ஜெஸிலா பானு
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ”மகிழ்ச்சி எங்கிருந்து வருது தெரியுமா?” இதையே நீங்கள் வடிவேல் காமெடியில் வர ’இசை எங்கிருந்து வருது தெரியுமா?’ தொனியில் வாசித்துப் பாருங்கள் தன்னால் சிரிப்பு வரும். சிரித்தீர்களா? இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அப்படிதானே? இப்போதுதானே புன்முறுவல் தந்தீர்கள், அப்போது அதை நான் மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்ள முடியாதா? அதானே, உங்கள் மகிழ்ச்சிக்கு நான் எப்படி உத்திரவாதம் தர இயலும்? ஆனால் இந்தக் கட்டுரையை நான் எழுதி முடித்தால் எனக்கு மனநிறைவினால் வெற்றியினால் மகிழ்ச்சி கிடைக்கும், வெற்றியில்தான் மகிழ்ச்சியிருக்கிறதா? அல்லது நான் மகிழ்ச்சியாக இருந்ததால் வெற்றி கிடைத்ததா?
இப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பயிற்சி தேவைப்படுகிறதாம். காரணம் மகிழ்ச்சியாக இருக்கும்போது மன அழுத்ததிலிருந்து விடுபடுகிறோம். மனது நன்றாக இருந்தால் உடல்நலம் தெம்பாக இருக்கும், நீண்ட நாட்கள் வாழலாம்.
நன்றாக யோசித்துப் பாருங்களேன் எப்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று. சில நேரங்களில் நமக்குப் பிடித்த காரியத்தைச் செய்து முடிக்கும்போது, பிடித்த நண்பர்களுடன் சேர்ந்து பயணிக்கும்போது, சிலருக்கு விருப்பமான பாடல் கேட்கும்போது, பலருக்கு பிரியமானவர்களுக்குப் பரிசு பொருள் தரும்போது, காதலில் கசிந்துருகும்போது, குழந்தைகளுடன் விளையாடும்போது, செல்லப்பிராணியை வருடும்போது,. எதைச் செய்யும்போது குதூகலமடைகிறீர்களோ அதனைத் தொடர்ச்சியாகச் செய்யலாமே. ’எப்படிச் செல்லப்பிராணியை நாள் முழுவதும் வருடிக் கொண்டிருப்பது?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் சொல்ல வந்தது, உங்களுக்கு இன்பம் தரும் செயலை மட்டும் செய்யுங்கள் என்றுதான். அதுமட்டுமில்லாது மகிழ்ச்சிக்கான காரணம் வெளியில் இல்லை உங்களிடத்திருந்துதான் தொடங்குகிறது என்பதையும் உணர்ந்தீர்களென்றால் செய்யும் எல்லாவற்றிலும் இன்பம் காணலாம். உவகை உறவிலிருந்தோ, பணத்திலிருந்தோ, செய்யும் காரியத்திலிருந்தோ வருவது அல்ல. உங்கள் உள்ளத்திலிருந்து எழுவது, அது ஓர் அகநிலை அனுபவம்.
இப்போதெல்லாம் பலருக்கு சமூகவலைத்தளத்தில் ‘லைக்’ கிடைத்தாலே அவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்கள். அதில் தவறில்லை ஆனால் நம்மைவிட மற்றவருக்கு அதுவும் ஒன்றுமில்லாத பதிவுக்கெல்லாம் அதிக ‘லவ்’ கிடைக்கும்போது மனம் சோர்வடைவதால் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாமென்று சமீபத்திய ஆய்வு காட்டுவதாக பிரபலமான உளவியல் பேராசிரியர் லாரி சாண்டோஸ் அறிவித்திருந்தார். ஆய்வின்படி பெரும்பாலானவருக்கு தன் மகிழ்ச்சியே, மற்றவரை மகிழ்விப்பதுதானாம். புலம் பெயர்ந்தவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். அதுவும் மனைவி மக்களை நாட்டில் விட்டுவிட்டு தன்னந்தனியாக வெளிநாட்டில் வேலையில் கஷ்டப்படுகிறவர்கள் ஊரில் இருப்பவர்களின் சந்தோஷத்திற்காக தான் படும் துன்பத்தையும் பெரிதாக நினைப்பதில்லை. தன் குழந்தைகளுக்காக வாங்கி செல்லும் பொருட்களை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கும்போது, வாங்கிக் கொள்ளும் குழந்தையின் ஆனந்தத்தைவிட அதைப் பார்த்து இன்புறுபவரின் இன்பம் அலாதியானது. இதுவுமே மனதின் கட்டமைப்புதான். மகிழ்ச்சிக்கான விருப்பத்தை நம் மனதில் நாம் ஏற்படுத்த முடியாவிட்டால், பிறர் மகிழ்ச்சியாக இருக்க நாம் எப்படி விரும்ப முடியும்?
நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் போது பெரும்பாலும் எந்தக் கவலையும் இல்லாமல் எதைக் கண்டாலும் பரவசமடைந்து மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அதே வாழ்க்கைதான் நாம் குழந்தையாக இருந்த நிலை மாறி இன்று நமக்கு குழந்தைகள் இருக்கும் வயதில் அதே பரவச நிலையில் திளைக்கிறோமா? ஏன் அதே மனநிலை இப்போது இல்லை? காரணம் இன்று நாம் எதையுமே சிறு குழந்தைகளின் கண்களால் பார்ப்பதில்லை.
ஒருவர் மிகவும் சிரமப்பட்டு ஓர் இடம் வாங்கி அதில் அவரே கடினமான முயற்சி செய்து வீடு கட்டினாராம். அவருடைய மனைவி மக்கள் கட்டி முடித்த வீட்டில் குடிபோக ஆவலாக இருக்கும்போது ஒரே இரவில் கடும் மழை வந்ததால் அந்த வீடு தரைமட்டமானதாம். வெளியூர் சென்றிருந்தவர் திரும்பும்போது அவர் மனைவி மக்கள் விஷயத்தைச் சொல்லி வேதனையடைந்தார்களாம். அவர் மட்டும் மகிழ்ச்சியாக எல்லோருக்கும் இனிப்பு வழங்கினாராம். ’இதே வீடு என் மக்கள் உள்ளிருக்கும்போது இடிந்து விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். நல்லவேளையாகக் குடிபுகும் முன் நிகழ்ந்துவிட்டது’ என்று சொல்லி ஆனந்தமாக ஆசுவாசப்பட்டாராம்.
’இடுக்கண் வருங்கால் நகுக’வென்று திருவள்ளுவர் எதோ போகிற போக்கில் சொல்லவில்லை. வருத்தமான பாதையோ, துக்கம் நிறைந்த சித்தமோ எந்தவொரு சாதனையையும் செய்ய இயலாது. சாதிக்க உற்சாகம் தேவை, ஆனந்தமான மனநிலை வேண்டும். வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம், எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததுதானே நம் பிடிமானம்.
சரி, உங்களுக்கு ஒரு சின்ன வேலையைத் தருகிறேன், முடிந்தால் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த ஐந்து செயல்களைப் பட்டியலிடுங்கள். அடுத்து, நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் ஓர் ஐந்து நபர்களின் பெயர்களை எழுதுங்கள். இரண்டு வேலைகளுக்கும் தொடர்பில்லை. இப்போது உங்களிடம் இரண்டு பட்டியல் இருக்கிறதல்லவா அதில் இருக்கும் முதல் பட்டியலிருந்து ஒரு செயலையாவது தினமும் கட்டாயம் அரை மணிக்கூறாவது செய்ய வேண்டும். இயலுமா? தினமும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்கிறீர்கள், வீட்டு வேலை அல்லது தொலைக்காட்சி செல்பேசியென்று நம்மிடம் பேசாத பொருளோடு உறவாடுகிறீர்கள். அத்தோடு சேர்த்து உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயத்தைத் தொடர்ச்சியாக அரை மணிநேரம்தானே செய்துதான் பாருங்களேன். எவ்வளவுதான் வேலையில் அல்லது குடும்பத்தில் பிரச்சனைகளும், தீர்க்க முடியாத துன்பங்களும் இருந்தாலும் இந்த அரை மணி நேரம் தரும் இன்பம் பிரச்சனைகளைத் தெளிவாகப் பார்க்க செய்யும். துன்பங்களை எதிர்கொள்வது சாத்தியமென்று உங்களுக்கே புரிய வைக்கும். இன்னொன்றும் செய்யலாம் ஏதாவதொரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம். வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. இதில் பொதிந்த உண்மையை உணர்ந்தால் உங்களை நீங்களே தேவையற்ற சிந்தனையிலிருந்து காத்துக் கொண்டு புதிய தேடலில் மனதை ஈடுபடுத்தலாம்.
இரண்டாவது பட்டியலை தினமும் தூங்குவதற்கு முன்பு அந்தப் பெயர்களை வாசியுங்கள். ஏன் அவர்களுக்கு நன்றி சொல்ல நினைத்தீர்களோ அந்த நிகழ்வை மனதில் நிறுத்தி முழு மனதாக நன்றி சொல்லுங்கள். ஐந்து நபர்களுக்குமென்றில்லை, முடிந்தால் செய்யலாம், அல்லது அந்தப் பட்டியலில் இருக்கும் ஒருவரையாவது நினைவுக்கூறுங்கள், அதே நேரத்தில் அன்றைய நாளில் உங்களுக்கு நடந்த மூன்று நல்ல விஷயத்தை எழுதுங்கள். அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்று நினைக்காதீர்கள். அது மிகவும் சின்ன விஷயமாகவும் இருக்கலாம். என்ன இது சின்னக் குழந்தைக்கு தரும் வீட்டுப் பாடம் போலுள்ளது என்று நினைக்கிறீர்களா? இது வீட்டுப் பாடமல்ல வாழ்க்கைப் பாடம். இப்படி எழுதுவதற்காகவாவது எல்லாவற்றிலும் இருக்கும் நல்லவற்றைப் பார்க்கத் தொடங்குவீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் இதன் மூலம் நல்லவிதமான மாற்றங்கள் நேர்ந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். காத்திருக்கிறேன்.
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
12 comments on “நலம் வாழ: கட்டுரைத் தொடர் 3 – அக மகிழ்”
rajaram
சிறப்பான கட்டுரை, எண்ணமும், நற்சிந்தையும்தான் மகிழ்வு.
kumar
சிறப்பான கட்டுரை... சொல்லிய விதம் சிறப்பு. நானெல்லாம் தினமும் வாசிக்கவோ, எழுதவோ செய்வேன்... இந்த மாதிரி நல்ல விசயங்கள், நன்றி சொல்ல நினைக்கும் மனிதர்கள் என்றெல்லாம் யோசித்ததில்லை. இனி முயற்சித்துப் பார்க்கலாம். வாழ்த்துகள்.
J Mohaideen Batcha
சிறப்பு, கடத்தப்பட வேண்டிய செய்தி. ஆங்கில எழுத்தாளர்கள் எழுதி மொழிமாற்றம் செய்யப்பட்ட தன்முனைப்பு நூற்களில் பரவலாக வரும் செய்தி என்றாலும் வெகுஜனங்களுக்கு இது போன்ற செய்திகள் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. மொத்தத்தில் கட்டுரை சிறப்பு.
Sathish Kumar
Nobody is busy .. it’s all about priorities என்று கூறுவது உண்டு. பிடித்த வேலை செய்ய நேரம் தேடி அலையாமல் அன்றாடம் கடைபிடிக்க சொல்லும் உத்தி அருமை. முயற்சிக்கிறேன்.
JAZEELA BANU
@Rajaram நன்றி. கட்டுரையை ஒருமுறை வாசித்துவிடுங்கள் 🙂 @சே.குமார்: அந்த நாளில் நடந்த உகுந்த விஷயம் பற்றி மனதில் நினைத்துக் கொண்டே தூங்குங்கள், மறுநாள் உற்சாக மனநிலையில் சாதிக்கப் போகிறோம் என்ற நிலையில் துயில் எழுவோம். பின்னூட்டத்திற்கு நன்றி
JAZEELA BANU
@J Mohaideen Batcha மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள். @Sathish Kumar தொடர்ச்சியாக செய்யுங்கள். மாற்றங்களை என்னுடன் பகிருங்கள்.
Nagore Rumi
நன்றாக வந்துள்ளது சகோதரி. நம்மிடம் பேசாத பொருளோடு உறவாடுகிறீர்கள் என்பது சத்தியமான வார்த்தைகள்...
பால்கரசு
சிறப்பான கட்டுரை. வாழ்க்கைக்குத் தேவையான இதுபோன்ற நல்ல கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்
Shanthi Shanmugam
நல்ல கட்டுரை ஜெஸீலா... மற்றவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நாம் மகிழ்வது என்பது நிதர்சனம். ஆனாலும் பல நேரங்களில் அது எனக்குச் சாத்தியமான தில்லை. சத்தியப்படுத்திக் கொள்ள முனையவைக்கும் கட்டுரை. வாழ்த்துகள்
Manjulayugesh
மிகவும் சிறப்பு வாய்ந்த கட்டுரை சகோதரி வாழ்த்துகள்
JAZEELA BANU
@Nagore Rumi உங்கள் அன்பான உற்சாகமான வார்த்தைக்கு மிக்க நன்றி. @பால்கரசு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள். @Shanthi Shanmugam மகிழ்ந்திருங்கள் போதும். வாசித்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி. @Manjulayugesh மிக்க நன்றி
பருத்தி இக்பால்.
தங்கள் கட்டுரைத் தொடர் கூற்றுப்படி இருந்தால் நிச்சயம் மனமகிழ் கொள்ளலாம் சாதனைகள் புரியலாம். -- பருத்தி இக்பால்.