையன் இதைப் பார்த்தவுடன், “ஏன் அழுகிறீர்கள்? முனியாண்டிக்கு என்ன ஆயிற்று? ஏன் அவரது கால் இப்படி வீங்கியுள்ளது?” என்று முனியாண்டியின் மனைவியிடம் கேட்டான். அதற்கு அவள், “ரிக்ஷா இழுக்கும்போது காலில் ஆணி ஏறியதால், அவரது கால் இப்படி ஆகிவிட்டது” என்றாள். அப்போதுதான், முனியாண்டி காலுக்குச் செருப்புப் போடுவதில்லை என்பது முருகையனுக்குத் தெரியவந்தது. “ஏன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டான் முருகையன். அதற்கு அவர்கள், “பணம் இருந்தால் சென்றிருப்போமே! ஆனால் எங்களிடம் பணம் இல்லையே” என்று கூறினார்கள்.

சிறிதும் யோசிக்காமல் முனியாண்டியைத் தூக்கி ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரிடம் முனியாண்டியின் நிலையை எடுத்துச் சொல்லி, ஒரு படுக்கையை ஏற்பாடு செய்தான் முருகையன். முனியாண்டியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் உணவுக்கும் பணத்திற்கும் வழிசெய்ய, முருகையன் ரிக்ஷா இழுக்கவும் தயங்கவில்லை. எப்படியாவது ரிக்ஷா இழுத்து முனியாண்டியின் குடும்பத்திற்கு உதவ வேண்டும், அவனது கால்களுக்குச் செருப்பு வாங்க வேண்டும் என்று நினைத்து, ரிக்ஷாவை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் நிறுத்தினான்.
இங்கே நிலைமை இப்படி இருக்க, பெரியபாளையத்தில் இருந்து முருகையனின் தந்தை அவனைப் பார்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார். யாரோ சொன்னதைக் கேட்டு, ரிக்ஷாவில் போனால் செலவு சற்றுக் குறையும் என்று எண்ணி, ஒரு ரிக்ஷாவுக்காகக் காத்திருந்தார். தந்தை, தன் மகனின் ரிக்ஷாவில் ஏறி அமர்ந்தார். ரிக்ஷாக்காரனாகிய மகனோ, இருளில் அவரைச் சரிவர அடையாளம் கண்டுகொள்ளவில்லை. போகும் வழியில், ரிக்ஷாவில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, “திருவல்லிக்கேணியில் எந்த இடம் சாமி?” என்று கேட்டான். அதற்கு அவர், “இதோ பார், முகவரி இருக்கிறது. இந்த இடத்திற்குப் போக வேண்டும்” என்று கூறினார். அவர் நீட்டிய கடிதத்தைக் கையில் வாங்கி, தெருவிளக்கு இருந்த இடத்தில் ரிக்ஷாவை நிறுத்திவிட்டு முகவரியைப் படித்தபோது, அவனுக்குத் தலை சுற்றி விழுவதுபோல் ஆனது. ரிக்ஷாவில் இருக்கும் நபர் தன் தந்தை என்று அவன் அறிந்துகொண்டான்.
அவனால் நடக்க முடியவில்லை; ரிக்ஷாவை அதிவேகமாக இயக்க முற்பட்டான். அவனது மனநிலை அப்போது ஒரு நிலையில் இல்லை. தந்தை தன் கோலத்தைப் பார்த்து என்ன சொல்வாரோ என்று அஞ்சி, ரிக்ஷாவை இழுத்தான். அப்போது வாகனம் ஒன்று ரிக்ஷாவை இடிப்பதுபோல வந்தது. நல்லவேளையாக, எப்படியோ இடிக்காமல் சென்றுவிட்டது. ஆனால் முருகையன் தடுமாறி, ரிக்ஷாவைக் கீழே சாய்த்து விழுந்தான். அவனது தந்தையும் தெருவில் விழுந்தார். முருகையன் தன் தந்தைக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க, அவரும் முருகையனைப் பார்த்து, “முருகையா!” என்று அலறினார். மகனின் கோலத்தைப் பார்த்ததும் அவர் மனம் உடைந்துபோனது.
ரிக்ஷாவில் தனது தந்தையை ஏற்றிக்கொண்டு, முனியாண்டியின் வீட்டிற்கு வந்தான் முருகையன். அங்கு முனியாண்டியும் அவரது குடும்பத்தினரும் தந்தையின் நிலையைக் கண்டு என்ன செய்வதறியாது திகைத்தனர். கீழே விழுந்ததால், முருகையனின் தந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் உயிரைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சோகம் தாங்காமல் கடற்கரையில் கண்ணீருடன் அமர்ந்திருந்தான் முருகையன். அந்தச் சமயம் பார்த்து சாந்தா அங்கு வந்தாள். அவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அவளது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. கடற்கரைக்குச் சித்ராவும் வந்தாள். முருகையனின் நிலையைக் கண்டு, விவரங்களைச் சாந்தாவிடம் கேட்டறிந்தாள். பிறகு அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
சித்ரா, முருகையனின் தோற்றத்தையே மாற்றினாள். மாணிக்கமோ, முருகையனுக்கு அவர்களது வீட்டில் தங்குவதற்கு ஓரிடம் கொடுத்தார். இதன் மூலம், முருகையன் தொடங்கவிருக்கும் புது வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம் என்று அவர் மனக்கணக்குப் போட்டார்.
-
குமரவேலுடன் மாணிக்கம் வியாபாரத்தில் இணைந்தானா?
-
சாந்தா பிறகு முருகையனைச் சந்தித்தாளா?
-
முருகையன் மாணிக்கத்துடன் இணைந்து தொழில் புரிந்தானா?
-
சித்ரா, முருகையன் திருமணம் என்ன ஆனது?
இவை அனைத்தையும் தெரிந்துகொள்ள, ‘புதுவெள்ளம்’ இரண்டாம் பாகத்தைப் படியுங்கள்.
புதுவெள்ளம்: பாகம் 3
இரண்டாம் பாகத்தின் முடிவில், முருகையன் சில கருத்து வேறுபாடுகள் காரணமாகச் சித்ராவையும் அவரது குடும்பத்தாரையும் பிரிந்து வெளியேறினான். சித்ராவின் அண்ணன் மாணிக்கத்துடன் நடத்திய கூட்டுத் தொழிலையும் உதறித் தள்ளிவிட்டுச் சென்றான். முருகையனுக்கும் சித்ராவுக்கும் நடக்கவிருந்த திருமணம் நின்றது.
முருகையன் சென்னையை விட்டு, ஆந்திர மாநிலத்திலுள்ள சிங்கரேணி பகுதிக்கு பிழைப்பு தேடிச் சென்றான். சிங்கரேணியில் அவன் தன் நண்பன் சுந்தரத்தைத் தேடிச் சென்றான். அங்குதான் சுந்தரம் தன் குடும்பத்துடன் நிலக்கரிச் சுரங்கத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தான். சுந்தரம், முருகையனுக்கு ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தான். ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, அங்குச் சாந்தாவைப் பார்த்தான். முருகையனைப் பார்த்ததும் சாந்தாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாளனாக இருந்த தன் நண்பன் பெருமாள்சாமியையும் அங்கு சந்தித்தான். பெருமாள்சாமி தன் பெயரை ‘கண்ணையன்’ என்று மாற்றிக்கொண்டு அங்குப் பணியாற்றி வந்தான். இங்கும் வேலையாட்கள் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டனர். சுரங்கத்தில் நடந்த அநீதிகளை எதிர்த்துப் போராடினான் கண்ணையன்.
முருகையன் ஒருநாள் சாந்தாவின் வீட்டிற்குச் சென்று அவனைச் சந்தித்தான். அங்கு அவர்கள் மனம் விட்டுப் பேசினார்கள். சாந்தா, முருகையனுக்குப் பலகாரமும் காப்பியும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். சாந்தாவுடன் இருக்கும்போது முருகையன் தன் தனிமையை மறந்தான்.
அந்த நிலக்கரிச் சுரங்கம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. சமஸ்தானம், இயந்திரங்களை வாங்கி, பணியை எளிதாக்க எண்ணியது. இப்படிச் செய்தால் பல வேலையாட்களுக்கு வேலை இருக்காது என்று கருதிய பெருமாள்சாமி, தன்னுடன் இருந்தவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினான்.
-
கண்ணையன் போராட்டத்தில் வெற்றி கண்டானா?
-
சமஸ்தானம் இயந்திரங்களை வாங்கியதா?
-
சாந்தாவும் முருகையனும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்குப் பதிலை ‘புதுவெள்ளம்’ நாவலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள் தன் உரைநடையைக் கையாண்டிருக்கும் விதம் மிக அருமையாக இருக்கும்; அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருப்பார்.
– பாலமுருகன். லோ-

8 Comments
தாத்தா அகிலனின் சிறுகதையை படிக்கத் தூண்டும் வகையில் பேரனின் அறிமுகம் உள்ளது.
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏
பாலமுருகன். லோ அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் அவரின் ஆழ்ந்த வாசிப்பும், அதை விவரிக்கும் அவரின் எழுத்து வடிவமும் தான். அதைத் தாண்டி அவர் சக மனிதர்களிடையே பழகும் எளிமை மிகுந்த தோழமையையும் பாராட்ட வேண்டியவைகளே. ஒரு பெரிய மகானின் பேரன் என்ற சிறு கர்வமும் இல்லாமல் மாணவனாக இலக்கியங்களை கற்றுக் கொள்ள விரும்பும் அவரின் ஆர்வம் சில நேரங்களில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்…. வாழ்த்துக்கள் பாலமுருகன். லோ💐
சிலருக்கு தெரிந்தும் தெரியாத ஒரு விடயம் என்னவென்றால் நான் உயிருன் இருப்பதற்கும், இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்கும் காரணமானவர் என் ஆசான் எழுத்தாளர் அகிலன் தான். அவரின் எழுத்துக்களே என்னை மனிதனாக்கியது. வாழ்வின் மேடு பள்ளங்களை, ஏற்ற இறக்கங்களை கரடு முரடுகளை, அடையாளப்படுத்தி விளக்கம் கொடுத்தது. சினிமா, குடிபோதை போன்ற அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுத்தது அகிலன் அவர்களின் எழுத்துக்களே… என் ஆசானின் புதுவெள்ளம் நாவல் மட்டுமல்ல அவருடைய எந்த புத்தகங்களை நீங்கள் கையில் எடுத்து வாசித்தாலும் உங்கள் வாழ்வில் நீங்கள் உயர உங்கள் வம்சங்கள் செழிக்க கட்டாயம் அவை காரணமாக இருக்கும். வாசியுங்கள்… உங்கள் முன்னேற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
வாழ்த்துக்கள்
எஸ் ரகுநாத் (சாந்தி ஜொ)
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ரகுநாத் (எ) திரு. சாந்தி ஜொ, ஐயா அகிலனின் எழுத்துகளால் கவரப்பட்டதின் மூலம், அவரது வாழ்வை ஒரு இருண்ட இடத்திலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. இன்று அவர் எழுத்தாளராக மிளிர்வது ஐயா அகிலனின் எழுத்துகளால்தான் என்பதே நிதர்சனம். தற்போது இவர் இலங்கையில் வசித்து வருகிறார். நல்ல மனிதர். அவர் எழுத்துகள் இன்னும் மேன்மேலும் பல உச்சங்களை அடைய எனது வாழ்த்துகள். 🎉
பாலமுருகனின் நூல் அறிமுகம் படிப்பதே கிட்டத்தட்ட முழு நூலையும் படித்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.இதுவே (இந்த பயிற்சியே)அவரது சிறுகதை எழுதும் ஆர்வத்திற்கு அடித்தளமாக உள்ளது என்பது என் அனுமானம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.👍
“ஐயா, மிகச் சரியாகச் சொன்னீர்கள். எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறும் என்பதை நான் எழுதத் தொடங்கியவுடனேயே உணர்ந்துகொண்டேன். பாராட்டியதற்கு நன்றி.”
சிறப்பான அறிமுகப் பதிவு. மூன்று பாகங்களின் சாராம்சத்தையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் இயல்புகளையும், வாழ்வியலையலையும், விருப்பங்களையும், இலட்சியங்களையும் அழகாக எடுத்துரைத்துக்கின்றீர்கள். கதையின் சுருக்கமே அத்தனை சுவாரசியம். ஐம்பதுகளில் வெளிவந்த ஒரு 22 ரீல் திரைப்படத்தைப் பார்த்ததுப் போன்றிருந்தது. வாழ்த்துகள்!
“நன்றி, நண்பரே. நாவலின் முழுச் சுருக்கத்தையும் வாசித்துக் கருத்தைப் பகிர்ந்ததற்கு. ஆம், எப்போதும் ‘ஓல்டு இஸ் கோல்ட்’ என்பார்களே, அதைப்போலத்தான்.”