வெங்கட் நாகராஜ், புது தில்லி
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வெங்கட் நாகராஜ் அவர்கள் பணி நிமித்தம் தில்லியில் இருக்கிறார். சந்தித்ததும் சிந்தித்ததும் என்னும் வலைத்தளத்தில் 2009 முதல் எழுதி வருகிறார். இதுவரை பயணக்கட்டுரைகளும் பயனுள்ள கட்டுரைகளுமென 3000க்கும் மேல் எழுதியிருக்கிறார். இவரின் பயணக் கட்டுரைகள் இந்தியாவிலிருக்கும் நாம் அறிந்திராத, இதுவரை கண்டிராத அறிய ஊர்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும், அவர் எடுத்த அழகான படங்களுடன் நமக்கு விபரமாய் எடுத்துச் சொல்லும். மிகச் சிறந்த எழுத்தாளார் மற்றும் போட்டோகிராபர். ஏரிகளின் நகரம் – நைனிதால், மத்தியபிரதேசம் அழைக்கிறது, தேவ் பூமி ஹிமாச்சல், பஞ்ச த்வாரகா, இருமாநிலப் பயணம் – குஜராத் தியு, ராஜாக்கள் மாநிலம் , ஷிம்லா ஸ்பெஷல், கடைசி கிராமம், ஹனிமூன் தேசம், அரக்கு பள்ளத்தாக்கு, திரிவேணி சங்கமம், ஏழு சகோதரிகள் (நான்கு பாகம்), மேகங்களின் ஆலயம் மேகாலயா உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மின்நூல்களை அமேசான் வழி கொண்டு வந்திருக்கிறார்.
******
இண்டியா கேட்-
தலைநகர் தில்லியின் ராஜ பாட்டையின் ஒரு புறம் இருக்கும் இந்த இண்டியா கேட் உங்களில் பலரும் அறிந்த ஒரு இடம். ஒவ்வொரு தினமும் இங்கே ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது தில்லிவாசிகளும் வந்து செல்லும் இடம்.
எத்தனை எத்தனை நிழற்படங்கள் இங்கே எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது அந்த இண்டியா கேட் மீது பதிக்கப்பட்டிருக்கும் 13,516 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களோ அல்லது உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்திற்காகப் போராடி உயிர்நீத்த 70,000 இந்திய வீரர்களோ நிச்சயம் அறிந்திருக்க முடியாது! நானும் யோசிக்கக் கூட முடியாத எண்ணிக்கை அது!
சரி இண்டியா கேட் பற்றி எத்தனையோ விஷயங்கள் உண்டு – அது குறித்து பிறிதொரு சமயம் பார்க்கலாம்! உங்களில் சிலருக்கேனும் தெரிந்திருக்காத ஒரு விஷயம் குறித்து இன்றைக்குப் பார்க்கலாம்!
1917-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த இண்டியா கேட் வருவதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தலைநகர் தில்லியில் மொத்தம் 14 நுழைவாயில்கள் இருந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?
செங்கோட்டையை ஏற்படுத்திய ஷாஜஹான் கோட்டையைச் சுற்றிலும் 14 நுழைவாயில்களை ஏற்படுத்தியதோடு 16 சிறிய கதவுகள் / ஜன்னல்கள் போன்ற அமைப்பையும் ஏற்படுத்தினார் – அவை நகரை விட்டு வெளியேறும் வழிகளாக இருந்தன. அந்த நாட்களில் 14 நுழைவாயில்கள் இருந்தாலும் இன்று அவற்றில் பல இருந்த சுவடுகளே இல்லை என்பதும் வருந்தத் தக்க விஷயம்.
எத்தனை எத்தனை படையெடுப்புகள்?
எத்தனை எத்தனை உயிரிழப்புகள்?
தில்லி கேட் தவிர துர்க்மான் கேட், அஜ்மேரி கேட் (இன்றைய புது தில்லி இரயில் நிலையத்தின் ஒரு நுழைவாயிலை இந்தப் பெயரில் தான் அழைக்கிறார்கள்), காஷ்மீரி கேட் (இந்தப் பெயரில் மெட்ரோ இரயில் நிலையம் உண்டு!), நிகம்போத் கேட் (தில்லியின் பிரதான சுடுகாடு இங்கே தான் – நிகம்போத் Gகாட் என்ற பெயரில் இன்றைக்கும் இருக்கிறது), மோரி கேட் போன்ற பல நுழைவாயில்கள் உண்டு.
இப்படி அமைக்கப்பட்ட 14 நுழைவாயில்களில் ஒன்று தான் தில்லி கேட் என அழைக்கப்படும் நுழைவாயில். செங்கோட்டையின் தெற்குப் பகுதியில் அமைந்த இந்த நுழைவாயில் தற்போது புது தில்லியை பழைய தில்லியுடன் இணைக்கும் பகுதியாக, தற்போதைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையின் ஆரம்பமாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் இந்தப் பாதையின் இரு மருங்கிலும் மரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்க அப்படி ஒரு குளிர்ச்சியாக இருக்குமாம்… அதனால் இந்தப் பாதை டண்டி சடக் (thandi sarak) அதாவது குளிர்ச்சியான சாலை என்று அழைக்கப்பட்டதாம்! ஆனால் அந்தோ பரிதாபம் – இன்றைக்கு இரு மருங்கிலும் மரங்கள் என்ன, செடிகள் கூட கிடையாது! இரு மருங்கிலும் எண்ணற்ற கடைகள் இருக்கின்றன.
இந்தச் சாலையில், இசைக்கருவிகள் விற்கும் கடைகள், மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள், பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கான உபகரணங்கள் விற்கும் கடைகள், பழச்சாறு பிழியும் இயந்திரங்கள், அசைவ உணவகங்கள் என பல கடைகள் இருக்கின்றன.
தில்லியின் பல பகுதிகளிலிருந்தும் இங்கே வந்து பொருட்களை வாங்கிச் செல்பவர்கள் வருவார்கள் என்றாலும், வெளி மாநிலங்கள், ஊர்களிலிருந்தும் இங்கே இவற்றை வாங்க வருபவர்கள் உண்டு. இங்கிருந்து தான் பல மாநிலங்களுக்கு இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இங்கேயிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் உண்டு.
மேலும் இந்த தில்லி கேட்-லிருந்து தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் தான் ஒவ்வொரு ஞாயிறும் பழைய புத்தகங்கள் விற்கப்படுகின்றன. மாணவர்கள், ஆராய்ச்சி செய்யும் நபர்கள் என பலரும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் புத்தக சந்தைக்கு வருவது வழக்கம். நானும் ஆரம்ப நாட்களில் இங்கே பல ஆங்கில புத்தகங்களை வாங்கியதுண்டு.
முன் காலத்தில் சிறப்பான ஒரு பகுதியாக இருந்த தில்லி கேட் பல சிறப்புகளை இழந்திருந்தாலும் இன்னமும் பலவித சிறப்பான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது. தில்லி வரும் வாய்ப்பு இருந்தால், இந்தப் பகுதிக்கும் ஒரு முறை சென்று வரலாம்.
படம் மற்றும் பகிர்வுக்கு நன்றி.
One comment on “தில்லி கேட்”
venkatnagaraj
எனது கட்டுரையை இங்கே பதிவு செய்ததில் மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி - வெங்கட் நாகராஜ், புது தில்லி.