ராஜாராம்
ஜமா :
நாடக சபாக்களின் மூத்த குடி, இவைகள் பெரும்பாலும் தெருக்களில், இரவு நேரங்களில் நடக்கும். இதில், புராணக் கதைகளும், இதிகாசங்களில் வரும் சம்பவங்களும் பேசி, ஆடிப்பாடி நடக்கும். அதுதான் மையக் கருவாக வைத்து, அதில் நடக்கும் அரசியல்களை நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இயக்குநர் பாரி இளவழகன் நடித்தும் இயக்கியுள்ளார். முதல் படமா என்ற ஆச்சர்யங்களை உள்ளடக்கி நளினமான பாவனைகளுடன் கவனமாக கையாண்டுள்ளார். இதுபோன்ற திரைப்படங்கள் எடுப்பது என்பதே துணிச்சல்தான், திரைமொழி என்பது எல்லோருக்கும் புரியும் வண்ணம் இல்லாவிட்டால் கிட்டதட்ட தோல்விதான், அந்த விதத்தில் இயக்குநர் ஜெயித்து விட்டார். பார்வையாளர்கள் நாம்தான் தோற்று விட்டோம். தோல்வி என்றால் அதிகமான திரையரங்குகள் கிடைக்காமல் சொற்பமான அரங்குகள் மூலமாக சென்றடைந்ததுதான். ஆனால்! இப்போது சமீபத்தில் உலகமெங்கும் காணும் வகையில் OTT தளத்தில் வெளியாகி அனைவரும் கொண்டாடும் வகையில் அமைந்து விட்டது.
இப்படத்தின் விசிட்டிங் கார்டே பெரியவர் இசைஞானி அவர்கள்தான்.
கதைப்படி, திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூத்தில் மத்தளம் வாசிப்பவர் (பூனை) மூலம் தொடங்குகிறது. அவரைக் கொண்டுபோய் இறக்கி விடும் சாக்கில்தான் கூத்தால் ஈர்க்கப்பட்டு பார்வையாளன் இளவரசன், கூத்துக் கட்டுவது முதல், பாடல் நடிப்பு அத்தனையும் கற்றுக் கொள்கிறார். அதை தன்னுடைய ஊருக்கும் எடுத்துச் செல்ல தன் ஊர் நண்பர்கள் மூலமாக அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து சொந்தமாக தாண்டவனும், இளவரசனும் நண்பர்களும் பணம் முதலீடு செய்து அம்பலவாணன் நாடக சபா தொடங்குகின்றனர். இதில் தாண்டவன் தன் மூத்த மகளை பண்ணை அடிமை வேலைக்கு அனுப்பி அப்பணத்தை தன் பங்காக கொடுக்கிறார். தாண்டவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், இரண்டாவது மகள்தான் ஜெகா எனும் ஜெகதாம்பாள்(அம்மு அபிராமி), தாண்டவன் கதாபாத்திரத்தில் எதார்த்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார் நடிகர் சேத்தன், இவரின் மனைவியாக சத்யா மருதாணி.
இளவரசனுக்கு ஒரே மகன் கல்யாணம்(பாரி இளவழகன்)இளவரசனின் மனைவியாக மணிமேகலை நடித்து தன் பாத்திரத்திற்கான பங்கை சிறப்பாக செய்துள்ளார். நாடகத்தில் எல்லா வேடமும் எல்லோரும் ஏற்று நடிக்கின்றனர், எல்லோரின் வேடமும் அறிந்த இளவரசன் வாத்தியாராக இருந்து, ஜமாவை நடத்துகிறார். கொஞ்சம் கோபமாகவும் நடந்து கொள்கிறார். தாண்டவனின் மூத்த மகள், பெரிய மனுசியானவுடன், பண்ணை வேலைக்கு தன் சிறிய மகளை அனுப்ப திட்டமிடுகிறார். சிறிய மகள் படிப்பில் ஆர்வமுள்ளவளாக இருக்கையில் பண்ணை வேலைக்கு செல்ல மறுக்கிறாள். இதில் இளவரசனின் மகன் கலயாணம் தான் பண்ணை வேலைக்குச் செல்வதாகவும், ஜெகாவை படிக்க அனுப்பச் சொல்கிறான். அந்த அனுதாபத்திற்கு காரணம் ஜெகா மீது கல்யாணத்திற்கு காதல். கல்யாணம் பண்ணை வேலையில் கஷ்டப் படுகிறான். ஒரு கட்டத்தில் ஜெகா நன்றாக படித்து குறிப்பிட்ட பாடத்தில் முதல் மதிப்பெண் வாங்கியதற்கான பரிசுத் தொகையை இளவரனிடம் கொடுத்து பண்ணை அடிமை வேலையில் இருக்கும் கல்யாணத்தை மீட்டுவரச் சொல்கிறாள். இதுவே தாண்டவனுக்கு வருத்தமாக இருக்கிறது.
பணப் பிரச்சனையில் இருக்கும் தாண்டவத்திடம், நானும் கூத்தில் நடிக்கிறேன் அந்தப் பணத்தையும் உனக்கே தருகிறேன் என்று சொல்லி நாடக சபாவில் சேர்கிறான், இளவரசனின் மகன் கல்யாணம். அது தாண்டவனுக்கே சிறிய நெருடலைத் தருகிறது, காரணம் இளவரசனுக்குப் பிறகு கல்யாணம் இப்படியாக வளரும், தன்னுடைய இடம் பறிபோகுமே என்கிற சாதரண மனித மனநிலைதான்.
பணப் பிரச்சனை, மனக்குழப்பத்தில் இருக்கும் தாண்டவனிடம், ஜால்ரா பெருமாள்! கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவன் போல, தாண்டவன் மனதில் தனியாக ஜமா ஆரம்பிக்கும் விதையை
விசமாக விதைக்கிறான். அதற்கும் சாதகமாக உறவுக்கார ஊர்த்தலைவரிடம் அவருக்கு திருமணமாகாமல் இருக்கும் மகனுக்கு தன் மூத்த மகளை மணமுடித்து வைப்பதோடு ஒரு முடிச்சையும் போட்டு வைக்கிறார் தாண்டவன்.
இவையெல்லாம் ப்ளாஷ் பேக்காக வந்தாலும், படத்தில் தாண்டவன் பேசும் வசனமும், செயல்பாடுகளும் அவரை ஒரு வில்லனாக நமக்கு காண்பிக்கப் படுகிறது.
ஜமாவில் ஒருசில மாற்றங்கள், வேடங்கள் மாற்றி நடிக்க வேண்டுமென்று தாண்டவன் சொல்லும்போது, இளவரசன் ஏற்றுக் கொள்ளாத இடத்தில் நடைமுறைகளை மாற்றக்கூடாது என்று சொல்லும்போது அமைதியாக இருப்பவர்கள், தாண்டவன் மொட்டைப் பாறையில் வைத்து சொல்லும் இடத்தில் எகிறி அடிக்க வருகிறார்கள். எல்லாமே ஒருவித சுயநல மனநிலைதான். நமக்கு தாண்டவன், கல்யாணத்திற்கு பெண் வேடமே கொடுக்கிறான் என்பதுபோல தெரிந்தாலும், தாண்டவன் அர்ச்சுணன் வேசம் கட்டுகிறேன் சொல்லும்போது இளவரசன் மனம் ஏற்கவில்லைதானே. ஆக தாண்டவனுக்கு பெண் வேடமே தரப் பட்டிருக்கலாம்தானே. அதற்கான வன்மம் கல்யாணத்தின்மீது காட்டப்படலாம் இல்லையா?
இளவரசனை திரௌபதி வேசம் கட்டி நடிக்க தாண்டவன் அழைத்த போது, நான் வரவில்லை, நான் இல்லாமல் எப்படி நாடகம் நடத்துகிறீர்கள் என்று சவால் விட்டு தோற்று பெருங்குடிகாரனாக ஆகிறான்.
தன் தகப்பனை மதிக்காத இடத்தில் தன் காதலும், கலையின் ஆர்வமும் கண்ணை மறைத்து தாண்டவனின் நாடக சபாவில் சேர்கிறான் கல்யாணம்.
தாண்டவனுக்கு இளவரசனை பழிவாங்க, இதைவிட சந்தர்ப்பம் அமையுமா? தொடர்ந்து பெண் வேடம் கொடுத்து, சபாவிற்கு வராத நடிகர்களின் பெண் வேடமும் சேர்த்தே நடிக்க வைக்கப் படுகிறான் கல்யாணம்.
இருந்தாலும் கல்யாணத்தை தட்டிக் கொடுத்தே வேலை வாங்குகிறான்.
அனைத்திலும் சிறப்பான நடிப்பைக் காட்டி அசத்தியுள்ளார் சேத்தன்.
நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த இளவரசன் குடித்தே விரக்தியில் அரைகுறை அரிதாரம் பூசி, தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு ஆடி மொட்டைப் பாறையில் இறந்து கிடக்கிறான்.
ஒருவித மன உறுத்தலில் தாண்டவனும் அவ்வப்போது குடிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அடிமையாக வில்லை. மொட்டைப் பாறையில் ஆக்ரோசமாக கல்யாணத்திடம் வாக்குவாதம் செய்யும் இடத்திலும் சரி, கடைசியில் கர்ண. வேசம் போடும் முன்பு கல்யாணத்திடம் ஆதங்கத்தில், யார்றா ஏமாத்துனா, என்று கோபத்தில் பேசிவிட்டு, அர்ச்சுணன் வேசம் கட்ட தயாராக இருந்தவனை குந்திதேவி வேசம் கட்டச் சொல்லும் இடத்தில் காட்டும் முகபாவனைகள் அபாரம்.
அதேபோல, கல்யாணம் குந்திதேவியாக நடிக்கும் இடத்தில் அருமையான ஒப்பாரிக் காட்சி. அதே நேரத்தில் ஒரு கூத்து வாத்தியாராக தாண்டவன் கர்ண வேசத்தில் இரசித்து கண்ணீர் விடும் காட்சி அமைப்பு சிறப்பு.
படத்தில் தாண்டவனை வன்மவாதியாக காட்டப்படுவது போல ஒரு மனிதன் இருந்தால், கடைசியில் ஒரு உண்மையான கலைஞனைத் தவிர வேறு யாருக்கு கண்கள் கலங்கியிருக்கும். தன் தவறை உணர்ந்து மனம் நொந்து கர்ண வேசத்திலேயே உயிர் பிரியும் நிலை வந்திருக்கும். இளவரசன் மரணத்தைவிட தாண்டவன் மரணம் மேன்மையானதுதான்.
என்னதான் தாண்டவன் கோபக்காரனாக இருந்தாலும், உடல்நிலை சரியில்லாத சமயத்தில் சோறூட்டி விடும் மனைவியின் அன்பைச் சம்பாதித்த ஆளாகத்தானே இருந்திருக்கிறார். என்னதான் மகள் மீது கோபமாக இருந்தாலும், மகளை படிக்க வைப்பதில் மறுக்கவில்லை.
மொத்தத்தில் இயக்குநர் பாரி இளவழகன் தாண்டவன் கதாபாத்திரத்தை மிகக் கவனமாக செதுக்கியிருக்கிறார்.
இதற்கெல்லாம் முதுகெலும்பு இசைதான். ஆஹா! இசைச் சித்தரின் இசையில் பின்னனி இசையும், பாடல்களும் அருமை! கடைசியில் திரரௌபதியின் ஒப்பாரியில் இழையோடும் வயலின் நம்மை கண்கலங்கச் செய்ததில் பெரும்பங்கு ஞானிக்கே!
வாழ்த்துகள் “ஜமா” குழுவிற்கும் இயக்குநர் பாரி இளவழகன் அவர்களுக்கும்!
இது ஒருவித வித்தியாசமான பார்வைதான் ஆனால், அனைத்துப் பக்கங்களுக்குமான நியாயத்தைப் பார்ப்பதுதானே படைப்பாளியின் கடமையும் பொறுப்பும்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
கட்டுரையாளர்:
இராஜாராம்
எழுத்தாளர் / விமர்சகர்/பேச்சாளர்
இராமநாதபுரம்
(இ) அபுதாபி