இத்ரீஸ் யாக்கூப்
அப்பா இறக்கும்போது நான் ஆறு மாத பிள்ளையாம். உள்ளூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார். அவரைப் பற்றி அசைபோட, பெருமிதமாய் பேசிக்கொள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு ஆயிரம் கதைகளிருக்கும். எனக்கோ கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாவின் புகைப்படங்கள் மட்டுமே. நான் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் அந்த சூழலுக்குத் தகுந்தவாறு காணும் புகைப்படத்தில் வழியே அப்பா என்னுடன் பேசுவார்.
சில வேளைகளில் தன்னிலை மறந்து அம்மா என்னைத் திட்டினாள் என்றால் ‘அம்மாதானேடா… விடுடா குட்டி!’ம்பார். தாத்தா – பாட்டி அப்பாவைப் பற்றி ஏதும் பேசிக் கொண்டால், ‘ஃபீல் பண்றியாடா கண்ணா..?’ என்றபடி அந்த போட்டோவிலிருந்து இறங்கி வந்து என்னுடன் அமர்ந்துக் கொள்வது போன்றிருக்கும்.
அத்தை, சித்திகள் யாரும் பள்ளி, கல்லூரி செல்லும் என்னை கண்டுகொள்ளாது அவரவர் பிள்ளைகளுக்கு முதலில் சாப்பாடு கட்டிக்க கொடுப்பதில் மும்முரம் காட்டினால்…
‘உன் தம்பி, தங்கைகள்தானேடா…!’ம்பார்.
அம்மா அப்படி தன்னிலை மறந்து கத்துவதும் கூட என்னிடம் மட்டும்தான். அவளால் இந்த வீட்டில் என்னிடம் மட்டுமே அப்படியொரு உரிமை எடுத்து மனச்சீற்றங்களை மற்ற மற்ற ரூபங்களில் தாளாமல் கொட்ட முடியும். அது எனக்கும் நன்றாகவே தெரியும். இந்த வீட்டில் நானும் கூட அப்படித்தானே இருக்கிறேன். என்ன இந்த வீட்டிற்கு மூத்த வாரிசு என்பதால் அவளை விட எனக்கு சற்று கூடுதலான சுதந்திரமிருக்கலாம். அந்த சுதந்திரமென்பது எங்கள் இருவரின் மனக்கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றால் மிகையாகாது.
நாங்கள் விஸ்வகர்மா… அதாவது பத்தர் குடும்பமென்றாலும் அப்பாவுக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கும் அப்பா வாத்தியார் ஆனது கூடுதல் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இப்போதும் கூட பத்தர் வீடு என்பது மறைந்து ‘கணபதி சார் வீடா?’ என்று விசாரிக்குமளவிற்கு அப்பாவும் ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்திருக்கிறார்.
அவருடைய இறப்பும் கூட வீட்டிலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பெரும் இழப்பாகவே இருந்து வந்ததை என்னிடம் வலிந்து பேசும் அப்பாவை, தாத்தாவையொத்த பெரியவர்களிடம் பல முறை வெளிப்பட்டு பெருமைப்பட்டுக் கொண்டதுமுண்டு, கண்ணீர் விட்டதுமுண்டு.
அப்பா இருந்திருந்தால்… என்று ஆரம்பிக்கும் ஒவ்வொரு கையறுநிலைகளின் வீரியத்தை என்னை போன்று சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிள்ளைகளாலேயே உணர முடியும். அவற்றையெல்லாம் விவரிக்க முடியாது; விவரித்தாலும் புரியாது. புரிந்தாலும் உச்சுக் கொட்டுவதை விட வேறென்ன கேட்பவரால் செய்துவிட முடியும்?
அப்பாவை சமன் செய்ய இந்த உலகத்தில் எதுவும் உண்டோ? நானும் அம்மாவும் தாத்தா – பாட்டியும் அவர் நினைவுகளாலேயே வாழ்கிறோம். சில வேளைகளில் அழுகிறோம்; ஆயிரம் முறை தெற்றிக் கொள்ளவும் முயற்சி செய்கிறோம்.
முன்பு சொன்னேன் அல்லவா அப்பாவை சமன் செய்ய யாராலும் முடியாதென்று. முடியுமென்று இந்த குடும்பத்திற்காக அடுப்படியிலேயே வெந்து சாகும் உணர்வுகளை அடக்கிக் கொள்ளும் அம்மாவின் உழைப்பில் காண்கிறேன். தாத்தாவின் தலைமையில் காண்கிறேன். அப்பாவிற்கு அமுதூட்டிய பாட்டியின் கைகளிலும் என் அம்மாவையும் என்னையும் தன் வீட்டில் வைத்துப் பார்க்கும் தாய்மையில் உணர்கிறேன்.
சித்தப்பாக்கள், அத்தைகள்… சில நேரம் உணர்ச்சிவசப்பட்டு அப்பாவின் குணநலன்களையும் பெருமைகளையும் பேசினாலும் அம்மாவை இந்த வீட்டிற்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஊழியம் செய்யவே இங்கே அமர்த்தப்பட்டவள் போலத்தானே பல சமயங்களில் பாவிக்கிறார்கள்? இந்த வீட்டில் ஒருவருக்கு ஒன்றென்றால் அம்மாதானே முதலில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகிறாள்? இரவு பகல் பாராமல் அவர்களின் நோய் வாய்க்கு கண்ணயராமல் உடனிருக்கிறாள்!
அவளுக்கு ஒன்றென்றால்… இந்த வீடு நன்றி மறந்துவிடுகிறது! அந்நேரங்களில் அவளை நான் மெழுகுப் போல் உணர்வேன். இந்த வாழ்வின் கண்ணீர்த்துளிகள் அந்த மெழுகைப் போல மிகவும் சூடானது.
அது போன்ற நேரங்களில் அம்மா அப்பாவை அதிகம் தேடுவதாய் நானுணர்வேன். கூடத்திலிருக்கும் ஃபோட்டோக்களை எத்தனை நாழிகைகள் அவளால் நேருக்கு நேர் நின்று தன் உணர்ச்சிகளைக் கொட்டி முறையிட்டுத் தீர்த்துக் கொள்ள முடியும்? எனக்கு தெரிந்து ஓரக்கண்ணாலேயேதான் அப்பாவை அதிகம் தரிசித்திருக்கிறாள்.
ஆனால் ஆதுரமாக கட்டிப்பிடித்துக் கொண்டு ஆறுதல் தேடும், காதலை, ஏக்கத்தை, வெறுமையை வெளிப்படுத்தும் பொருளொன்றிருக்கிறது. அது அப்பாவின் குடை!
மழையோ, வெயிலோ, எதுவுமில்லாத மந்தமோ தினந்தோறும் பள்ளிச் செல்லும்போது அதையும் பிடித்துச் செல்வதே அவரது வாடிக்கையாக இருந்து வந்ததாம்.
அப்பா இறந்த பிறகு அவர் நினைவாக உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் சையின், மோதிரம், வாட்ச் என ஒன்றொன்றையும் எடுத்துக் கொள்ள அம்மா பொக்கிஷம் போல பாதுகாத்து வருவது அந்த குடை மட்டும்தான். அது அவள் எதார்த்தமாக செய்தாளா அல்லது புரிந்தே செய்தாளா என்பது தெரியாது. குடை என்ற அந்த வார்த்தையில்தான் எத்தனை பொருள்! அவளுக்கும் எனக்கும் அப்பா ஒரு குடை போலத்தானே..! அதனால்தான் அதை அவள் கண் போல் பராமரித்து வருகிறாளா?
வீட்டில் போதுமான குடைகள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மழைக்காலங்களில் ஒரு அவசரத்தேவைக்கு கூட அந்த குடையை யாரையும் தொட அவள் அனுமதித்ததில்லை. அவளுடைய அந்த காத்திரமான மறுப்பை பற்றி யார் குறை கூறினாலும் காதில் போட்டு கொண்டதுமில்லை. சித்தியில் ஒருத்தியோ, சித்தப்பாக்களோ வலிந்து பிடுங்க வந்தாலும் கொடுக்க மாட்டாள். அவளுடைய அந்த அசாத்திய தைரியத்தையும் அசாதாரண உடல்மொழிகளையும் பார்த்து பாட்டி கூட திகைத்துப் போனதை நானும் கூட கண்டிருக்கிறேன்.
தீபாவளிக்கு முன்னாடியிலிருந்தே நல்ல மழைதான். நம்மூரில் தீபாவளி நாட்களில் மழை புதிதா என்ன? இந்த முறை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறென்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. நல்ல வேளை மழைப் பெய்யவில்லை! ஆனால் திங்கள் பெய்தது எதிர்பாராமல்!
கல்லூரிலிருந்து நனைந்து கொண்டுதான் வந்து சேர்ந்தேன். வாசலிலிருந்து ஹால் வரை அங்குமிங்கும் மூன்று நான்கு குடைகள் சிறிய சிறிய கூடாரங்கள் போல முளைத்திருந்தன. சட்டென எல்லா குடைகளுக்கும் வேலை வந்துவிட்டது போல.
அம்மா மெதுவாக மாடியிலிருந்து படிக்கு படி நொடி இடைவெளிகள் கொடுத்து, கொடுத்து இறங்கிக் கொண்டிருந்தாள். முகம் வாட்டமாகயிருந்தது. ‘என்னாச்சும்மா?’ என்று நான்தான் கேட்க வேண்டும். அதுவும் எங்கள் அறையிலோ அல்லது அவளது பிரதான உறைவிடமான சமையறையிலோதான் கேட்க முடியும்.
தாத்தாவும் பாட்டியும் நான் நனைந்து விட்டதை கடிந்து கொண்டு சீக்கிரம் சென்று தலையைத் துவட்டு என்று மாறி மாறி குரல் கொடுத்தார்கள். நான் அம்மாவையே பார்த்துக் கொண்டு அவளருகினில் சென்றேன். கண்கள் கலங்கியிருந்தன. நான் பதற்றமாகி அவளை அழைத்துக் கொண்டு எங்கள் அறைக்குள் சென்றேன்.
‘என்னாச்சும்மா?’ என்றேன். நான் நனைந்தபடி தெருவினில் வந்துக் கொண்டிருந்ததை மாடியிலிருந்துப் பார்த்திருக்கிறாள். அது அவள் கண்களுக்கு என்னுடைய அப்பாவே நடந்து வந்தது போன்றிருந்ததாம். கேட்டவுடன் எனக்கும் உடல் சிலிர்த்து கண்கள் கலங்கிவிட்டன. நான் கலங்கியதைப் பார்த்துவிட்டு, ‘அப்பா உயரத்துக்கு வந்துட்டடா!’ என்றாள் சற்று சிரிப்பை வரவழைத்தபடி. அந்த சிரிப்பு என்னையும் முறுவலிக்க வைத்தது. இதழ்கள் விரிந்து சிரிக்கவும் செய்தேன்.
‘உங்க அப்பா மேல வெயில் பட்டும் பார்த்ததில்லை; அவர் நனைஞ்சு வந்தும் பார்த்ததில்லை’ என்றாள் தன்னுடைய பழைய நாட்களை அசைப் போட்டவளாய்.
“அப்ப அப்பாவோட குடையை குடேன்… அவரை நனையாமப் பாத்துகிறேன்!” என்றேன். சிரித்து விட்டாள். அவள் அப்படி சிரிப்பது அபூர்வம். குறிஞ்சியாவது இந்தந்த ஆண்டில் பூத்தது, பூக்குமென ஒரு ஆய்வறிக்கையையோ, முன்னறிவிப்பையோக் கேட்பவர்களுக்கு எடுத்துக் காட்டலாம். என் அம்மாவின் நிலாக்காலம் எப்போதாவதுதான் இப்படி பூரண சந்திரோதயமாய் பளிச்சிடும். அதை எந்தன் வானமும் பூமியும் முகம் நிறைந்த பிரகாசத்தோடுக் கொண்டாடி மகிழ்ந்திடும்!
“ஏன்? நீ வச்சிருந்த குடை என்னாச்சி?” என்றாள்
“அதுல ரெண்டு மூணு கம்பி விட்டுப்போச்சிம்மா..!” என்று பொய்யாய் சிணுங்கத் தொடங்கினேன்.
“சரி, எடுத்துக்க!” என்றாள். அவள் குரலில் அத்தனை தீர்க்கம்!
முதன்முறையாக அப்பா என் மனதில் பதிந்திருந்த புகைப்படம் ஒன்றிலிருந்து பேசினார்…
“அதான் என் உயரத்திற்கு வளந்துட்டியாமே..!”
நன்றி : படம் இணையத்திலிருந்து