அத்தியாயம்-2
ஆர்.வி.சரவணன்
முதல் அத்தியாயம் வாசிக்க : https://galaxybs.com/rvs_novel02_part_1/
மதனும் விக்கியும் காரை விட்டு அவசரமாக இறங்கி டூ வீலரை நோக்கி வந்தார்கள். கோபத்துடன் அவர்களை நோக்கி வேகமாய் ஓடி வந்த பிரியா என்றழைக்கப்பட்ட அந்த பெண் மதனை அருகில் பார்த்ததும் தயங்கி அப்படியே நின்று விட்டாள். அவளது முகத்தில் இருந்த கோபத்தை நொடிப்பொழுதில் எங்கே எப்படி மறைத்தாள் என்பதை அவளிடம் தான் கேட்க வேண்டும். மதனையும் விக்கியையும் பார்ப்பதை தவிர்த்தவள் விழுந்து கிடந்த தன் டூவீலரின் அருகே வந்து அதை நிமிர்த்த ஆரம்பித்தாள்.
இதற்குள் பிரச்னை ஏற்படுத்திய கார் விருட்டென்று அங்கிருந்து கிளம்பி சென்று விட்டிருக்க, கடைத்தெருவில் ஆங்காங்கே இருந்தவர்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள்.
“என்னப்பா பார்த்து வர கூடாது” ஒருவர் நியாயம் கேட்கும் தோரணையில் ஆரம்பித்து வைத்தார். கூட்டத்தை விலக்கி உள் நுழைந்த ஒரு பெண் பிரியாவிற்கு உதவினாள். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய பின் அவர்கள் பக்கம் திரும்பினாள்.
” கார் ஏறிட்டா பிளைட் ஓட்டற மாதிரி நினைப்போ. இல்ல கார் ஓட்ட இப்ப தான் கத்துக்கறீங்களா?”
பிரியா அவளது வார்த்தைகளுக்கு அதிர்ந்து போய் அந்த பெண்ணிடம் பேசாதே என்று கண்களால் எச்சரித்தாள்.
அந்த கண்களில்தான் என்ன ஒரு ஜாலம் என்று மதன் வியந்து கொண்டிருக்க,விக்கி மட்டும் பொங்கி எழுந்தான்.
” எங்களை பார்த்தா கார் ஓட்ட கத்துக்கிறவங்க மாதிரி தெரியுதா..?”
” க்கூம். இது வரைக்கும் காரையே பார்க்காத ஆளு மாதிரி தெரியுது”
பிரியா அந்த பெண் கைகளை பிடித்து இழுத்து சும்மா இரு என்பதாக மீண்டும் ஜாடை காண்பித்தாள்.
ஆஹா. இந்தப் பொண்ணு முகத்துல தான் எவ்வளவு எக்ஸ்பிரசன் காட்டுது மதன் தொடர் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருக்க, விக்கி கோபப்பட்டான்.
” இருபது லட்ச ரூபாய் காரு வச்சிருக்கிற நாங்களே சரி இடிச்சிட்டோமே நம்ம மேலே தானே தப்புனு அமைதியா இருக்கோம். நீ என்னடான்னா இந்த டூ வீலருக்கு இப்படி ருத்ர தாண்டவமாடறே..?”
“அப்படியா. இப்ப உங்க கார் கண்ணாடிய ஒரு கல் எடுத்து அடிச்சு உடைக்கறோம். நீங்க ருத்ர தாண்டவமாடுறீங்களா இல்லே அமைதியா போயிடறீங்களானு பார்த்திடுவோமா” ஒருவன் முன்னே வந்தான்.
“எங்க கல்லெடுத்து அடி பார்க்கலாம்”
மதனுக்கு போபம் வந்து அவனிடம் எகிறினான். உடனே பிரியா ஓடி வந்து அவனை தள்ளி போ என்று ஜாடையில் அதட்டினாள். மதனிடம் சாரி என்ற படி கையசைத்து வண்டியை உடனே ஸ்டார்ட் செய்து ஏறி அமர்ந்து கிளம்பி விட்டாள்.
எல்லோரும் களைய துவங்கியிருக்க, ஒரு பெரியவரை நிறுத்தி மதன் கேட்டான்.
“அந்த பெண் யாருங்க ..?”
“பிரச்சனை வேண்டாம்னு அந்த பொண்ணே விட்டிருச்சு. நீங்க எதுக்கு கேட்கறீங்க..?”
” பிரச்னை எதுவும் பண்ணலியே அதனால கேட்டேன்”
“சினிமா தயாரிப்பாளர் விஜய ராகவனோட எஸ்டேட் இங்க தான் இருக்கு . அதை பார்த்துக்கிற வாட்ச்மேன் மூர்த்தியோட பொண்ணு தான் அது”
மதன், விக்கி இருவரும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“சரி. நீங்க யாரு..?”
“விஜயராகவன்னு சொன்னீங்களே. அவரோட பையன் “
விக்கி சொல்லவும் அந்த பெரியவர் ஆச்சரியப்பட்டார். மதன் அவன் தோள் தட்டி வா என்று சொல்லி காரில் தாவி ஏறினான். விக்கியும் தொடர்ந்து ஏறி கொள்ள கார் வேகமெடுத்தது.
இவர்களிடம் சண்டையிட்ட அந்த பெண் காய்கறி கடையில் கையில் தராசு வைத்து நிறுத்து வியாபாரம் பார்த்து கொண்டே அவர்களை முறைத்தாள்.
” நான் சண்டை போட்டுகிட்டிருக்கேன். நீ என்னடான்னா…” விக்கி முடிக்கும் முன்னே மதன் சொன்னான்.
” அந்த மௌன தாரகையோட அழகை பார்த்துகிட்டு இருந்தேன்.”
விக்கி திரும்பி முறைத்தான். “சைட் அடிச்சேன்னு சொல்லுடா”
” இல்லடா. என் அடுத்த படத்து கதாநாயகியா தான் அவளை பார்த்தேன்”
“இந்த பெண்ணா..?!”
” எஸ் பர்பெக்ட்டா இருக்கா”
பொண்ணை பிடிச்சிருக்குனு சொல்லல. அது வரைக்கும் நிம்மதி உள்ளூர திருப்திப்பட்டு கொண்டான் விக்கி.
*****
இரு பக்கமும் தென்னை மரங்கள் அடர்ந்த ரோட்டில் வந்து கொண்டிருந்த அவர்களது கார், ஒரு திருப்பத்தில் திரும்பியது. வலது பக்கம் சிவப்பு நிற காம்பவுண்டு சுவர் திடீரென்று ஆரம்பித்து அரை நிமிடம் வரை தொடர்ந்த பின் அந்த பிரமாண்டமான இரும்பு கேட் முன்னே கார் வந்து நின்றது.
ஹாரன் ஒலி கேட்டு உள்ளிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து வணக்கம் வைத்த படி கதவைத் திறக்க, கார் அதி வேகமாக உள் நுழைந்தது. உள்ளே கம்பீரமாக தோற்றமளித்த வீட்டின் போர்டிகோவில் வந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய விக்கி வீட்டை ஆச்சரியமாக பாரத்தான்.
வீட்டிற்கு பின்னால் தெரிந்த மலைகள் வானத்தின் பகுதியை மறைத்த படி இருக்க, மரங்கள் சூழ்ந்தபடி இருந்த அந்த வீடு பார்க்க ரம்யமாக இருந்தது. “சூப்பரா இருக்குடா”
மதன் அவனது ரசிப்பை ஆர்வமாய் பார்த்து கொண்டே கீழே இறங்கினான்.
” என் வாழ் நாள்ல இப்படி ஒரு வீடு என் சம்பாத்தியத்துல வாங்கிடணும்”
” இதையே உன் வீடு மாதிரி நினைச்சுக்கடா”
“இப்படி ஒரு அம்மா அப்பாவை வச்சுகிட்டு இதெல்லாம் நீ பேசலாமா..?”
“இப்ப இது நம்ம வீடு. அந்த மைண்ட் செட்லயே இரு”
போர்ட்டிகோ படிக்கட்டில் கால் வைக்கவும் மனைவி கௌரியுடன் சேர்ந்து கை கூப்பிய படி வரவேற்றார் வேலையாள் மூர்த்தி.
“வாங்க தம்பி”
“அவரை பார்த்து சிநேகமாக சிரித்தபடி வீட்டுக்குள் நுழைந்த மதன், “எப்படி இருக்கீங்க மூர்த்தி..?” நலம் விசாரித்தான்.
” நல்லாருக்கோம் தம்பி”
உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான். கூடவே விக்கியும்.
” இவன் என் காலேஜ்மெட். இப்ப சினிமாவுலயும் என் கூடவே இருக்கான்.”
” உங்க நிழல்னு சொல்லுங்க”அவரது வார்த்தைகளுக்கு இருவரின் முகத்திலும் ஆச்சரியம் தென்பட்டது.
” ஒரு பத்திரிகைல அப்படி தான் இந்த தம்பிய பத்தி போட்டிருந்தாங்க”
” ஓ” விக்கி பெருமையாய் தலையாட்டினான்.
“நான் இங்க வந்து எவ்வளவு வருசம் இருக்கும் மூர்த்தி”
“15 வருசமாச்சு தம்பி”
“கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க”
“மறக்க முடியுமா..?”
“பரவாயில்லே வீட்டை சூப்பரா மெயின்டெயன் பண்றீங்க.”
“இத விட எங்களுக்கு வெறென்ன வேணும்” பெருமையாய் சொன்னார்.
அவரது மனைவி ட்ரேயில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் நிரப்பி வந்து டீப்பாயில் வைத்தபடி கேட்டார்.
“என்ன சாப்பிடறீங்க..?”
“கொதிக்கக் கொதிக்க டீ”
“கொதிக்கக் கொதிக்க வந்தாலும் அப்படியே குடிக்க முடியாதே .ஆற வச்சு தானே குடிக்க முடியும் தம்பி”
விக்கி முகம் மாறி “சரி ஆற வச்சே கொண்டாங்க” என்றான் சிரித்தபடி.
“அம்மா போன் பண்ணாங்க தம்பி” மூர்த்தி சொன்னார்.
“அவங்க போன் பண்ணலேன்னா தான் அதிசயம்.என்ன சொன்னாங்க?”
“உங்களை நல்லா பார்த்துக்க சொன்னாங்க. சாப்பாட்டுல எது எது பிடிக்காதுனு ஒரு லிஸ்ட் கொடுத்து அதை செய்ய வேண்டாம்னு சொன்னாங்க.”
“இவனுக்கு பிடிக்காததெல்லாம் எனக்கு பிடிக்குமே”
“அதுக்கென்ன தம்பி செய்துட்டா போச்சு”
டீ சூடாகவே வந்தது. கையில் எடுத்து கொண்ட மதன் கேட்டான்.
“உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குல்ல”
“ஆமாம் தம்பி. சின்ன வயசுல அவ கூட தான் விளையாடிட்டு இருப்பீங்க. கரெக்டா ஞாபகம் வச்சி கேட்கறீங்க”
“இல்லே. கடைத்தெருவில பார்த்தோம். அங்கருக்கிறவங்க சொன்னாங்க”
” ஓ அப்படியா. நாம தான் இப்படி படிக்காம இருந்துட்டோம். பொண்ணாவது படிக்கட்டுமேனு பி.எட் வரைக்கும் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டோம். அதுவும் நல்லா படிச்சது. இந்த ஊர்ல பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கு. கவர்மெண்டு வேலைக்காக பதிவு பண்ணி வச்சிருக்கோம்.”
” ஓ நைஸ். “
“பிரியா” என்றழைத்தார்.
,கொலுசு சத்தம் சமீபத்தில் கேட்டது.
“இங்க வாம்மா. சின்ன முதலாளி வந்திருக்காங்க.”
சலங்கை ஒலி தொடர்ந்து கேட்க மின்னலாய் எதிரில் வந்து நின்றாள் பிரியா.
டூவீலரில் அவசரமாக கிளம்பி வந்த அதே பிரியா. சுடிதாரிலிருந்து புடவைக்கு மாறியிருந்தாள். சிரித்தபடி கை கூப்பினாள்.
மதன் பதிலுக்கு தலையசைத்தான்.
நீ மட்டும் சினிமாவுக்கு வந்தீன்னா தமிழ்நாட்டின் கனவுக்கன்னி நீ தான்
முணுமுணுத்தான்.
“இன்னிக்கு பொண்ணு மௌன விரதம். பேசாது”
ஓ ஆச்சரிய முகம் காட்டினார்கள்.
அங்கே நின்று கொண்டிருப்பதை பிரியா அவஸ்தையாக உணர்ந்தபடி நின்றிருப்பது தெரியவும், மதன் “சரி நீங்க போங்க “என்றான்.
அவள் உள்ளே செல்ல திரும்பினாள். விக்கி மதன் காதை கடித்தான். ” இந்த பொண்ணு உன் படத்துல நடிக்க ஒத்துக்கும்னு நினைக்கிறியா. எனக்கு நம்பிக்கையில்லே”
“தம்பி என்ன கேட்கிறாரு”
மதன் விக்கியை பார்த்தான். விக்கி வேண்டாம் என்று கண்களால் எச்சரி்த்தான்.
“பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கு. சினிமால நடிச்சா ஒரு ரவுண்டு வரலாம்ல னு சொல்லிட்டிருக்கான்.”
விக்கி மதனை முறைத்தான்.
அவரது முகம் மாறியது.
“சினிமாவுல இருக்கிறார் இல்லியா. அதான் அப்படி தோணுது”
கொஞ்சம் நிதானித்து தொடர்ந்தார்.
“பிரியா சிறப்பாசிரியரா ஜனாதிபதி கிட்டே விருது வாங்கிடுவானு எங்களுக்கு தோணுது.”
உள்ளே கை தட்டல் சத்தம் கேட்கவே ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த மதன், பிரியா தான் கை தட்டினாள் என்பது தெரிய வர ஏமாற்றமானான்.
அந்த சமயத்தில் தான் வெளியே சிலீரென்று சத்தம் கேட்டது.
இருவரும் வெளியே ஓடி வந்து பார்க்க, அங்கே அவர்களது காரின் பின் பக்க கண்ணாடி உடைந்து போய் கீழே துகள்கள் சிதறியிருக்க, உடைச்சது நானாக்கும் என்றபடி கருங்கல் ஒன்று அதனூடே கிடந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.
2 comments on “தொடர்கதை : பூங்கதவே தாழ் திறவாய்”
rajaram
அருமை, அழகான தொடர்ச்சி. ஆனால், கார் கண்ணாடிதான் ஒடைஞ்சிருச்சு ஒருவேளை அந்தப் பொண்ணு வந்து ஒடைச்சிருக்குமோ? சிறப்பாசிரியர் விருது?
நிறைய கேள்விகள் இருக்கு அடுத்தவாரம் பார்ப்போம்.
thileep
நல்லா இருக்கு ஆசிரியரே....