ஹேமா
சாலையோர வியாபாரிகள்
சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள் அகற்றப் படுவதை நாம் பார்த்திருப்போம். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற எண்ணமும் கூடவே தோன்றும். ஏன் இவர்கள் சாலையோரத்தில் கடை வைத்திருக்கிறார்கள்? பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதல்லவா என்று கூட புரியாத வயதில் யோசித்ததுண்டு
எல்லோராலும் வியாபார கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ வியாபாரம் செய்துவியலாது அல்லவா. பெரிய முதலீடு செய்ய இயலாத எளிய மக்களின் வாழ்வாதாரம் இதுபோன்ற சாலையோர கடைகள் என்பதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காட்சி:1
அப்பா ரொம்ப பசிக்குது.
இருடா கொஞ்சம் மழை ஓய்ந்த பிறகு ரொட்டியாவது வாங்கித்தரேன். இந்த பேய் மழை விட மாட்டேங்குது. மழை நின்னாதான் கடையைத் திறந்து 4 ரூபா சம்பாதிக்க முடியும்.
அப்பா காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்கு.
கொஞ்சம் பொறுத்துக்க ராசா.
‘வேலையும் இல்லாமல் கைல காசு இல்லாம வாழ கூடாதுடா சாமி’ தனக்குள்ளேயே முனகிக்கொண்டார் அழகிரிசாமி. வருடாவருடம் மழைக் காலத்தில் இப்படி ஒரு நெருக்கடி வரும். இந்த வருடம் அது கூடுதல். மனைவியின் சமீபத்திய இழப்பு, தனக்கு ஏற்பட்ட விபத்து, மகனின் உடல்நிலை அதோடு தொடர்ந்து பெய்யும் மழை, வியாபாரத்துக்கு திரும்ப முடியாத சூழல் என்று நிலைமை மோசமாக உள்ளது. சென்னை டிநகரில் சாலையோரத்தில் வளையல், பொட்டு என்று பிளாட்ஃபாரக் கடை வைத்திருப்பவர்தான் அழகர்சாமி. தார்ப்பாயில் சுற்றி எல்லா பொருட்களும் வீட்டு மூலையில் சில நாட்களாக தூங்கிக் கொண்டிருக்கின்றன. பனகல் பார்க் சாலை முழுவதும் மழை நீரால் நிரம்பி இருக்கிறது. இன்னும் ஒரு வார காலம் மழை நீடிக்கும் என்று தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் விபத்தில் சிக்கிய உடைந்த கால்களோடு வாசலில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி.
காட்சி2 :
டேய் அப்பாவை ஸ்டேஷன்ல புடிச்சிட்டு போயிட்டாங்க
என்னடா ஆச்சு
போலீஸ்காரங்க கடையிலயிருந்த மீனெல்லாம் எடுத்து ரோட்ல போட்டுடானுங்க. கடையையும் அடிச்சு ஒடச்சிட்டானுங்க. அப்பாவையும் இழுத்துட்டு போயிருட்டானுங்க. அம்மா ரோட்ல உக்காந்து அழுதுட்டு இருக்கு.
நீ போய் சீக்கிரம் பாரு. நான் அப்பாவை கூட்டிட்டு வரேன்.
அம்மா, நீ எழுந்து வா. இங்க ரோட்ல ஒக்காந்து என்னாப் பண்றதுக்கு?
ஐயோ ஐயோ ஐயோ என் மீனெல்லாம் போச்சே. நாங்க இன்னைக்கு சாப்பாட்டுக்கு மண்ணையா அள்ளி சாப்புட்றது. எப்பயும் வெக்கற எடத்துலதானடா கடை வெச்சிருக்கோம். திடீர்னு இவனுங்களுக்கு வந்திரும். ஏழை பாழைகளோட வயித்துல அடிப்பானுங்க. அந்த ஆளை வேற புடிச்சிட்டு போயிட்டானுங்க. நான் என்ன செய்வேன் ஐயோ கடவுளே.
ஒரு பக்கம் போலிஸ்காரங்க தொல்லைனா இன்னொரு பக்கம் ரவுடிங்க தொல்லை. அவனுங்களுக்கு படியளந்தாதான் இங்க வாழ முடியும். இப்படி ரோட்டுல நிர்கதியா நிக்கவச்சட்டானுங்களே…ஐயோ அம்மா.
இந்த சம்பவம் சமீபத்தில் செய்தியில் பார்த்த சம்பவத்தை ஒத்ததாக இருப்பது தற்செயலானதே. இதைப்போன்று சாலையோர வியாபாரிகள் தினம்தினம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாலையோர வியாபாரம் சட்டப்பூர்வமானதா? சட்டபூர்வமாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தொழிலாளிகள் இவ்வளவு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் போன்ற கேள்விகளை தொடர்ந்து சென்றால் சில விளக்கங்கள் கிடைக்கின்றன.
சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமை என்று 1789 ல் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. சாலை நடைபாதை நடப்பதற்கு மட்டுமல்லாது சாலையோர வியாபாரம் செய்யவும் பொது மக்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் தொகையில் 2.5 சதவிகித மக்கள் சாலையோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். 2014 இல் சாலையோர வியாபாரிகள் சட்டம் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர முறைப்படுத்தல் சட்டம் உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் சட்டமாக அமுலிலிருந்தும் ஏன் சாலையோர வியாபாரிகள் திடீரென்று அவ்விடத்திலிருந்து காவல் அதிகாரிகளாலோ உள்ளாட்சி அதிகாரிகளாலோ துரத்தப்படுகிறார்கள் என்பதுதான் எஞ்சி நிற்கும் கேள்வி.
இந்தியாவில் மட்டும் 9 கோடி பேர் சாலை வியாபாரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் 5 லட்சம் பேர் என்கிறது கணக்கெடுப்பு. இதில் பேருந்து நிலையம், கோவில் திருவிழாக்கள், வாரச் சந்தைகள் என்று எல்லாமும் அடங்கும்.
சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வேலை கிடைக்காத இளைஞர்கள் என பலரும் சாலையோர வியாபாரங்களைச் செய்கின்றனர். சட்டத்தால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்து விடாது என்பதற்கு சாலையோர வியாபாரிகள் சட்டம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு எனலாம். சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை குழுவை அமைத்து அவர்கள் பிரச்சனைகளைப் பரிசீலித்து அதே இடத்திலோ அல்லது மாற்று இடத்தில் அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டிய நகராட்சி, மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளே அத்துமீறி சில இடங்களில் நடந்து கொள்கிறார்கள். சாலையோரப் பொருட்களை சாலைகளில் போடுவது, வியாபாரிகளைத் தாக்குவது, பொய் புகார்களை அவர்கள் மேல் கொடுப்பது என்று பல்வேறு அத்துமீறல்கள் சாலையோர வியாபாரிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது.
தீண்டாமையை சட்டத்தால் மட்டும் ஒழித்துவிட முடியவில்லை. பெண்ணடிமைத்தனத்தை சட்டத்தால் மட்டும் அழித்துவிட முடியவில்லை. சட்டம் மிகவும் பலம் பொருந்திய ஒரு கருவி. ஆனால் சமூக மாற்றம் என்பதும் மிகவும் முக்கியமானது. நாம் சமூகமாக செய்யும் பங்களிப்புதான் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது.
கொச்சி வைட்டில்லாவின் நடைபாதையில் உணவுக் கடை வைத்துள்ள பினாய் சேட்டனுடன் நடந்த ஒரு உரையாடல்.
எத்தனை வருடங்களாக கடை வச்சிருக்கீங்க?
நான் பிறந்தது இந்த ஊரில்தான். கடந்த நாலு வருஷமா கடை வெச்சிருக்கேன். வியாபாரம் ஓரளவு போகும். இட்லி, தோசை, பரோட்டா, சால்னா, சிக்கன் அப்டினு இரவு உணவு மட்டும்.
மழை காலத்துல வியாபாரம் எப்படி இருக்கு?
ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை நாலு மாசம் பிரச்சினையில்லை. மே, ஜூனும் பரவாயில்லை. மீதி ஆறு மாசம் நல்ல மழை இருக்கும். நான் ஒரு தார்ப்பாய் மேல போட்டு தள்ளுவண்டியில கடை நடத்துறேன். சாதாரண மழைனா பிரச்சினையில்ல. ரொம்ப மழைனா வியாபாரம் செய்ய முடியாது. மழை நாளில் கட்டிட வேலையும் இருக்காது. லாட்டரி சீட்டு விக்க எப்பவாது போவேன். ஆலுவால இருந்து விறகு கொண்டு வருவாங்க. அதை உடைக்கப் போவேன். அப்படி கிடைக்கிற எல்லா வேலையும் செய்வேன்.
உங்களுக்கு செயற்குழு இருக்கே உங்களுக்கு தெரியுமா?
ஆமா ஒரு அண்ணன் சொன்னாரு செயற்குழு. உறுப்பினராக இருக்கிறவங்களுக்கும் பெருசா எதுவும் உதவி கிடைச்ச மாதிரி தெரியல. நான் அந்தக் குழுவில இல்ல. எப்படினாலும் போலீஸ்காரர்களையும் கவனிக்கனும். இல்லன்னா பிரச்சினையாயிடும்.
உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன்
மனைவியும் ஒரு மகனும் இருக்காங்க. மனைவி என்கூட வேலைக்கு ஒத்தாசைக்கு வருவாங்க. மகன் ஒன்னாம் வகுப்பு படிக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளா ஆகிறக்குள்ள ஒரு சொந்த கடை போட்டுடனும். அதான் என் ஆசை. மழை வந்தாலும் வெயிலடிச்சாலும் பிரச்சனை இல்லாமல் வியாபாரத்தை பார்க்கணும்.
முகம் நிறைந்த மலர்ச்சியுடன் தன் உரையாடலை முடித்துக் கொண்டார் சேட்டன் பினாய்.
எளிய வியாபாரிகளுக்கு தேவையான செயற்குழு திட்டங்களை வழங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவது நம் அரசின் அரசுப் பணியாளர்களின் முக்கியமான கடமை. அந்த கடமை சரியாக ஆற்றப்படாத போதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் எழுகிறது.
எளிய மனிதர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
One comment on “கதையல்ல வாழ்வு – 9 “சாலையோர வியாபாரிகள்””
galaxybooks
Good Read