தசரதன்
காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை. இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை.
முரளி இந்த நிலையில் தான் இருந்தான். தன் மீது அளவுக்கு அதிகமான பாசத்தை பொழியும் அக்கா சிவகாமியையும், இவன் மேல் உள்ளப்பூர்வமான நேசத்தைக் கொண்டு கல்யாணக் கனவோடு இருக்கும் அக்கா மகள் செவ்வந்தியையும் தன் வாழ்வுக்கு வேண்டாதவர்களாகப் பாவித்து நடக்க வைத்தது அவனுக்குள்ளான காதல்.
மூவரும் ஒரே வீட்டில் வசிப்பதனால் தான் அருகில் இருப்பவர்கள் புளித்துப் போவதும் தூரத்தில் கனவாய், அதுவும் மனதுக்குள் காதலாய் இருப்பவர் தன் உலகமாகி விடுவதும் மனித வாழ்விற்கு சாபமோ என்னவோ? அந்த சாபமெனும் காதலில் கட்டுண்டுக் கிடந்தான் முரளி.
சிவகாமி தன் குடிசை வீட்டு வாசலில் அடுப்பில் கொதித்து ஆவி பறந்து கொண்டிருந்த இட்லிக் குண்டான இறக்கிக் கீழே வைத்தபோது வீட்டிலிருந்து வெளியில் வந்த முரளி, அக்காவிடம் எதுவும் பேசாமல் பூவரச மரத்திடியில் நிற்க வைத்திருந்த ஆட்டோவை நோக்கிப் போனான்.
“டேய் முரளி…. இட்லி சாப்பிட்டு போப்பா…..” தன் தம்பியை பார்த்து குரல் கொடுத்தாள் சிவசாமி.
“வேணாங்கா….”
“வெறும் வயித்தோடவா போவே..?”
“ஒரு சவாரி இருக்கு…. கொஞ்சம் சுருங்கப் போணும்…” சொல்லிக் கொண்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினான்.
“ஏய் செவ்வந்தி….” வீட்டுக்குள் இருந்த தன் மகளுக்கு குரல் கொடுத்தாள் சிவகாமி.
“என்னம்மா?….” என்றபடி வாசலில் வந்து நின்றாள் பதினெட்டு வயதான செவ்வந்தி.
“ஏண்டி….. உன் மாமன்காரன் காலையிலே சவாரிக்கு போறானே அவனை சாப்பிட்டு போக சொல்றது தானே…..?”
“சொன்னேன்ம்மா…. டிபன் எதுவும் வேணாம்னு சொல்லிட்டு காபி மட்டும் குடிச்சிட்டு போகுது…..” என்றாள் செவ்வந்தி.
சின்ன வயதிலிருந்தே தன் மாமனான முரளி மீது நேசத்தைக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. அவன் எப்போதும் அவளிடம் சிடுமூஞ்சாக நடந்துக் கொண்டாலும், அதனால் அவள் எந்த ஒரு மன வருத்தமும் இது நாள் வரை கொண்டதில்லை. ஒருவர் மீது உயிருக்கு உயிரான அன்பும், நேசமும் கொண்டிருக்கும் மனம் எதையும் தாங்கிப் போவதாகத் தானே இருக்கும். செவ்வந்தியும் அப்படித்தான் இருந்தாள்.
தம் மாமனுக்காகவே தான் பிறப்பு எடுத்தவளைப் போல் அவளுக்குள் ஒரு விதை பிஞ்சு வயதிலேயே ஊன்றி இப்போது அதை விருட்சமாக வளர்ந்து விட்டிருந்தது.
சிவகாமியிடம் வாடிக்கையாக இட்லி வாங்கி சாப்பிட்டு வரும் தங்கப்பன் தனது திண்ணையில் உட்கார்ந்தான். இவன் பஸ்ஸ்டாண்டில் முறுக்கு விற்பவன்.
“சிவகாமியம்மா…. நான் சொல்ற விசயத்தை மனசுல போட்டு வச்சுக்கோ… விசயம் என்னன்னா சரோஜா பஸ் சர்வீஸ் முதலாளி பொண்ணுக்கும், உன் தம்பி முரளிக்கும் பழக்கம் இருக்கு….” என்று தங்கப்பன் சொன்னவுடன் சிவகாமியின் மனம் துக்கத்தில் அடைத்துக் கொண்டது. உடனே அவள் எட்டி அவனின் வாயை பட்டென்று அடைத்து விட்டு,….
“டேய் தங்கப்பா…. மெதுவா பேசுடா… என் பொண்ணு காதுல விழந்திடப் போவுது. இவ அவன் மேல உசுரையே வச்சிருக்கா… இந்த விஷயம் அவ காதுல விழுந்து மனசு ஒடைஞ்சு ஏதாவது தப்பானக் காரியத்தை பண்ணி தொலைச்சுக்க போறா…”
சிவகாமி படபடப்புடன் சொன்னாள்.
தங்கப்பன் குரலை தாழ்த்தி கிசுகிசுத்த குரலில் தொடர்ந்தான்.
“சிவகாமியம்மா…. உன் பொண்ணு செவ்வந்தி உன் தம்பி மேல எம்புட்டு அன்பையும் பாசத்தையும் வச்சிருக்கிறதால தான் மனசு தாங்க முடியாம சொல்லிட்டேன்.. இங்கேரும்மா.. உன் தம்பியை இப்பவே கண்டிச்சு வை. பெரிய இடத்து பொண்ணு ரூட்டில் போறான். படிக்கிற புள்ள வேற… நாளைக்கு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது…” என்று தங்கப்பன் சொல்ல..
“நான் ஏதாவது சொன்னா அதைக் கேட்கிறவனாவா அவன் இருக்கான். நான் என்ன பண்ணுவேன் மகமாயி…” பெருமூச்சு விட்டுக் கொண்டாள் சிவகாமி.
இட்லி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தங்கப்பன்.
முரளியின் காதல் விவகாரத்தை கேட்டு தலையில் இடி விழுந்தவளைப் போல் உட்கார்ந்து விட்டாள் சிவகாமி.
முரளி எப்போதும் டிப்டாப்பாக டிரஸ் செய்துக் கொண்டு ஆட்டோ சவாரிக்கு வந்து ஆட்டோ ஸ்டாண்டில் நிற்பான். சவாரிக்கு கிளம்பும் போது மட்டும் காக்கிச்சட்டையை வேண்டா வெறுப்பாகத்தான் மாட்டிக் கொண்டு போவான்.
ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்தான் பஸ் ஸ்டாண்ட் இருந்தது. அங்கே பள்ளத்தூருக்கு போகும் ஒரே ஒரு பஸ் வரும். சில நாளில் ஏதேனும் கோளாறாகி வராமலும் போகும். அந்தச் சமயத்தில் பள்ளத்தூருக்குப் போக எந்த ஆட்டோக்காரர்களும் வரமாட்டார்கள். ஏனென்றால் அந்த ஊருக்கு போகும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் ஆட்டோ பழுதாகிவிடும் என்று சொல்லி நழுவிக் கொள்வார்கள். ஆனால் மாணவ மாணவர்களின் பரிதாபத்தை நினைத்து முரளி தான் பள்ளத்தூருக்கு சவாரி போவான். அப்போது வடிவு என்ற மாணவியிடம் பேச்சுவார்த்தையில் முரளிக்கு பழக்கம் ஏற்பட்டு, இப்போது அது காதலாகி வந்து நிற்கிறது.
இப்போது வடிவு பிளஸ் டூ படிக்கிறாள். பஸ்ஸில் போவதில்லை. அவர்கள் உறவுக்காரர் ஒருவர் அவளை பஜாஜ் மோட்டார் வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்.
முரளி, வடிவை உயிருக்குயிராய் காதலித்துக் கொண்டிருந்தான். தன் அக்கா மகள் செவ்வந்தி தன் மேல் உயிராய் இருக்கிறாள் என்பதை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
முரளிக்கு பத்து வயது இருக்கும் போது அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு அவனின் பெற்றோர்கள் இறந்துப் போய் அவன் அனாதையாக நின்றப் போது அக்கா சிவகாமி தான் அவனைத் தன்னுடன் அழைத்துப் வந்து படிக்க வைக்க, அவனுக்குப் படிப்பு ஏறாமல் போனாலும் அவனை நல்ல மனிதாக உருவாக்கியிருந்தாள்.
சிறிது சிறிதாக சீட்டுக்கட்டு சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு அவனுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தாள். அதையெல்லாம் எதையும் நினைத்துப் பார்க்காமல் வடிவு தான் தன் வாழ்க்கை என்ற எண்ணத்தில், அந்த காதலின் மயக்கத்தில் மிதந்து கொண்டிருந்தான் முரளி. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அவனின் நண்பர்களில் சிலர் அவனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும் அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை, காதல் அவன் கண்களை மட்டுமல்ல மூளையையும் மழுங்கடித்திருந்தது.
முரளியிடம் நெருங்கிப் பழகி வந்த கேசவன் என்ற நண்பன் “முரளி…. இந்த காலத்தில் பெத்தவங்களைப் பிள்ளைங்க சரியா பாக்குறது இல்ல. உங்கக்கா உன்னை எப்படியெல்லாம் பார்த்துக் காப்பாத்திருக்கு. அது மனசுல நெனச்சிருக்கிற பெரிய விஷயமே செவ்வந்திக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு தான். உங்க அக்காவுக்கு இருக்கிற இந்த ஆசையை பாழாக்கிடாத….” என்று சொன்னான்.
அதற்கு முரளியோ “கேசவா… கல்யாணங்கிறது அவங்கவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல யாரும் தலையிட முடியாது. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட தான் என்னால வாழ முடியும்… எங்கக்கா விரும்புதுங்கிறதுக்காக விருப்பமில்லாம நான் எப்படி செவ்வந்தி கூட குடும்பம் நடத்த முடியும்” என்றான். அத்துடன் கேசவன் இதைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டான்.
இப்போதெல்லாம் பள்ளத்தூருக்கு ஷேர் ஆட்டோக்கள் நிறைய போய் வருவதால் வடிவு பஸ் நிலையத்திற்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் வந்து முரளியை ரகசியமாக சந்தித்து விட்டுப் போகிறவளாக இருந்தாள்.
ஒருநாள் இரவு முரளி ஆட்டோ சவாரியை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பும்போது ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வந்து முரளியின் ஆட்டோவை வழிமறித்தது. காரிலிருந்து மூன்று, நான்கு ஆட்கள் திபு திபு என்று மின்னல் வேகத்தில் இறங்கி வந்து முரளியை தாறுமாறாக தாக்கி, அவனைக் குண்டுக் கட்டாக தூக்கி காரில் போட்டுக்கொண்டு புயல் வேகத்தில் சென்றார்கள்.
கார் எங்கேயோ போய்க்கொண்டே இருந்தது. காருக்குள்ளேயே முரளியை பேச்சு மூச்சில்லாமல் அடித்து அவனை ரத்த கோலமாய் ஆக்கினார்கள். அவன் செத்துப் போய் விட்டான் என்று நினைத்து அவர்கள் ஒரு காட்டுபாதையில் காரை நிறுத்தி முரளியை கீழே தள்ளிவிட்டு பறந்து விட்டார்கள்.
செவ்வந்தி, முரளி மேல் கொண்டிருந்த உள்ளபூர்வமான நேசத்தினாலோ ஆத்மார்த்தமான அன்பினாலோ தெரியவில்லை யாரோ ஒரு புண்ணியவான் விடியற்காலையில் அந்த காட்டுப்பாதையின் வழியாக வரும்போது ரத்த கோலமாய் இருந்த முரளியை தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டான். மூன்று நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துக் கொண்டான் முரளி.
ஆனால் சுயநினைவு அவனுக்கு சுத்தமாய் போய்விட்டது. பேச்சும் வரவில்லை. சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின், நடக்க கொஞ்சம் தெம்பு வந்த போது ஒருநாள் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டான்.
அவனும் எங்கெங்கோ அலைந்து திரிந்து சுவாமி விவேகானந்தர் குருகுலத்தில் இருக்கும் அனாதைகளோடு ஒரு அனாதையாக போய் சேர்ந்தான். வயிற்றுப் பிழைப்புக்காக அங்கே சில வேலைகளை செய்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.
சில மாதங்கள் சென்றன. அவனுள் கொஞ்சம் மாற்றம் வந்தது. தான் எப்படி இப்படி ஆனோம் என யோசிக்க ஆரம்பித்தான். ஏன் இங்கு வந்தோம்..? இப்ப நம்ம எந்த ஊரில் இருக்கிறோம் என்பதும் அவனுக்கு தெரியவில்லை. மறுபிறவி எடுத்ததைப் போல் உணர்ந்தான். தான் பிழைத்ததே தெய்வச் செயல் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.
மருத்துவமனையில் நடந்த சிகிச்சையில் உதிர்ந்துபோன அவனின் தலைமுடி மறுபடியும் வளரவே இல்லை. முன்வரிசை பற்களில் கொட்டியது போக ஒன்றிரண்டு மிச்சம் இருந்தது. வாயில் தாடை கோணி போய்விட்டது.
குருகுலத்தில் நடக்கும் பிரார்த்தனையில் முரளி தினந்தோறும் பங்கு கொண்டு வரும் போது அவன் மனம் ஆழ்ந்த தியானத்திலும் அமைதியிலும் மூழ்கியது. நாட்கள் செல்ல செல்ல அவனுக்கு நல்ல சுயநினைவு திரும்பியது. சிவகாமி, செவ்வந்தி, நண்பர்கள், ஊர் ஜனங்கள் எல்லாரும் ஒவ்வொன்றாய் ஞாபகத்திற்கு வந்தனர்.
கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் குருகுலத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லி விட்டுத் தன் அக்காவைப் பார்க்க ஊருக்குக் கிளம்பினான் முரளி.
தன் ஊரின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு, அதை வழியெங்கும் பலரிடம் விசாரித்துபடி நடந்து, நடந்து மறுநாள் விடியப் போகும் நேரத்தில் தன் ஊரின் மண்ணை மிதித்தான் முரளி.
தான் நடந்து, ஆட்டோ ஓட்டித் திரிந்த தெருவில் நடந்து போகும் போது அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. மனம் வெறுத்துப் போனது. நாந்தான் முரளி எனக் கத்த வேண்டும் போலிருந்தது.
தன் அக்காவின் வீட்டைப் பார்த்ததும் முரளியின் மனம் பூரித்துப் போனது.
வேகமாக நடந்து போய் வீட்டு வாசலை அடைந்தான். கடையிலிருந்து வந்து கொண்டிருந்த சிவகாமி, “யாரப்பா..?” என்று குரல் கொடுக்க, முரளி திரும்பித் தன் அக்காவை பார்த்தான்.
அவனை ஏறெடுத்துப் பார்த்த சிவகாமி ஆச்சரியத்திற்கு புருவம் சுருக்கி “அடேய்… முரளி… ஏம்முரளியா இது…? அய்யய்யோ… தெயவமே… என்னடா இது கோலம்..?” எனக் கத்தியபடி தனது மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். “எங்கடா போனே..? உன்னயத் தேடாத இடம் பாக்கியில்லை… நினைக்காத நாளும் ஒண்ணுமில்ல” என்றபடி அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.
அம்மாவின் அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் இருந்து செவ்வந்தி பதறி கொண்டு ஓடி வந்தாள்.
“அடியேய் செவ்வந்தி…. உன் மாமனோட கோலத்தை பாருடி…” அழுதுபடியே “உனக்கு என்னப்பா ஆச்சு? யாரு உன்னை என்ன பண்ணாங்க….? இத்தனை நாளா எங்க கிடந்த ராசா….” என்று கத்தியபடி முரளியை மடியில் போட்டு அவன் முகத்தை வருடினாள் சிவகாமி.
முரளியை பார்த்ததும் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது செவ்வந்திக்கு.
ஊர் ஜனங்கள் வாசலில் கூடி முரளியை வினோதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன் அக்காவையும் செவ்வந்தியையும் கண்கள் கலங்கப் பார்த்தபடி ஒடுங்கிப் போன உருவமாய் பரிதாபமாய் நின்றிருந்தான் முரளி.
செவ்வந்தியும், சிவகாமியும் அவனை ஆளுக்கு ஒரு பக்கமாக அரவணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
இப்போது ஒரு கந்தல் துணியை போல் ஒடுங்கி ஒரு முதிர்ந்த கிழவனின் தோற்றம் உடையவனாக இருக்கும் முரளியை பார்த்து கூட செவ்வந்திக்கு அவன் மீது இருந்த உள்ளபூர்வமான நேசம் கொஞ்சமும் குறையவில்லை.
தன் மாமன் நிச்சயம் ஒரு நாள் தன்னை தேடி வருவான் என்று அவளின் ஆத்மார்த்தமான நம்பிக்கையும் தோற்றுப் போகவில்லை.
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment on “சிறுகதை : உனக்கே உயிரானேன்”
venkatnagaraj
நல்லதொரு சிறுகதை. காதல் மீதான இரண்டு வித பார்வை - முரளியுடைய காதல் வீழ்ந்தாலும், செவ்வந்தியின் காதல் ஜெயித்ததில் மகிழ்ச்சி - வெங்கட் நாகராஜ், புது தில்லி.