ஆர்.வி.சரவணன்
இதுவரை:
நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில்தான் மணமகள் தான் பிரிந்து சென்ற காதலியின் தங்கை எனத் தெரியவருகிறது மாதவனுக்கு. அதன்பின் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும், எதனால் தன் காதலியைப் பிரிந்து போக நேர்ந்தது என்ற கதையுமாய் நகர்ந்து தன்னை விரட்டிய காதலியின் தந்தை முன்னால் தன் காதலியின் இறுக்கமான பிடிக்குள் நிற்கிறான். அவளோ பெற்றோரையும் தங்கைகளையும் கேள்வியால் துளைக்க, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
இனி…
“டேய் மாதவா எழுந்திரு” சேகரின் குரல் கேட்டு கண் விழித்தான் மாதவன். இரவு நெடுநேரம் கழித்து தூங்கியதால் கண்கள் எரிச்சலாய. இருந்தது. கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தான். சேகர் குளித்து முடித்து வேஷ்டி மற்றும் பனியனுடன் தலை வாரி கொண்டிருந்தான்.
“மணி எவ்வளவு?”
“ஏழு”
‘மை காட். ஒன்பது பத்தரை முகூர்த்தமாச்சேடா” பதறியவாறு எழுந்தான் மாதவன்.
“பதறாம நிதானமாப் போய் குளிச்சிட்டு வா”
இருபது நிமிடத்தில் அவசரமாக குளித்து முடித்து வெளி வந்தான்.
“ஏற்கனவே நாம மீட் பண்ணப்பலாம் என்னடா சட்டையக் கூட கழட்டாம இருக்கானே. இவ்வளவு கூச்ச சுபாவமானு நீ நினைச்சிருக்கேன். நேத்துதான் உண்மை தெரிஞ்சது”
சேகர் புன்னகையுடன் சொல்ல, மாதவன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே பவுடரை முகத்தில் ஒற்றி கொண்டான்.
“இவ்வளவு நெருக்கமான பிரெண்டா இருந்தும் என்கிட்டக் கூட சொல்லாம மறைச்சிட்டியேடா படவா “
“வலி நிறைந்த வாழ்க்கையைச் சொல்லி என்னாகப் போகுதுன்னுதான் ” என்றவாறு தன் சூட்கேஸ் திறக்க போனவனை தடுத்த சேகர், “உனக்கு இன்னிக்கு ட்ரெஸ் நான் வாங்கியிருக்கேன், அதத்தான் நீ போட்டுக்கணும் ” காட்டன் வேட்டியுடன் சிகப்பு கலர் சட்டை இருந்த அட்டைப் பெட்டியை மாதவன் கையில் கொடுத்தான்.
“எதுக்குடா இதெல்லாம்..?”
“அன்புதான்”
இதற்கு மேல் கேட்டால் கோபித்துக் கொள்வான் என்பதால் ட்ரெஸ் செய்து கொள்ள ஆரம்பித்தான்.
ஏழு வருடங்களாய் பட்ட கஷ்டம் ஒரே நாளில் தீர்ந்துபோன அதிசயத்தை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது. மீராவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
கதவை திறந்து காவ்யா “குட் மார்னிங்” என்றபடி நுழைந்தாள்.
அவள் கையில் பெரிய தட்டு இருந்தது.
“இது எதுக்கு இப்ப..?”
“நேத்து நைட் நீங்க சாப்பிடலையாம். அதனால அக்கா கொடுத்தனுப்பியிருக்கா ” என்றபடி தட்டை மேஜையில் வைத்தவள், “இது தன்னோட ஆர்டர்னு சொல்ல சொன்னா” சிரித்தபடி சொன்னாள்.
“மீரா மாதிரி பொண்ணு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்டா நீ”
சேகர் சொல்ல தட்டை திறந்தான் மாதவன். கேசரி, இட்லி, ரவா தோசை, பொங்கல் என்று ஐட்டங்கள் நிறைய இருந்தது. “இவ்வளவு எப்படிடா நான் சாப்பிடறது. நீயும் வா ” என்று முனகினான்.
” நான் பொண்ணு கூட சாப்பிட போறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கதவு திறந்து உள்ளே நுழைந்த உறவினர்கள் “மாப்ளை ஐயர் கூப்பிடறார் வாங்க” என்று அழைக்கவே சேகர் “மச்சி கதவைப் பூட்டிட்டு வந்து சேர்” என்றபடி கிளம்பினான்.
மாதவன் அவசரமாக டிபனை சாப்பிட்டு முடித்துக் கதவை பூட்டி வெளியில் வந்து படி இறங்கினான். கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் சேர்களை ஆக்ரமித்தபடி இருந்தார்கள். கல்யாண வீட்டினர் வந்திருந்தவர்களை வரவேற்பதும் நலம் விசாரிப்பதுமாக இருந்தார்கள். சேகர் மணவறையில் அமர்ந்திருந்தான். ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மாதவன் வேடிக்கை பார்த்த படி நின்றிருக்க,
“தம்பி சாப்டீங்களா..?” என்ற பெண் குரல் கேட்டு திரும்பியவன் ஆச்சரியமடைந்தான். மீரா அம்மாதான் நின்றிருந்தார்.
‘சாப்பிட்டேன்’ என்பதாய்த் தலையாட்டினான்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியரை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில் அந்த குரல் கேட்டது.
“மூத்த பொண்ணு மீராவுக்கு வயசாகிட்டே போகுதே. கல்யாணம் எப்பதான் பண்றதா இருக்கீங்க. பொண்ணுதான் நல்ல வேலையில் இருக்காளே. மாப்பிள்ளை கிடைக்கிறது சுலபம். ஏதாவது வரன் இருந்தா நான் சொல்லவா “
“வேண்டாம் மாப்ளை முடிவாகிடுச்சு.” ராஜனின் குரல் தான்.
திரும்பாமலே காதை கூர்மையாக்கி கொண்டு தொடர்ந்து கவனித்தான்.
“அப்படியா. சொல்லாம சஸ்பென்சா வச்சிருக்கீங்க…”
“ம். மாப்ளை பெங்களூர்ல வேலையில இருக்கார். நல்ல சம்பளம். மதுரை தான் சொந்த ஊரு”
” அப்ப அடுத்த கல்யாண சாப்பாடு சீக்கிரமேனு சொல்லுங்க” ராஜன் தலையாட்டி கொண்டே திரும்புகையில் மாதவனை பார்த்து விட்டார். அடுத்த நொடி அவனை நோக்கி வந்தவர் “உட்காருங்க தம்பி” என்றார்.
“பரவாயில்லே”
“உங்க காதல் விசயத்துல நான் ஜெண்டில்மேனா நடந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” அசட்டுத்தனமாய் சிரித்தார்.
பதிலுக்கு கை கூப்பினான். அவர் நகரவும் அங்கிருந்து கிளம்பி மேடைக்கு அருகே வந்து நின்றான்.
மீராவை கண்களால் தேட ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் கடந்திருக்க, அருகில் கனைப்பு சத்தம் கேட்டது. திரும்பினான். மீரா தான் நின்றிருந்தாள். கல்யாணப் பெண் போலவே அலங்காரம்.
“சாப்டாச்சா..?”
“ம்”
” அப்பா அம்மா ஓகே சொல்லிட்டாங்க”
அவள் குரலில் தான் எவ்வளவு உற்சாகம்.
” என்கிட்டயும் சொன்னாங்க.” என்றவன் ” இனி தைரியமா உன்னை சைட் அடிக்கலாம்” கண்ணடித்தான்.
“ச்சீ” வெட்கத்துடன் முறைத்தாள்.
அப்போது திவ்யா தோழிகள் சூழ நடந்து வந்து கொண்டிருந்தாள். கேமராமேன்கள் படமெடுக்க முண்டியடித்தனர். மணமேடைக்கு திவ்யா வந்து சேகரின் அருகில் அமர்ந்தாள்.
மீராவைக் காவ்யா மேடைக்கு கூப்பிடவே, “சரி வரேன். நீங்க உட்காருங்க.”என்ற படி மீரா மேடையேறினாள்.
மாதவன் காலியான சேர் ஒன்றில் அமர்ந்த போது, முதல் நாள் பார்த்த அந்த இளைஞன் பின்னாலிருந்து அவன் முகத்தருகே வந்து “எப்படி பாஸ்?” என்றான் ஆச்சரியமாய்.
நண்பர்கள் குழு முழுக்க பின் வரிசையில் அந்த இளைஞனுடன் அமர்ந்திருந்தது.
“என்ன கேட்கறீங்க..?”
“நேத்து நைட் தான் பொண்ணோட அக்காவை பார்த்தீங்க. 12 மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ளே சிரிச்சி பேசற அளவுக்கு நெருங்கிட்டீங்க”
மாதவன் அவஸ்தையாய் சிரித்தான்.
“சேகர் கல்யாணம் முடியறதுக்குள்ளே நீங்க மீராவோட செட்டில் ஆகிடுவீங்க போலருக்கு”
மாதவனுக்கு அவன் பேசுவது தர்ம சங்கடமாய் இருந்தது. ‘டேய் அது நான் ஏழு வருசமா லவ் பண்ற பொண்ணுடா’ன்னு கத்த வேண்டும் போல் இருந்தது.
“அப்படிலாம் இல்ல”என்றான்.
“அப்ப சும்மா டைம் பாஸா”
மாதவன் திணறி பேச்சை மாற்ற விரும்பினான். “உங்க பேரை நான் கேட்டுக்கவே இல்ல. உங்க பேர் என்ன?”
“என் பெயரே தெரிஞ்சிக்கலியா… கிழிஞ்சது போங்க.”
“ம் அவருக்கு அதுக்கெல்லாம் ஏது நேரம் ” பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் கண்ணடித்தான்.
மாதவன் மீண்டும் அவஸ்தையாய் சிரிக்க வேண்டியிருந்தது.
“என் பெயர் சரவணன் ” என்றான் அந்த இளைஞன்.
ரேகா வந்து “உன்னை மாப்ளை மேடைக்கு கூப்பிடறார்” என்றாள்.
“பரவாயில்ல இங்கயே இருக்கேன்” என்றான் மாதவன்.
ரேகா சென்று சேகரிடம் சொல்லியிருப்பாள் போலிருக்கிறது. சேகர் மேல வா என்று சைகை செய்து கூப்பிட்டான். மாதவன் வேண்டாம் என்று சைகை செய்தான்.
சேகர் மீராவை திரும்பி பார்க்க, மீரா மாதவனை பார்த்து மேடைக்கு வா என்று கண்களால் சைகை செய்த அடுத்த நொடி எழுந்தான்.
நண்பர்களிடம் சொல்லி கொண்டு மேடைக்கு செல்லலாம் என்று திரும்பிய போது சரவணனும் மற்ற நண்பர்களும் ஒருமித்த குரலில் “என்ஜாய்” என்று உற்சாகமாக கத்தினார்கள்.
மண்டபமே அவர்களை திரும்பி பார்த்தது.
மாதவன் தப்பித்தால் போதும் என்று அவர்களிடமிருந்து வேகமாக நடந்து படிக்கட்டுகளில் தாவி மேடை ஏறி சேகரின் பின்னால் வந்து நின்று கொண்டான். மணப்பெண் திவ்யாவின் பின்னே மீரா நின்றிருந்தாள்.
” கூப்பிட்டா உடனே வர மாட்டிங்களா?” செல்லமாய் மீரா கோபிக்கவும். அருகிலிருந்த ரேகா ” நீ கூப்பிடணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தார் மாதவன். இனிமேலாம் சேகர் கூப்பிட்டா வந்துடுவாரா” கிண்டலடித்தாள்.
சேகர் திரும்பி ” இது பாயிண்ட்” என்று விரல்களால் வெற்றிக்குறி காண்பித்தான். திவ்யா கணவனாக போகும் சேகரை கண்களால் முறைக்க, மாதவனும் மீராவும் ரேகாவை அடிக்க கை ஓங்கினார்கள்.
இப்படியான கலாட்டாக்கள் மேடையில் நடந்து கொண்டிருக்க, அட்சதை தட்டுடன் காவ்யா ஒவ்வொரு வரிசையாக சென்று நீட்டி கொண்டிருந்தாள்.
“எதுக்கு கல்யாணலாம் பண்ணிகிட்டு. இப்படியே நாம ஜூட் விட்டுடலாமா ” என்றான் மாதவன்.
“உதை விழும். நம்ம கல்யாணம் இதே மாதிரி எல்லார் முன்னிலையில் நடக்கணும்”
பெருமையோடு சொன்னாள் மீரா.
மாதவன் சிணுங்க ஆரம்பிக்க அதை ரசித்த படி மீரா கேட்டாள்.
“சரி என்னை பார்த்தவுடனே ஒரு பாட்டு பாடுவியே. இப்பயும் பாடிட்டிருக்கியா”
” இப்ப தான் சேர்ந்துட்டோமே. பாடு”
” இங்கயா..?”
“ம்”
சுற்று முற்றும் பார்த்து விட்டு மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான் மாதவன்.
“உன்னை என்னிக்கு பிரிஞ்சேனா அன்னிலேருந்து அந்த பாட்டு பாடறதும் இல்ல. கேட்கறதும் இல்ல”
“வா வா வா வா அன்பே வா.
தா தா தா தா கவிதை தா.
எனக்கொரு சிறுகதை நீ
தனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ …..”
“தொட்டுக்கோ”
“புரியல”
” நான் உனக்கு தொடர்கதையா தான் இருக்கணும். தொட்டுக்கோ “
மாதவன் அவளது இடது கையை பிடித்து அவளது விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டான்.
“கெட்டி மேளம். கெட்டி மேளம் ” குரல் ஒலிக்க, நாதஸ்வரம் மேளம் ஒலிக்க சேகர் திவ்யாவிற்கு தாலி கட்டினான்.
சேகர் திவ்யா மீது எல்லோரும் தூவிய அட்சதை பின்னாடியே நின்றிருந்த மாதவன் மீரா மீதும் கொஞ்சம் விழுந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
கதை நிறைவுற்றது அவர்களின் காதல் தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.