சிறுகதை: அன்பின் ஆழம்

கமலா முரளி

ஷேலான் சொல்யூஷன்ஸ் நிர்வாகத் தலைமையகம் .

பரபரப்பான ரோடக் ரோடு பகுதியை அடுத்த ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் எட்டாம் தளத்தில் இருந்தது.

ரோடக் ரோடு தொழிற்பேட்டைப் பகுதியில் அதன் ஒரு உற்பத்திப் பிரிவு. கிளையின் மூத்த நிர்வாகி சுந்தரமூர்த்தி. இன்று தன் அலுவலகத்துக்குப் போகாமல், ஹெட் ஆஃபிஸில் வந்து நின்றது அவரது சிவப்பு நிற ஹோண்டா கார்.

நொய்டா கிளை நிர்வாகி செந்தில்நாதனும்  சுந்தரமூர்த்திக்கு முன்னதாகவே ஆஜராகிவிட்டார்.

இரு சக்கர உதிரி பாகங்கள் தயாரிப்பு தான் அவர்கள் பேரண்ட் கம்பெனியின் தொழில். மின் வாகனங்களுக்குத் தான் எதிர்காலம் என்று உணர்ந்த கம்பெனியின்  தலைமை நிர்வாக அதிகாரி , தேவ் தத் அதற்கான முஸ்தீபுகளை கடந்த ஆண்டே துவங்கிவிட்டார்.

மிகுந்த பொறுமையும், நிர்வாக மேலாண்மையில் சிறந்தவரும் ஆன சுந்தரமூர்த்தியும், ஆர் & டீ யில் அனுபவம் மிக்க செந்தில்நாதனும் தான் அவரது இரட்டைக் குழல் துப்பாக்கிகள்.

நொய்டாவில் ஒரு உற்பத்திக் கிளை, தமிழ்நாட்டில் ஹோசூர் பகுதியில் ஒரு உற்பத்திக் கிளை தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டது.

இன்றைய மீட்டிங்கில் தேவ தத் என்ன சொல்லுவார் என்பது இருவருமே அறிந்தது தான். ஹோசூர் கிளைத் துவக்கப் பணிகளை இவர்கள் போய் முடுக்கம் கொடுக்க வேண்டும்.

தொழிற்பிரிவுக்குத் தேவையான அனுமதிகள் வாங்கப்பட்டுள்ளதா, சுற்றுசூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பத்திரம், அதனை செயல்படுத்துவதற்கான ஆயத்தம், மின்னேற்ற மையங்களுக்கான லோகேஷன்கள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை என எல்லாப் பொறுப்பையும் இருவரும் தோளில் ஏற்றுக் கொண்டு இரண்டு வாரங்களில் ஹோசூர் பயணிக்க வேண்டும்.

செந்தில்நாதனும், சுந்தரமூர்த்தியும் இன்னும் சற்று விரிவாக  திட்ட நுணுக்கங்களை ஆய்ந்து விட்டு, ‘ஹோசூர்ல நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்” என விடைபெற்றுக் கொண்டார்கள்.

                                        **************

 

பெங்களூர் வரை ஃப்ளைட், பிறகு கம்பெனி காரில்  ஹோசூர் வரை.

பிரதான பேருந்து நிலையம் அருகே கார்டினியா கிராண்ட் ஹோட்டலில் எக்சிகூயுடிவ் அறை.

ஹோசூர் கிளையின் பொறுப்பதிகாரி ஆனந்த் வெங்கடகிருஷ்ணன் வரவேற்று, ஷேமலாபங்கள் விசாரித்து, பிற்பகல் மூன்று மணிக்கு தொழிற்பேட்டை கிளையில் சந்திக்கலாம் என்று கூறிச் சென்றுவிட்டார்.

இதோ, சுந்தரமூர்த்தி, அறையின் பால்கனியில் இருந்து, தனக்குப் பரிச்சயமான ஹோசூரின் சாலைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

இதே மூர்த்தி, இதே ஹோசூரின் பேருந்து நிலையத்தில் ஒரு காலேஜ் பேக் முதுகில் தொங்க, மனசொடிந்து நின்று கொண்டிருந்தான்.

அவன் நண்பன் குமார் எப்படியும் பத்து மணிக்குள் வந்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.

சுரேஷ்குமாரும் அவனும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தார்கள்.

இருவருக்கும் விளையாட்டில் மிக ஆர்வம். உடற்பயிற்சி செய்வதற்காக கருக்கலில் எழுந்து சற்றே தொலைவில் இருந்த பெரும் மைதானத்துக்கு ஜாகிங் செய்தபடி இருவருமாக ஜோடி போட்டுக் கொண்டு வருவார்கள்.

இருவர் குடும்பமும் வசதி மிகச் சுமார் ரகம் தான். ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதற்குக் கூட ’எங்க வீட்டுப் பிள்ளை’ எம்ஜியார் போல “உண்ணாவிரதம் ஓங்குக” என்று போராடக்கூடிய நிலை.

பள்ளியின் கால்பந்து குழுவில் இடம் பிடிக்கும் ஆசை வந்தது… இருவருக்கும் தான்.

எஸ்.ஜே சார் விசிலுக்கு மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல இயங்குவார்கள்.

எல்லாப் பயிற்சிகளுக்கும் ‘இரு வல்லவர்களா’கத் தான் குமாரும் மூர்த்தியும் போனார்கள்.

குமாரை மட்டும் மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்தார் எஸ்.ஜே சார்.

உறுதியாக மறுத்துவிட்டான் குமார். மூர்த்தி இல்லா டீமில் தானும் இருக்கவில்லை என ஒரே ஆர்ப்பாட்டம்.

மொத்த பள்ளிக்கூடமே மூர்த்தியிடம் சமரசம் பேசியது.

குமார் பொன்னியம்மன் கோயிலில் சூடமேற்றி வேண்டினான்.

வேறொரு பையனுக்கு விஷக்காய்ச்சல் வரவே, மூர்த்தியை டீமில் நுழைத்தார் எஸ்.ஜே சார்.

இருவரும் சிறப்பாக விளையாடி டீமுக்குப் பெருமை சேர்த்தார்கள்.

அப்போதிருந்து “நானென்றால்… அது நானும் அவனும்”… என்று ஒரே மாதிரி டீ-ஷர்ட்கள், கையில் பேண்ட், ஹேர் ஸ்டைல்…

ஒரே மாதிரி …படிப்பு சுமார்… மதிப்பெண்கள் சுமார்… .

கேம்ப் ரோடு , பிரபல தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிகல் டிப்ளமா படிப்பில் இருவருமாகச் சேர்ந்தனர்.

அது வரை அவர்களது நட்பைச் சுமையாகக் கருதாத இருவர் குடும்பமும், அவர்கள் நட்பு, அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது என எண்ணத் தொடங்கினர்.

“போதும்டா, விளையாட்டும் ஊர் சுத்தறதும் ! சொன்னா கேக்காம இதுல சேந்துட்ட. என்ன வேல கிடைக்குமோ..?” என தினமும் வைது தீர்த்தார் குமாரின் அப்பா.

நண்பர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் விளையாடித் தீர்த்தார்கள்.

பிறகு மூன்று வருஷம் ஓரகடத்தில் ஒரே கம்பெனியில் அப்ரெண்டிஸ் ட்ரெயினிகளாக. அங்கேயே ரூம் எடுத்து தங்கினார்கள்.

மறக்க முடியவில்லை இன்று வரை அந்த நாட்களை எல்லாம் .

”எப்படி என்னை சீராட்டித் தாங்குவான் குமார் !” சுந்தரமூர்த்தியின் கன்னங்களில் கண்ணீர் திவலைகள்.

செந்தில்நாதனின் அழைப்பு, சுந்தரமூர்த்தியின் கவனத்தைத் திசை திருப்பியது.

மூன்று மணிக்கு சந்திப்பு.

                                           ******

சுந்தரமூர்த்தி நிர்வாக ரீதியில் ஆன எல்லா கோப்புகளையும் சரி பார்த்தார்.

செந்திலும் அவருமாக லித்தியம் மின்கலங்கள் தயாரிப்பு, மோட்டர்கள், கண்ட்ரோலர், மின்னேற்ற பேனல் ,டிஸ்ப்ளே பேனல், வியூ மிரர் என அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பாகத்துக்கான சிறப்பு அணுகுமுறை பற்றிக் கிளை பொறியாளர்களுடன் உரையாடினர். ஆனந்த் வெங்கடகிருஷ்ணன் யூனிட்டுக்கு சரியான சாய்ஸ் என மேலிடத்துக்குத் தகவல் அனுப்பினார்கள்.

 இரண்டு வாரங்கள் கடுமையான பணி, ஒப்பந்த புள்ளிகள் தொடங்கி… சிப்பந்திகளின் ஸ்னாக்ஸ் வரை, சப்ளை- டிமாண்ட் சங்கிலி உள்ளூரில் எப்படி உள்ளது, மார்க்கெட்டிங் பேக்ட்ராப்பில் கம்பெனியின் பங்கு … எல்லா விஷயத்தையும் அலசினார்கள்.

தங்கள் கிளை உயர்மட்ட பொறியாளர்களை, மேனேஜர்களை அழைத்து பயிற்சி வகுப்புகள் எடுக்கச் சொன்னார்கள்.

இத்தனைக்கும் நடுவில் மூர்த்தியின் மனசு தன் நண்பனை நினைத்து ஊசலாடிக் கொண்டு இருந்தது.

அவனை எல்லாம்…. இன்னும் ‘நண்பன்’ என்ற லேபில் கொடுக்கலாமா? துரோகிப் பய..!

அப்ரெண்டிஸ் ட்ரெய்னி என்ற பெயரில் உயிரை மட்டும் வைத்து விட்டு  சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கிய கம்பெனி, அங்கேயே நிரந்தர வேலை கிடைக்கும் என்று கல்லூரி குடுத்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கி, வெளியே துப்பிவிட்டது.

இளைத்துப் போய் சக்தி இல்லாமல் இருந்த பிள்ளைகளை குடும்பங்கள் நல்ல சாப்பாட்டைப் போட்டு, தேத்தியது.

சில நாட்கள் கழித்து, நண்பர்கள் இருவரும் வேறு வேலை தேட ஆரம்பிக்கும் போது, குமாரின் அப்பா ருத்ர தாண்டவம் ஆடினார். இந்தப் பக்கம்  மூர்த்தியின் அம்மா.

குமாரின் அப்பா அவனுக்கு அம்பத்தூர் பக்கத்தில், ஒரு அலுவலகத்தில்  ஒரு வேலை வாங்கித் தர முடிவு செய்தார். அவன் தான் கிளார்க், மேனஜர், ப்யூன் எல்லாம்.

சைக்கிள் உதிரி பாகங்கள் தயார் செய்யும் கம்பெனியின் ஆபீஸ்.

குமார் ப்ரொடக்‌ஷன் சைடு தான் போவேன் என்றான்.

மூர்த்தியும் நானும் ப்ளான் பண்ணியாச்சு என அவன் சொல்ல…வீட்டில் சண்டை.

மூர்த்திக்கு இன்னும் தர்மசங்கடம் ! அம்மா ஊர்க்காரங்க துபாயில ஒரு வேலை சொல்லி இருக்காங்க ! தெரிஞ்ச பொறுப்புள்ள ஆளு வேணுமாம்.

”இதப் பாருடா..! நீ மட்டும் துபாய் வேலையில சேந்திட்டனா, தங்கச்சிங்க கல்யாணத்தை சூப்பரா முடிச்சிடலாம்.”

“துபாயில வேலைன்னுதும் ஓட்டை பிரிச்சுகிட்டு பணம் கொட்டுமா ? போம்மா”

“ஆமாடா… ஊர்லயே தருவாங்க… நல்ல வரனும் அமையும் ! நிமிர்ந்துடுவோம்… யாரு கூப்பிட்டு வேலை தரா சொல்லு… கசக்குதோ உனக்கு?”

“அம்மா, நா மெக்கானிகல் வேலையா இருந்தா தான் போவேன்.”

“அது கணக்கு வழக்கு பாக்கற வேலை தான்… கொஞ்ச நாள் கழிச்சு நீயே பட்டறை வைக்கற அளவுக்கு ஆயிடுவ, போயிட்டு வாடா”

“குமாருக்கும் தருவாங்களா ?”

கையில் கிடைத்ததைத் தூக்கி அவன் மேல எறிந்தாள்.

“இங்க பாரு… நீ வருவேன்னு நா குப்பு மாமா கிட்ட சொல்லியாச்சு. இரண்டு பொண்ணுங்களையும் கரையேத்திடுவேண்டா.

நீ போவல்ல… நா தொங்கிடுவேன். அவ்வளவு தான்.”

அம்மா எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டா, ஆனா சொன்னா சொன்னது தான்

இருந்தாலும், குமாரிடம் இருந்து வந்த ஒரு போன் , “டேய், மூர்த்தி, நாளைக்கு காலேல ஹோசூர் மெயின் பஸ்ஸ்டாண்ட் வந்துரு. எட்டு மணிக்கு நா வந்துர்றேன்.  அங்க கண்டிப்பா வேல இருக்கு. . வா , நாளைக்குச் சொல்றேன்” கிளம்பி விட்டான் மூர்த்தி, தன் கல்லூரிப் பையோடு…

அன்று தான், இந்த ஹோசூர் பஸ் நிலையத்தில் நின்றான், கையில் ஆயிரம் ரூபாய் பணத்துடன்.

குமார் நம்பர் ஸ்விட்சு ஆஃப் .

பேருந்து நிலையத்தின் அருகில் கையேந்தி பவன்களிலேயே சாப்பிட்டான். குமாரை மிஸ் பண்ணி விடக் கூடாதே.

இரவில், பேருந்து நிலையத்திலேயே முடங்கினான்.

சிறிது நேரம் கழித்து அவனருகே இரு போதை ஆசாமிகள் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவனிடம் இருந்த மிச்ச பணத்தைப் பறித்தனர். அதில் ஒருவன் “பையில என்னடா வச்சிருக்க ?”என்றபடி துழாவி, செல்லையும் எடுத்துக் கொண்டான்.

மொபைலும் ,இருந்த பணமும் போச்சு.  ஐயோ , வீட்டுக்குப் போன் கூட பேச முடியாதே ? அப்போது தான் வீட்டு ஞாபகம் வந்தது அவனுக்கு.

அதுவரை, குமார் பற்றிய நினைப்பு தான் இருந்தது. அம்மா என்னா செய்யுறாங்களோ ?

கண்களில் கண்ணீர்..!

யாரோ தட்டி எழுப்பினார்கள்.

அது அந்த போதை ஆசாமிகள் தான்,கூடவே போலீஸ்.

 காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டான்.

”பேர் என்ன ?”

“மூர்த்தி”

“சுந்தர மூர்த்தின்னு போட்டிருக்கு. இதுவும் திருட்டு லைசென்ஸா?” இன்ஸ்பெக்டர்.

“ஸ்கூல் நேம் சுந்தரமூர்த்தி சார் “

இருவது வயது ஆகிவிட்டாலும், ஒரு சின்ன வட்டத்துக்குள் வளைய வந்தவன். மீண்டும் அழுகை.

குமாருக்காகக் காத்திருப்பதைச் சொன்னான்.

“சும்மா நடிக்காதடா !  இரண்டு பேரும் என்னடா ! அந்த மாறியா ? “

மூர்த்திக்கு அந்த “அந்த மாறியா ?” கேள்வியின் அர்த்தம் அப்போது புரியவில்லை.

“இத எங்கிருந்து திருடின ?” ஒரு சங்கிலியைக் காட்டி.

“இல்ல சார், நா திருடல்ல ”

அதற்குள் கான்ஸ்டபிள் வந்துவிட்டார். அவன் செல் அவர் கையில.

“சார், அம்மா வராங்களாம். சார், நேத்தி இவனுக ஒரு செயின் அடிச்சுருக்கானுங்க, சும்மா நம்மள சுத்த விட இந்த பையனைக் கோத்து விட்டுட்டானுங்க… “ என்று சொல்லியபடி செயினை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அம்மா வந்தாள். அவனை எதுவுமே திட்டவில்லை.

துபாய் வேலை பிடிக்கவில்லை என ஓடி வந்துவிட்டான் என்று சொன்னாள்.

கான்ஸ்டபிள் அம்மாவை, “வாங்கம்மா, இங்கன கடயில ஒரு டீ சாப்பிட்டு வந்துடலாம் “ என்றார்.

அம்மா திரும்பி வந்த போது, அவள் காதில் தோடு இல்லை.

திரும்பவும் ஹோசூர் பேருந்து நிலையம் !

“சாரிம்மா !”

“அது கிடக்கட்டும். இங்க ஹோசூர் வந்ததையோ, குறிப்பா போலிஸ்  ஸ்டேஷன் வந்ததையோ வீட்டுக்குப் போய் பேசக்கூடாது. இங்கயே எல்லாத்தையும் விட்டுரு. ”

”குமாரு இங்க வேலை கிடைக்கும்ன்னு சொன்னதால …”

“போதும்டா உன் குமாரு புராணம். அவன் ஒரு ஆளுன்னு, அம்மா சொல்றதக் கேக்காம வந்துட்ட. நேத்து நீ ரொம்ப நேரமா போன் பண்ணவே இல்லயேன்னு அவனுக்குப் போன் போட்டேன். போனும் எடுக்கல்ல குமார் வீட்டில் யாரும் இல்ல” என்றும் சொன்னாள்.

“இதப் பாரு… குப்பு மாமா ராத்திரி வராரு, உடனே துபாய் கிளம்பணும் புரிஞ்சுதா..! கேஸு இல்லாம இருக்க என் காது மூளியானது தான் மிச்சம்” என்றாள்.

அதன் பின் அம்மா பேசவே இல்லை.

அம்மா சொன்னபடி செய்தான். எட்டு செட் துணி, பேஸ்ட், சோப்பு, ஷேவிங் க்ரீம், இத்யாதி… பெட்டி ரெடி!

குமார் மட்டும் லைனில் வரவே இல்லை.

நம்பிய என்னை நட்டாத்தில விட்டு விட்டு போனவன்… எங்க இருக்கானோ ?

                                           **********

துபாயில் கடல் போல சொத்து அவன் முதலாளிக்கு. சிறப்பு உதவியாளனாக அவன்.

சுறுசுறுப்பு, பொறுமை, எளிமை , திறமை … அம்மா கடன் வாங்கிய செய்தி, அவன் இந்த வேலையில் தொடர வேண்டிய கட்டாயம் அவனை சிறந்த உழைப்பாளியாக மாற்றிவிட்டது.

மெக்கானிக் ஆக இருக்க வேண்டும் என்ற அவனது விருப்பத்தை உணர்ந்த முதலாளி, அவனை லேட்டரல் எண்ட்ரியில், ஆஃப் கேம்பஸாக பி.ஈ படிக்க ஏற்பாடு செய்தார்.  ஒரு டூவீலர் கம்பெனியில் பார்ட் டைம் சூப்ரவைசர் வேலையும்.

பத்தாண்டுகள் ஓடிவிட்டன.

இயந்திரம் போல வேலைகள்… இருந்தாலும் தனிமையின் பிடியில் இருக்கும் கணங்களில்…  குமார் என்ன செய்கிறான் என்ற கேள்வி தான் மனசை அரித்துக் கொண்டு இருக்கும்.

முதலாளிக்கு கிட்னி ஃபெயிலர் ஆகி, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு  முன்னரே, காலமாகி விட்டார்.  சுந்தரமூர்த்திக்கு, மும்பையில் ஒரு டூவீலர் கம்பெனிக்கு ரெகமண்ட் பண்ணி வேலை வாங்கிக் கொடுத்து விட்டார் அவர் மகன்.

 சுந்தரமூர்த்தி, துபாயில் பத்து வருஷம் எக்ஸ்பிரீயன்ஸ் கொண்ட சீனியர் மெக்கானிக்.

தன் ஊர் பெண்ணையே பார்த்து மணம் முடித்துக் கொண்டான். அவனுடைய கேரியர் கிராஃப் சட்டென உயரத்துக்குப் போய்விட்டது.  

மகிழ்ச்சியான வாழ்க்கை… மதிப்பான வேலை, இருந்தாலும் மூலாதாரத்துப் பாம்பாக, குமார் உள்ளே சுருட்டிக் கொண்டு கிடந்தான்.. கிடக்கிறான்…

கல்யாணம் நிச்சயித்த பின், லட்சுமியிடம் அவன் முதலில் பிரஸ்தாபித்தது குமார் புராணம் தான்.

இருவருமாக கடலை மிட்டாய் காக்காய் கடி கடித்துச் சாப்பிட்டது, மெரினாவில் நீச்சல் போட்டது, ரோகிணி, காசி , வெற்றி என்று தியேட்டர்கள் படையெடுப்பு …எல்லாம் சொல்லி விட்டான்.

தன்னை அவன் ஏமாற்றி விட்டதாக அழுதே விட்டான்.

“இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு இவ்வளவு நாளா அதப் பத்தியே யோசிச்சுகிட்டு இருக்கீங்களா.எத்தனை பெண்களை காதல்ங்கற பேர்ல ஏமாத்திகிட்டு இருக்காங்க. ஏன் என் ஃப்ரெண்ட் ஸ்வர்ணா, கல்யாணத்துக்கு முன்னாடி காலேஜ்மேட் ரமேஷோட லவ்வு, புருஷன் பொண்டாட்டி மாதிரி எல்லாமே முடிஞ்சு போச்சு. கர்ப்பமா கூட ஆயிட்டா. ரொம்ப சிக்கல், ஆனா பாருங்க, இரண்டு வருஷம் கழிச்சு, வேற ஊர்ப் பையனக் கட்டிகிட்டு சூப்பரா செட்டில் ஆயிட்டா.”

”எவ்வளவோ கதை இருக்கலாம் லட்சுமி, என் கதை தான என்னை பாதிக்குது.”

சைக்கிள் கடை ஓனர் பொண்ணைப் பாத்ததும், தன் சுரேஷ்குமார் மாறிவிட்டான் என்பதையும், ஸ்வர்ணா என்ற பெயரில் லட்சுமி சொன்ன கதை அவள் கதை தான் என்பதும் சுந்தரமூர்த்திக்குப் புரியப்போவதில்லை.

“ஹோசூரிலயே எல்லாத்தையும் விட்டுரு” அம்மாவின் குரல் காதில்.

”முடியல்லம்மா”

குமார் மீது மாறாத லயிப்பு. அவன் அன்பின் ஆழம் அவனுக்கு மட்டும் தான் சுமை.

ஆனந்த் வெங்கடகிருஷ்ணனை லோக்கல் சமூக நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுரை சொல்லிவிட்டு, மீண்டும் ஹோசூரை விட்டுக் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *