Description

அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது. அசோகமித்திரன்: அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.

Additional information

Author

அசோகமித்திரன்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.