(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 6
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார்.
நடப்பது:
ரெத்தினத்தை சற்றே தலை சாய்த்துக் கூர்ந்து பார்த்தார் சுகுமாரன்.
“நா…நா… ன் மட்டுந்தான்…” மீண்டும் சொன்னவனுக்கு முகமெல்லாம் குப்பென வியர்த்தது.
“பொய் சொன்னே கொன்னேபுடுவேன்… உன்னோட யார் இருந்தா…?”
“ச…சத்தியமா…. யா… யா…ரு…மே இல்லை சார்… ” அவனுக்கு போதை சுத்தமாக இறங்கியிருந்தது.
“உனக்கு குடும்பம் இருக்கா..?”
“இ… இருக்கு சார்…”
“ம்… எங்கே ஊட்டியிலதானா?”
“இல்ல மதுரைக்குப் பக்கம்…”
“இங்கேதான் இருப்பியா… ஊருகுப் போவியா…?”
“மூணு மாசத்துக்கு ஒருக்கா போவேன்…”
“சரி… எப்ப பிளான் பண்ணுனே… இதை எத்தனை பேர் சேர்ந்து பண்ணுனீங்க?” சுகுமாரன் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.
“என்ன சார்…. திரும்பத் திரும்ப நாந்தான் கொன்னேன்னே பேசுறீங்க… எனக்கு படியளந்த தெய்வத்தைக் கொல்லுவேனா..? பாண்டியய்யா மேல சத்தியமா காலையில லதாப்பொண்ணு கத்தும்போதுதான் கொலை நடந்ததே எனக்குத் தெரியும்…”
“சரி… நீ செய்யலை… ஒத்துக்கிறேன்…. ஆனா நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா மவனே அப்பவே உன்னை எண்கவுன்டர்ல போட்டுடுவேன்…. பாத்துக்க…”
பதில் பேசாமல் எச்சில் விழுங்கினான்.
அப்போது ஒரு இளைஞனும் யுவதியும் கான்ஸ்டபிள் ஆறுமுகத்துடன் உள்ளே வந்தார்கள்.
“நீ ஓரமா நில்லு…” என ரெத்தினத்தை ஓரங்கட்டியவர், அவர்களை “உக்காருங்க” என்று சொல்லி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்தார்.
“இன்ஸ்பெக்டர் ஐ ஆம் வருண், இது என்னோட சிஸ்டர் தர்ஷிகா” என்றபடி அவரிடம் கை நீட்டிய அந்த இளைஞன், ரெத்தினத்தினத்தைப் பார்த்து “என்ன ரெத்தினண்ணே… நீங்கள்லாம் இருந்தும் இப்படி…” என்றான் கலங்கிய கண்களோடு.
“தம்பி… இப்படி நடக்கும்ன்னு நினைக்கலையே… இங்க ஐயாவுக்கு எதிரியின்னு யாருமில்லையே” எனக் கண் கலங்கியபடி சொல்லிக் கொண்டே முன்னே வந்தவன் சுகுமாரனின் முறைப்புக்குச் சற்று ஒதுங்கி நின்றான்.
“நீங்க உக்காருங்க… ” என்று உட்காராமல் நின்றவர்களைப் பார்த்து மீண்டும் சொன்னார் சுகுமாரன். இருவரும் அமர்ந்தார்கள்.
இருவரையும் நன்றாகப் பார்த்தார்.
தர்ஷிகா இருக்கையின் நுனியில் ஒரு படபடப்போடு அமர்ந்திருந்தாள். அவள் பேருக்கு ஏற்றார் போல் ரொம்ப அழகாக இருந்தாள். உடம்பை நயன்தாரா போல் சிக்கென்று வைத்திருந்தாள். அவளின் எள்ளுப்பூ நாசி அழுதழுது கைகளால் தேய்த்ததில் சிவந்து போயிருந்தது. அழகான மீன் கண்கள் சிவந்து போய் தழும்பும் நீரோடு அலைபாய்ந்தன.
அவள் மீதிருந்த கண்களை வேறு இடம் மாற்ற சிரமப்பட்டார். நான் இராமநாதபுரத்துக்காரியாக்கும் எனக் கவிதா கண்ணில் வந்து மறைய மீண்டும் வருண் பக்கம் பார்வையைத் திருப்பினார்
அவன் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் போல இருந்தான். ஆனால் நல்ல சிகப்பு. மீசையை அழகாக ட்ரீம் பண்ணி விட்டிருந்தான். முகம் மாசுமருபற்று இருந்தது.
“ம்… சொல்லுங்க வருண்… அப்பாவுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா..?”
“எதிரிங்கன்னு யாரும் இல்லை சார்… எல்லாருக்குமே நல்லதுதான் செய்வார்… எப்படி… இப்படின்னு… புரியலை சார்” நெற்றிப் பொட்டைத் தேய்த்தான்.
“எதாவது பிஸினஸ் மோட்டிவ்..?”
“சான்ஸே இல்லை சார்… அப்பாவுக்குப் பிஸினஸ்ல பார்ட்னர்ஸ்ன்னு யாரும் இல்லை… எல்லாமே இண்டிவிசுவல் பிஸினஸ்தான்… தொழில்ல கூட்டு சரியா வராதுன்னு அடிக்கடி சொல்வார்.”
“அப்பச் சொத்துக்காக..?”
“அப்பாவோட பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லாம் இவரை விட வசதியானவங்க சார். எல்லாருக்கும் பெரிய பெரிய பிஸ்னஸ் இருக்கு. அதுபோக எங்க தாத்தாவோட சொத்து ரொம்ப அதிகமெல்லாம் இல்லை. எல்லாருமே அவங்கவங்க உழைப்புல சேர்த்த சொத்துத்தான். சொத்துக்காக கொல்ல வேண்டிய அவசியமில்லை.”
“சொத்துக்காக வேற யாரும்…?”
“நோ சான்ஸ் சார்…”
“சரி… அம்மா சைடுல..?” என்றபடி தர்ஷிகவைப் பார்த்தார்.
அவளோ கன்னத்தில் வழிந்த கண்ணீரை கர்ச்சிபால் துடைத்துக் கொண்டு படபடப்போடு அமர்ந்திருந்தாள். அவள் போட்டிருந்த வெள்ளை டீ சர்ட்டின் முன்பக்கம் ‘Fresh’ என எழுதியிருந்தது.
பார்வையை ரெத்தினம் பக்கம் நகர்த்தி, மீண்டும் வருணுக்கு வந்தார்.
வருண் மௌனமாக அமர்ந்திருக்க, “என்ன அம்மா இறந்துட்டாங்களா? சாரி வருண்” என்றார்.
“இல்ல சார்…. அவங்க இருக்காங்க…”
“இல்லைன்னு கேள்விப்பட்டேன்…”
“எங்க கூட இல்லை… அவங்க கூட எங்களுக்கு டச்சும் இல்லை… சொல்லப்போனா அவங்களை நாங்க மறந்துட்டோம்…” என்றவன் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தான்.
“அவங்க எங்க இருக்காங்க…?”
வருண் பதில் பேசாமல் தர்ஷிகாவைப் பார்த்தான்.
அவளோ தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.