“சரியான முடிவுகள் அனுபவத்தால் எடுக்கப்படுகின்றன, அனுபவங்கள் தவறான முடிவுகளால் பெறப்படுகின்றன” – என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவம் பெற நம்முடைய முடிவுகள் மட்டுமே தவறானதாக இருக்கவேண்டியதில்லை. மற்றவர்கள் வாங்கிய அடியில் பாடம் கற்பதும் அனுபவத்தைத் தரும்.
மற்றவர்கள் என்பவர்கள் நாம் அறிந்த உறவினராகவோ ஊர்க்காரராகவோ இருந்தால், அப்படிப்பெற்ற அனுபவம் உறவையும் ஊரையும் தாண்டிப் பயன் தராது. உலகக் கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதனின் அனுபவத்தையும் பெற புனைவுகளும் வரலாறும்தான் துணை.
திரைக்காட்சிகளில் காட்டப்படும் கதைகள் அந்த அனுபவத்தைத் தருமா? சிலவேளை தரலாம். ஆனால் திரையின் நீள அகலங்களுக்குள் என்ன வரப்போகிறது, காட்சிகள் எப்படி விரியும் என்பதெல்லாம் கற்பனைக்கு இடம் தராமல் வேறொரு படைப்பாளி முடிவு செய்கிறார்.
புத்தக வாசிப்பு அப்படி இல்லை. பாட்டி வடை சுட்ட கதையிலும் பாட்டியின் கடை கிராமக்கடையா நகரக்கடையா, பாட்டியின் வயது அறுபதா தொண்ணூறா, பாட்டி வெள்ளை உடை உடுத்தியிருந்தாரா வண்ண ஆடை உடுத்தியிருந்தாரா – ஆயிரம் விஷயங்கள் இப்படி வாசிப்பவர் கற்பனையில் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அச்சடித்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத விஷயங்களை வாசிப்பவர் பூர்த்தி செய்துகொள்வார். ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு விதமாகக் கற்பனை செய்துகொள்ள வழியுண்டு. மூளையை அடைப்பதில்லை, விரிக்கிறது வாசிப்பு.
ஒவ்வொரு நூல் வாசிக்கும்போதும் ஒரு புதிய உலகம் நமக்காகத் திறக்கிறது. படைப்பாளியின் உலகத்தில் இருந்தும் மாறுபட்ட உலகமாகக் கூட அது இருக்கலாம். மதுரையின் கடைத்தெருச் சந்தடியில் ஒரு புத்தகத்தை விரித்தால் அடுத்தநொடி ரஷ்யாவின் போருக்குப் பின்னான அமைதியைப் பார்க்கலாம். பதினாறு வயது இளைஞன் ஒரு புத்தகத்தைப் பிரித்தால் கடலோடு போராடும் கிழவனாக மாறலாம்.
புத்தகம் எழுதுபவனின் அறிவை மட்டும் பறைசாற்றுவதில்லை. வாசிப்பவன் அறிவைக் கோருகிறது, வளர்க்கிறது.
வாசிப்பவனின் அனுபவத்தை மெருகேற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன. பிரிப்பது மட்டுமே நீங்கள் செய்யவேண்டிய செயல். மற்றவற்றைப் புத்தகம் பார்த்துக்கொள்ளும்.
தயார்தானே?
– ‘பெனாத்தல்’ சுரேஷ்.