மனிதன் உயிர் வாழ உணவு, உடை, உறைவிடம் என்பதோடு புத்தகத்தையும் சேர்த்துக் கொண்டால் சிறப்பு. காரணம் ஓர் அறையில் புத்தமில்லையென்றால் அது உயிர் இல்லாத உடலைப் போன்றது. சுவாசிக்க ஆக்ஸிஜன் இன்றியமையாதது,
சிந்திக்கவும் எண்ணங்களை விரிவாக்கவும் நல்ல புத்தகங்களின் வாசிப்பு அவசியமானது. வாசிக்கும் பழக்கம் நமக்குப் புது வார்த்தைகளைத் தேடித் தரும், கற்பனைத் திறன்களை அதிகரிக்கும், மாற்றுச் சிந்தனையை விரிவுபடுத்தும், நம்மை உற்சாகப்படுத்தும். நாம் பார்க்காத இடங்களைச் சுற்றிக் காட்டும், அறியாத வரலாற்றைக் கற்றுத் தரும். எங்கோ கண்டுபிடித்த விஞ்ஞானத்தை நொடியில் கை சேர்க்கும்.
‘உன் நண்பன் யாரென்று சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பார்கள். நம் நண்பன் சிறந்த நூலாக இருப்பின் ‘நல்ல மனிதர்’ என்று உன்னைச் சொல்லிவிட முடியும். கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு. கை மண் அளவு கற்கவாவது வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நல்ல நூல்கள் நம்மை நல்லவராக்காமல் இருக்கலாம். ஆனால், நல்லது கெட்டதைப் பிரித்தறிய வாசிப்பு உதவியாக இருக்கும். வாசிப்பை நேசிப்போம் வாழ்வை வளமாக்குவோம்.
-எழுத்தாளர். ஜெஸிலா பானு