இராஜாராம்
கதை எழுத ஆரம்பிப்பவகளும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள். அவரின் கதையை வாசிக்கும் போது ஒரு கதையை எப்படி எழுதலாம் என்பதை உள்வாங்க முடியும். சாதாரணமாய் பயணிக்கிறதே என்று நினைத்து வாசித்துக் கொண்டே போனால் இறுதிவரிகளில் நம்மை கதைக்குள் இழுத்து அமர்த்தி விடுகிறார். அந்த வரிகளில் இருந்து மீள்வதென்பது அவ்வளவு எளிதல்ல. கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர். ஒவ்வொரு கதையும் நிறைய விசயங்களைப் எண்ண வைக்கிறது, பேச வேண்டும் என நினைக்க வைக்கிறது. அது குறித்து எதாவது எழுத வேண்டுமெனக் கை பரபரக்கிறது.
அவரின் ‘மெய்க்காப்பாளன்‘ என்னும் சிறுகதையில் இப்படி எழுதிச் செல்கிறார். வாசித்துப் பாருங்கள்.
‘அப்பா, எறும்பு நைஜீரியாவை கடந்துவிட்டது’ என்றான் மகன்.
‘சரி, நீ அதை ஒன்றும் செய்யாதே.’
மேசையின் ஒரு விளிம்பிலிருந்து மறு எல்லை வரை உலகப்படம் கண்ணாடியில் வரையப்பட்டு கிடந்தது. ஆங்கிலேயரின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது உண்டாக்கிய வரைபடம் என்பதால் இப்போது இருக்கும் நாடுகள் சில அப்போது இல்லை. அப்போதிருந்த நாடுகள் சில ஒன்றாகச் சேர்ந்துவிட்டன. எறும்பு வரைபடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. என் மகனின் விரல் அதன் பின்னால் ஊர்ந்தது.
‘எறும்பு இத்தாலிக்கு போய்விட்டது.’
‘சரி.’
கிட்டத்தட்ட ஒருவருட காலம் அவள் போன பஸ்சில் நான் அவளை பின்தொடர்ந்தேன். யாராவது கணக்குப் போட்டு பார்த்தால் 1600 மைல்கள், 290 மணித்தியாலங்கள். எனக்கு அவள்மேல் பெரிய கோபம் இருந்தது. இப்பொழுது யோசித்து பார்க்கும்போது அந்தப் பெண் வேறு என்ன செய்திருக்கமுடியும் என்று தோன்றுகிறது. நான் சிரித்தால் முகத்தை வேறுபக்கம் திருப்பியிருக்கலாம். பேசினால் தனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம். கடிதம் கொடுத்தால் அதை வாங்கி என் முன்னால் கிழித்துப்போட்டு தன் கோபத்தை காட்டியிருக்கலாம். நான் மௌனமாகத் தொடர்ந்தேன்.
அவள் மௌனமாக தன் எதிர்ப்பை காட்டினாள். அவள் நல்லவளாகத்தான் இருப்பாள்.
‘அப்பா, நீங்கள் பயணம் போயிருக்கிறீர்களா?’
‘போனது மாதிரித்தான்.’
‘எங்கே?’
‘ஏதோ இடத்துக்கு.’
‘அது எவ்வளவு தூரம் அப்பா?’
‘1600 மைல்கள்.’
வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முன்னர்தான் மனிதன் உண்மையாக இருந்தான். வார்த்தைகள் மனதைச் சொல்ல பயன்படுவதில்லை; மனதை மறைக்கவே பயன்பட்டிருக்கின்றன.
‘எப்ப போனனீங்கள்?’
‘எனக்கு 17 வயது நடந்தபோது.’
‘பயணத்துக்கு எவ்வளவு நேரம் பிடித்தது?’
‘290 மணித்தியாலங்கள். அதாவது 12 நாட்கள்.’
’12 நாட்களா?’
‘ஓர் உண்மையைக் கண்டுபிடிக்க 12 நாட்கள் என்பது சிறிய கால அவகாசம்தான்.’
எங்கள் சம்பாசணையில் கலந்துகொள்ளாமல் எறும்பு ஒருவர் உதவியுமின்றி தனியாக அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்துகொண்டிருந்தது.
இந்தச் சிறுகதையில் மெல்லிய கைக்கிளைக் காதலை நகைச்சுவையும், எறும்பு கடந்ததுபோல உலக வரைபடத்தையும் விளக்கிச் செல்கிறார்.
****
22 வயது என்னும் மற்றொரு கதையிலோ,
பூமியின் மறுபாதியிலிருந்து ரொறொன்ரரோவுக்கு விமானத்தில் பயணம் செய்த அத்தனை மணி நேரத்திலும் அவன் நாவில் ஒர் இனிப்பு கரைந்து கொண்டிருந்தது.
புறப்பட்டுப் போனபோது இருந்த அவன் இப்போது இல்லை.
இருபது குதிரைகள் ஓடிமுடித்த தரைபோல இருதயம் சற்று அமைதியானது.
அவன் மனமோ விமானம் பறந்த உயரத்திலும் மேலாக பறந்தது. ஏனென்றால், அவனுக்கு 22 வயது தொடங்கி மூன்று நாட்கள் கழிந்து விட்டன. ஏனென்றால், அவனிடைய கோட் பையில் மாவோவின் படம்போட்ட நூறு யுவான் சிவப்பு நோட்டு ஒன்று மிச்சமாக இருந்தது. ஏனென்றால், உடுத்தி முடித்த அழுக்கான உடைகள் எல்லாம் தாறுமாறாக அடைக்கப்பட்ட அவனுடைய பெட்டியில் கையொப்பமிட்ட 30 மில்லியன் டொலர் அணு உலை ஒப்பந்தத்தின் மூலமும், மூன்று நகல்களும் இருந்தன. ஏனென்றால், அவன் உதட்டிலே சூடான சீன முத்தம் ஒன்று இருந்தது, கொஞ்சம் குளிர்ந்துபோய்.
என முடித்திருக்கிறார். இக்கதையை வாசிக்கும் போது அவன் உதடு சீன முத்தத்தால் குளிர்ந்திருப்பது போல் நம் உள்ளம் முத்துலிங்கம் என்னும் எழுத்தாளனின் எழுத்தால் குளிர்ந்துதான் போகிறது.
சீனாவில் அலுவல் பணிக்காக சென்றவருக்கும், அவர் சென்ற அலுவலக (பெண்) சாரதிக்கும் நடக்கும் சந்திப்புதான் இக்கதை என்றாலும் பயண வழி நெடுக சீன வியாபார விளம்பர யுக்திகளைப் பற்றிப் பேசுகிறது. அதனிடையே மென் காதலும் அரும்புகிறது.
அருமை.
முத்துலிங்கத்தை வாசியுங்கள்.