ஆர்.வி.சரவணன்
இதுவரை:
நண்பனின் திருமணத்துக்குச் செல்லும் மாதவன், தான் காதலித்து அவர்களின் குடும்பத்தார் போலீஸ் வரை சென்று அடித்து மிரட்டியதால் விட்டுவிட்டுப் போன காதலி மீராவைச் சந்திக்க நேர்கிறது. அவளோ அவனே குற்றவாளி என்பதாய் கோபமும் ஆத்திரமும் கொள்ள, நானல்ல குற்றவாளி… உன் குடும்பம்தான் என நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அவளுக்கு விபரம் தெரிந்தது அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புயல் போல பெற்றோர் இருப்பிடம் தேடிப் போகிறாள்.
இனி…
மாதவன் மீராவின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணற, மீரா இறுக பற்றிய அவனது கையை விடாமலே படிக்கட்டுகளில் இறங்கி ஹாலுக்கு வந்து அதன் ஓரத்தில் இருந்த அறை நோக்கி மிக வேகமாய் நடந்தாள். தன்னிடமிருந்த ஆத்திரத்தை அப்படியே சிந்தாமல் சிதறாமல் அப்பாவின் மேல் கொட்ட வேண்டும் என்ற அவசரம் அவளிடம் இருப்பது மாதவனால் அறிந்து கொள்ள முடிந்தது.
சேகர், திவ்யா, ரேகா, காவ்யா என அனைவரும் பதட்டத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இரவு ஒரு மணி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு இவர்களின் கேட் வாக் தெரிந்திருக்கவில்லை.
தன் அப்பா இருந்த ரூம் கதவை நெருங்கிய மீரா தட்டி விட்டோ, தள்ளி விட்டோ எல்லாம் நுழையவில்லை. தன் காலால் எட்டி உதைத்து தான் உள்ளே நுழைந்தாள். கதவு அவளது கோபத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி பின் சென்று மீண்டும் அவளிடமே வர மாதவன் தன் இடது கையால் அக்கதவை தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்தினான்.
கல்யாண வரவு செலவு கணக்குகளை கவனித்து கொண்டிருந்த ராஜனும் அவர் மனைவியும் அவர்களையும் அவர்கள் வந்த வேகத்தையும் பார்த்து அதிர்ந்தனர்.
மீரா மாதவனின் கையைப் பிடித்த படி நின்றிருப்பதை பார்த்தவுடன் ராஜனுக்கு கோபம் வந்தது. மனைவியை பார்த்தார். அவர் ஏற்கனவே பதறி போய் இருந்தார்.
” ஏண்டி… தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கிற நேரத்துல இப்படி ஒரு ஆம்பளை கையை பிடிச்சிட்டு வந்து நிக்கறியே. வெக்கமாயில்லே” பல்லை கடித்தார்.
“நீ சும்மா இரும்மா” என்று அதட்டிய மீரா அப்பாவிடம் கேட்டாள், “இவர் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணாருன்னு அவரை அடிச்சு துன்புறுத்தி, திருட்டு பட்டம் கட்டியிருக்கீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா..?”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கையும் களவுமாய் பிடிபட்டவன் தவிப்பது போல் அமர்ந்திருந்தார்.
“உங்க பொண்ணு இருக்கிற பக்கமே வர மாட்டேன்னு உங்க குடும்பத்து மேல சத்தியம் பண்ண நீ சத்தியத்தை மறந்து இப்படி நடந்துக்கலாமா..?” மகளிடம் தங்கள் வார்த்தைகள் எடுபடாது என்று தெரிந்து விட்டதால் மீராவின் அம்மா மாதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“நீங்க சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கறவங்களா இருந்தா என் சத்தியத்தை நான் காப்பாத்தலாம். நகைகளை நீங்களே எடுத்திட்டு என் மேல திருட்டு பட்டம் கட்டினா நான் ஏன் சத்தியத்தை காப்பாத்தணும்” மாதவன் ஆவேசமாய் கத்தினான்.
” சபாஷ். மாதவன்” மீரா.
“ஏண்டி. கண்டவங்களை விட்டு இப்படி பேச வைக்கிறியே. இது நியாயமா..?”
“நீங்க மட்டும் அவருக்கு திருட்டு பட்டம் கட்டினது நியாயமா..?” பதிலுக்கு கத்தினாள்.
அம்மா பதில் சொல்லத் தடுமாறி கணவனை பார்க்க ராஜன் மெல்லிய குரலில் சொன்னார்.
” பொய்ம்மா”
மாதவன் கோபமாய் ஏதோ சொல்ல போக அறைக்குள் திவ்யா, ரேகாவுடன் நுழைந்த காவ்யா தடுத்துவிட்டு, “அப்பா போதும்பா. அவரையும் அக்காவையும் அலைக்கழிச்சது போதும். உண்மைய ஒப்புக்குங்க”
“என்னடி எல்லோரும் கூட்டு சேரந்துகிட்டீங்களா?” அம்மா.
“ஆமாம். அன்னைக்கு அநியாயத்துக்கு உங்க கூட கூட்டு சேர்ந்தோம். இன்னைக்கு நியாயத்துக்காக கூட்டு சேர்ந்திருக்கோம்” என்றாள் திவ்யா.
“அவர் உங்க அப்பா”
“செய்த தவறை முதல்ல ஒரு மனுசனா ஒப்புக்க சொல்லு” சீறினாள் மீரா.
“ஒப்புக்கிறேன்மா. உங்களை பிரிக்க எனக்கு வேற வழி தெரியல. அதான்” என்று சொல்லி மகளை அதற்கு மேல் பார்க்க முடியாமல் தலை குனிந்தார்.
“பிரிச்சு என்ன சாதிச்சீங்க. மீராவுக்கு கல்யாணமாகி புருசன் குழந்தையோட இருந்திருப்பானு நினைச்சா அப்படியேதானே இருக்கா” மாதவன்.
“அந்தளவுக்கு நீ மயக்கி வச்சிருக்கியேப்பா”
“ஓ. அப்ப நாளைக்கு கல்யாணமான பின்னாடி திவ்யா எனக்குச் சப்போர்ட் பண்ணி பேசினா இப்படி தான் சொல்வீங்களா அத்தை” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் சேகர்.
இருவரும் அவனது வார்த்தைகளை எதிர் கொள்ள இயலாமல் திணறியபடி எழுந்தார்கள்.
“ஏன் மாப்ளே இப்படியெல்லாம் பேசறீங்க..?” ராஜன்.
“நீங்க மட்டும் அவங்க அன்பை கொச்சப்படுத்தலாமா..?”
வீட்டுக்கு வரப் போகும் மாப்பிள்ளைக்கு இதெல்லாம் தெரிந்து விட்டதே. இனி என்னவாக போகிறதோ என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டு விட மௌனமாக நின்றார்கள்.
“அன்னிக்கு மாதவனுக்கு வேலையில்லே. சரி. இன்னிக்கு அம்பது லட்ச ரூபாய் பிளாட். ஒரு லட்ச ரூபா சம்பளம்னு நல்லா இருக்கான். தங்கைக்கு நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணி கொடுத்திருக்கான். இதற்கு மேல அவனை ஏத்துக்கறதுல என்ன தயக்கம்”
“அன்னிக்கு கௌரவம் பார்க்காம கால்ல விழத் தெரிஞ்ச உங்களுக்கு இப்பச் செஞ்சதை ஒப்புக்கிறதில என்னப்பா தயக்கம்” மீரா.
“என்னை மன்னிச்சிடுப்பா. நீயும் மன்னிச்சிடும்மா.” கையெடுத்து கும்பிட்டார்.
“இதனால கல்யாணத்தை நிறுத்திடாதீங்க மாப்ளை”
மீரா அம்மா புடவை தலைப்பால் வாயை பொத்தி அழ ஆரம்பிக்க,
ரேகா அருகில் வந்து “அழாதீங்கம்மா. அப்படிலாம் ஒண்ணும் நடக்காது” என்று சமாதானப்படுத்தினாள்.
“பயப்படாதீங்க அத்தை. என் குடும்பத்துக்கு தெரியாத வரைக்கும் எந்த பிரச்னையுமில்ல” என்றான் சேகர்.
மாதவன் அவர் கைகளை பிடித்து கொண்டு “வயசுல பெரியவர் நீங்க. எங்களை பார்த்து கும்பிடக் கூடாது. இவ்வளவு பேர் சொன்னதுக்கப்பறம் வேற வழியில்லாம ஒப்புக்காதீங்க. உங்க மனசில எப்ப என்மேல ஒரு மதிப்பு வருதோ அப்ப மீராவை கல்யாணம் பண்ணி கொடுங்க. அது வரைக்கும் நாங்க வெயிட் பண்றோம்”ப்என்று பேசிய படி திரும்பியவன் அணிந்திருந்த ஜிப்பா அங்கிருந்த ஜன்னல் கதவில் நீட்டி கொண்டிருந்த ஆணி பட்டுக் கிழிய, அவனது முதுகில் வரி வரியாக அடி வாங்கிய தழும்புகள் தெரிந்தன.
ராஜன் அதை பார்த்துத் தலை குனிய,
மீராவின் தங்கைகள், ரேகா, சேகர் எல்லோரும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.
மீரா தழும்புகளை பார்த்து முதலில் அதிர்ந்தவள், அடுத்த நொடி ஓடி வந்து பின்னாலேயே அவனை அணைத்து கொண்டு, “என்னையும் என் குடும்பத்தையும் மன்னிச்சிடுங்க மாதவன்” என அழ ஆரம்பித்தாள்.
மாதவன் அவளிடமிருந்து விடுபட்டுத் திரும்பி, அவள் கண்ணீரைத் துடைத்தான். “இதுவரைக்கும் அழுததெல்லாம் போதாதா. இனியாவது சிரிச்சுக்கிட்டிரு” என்று சொல்லி விட்டு, “சேகர் வாடா… மணி ரெண்டாகப் போகுது கல்யாண மாப்பிள்ளை நீ. தூங்க வேணாமா” என்றபடி வெளியில் சென்றான்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.
வெள்ளிக்கிழமை நிறைவுறும்.