உள்ளங்கையில் உலகை வைத்துக்கொண்டு வேண்டிய தகவல்களையும், மனமகிழ்வுகளையும் காணொலியாகப் பார்க்கும் வழக்கம் பரவலாக உள்ள் இந்தக் காலகட்டத்திலும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் தேவையை அறிந்து தேடிச் சென்று வாசிக்கிறார்கள். செய்தித்தாள்கள் தொடங்கி இலக்கிய இதழ்கள் வரை வாசகர்களுக்குக் குறைவில்லை. அச்சுப் பதிப்புகள், இணையப் பதிப்புகள், மின் நூல்கள், என எல்லா வடிவத்திலும் எழுத்துகள் வாசகரை வந்தடைகின்றன.
1. கற்பனைத் திறன்:
தகவலுக்கும் மனமகிழ்வுக்கும் காணொலி இருக்கையில் வாசிப்புக்கு நேரம் செலவிடுவது அவசியமா என்னும் கேள்வி சிலசமயங்களில் எழுகின்றது. காணொலியில் தேவைப்பட்டவை கிடைத்தாலும் அவற்றில் வாசகன் எழுத்தின் மூலமாக வாசித்து தன் மனதுக்குள் காட்சிகளை உருவாக்கி உள்வாங்கிக்கொள்ளும் நிகழ்வு இல்லை. அனைவரும் ஒரே நாவலைப் படித்தாலும் ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் அவனுடைய கற்பனையும் சேர்ந்து கதாபாத்திரங்களை வாசகனின் மனதில் உருவாக்குகின்றது.
இரண்டு வாசகர்களுடைய கதாநாயகர்களும் தோற்றத்தில் ஒன்று போல் இருப்பதில்லை. வாசகனின் இந்த தனித் தன்மையால் ஒவ்வொரு வாசிப்பும் தனக்கெனத் தனியான கற்பனை வெளியை பிரத்தியோகமாக உண்டாக்கி அதன் முழுமுதல் உரிமையை வாசகனுக்கு அளிக்கிறது. இந்தத் தனித்தன்மை காணொலிகளில் இல்லை. அங்கு அனைத்தும் கண்முன்னே தோன்றி பார்வையாளரின் ரசனைக்கு முதலிடம் கிடைக்கிறது. வாசிப்பில் வாசகனின் கற்பனையும் சேர்ந்து அவருக்கெனத் தனிக்காட்சியமைப்பு கிடைக்கின்றது.
வாசிப்பு நிகழும்போது நினைவு முழுவதுமாக அதுவே ஆக்கிரமித்துக் கொள்வதால்,மனதுக்கு பிடித்த நல்ல நூல்களை வாசிப்பதைப் போல் சிறந்த பொழுதுபோக்கு எதுவும் கிடையாது.
2. தொடர்பாடல் திறன்:
தொடர்பாடல் சூழ் உலகில் தன்னுடைய கருத்துகளைத் தொகுத்துக் கோவையாகச் சொல்ல மொழி ஆளுமை தேவைப்படுகின்றது. நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர்களிடம் சிறந்த மொழி ஆளுமை காணப்படுகின்றது. அறிஞர்களின் கட்டுரைகளை கருத்துகளை, எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, வல்லுனர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவர்களுடைய மொழி நடையில் வாசிக்க வாசிக்க மொழித் தேர்ச்சி வசப்படுகிறது.
மொழியின் இலக்கணத்தை மட்டும் அறிந்திருப்பதால் அந்த மொழியில் வாக்கியங்களை அமைத்து தொடர்பாடலை சிறப்பாக அமைத்துவிட முடியாது. அந்த மொழியின் எழுத்துலகு வாசிப்பின் வழியாக அறிமுகமான பின்னர்தான் மொழித் தொடர்பாடலுக்கான பக்குவம் கிடைக்கும்.
3. எழுத்துக்குள் மூழ்குதல்:
எழுத்துக்குள் மூழ்குதலும் வாசிப்பால் நிகழ்பவற்றுள் ஒன்று. எழுத்தின் வசீகரம், வாசகரை ஈர்த்து தொடர்ந்து படிக்க வைத்து குறிப்பிட்ட எழுத்தின் பாணிக்கு தீவிர வாசகனாக்குகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட எழுத்துப் பாணியை அதிகமாக விரும்பிப் படித்து அந்த எழுத்து சொல்கின்ற கதை, கருத்து, கொள்கை, இவற்றையும் வாசகர் ஏற்கக்கூடிய மனநிலையை உண்டாக்குகிறது.
இணையப் பயன்பாட்டுக்கு முந்தைய தலைமுறைத் தலைவர்கள் பலர் எழுத்தாற்றல் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். தங்களுடைய எழுத்தாற்றலால் ஒரு தலைமுறையைத் தங்கள் கொள்கையின்பால் ஈர்க்கவைத்துள்ளார்கள். இணையப் பயன்பாடு பெருகிய பின்பும் ஆழமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எழுத்துக்கு மட்டுமே பெரும்பங்கு உண்டு. பேச்சாற்றலின் நீட்சியாக எழுத்தும் அமைவது சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஏதுவானது. நல்ல வாசகனால் மட்டுமே சித்தாந்தங்களை உள்வாங்கி அதை ஏற்றோ எதிர்த்தோ தன் கருத்துகளை முன் வைத்து களமாட முடியும்.
4. கவனக் குவியல் மேம்பாடு:
கவனக் குவியலை செம்மைப்படுத்துவதில் வாசிப்புக்குப் பெரும்பங்கு உண்டு. நீண்ட நேரம் குறிப்பிட்ட சித்தாந்தத்தை, கதையை, ஆய்வுக்கட்டுரையை வாசிக்கும்போது பின்னணியில் சிந்தனையில் அது தொடர்பான விவரங்களைக் கூடுதலாக இணைத்து உள்வாங்கி நடக்கின்ற பயிற்சியால் கவனக் குவியல் மேம்படும்.
கவன இடைச்செருகல் இல்லாமல் வாசித்து மூளைக்குள் செய்திகளை அனுப்பி உடனுக்குடன் ஆராய்ந்து தன்வினை ஆற்றிக்கொண்டே தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் கவனக்கூர்மையை உண்டாக்கும். வாசிப்பால் உருவான அந்தப் பழக்கம், ஏதாவது மேடைப் பேச்சைக் கேட்கும்போதோ, தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நிகழும் ஒன்றை அவதானிக்க நேரும்போதோ கவனக் குவியலை ஒருமுகப்படுத்த உதவும். நேரிடையாக மனதுக்குள் செல்லும் விஷயங்களுன் சேர்த்து இணைப்பாக இப்படிச் சில திறன் மேம்பாடுகளும் வாசிப்பு அனுபவத்தால் கிடைக்கும்.
முடிவாக, மொழிவளம், கற்பனை, தொடர்பாடல், பொழுதுபோக்கு, எழுத்தில் ஆழ்தல், சித்தாந்தங்களில் தெளிவு பெறல், நினைவாற்றல், எனப் பல திறன்களையும் பண்புகளையும் வளர்க்கும் வாசிப்புப் பழக்கத்தால் நஷ்டமடைந்தவர் யாரும் இல்லை.
தனக்கு ஏற்ற, தனக்குத் தேவையான நல்ல நூல்களைத் தேடிச் செல்லும் பண்பும், அப்படிப்பட்ட நூல்களை அறிமுகம் செய்யும் நண்பர்களும் செய்திகளும் கிடைத்தால் அது சிறப்பு.
-எழுத்தாளர். அபுல் கலாம் ஆசாத்