ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி-2024
நேற்றைய நாள் மிகச் சிறப்பான நாளாக அமைந்தது. கேலக்ஸியின் ஐந்து புத்தகங்களின் வெளியீடு மிகச் சிறப்பாக நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் ஐந்து புத்தகங்களை வெளியிட்டுப் பேசுவது என்பது சற்றுக் கடினமானதுதான் என்றாலும் சரியான திட்டமிடலாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் – சில நிமிடங்கள் முன்னதாகவே – நிகழ்வை முடித்தது சிறப்பு.
மாலை நாலு மணிக்கு நிகழ்வு என்பதால் அபுதாபியில் இருந்து நாங்கள் – நான், சதீஷ், பால்கரசு மற்றும் வாசு – பதினோரு மணிக்குக் கிளம்பி. மதியம் 2.30 மணிக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில் இருந்தோம். பாலாஜி அண்ணன் நூல்குடில் அரங்கில் இருந்தார். அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தார்கள். சகோதரர் பிலால் அலியார் எல்லாருக்கும் காபி. டீ வாங்கிக் கொடுத்தார்.
நிகழ்வு சரியாக நாலு மணிக்கு ஆரம்பித்தது. நிகழ்வை சகோதரி திருமதி. ஆர்.ஜே. அஞ்சனா அவர்கள் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மரியாதைக்குரிய HH Sheikh Eissa Bin Abdullah Al Mullah அவர்களும், Dr. Shiha Ghanem Alhashmi அவர்களும் மேடையை அலங்கரிக்க, ஐந்து புத்தகங்களை எழுதிய எத்தாளர்களுடன், ஜெசிலா மேடம் மொழி பெயர்த்த மலையாளப் புத்தகத்தின் ஆசிரியரும் மேடைக்கு அழைக்கப்பட்டோம்.
பாலாஜி அண்ணன் சிறு வரவேற்புரை நிகழ்த்த, முதல் புத்தகமாய் எழுத்தாளர் தெரிசை சிவாவின் ‘தகர்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரு. எம்.எஸ்.பிரகாஷ் (Gloal Vice President, Emerson USA) ஆகியோரால் வெளியிடப்பட, சிவாவின் நண்பர்கள் திரு. விஜய் மற்றும் திரு. மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். நேரம் இன்மையின் காரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி, சிவா பேச அழைக்கப்பட்டார். (இது சிவாவுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமானதுதான்) நாம் பிறந்த ஊரின் தொன்மங்களை எழுதி வைக்க வேண்டும் என்பதால்தான் இப்படியான நாவல்களை எழுதுவதாய் சிவா சொன்னார். இது சிவாவின் ஐந்தாவது புத்தகம். இந்த நாவலைப் பாதி எழுதியதும் வாசிக்க அனுப்பினார். மீதியை புத்தகத்தில் வாசிச்சிக்கங்கன்னு சொல்லியிருந்தார். இனிதான் வாசிக்கணும்.
அடுத்ததாய் எனது புத்தகமான ‘மருள்’ நாவல் சிறப்பு விருந்தினர்கள் இருவரும் வெளியிட, சகோதரர்கள் திரு. சதீஷ் குமார் மற்றும் திரு. திலீப் அப்துல் ரசாக் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். திலீப்பும் சதிஷும் அபுதாபியில் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது எனது எட்டாவது புத்தகம், கேலக்ஸியில் மூன்றாவது புத்தகம். நான் பேசும் போது, இந்த நாவல் முழுக்க முழுக்க கிராமத்து வாழ்வியலுடன் ஒன்றிப் போன வாழ்க்கையை, சாமியாடியின் கதையைப் பேசும் என்றும், இதெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னாலும் இன்னமும் கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றேன்.
மூன்றாவதாய் திருமதி. லஷ்மி பிரியா அவர்களின் ‘Lpee Jabs’ என்னும் பொன்மொழிகள் அடங்கிய நூலை சிறப்பு விருந்தினர்களுடன் திரு. கிருஷ்ணன் கோபி (Group Chief Distribution Officer, GEMS Education &CEO – TMRW) வெளியிட, திருமதி. லஷ்மி வெங்கடேஷ், திருமதி. ஜெசிலா மற்றும் லஷ்மி பிரியா அவர்களின் மகள் நேகா கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இவர் ஆங்கிலப் புத்தகம் என்பதாலும் அவருக்கு நண்பர்கள் பலர் தமிழ் அறியாதவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தில் பேசினார். அவரைப் பற்றி, அவரின் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் பற்றி, அப்புறம் தமிழ், அரபி என எல்லாவற்றையும் பேசி முடித்தார். இவருக்கு முன்னர் பேசிய இரண்டு எழுத்தாளர்களும் விட்டு வைத்த நிமிடங்களையும் இவருக்குப் பின்னால் பேச இருப்பவர்கள் எப்படியும் விட்டு வைப்பார்கள் என்ற நிமிடங்களையும் எடுத்துக் கொண்டு நீண்ட உரையாற்றினார்.
நான்காவது புத்தகமாய் ஓமானில் மருத்துவராய் இருக்கும் இளஞ்செழியன் அவர்களின் ‘கொலை ஞானம்’ என்னும் நாவல் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுடன் திரு. ராம் சுப்பிரமணியன் (CEO of Aakash Green, Singapore) வெளியிட, திரு. பரத், திரு. இதயன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். டாக்டர் பேசும் போது தான் மருத்துவத்துறையில் இருந்தாலும் தமிழ் மீதான ஆர்வத்தின் காரணமாக நாவலை எழுதியதாகவும் அதை வெளியிட்ட பாலாஜி அண்ணன் குறித்தும் பேசினார்.
இறுதியாக, ஜெசிலா மேடம் மொழி பெயர்த்த ‘மயக்கம் என்ன’ சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுடன் திரு. எஸ்.எஸ். மீரான் (Board Member. NRI Tamil Welfare Board. Govt. of Tamil Nadu) வெளியிட, எழுத்தாளர் லிஜேஷ் குமார் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மலையாளத்தில் இத்தொகுப்பை எழுதிய எழுத்தாளர் கீதா மோகன் அவர்களும் உடனிருந்தார்.
அவர் பேசும் போது தனக்கும் ஜெசிலாவுக்குமான நெருக்கத்தையும் சிறுகதைகளை எப்படித் தமிழுக்கு மாற்றினோம் என்றும் அதற்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர் வெள்ளியோடன் பற்றியும் பேசினார். அடுத்துப் பேசிய எழுத்தாளர் ஜெசிலா அவர்கள், தனக்கு மலையாளமே தெரியாது என்றாலும் கதையைச் சொல்லச் சொல்லக் கேட்டு மொழி பெயர்த்ததாகவும் தமிழுக்கும் மலையாளத்துக்கும் பாலமாக எழுத்தாளர் வெள்ளியோடன் இருந்தார் என்றும் சொன்னார்.
அதன்பின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சில நிமிடங்கள் பேசினார்கள். மேலும் எழுத்தாளர் சசிகுமார், மோகன் குமார் (External Affairs, Sharjah Book Authority) உள்ளிட்ட சிலர் பேசினார்கள்.
சிறப்பு விருந்தினர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் கேலக்ஸி பதிப்பகத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தப்பட்டது.
அதன்பின் கொஞ்ச நேரம் நூல்குடில் அருகில் கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. அலைனில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் சகோதரர் இத்ரீஸ் யாக்கூப் அவர்களை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உங்களுக்காகத்தான்ணே வந்தேன் என்று சொன்னார். மகிழ்ச்சி.
எல்லாம் சிறப்பாக முடிந்தது.
எப்பவும் நிகழ்வு முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம். அப்படி எடுப்பதற்கான வாய்ப்பை யாரும் கொடுக்கவில்லை என்பதால் குழுவாக எடுக்கும் போட்டோ இந்த முறை எடுக்கப்படவில்லை.
நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்தளித்தார் அஞ்சனா.
அரங்கு நிறைந்த கூட்டம்…
அருமையான நிகழ்வு.
இராஜாராம் ஊரில் இருப்பதால் அவர் இல்லாதது மட்டுமே குறை.
ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நம் புத்தகமும் வெளியிடப்பட்டது என்ற மகிழ்வுடன் அபுதாபிக்கு கிளம்பினோம்.
பரிவை சே.குமார்.