தொடத்தொட தொடர்கதை நீ…. – 7

ஆர்.வி.சரவணன்

முன்கதை:
காதலினால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஊருக்கே வராமல் இருந்த மாதவன் நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் யாரைச் சந்திக்கக் கூடாதோ அவர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்பட, அங்கிருந்து கிளம்ப நினைக்கும் போது ஒருவர் மாற்றி ஒருவர் தடையாக நிற்கிறார்கள். கல்லூரித் தோழி ரேகா அவனை நோக்கி வந்தாள்.

இனி…

மாதவன் தன்னை நோக்கி ஓடி வரும் ரேகாவை வேண்டா வெறுப்பாய் பார்த்தான்.

மீராவின் தோழி என்ற அளவில் கல்லூரி காலத்தில் நல்ல பழக்கம் தான். சாப்பாட்டு ஹாலிலேயே ஒரு ஹாய் சொல்லியிருக்கலாம். ஆனால் நடந்த விசயங்களை பற்றி அவள் கேட்பாள் என்ற காரணத்தினாலேயே தவிர்த்திருந்தான். இதோ இங்கே பிடித்து கொண்டு விட்டாள்.

அருகில் வந்த ரேகா மூச்சிரைத்த படி, “நீ வந்திருக்குறது தெரியாது. இப்ப தான் மீரா சொன்னா. எப்படி இருக்கே..?”

“ம். இருக்கேன்”

“என்ன இழுக்கறே. சரி எங்க கிளம்பறே நீ..?”

“சும்மா ஒரு வாக் போகலாம்னு”

“ட்ராவல் பேக் எடுத்துட்டேவா..?”

பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“அப்புறம் போகலாம். வா உன் கிட்ட நிறைய பேசணும். முக்கியமா சண்டை போடணும்.”

அவஸ்தையாய் சிரித்தான்.

“வா”

குரலில் அதட்டல் தென்பட்டது. விட்டால் கையை பிடித்து இழுத்து சென்று விடுவாள் போலிருந்தது.

“வரேன்” அவளுடன் மீண்டும் உள்ளே நடந்தான். நடந்து கொண்டிருக்கையிலேயே ” உன் நம்பர் சொல்லு “என்று அவனிடம் கேட்டு தன் செல்போனில் பதிவு செய்து கொண்டாள்.

அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தன் கணவனை நிறுத்திய ரேகா,

“சொல்லியிருக்கேனே. என்னோட காலேஜ் பிரண்டு மாதவன்னு. இவர் தான்”

“ஹலோ” என்றான் அவளின் கணவன்.

“ஹலோ” பார்மாலிட்டிக்காகச் சொன்னான் மாதவன்.

ரெடிமேட் புன்னகைகளுடன் நல விசாரிப்புக்கள் முடிந்து அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சில விநாடிகள் கடக்க, ” சரி நான் ரூமிற்கு போறேன். நீ உன் தோழி கூட கதை பேசிட்டு வந்து சேர்” என்ற படி அகன்றான் அந்த ஜெண்டில்மேன் கணவன். கூடவே மாதவனை பார்த்து வரேன் என்பதாக தலையாட்டினான்.

அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த மாதவனை ரேகா கேட்டாள்.

“இந்த ஏழு வருசமா எங்கப்பா வனவாசம் போனே?”

“பெங்களூர்”

“உன்னையே நம்பியிருந்த மீராவை விட்டுட்டு போலாமா.இது தான் நீ அவளை காதலிச்ச லட்சணமா”

மாதவன் பதில் பேச துவங்கும் போது மாப்பிள்ளை சேகர் குரல் கேட்டது.

“என்னடா இப்ப உடம்பு பரவாயில்லையா..?”

“ம்” என்றவன் ரேகாவை அறிமுகப்படுத்தினான். இருவரும் ஹாய் சொல்லி கொண்டனர்.

” சரி. பேசி முடிச்சவுடனே என் ரூம் வந்திடு”

“உனக்கு எதுக்குடா சிரமம்”

“நாளைக்கு தான்டா சிரமம். இன்னிக்கு என்ன இருக்கு? ” பதில் எதிர் பார்க்காமல் சேகர் கிளம்பி விட்டான்.
அவன் சொன்னதின் அர்த்தம் தாமதமாய் உணர்ந்து மாதவன் புன்னகைக்க, ரேகாவும் வெட்கத்துடன் சிரித்தாள்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

மாதவன் மீண்டும் அவளோடு பேச ஆரம்பிக்கையில் ரேகாவுக்கு போன் வந்தது. அவள் “ஒரு நிமிசம்” என்று அவனை இடைமறித்து விட்டு தள்ளி நின்று பேச ஆரம்பித்தாள்.

சேகரின் நண்பர்கள் குழு டைனிங் ஹாலிலிருந்து அப்போது தான் வெளி வர ஆரம்பித்திருந்தது.

அந்த இளைஞன் மாதவனை நெருங்கி, “என்ன தலைவா. நமக்காக ஹோட்டல்ல ரூம் போட்டிருக்காங்க அங்க போலாமா..?” என்றான்.

“இல்ல. சேகர் கூட இருந்துக்கறேன்”

” நினைச்சேன்” என்றபடி ரேகாவை பார்த்து கொண்டே கடந்து சென்றான்.

நண்பர்களிடம் “பொண்ணோட அக்கா கிட்ட பேசறதுக்காக அக்காவோட தோழிய பிடிச்சிட்டான் பார்த்தியா”

“டேய் விடுடா. ரெண்டு பேரும் ஏற்கனவே பழகினவங்க மாதிரி தான் தெரிது”

“மச்சமுள்ளவன்னு எனக்கு தெரிது”

இது மாதவனின் காதில் விழவே அந்த இளைஞனை பார்த்து பல்லை கடித்தான்.

மாதவன் செல்போன் மெசேஜ் வந்திருப்பதை சொன்னது.

சேகர் தான் அனுப்பியிருந்தான்.

“மொட்டைமாடில இருக்கிற கார்டனுக்கு கல்யாணப் பொண்ணு என்னை வர சொல்லியிருக்கு. நாம அங்க போகணும் சீக்கிரம் வா”

‘இவன் வேற’ என்று அலுத்து கொண்டான் மாதவன்.

“பொண்ணோட அம்மா கூப்பிடறாங்க. என்னனு கேட்டுட்டு வந்துடறேன். நீ மாப்பிள்ளை ரூமிற்கு போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி ரெஸ்ட் எடு. நான் உன்னை கூப்பிடறேன் ” என்று சொல்லி அவனை விட்டு அகன்றாள் ரேகா.

மாதவன் மீண்டும் தனியே விடப்பட்டான்.

தன்னை யாரோ கவனிப்பது போல் தோன்றியது.

சுற்று முற்றும் பார்த்தான்.

எதிரே மாடியில் அவனை அது வரை பார்த்து கொண்டிருந்த மீரா அவன் பார்த்தவுடன் வேறு பக்கம் பார்வையை திருப்பினாள்.

அவள் நின்றிருந்த உடல் மொழியில் கோபம், பிடிவாதம், அக்கறை, தவிப்பு எல்லாமும் இருந்தது.

எங்கே பார்வை காட்டி கொடுத்து விட போகிறதோ என்று தான் பார்வையை திருப்பி கொண்டாள் போலிருக்கிறது.

மாதவன் சிரித்து கொண்டான்.

மண்டபத்தை விட்டு வெளியேறி விடலாம் என்றிருந்த மன உறுதி தளர்ந்து போயிருக்க, இருக்கலாமே என்ற மனநிலைக்கு அவன் இப்போது வந்திருந்தான்.

“சீ. இந்த காதலுக்கு விவஸ்தையே கிடையாது” தலையில் அடித்து கொள்ளாத குறையாக புன்னகையுடன் முணுமுணுத்து கொண்டான்.

கதைக்கான படங்களைத் தேர்வு செய்து கொடுக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றி.

வெள்ளிக்கிழமை தொடரும்.

Leave a Reply