கட்டுரை : மனஅழுத்தம் ( ஸ்ட்ரஸ் )

கமலா முரளி

முன்பெல்லாம் , ஸ்ட்ரஸ்  அல்லது மன அழுத்தம் , குடும்ப  கஷ்டங்கள் மிக அதிகமாகி, பாரத்தை சுமக்க அவதிப்பட்டவர்களுக்கு வந்து கொண்டு இருந்தது.

பிறகு, மாணவர்கள் அதிலும் குறிப்பாக பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , மிகுந்த மன அழுத்தத்தால் அவதிப்படுவது எல்லோராலும் உணரப்பட்டது.

அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆலோசனைகள் கல்வியாளர்களாலும் ஊடகங்களாலும்  பரிந்துரைக்கப்படுகின்றன.

தற்போதோ , சிறார்கள் கூட மன அழுத்தத்தில் இருந்து தப்பவில்லை.

ஏன் மன அழுத்தம் வருகிறது?

அதிக எதிர்பார்ப்புகள், கிடைத்த வசதி வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், பொறுமை இன்மை போன்ற எதிர்மறை  காரணிகள் மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கின்றன.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் , குழந்தைகள் பள்ளிக்கு சென்று , பாடங்களைப் படித்து, தேர்வு எழுதுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை ஊக்குவித்து, அவர்கள் கவனமாக படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால், குழந்தைகளின் மனதைச் சிதைக்கும் அளவு அழுத்தம் தர மாட்டார்கள்.

மெதுவாக, தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது , முக்கியமாக பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒரு திறன் சார்ந்த செயலாக இல்லாமல் , கௌரவம் சார்ந்த விஷயமாக கருதப்படும் அபாயம்  சமூகத்தில் வந்து விட்டது.

அத்தகைய ஒரு கண்ணோட்டம் பொதுத்தேர்வு குறித்து , மாணாக்கர்களிடையே பய உணர்வை தோற்றுவித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செய்தித்தாள்கள் மூலம் தேர்வு முடிவுகள் அறியப்பட்ட காலங்களில் ,  ஒரு மாணவரின் தேர்வு முடிவு , எல்லோருக்கும் பரவலாக தெரியும் என்பதே மிக நெருடலான விஷயமாக இருந்தது.

மேலும் சில பதிப்புத் தவறுகளால், மாணாக்கரின் எண் செய்தித்தாளில் வரவில்லை என்றாலும் , மாணவர் மிகவும் பாதிக்கப்படுவார்.

அத்தகைய சமயங்களில் அநேக மாணவர்கள் மனச்சிதைவு அடைந்து, வீட்டை விட்டு ஓடுதல்,  தற்கொலைக்கு முயற்சித்தல் போன்ற எதிர்மறையான எண்ண ஓட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.

காலப்போக்கில், அளவுக்கதிகமான அழுத்தத்தின் எதிர்மறையான விளைவுகளை சமூகம் உணர்ந்து, பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளை அன்போடும் அரவணைப்போடும் அணுக வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.

உணவுமுறை, தூக்கத்தை முறைப்படுத்துதல், பாடங்களை படிக்கும் முறை, எளிதாக மதிப்பெண் எடுக்க எளிய வழிகள் … என்று பல்வேறு கோணங்களில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூகம் தற்போது செயல் படுகிறது.

இருப்பினும், பொதுத்தேர்வு பயமும், மன அழுத்தமும் இன்றளவும் மாணக்கர்களை விழுங்கி கொண்டு தான் இருக்கிறது.

தேர்வு மட்டும் தான் மன அழுத்தம் தருமா ?

இல்லை.

இளஞ்சிறார் துவங்கி, மன அழுத்தம் இன்றைய சூழலில் மிகக் கடும் பிரச்சினயாக பூதாகார உருவேடுக்கத் துவங்கி உள்ளது.

பாடச்சுமையா ?

நேரமின்மை பிரச்சினையா ?

திறன் தேர்ச்சி பிரச்சினையா?

பாடச்சுமை பிரச்சினையா ?

நேரப் பிரச்சினையா ?

திறன் தேர்ச்சிப் பிரச்சினையா ?

எது உளைக்கிறது பிள்ளைகளின் மனதை ?

இவையெல்லாம் பிரச்சினையே இல்லை. இவை சவால்கள்.

பிரச்சினை, இந்த சவால்களை ஏற்று, அதை சரிவர கையாளாத் தெரியாதது தான்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயம் மாணாக்கர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டுதலை தர வேண்டும்.

  • பெற்றோரின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும்
  • ஒவொவொரு தனிப்பட்ட ஆசிரியரின் நிலைப்பாடு, எண்ண ஒட்டங்கள்
  • பள்ளி நிவாகத்தின் எதிபார்ப்பு, கண்டிப்பு
  • பிற பிள்ளைகளின் செயல்பாடு
  • ஒப்பிட்டுப் பேசுதல்

பிள்ளைகளின் மன அழுத்தததிற்கான காரணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

பொதுத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டும் தான் மன அழுத்தம் என்பதில்லை.

உதாரணத்திற்கு, ஒரு பள்ளியில், மாதாந்திரக் கட்டணம், பள்ளியின் அலுவலகத்தில் பெற்றோரால் கட்டப்பட வேண்டும். பதினைந்தாம் தேதி வரை கட்டலாம். என்றாலும், வகுப்பு ஆசிரியருக்கு பத்தாம் தேதியே, பணம் செலுத்தாத மாணவர்கள் பெயர்கள் சென்று விடும். அவர்கள்  வகுப்பறையில், பிள்ளைகளை நிறுத்திக் கேட்பார்கள். இது ஒரு நினைவுட்டலுக்கான செய்கையாக கொள்ளப் படுகிறது.

ஒரு ஆசிரியர் சற்று சாதரண தொனியில் கேட்பார். மற்றொருவர் அதட்டிக் கேட்பார். நான் அறிந்த பெண்மணி ஒருவர், வகுப்பறையில் நிற்க வைத்து கட்டணப் பணத்தைக் கேட்டதால், மிக சங்கோஜம் அடைந்த தன் குழந்தை வயிற்று வலியாலும், மலச்சிக்கலாலும் சிரமம் அடைந்ததாகக் கூறினார்.

அடுத்த மாதம், சீக்கிரமே பணத்தைக் கட்டினார். அதற்கு கஷ்டப் பட்டதால், அந்தக் குழந்தை ஒரு சிறு விஷமம் செய்தாலும், அன்னையே மிகக் கடுமையாகக் கடிந்து கொள்வார் : ”உனக்காக சிரமப் படுறேன். உனக்குப் புரியல்ல” என்று.

திரும்பவும், அந்தப் பிள்ளைக்கு அழுத்தம். மலச்சிக்கல்.

சில பிள்ளைகள் இத்தகைய கடுஞ்சொற்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இயற்கையாகவே பெற்றிருப்பார்கள். அவர்கள், இதைக் கடந்து சென்று விடுவார்கள்.

அப்படி இல்லாத பிள்ளைகள் உளச்சலுக்கு உள்ளாவார்கள்.

அத்தகைய பிள்ளைகளைக் கண்டறிந்து, மெல்ல சவால்களை எதிர் கொள்ளப் பழக்க வேண்டும். சவால்களை அவர்களிடமிருந்து விலக்கக் கூடாது.

கலை, நடனம் ,ஓவியம், பாட்டு, விளையாட்டு போன்ற திறன் பயிற்சிகள் கூட மன அழுத்ததைத் தரும் என்றால் நம்ப முடிகிறதா?

திறன் பயிற்சிகள்  பலமா ? பலவீனமா ?

மாணவர்களை வெறும் படிப்பு, தேர்வு , மதிப்பெண் என்ற வட்டத்துக்குள்ளே சுழன்று, தேர்வு மதிப்பெண்கள் குறையும் போது, மன அழுத்தம் அடைகிறார்கள்.

இதைத்  தவிர்க்க, தேர்வு, மதிப்பெண் சார்ந்த கல்வி தவிர்த்து, கலை, இலக்கியம், ஓவியம், இசை,நடனம், விளையாட்டு என பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளும் பள்ளிகளில் தற்போது பரவலாகப் பயிற்றுவிக்கப்படுகிறது.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளகளை இத்தகைய பயிற்சிகள் தரும் மையங்கள் தங்கள் வீட்டின் அருகாமையில் இருந்தால், அதிலும் அவர்களைச் சேர்த்து, எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறார்கள்.

இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.

1)   பிள்ளைகளின் மாறுபட்ட திறமைகள் வெளிக் கொணரப் படுகின்றன.

2)   நல்ல பொழுதுபோக்கு முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.

3)   பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்கிறார்கள்.

4)   நேரத்தைப் பயனுள்ள முறையில் செல்வழிக்க முடிகிறது.

5)   மனச்சோர்வை நீக்கிக் கொள்ள முடிகிறது.

சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தைகள் மட்டுமே, இது போன்ற திறன் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப் பட்டனர்.ஊக்குவிக்கப் பட்டனர்.

தற்போது, பெண் குழந்தைகளும்  விளையாட்டு மற்றும் இதர பயிற்சிகளில் பங்கேற்று, தங்கள் திறன்களை வெளிப்படுத்துகின்றனர்.

இது மிக மிக வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் ; முன்னேற்றம்.

இருப்பினும், இந்தப் பயிற்சிகளும், சில நேரங்களில், சில குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த துவங்கி விட்டது.

ஏன் ? என்ன காரணிகள் ?

1)   பயிற்சி பள்ளிகளில் தரப்படும் சான்றிதழ்களில் நல்ல தகுதி பெறவேண்டும்.

2)   நிகழ்ச்சிகளில் பங்கு பெறத்தக்க அளவு திறமையைக் காண்பிக்க வேண்டும்.

3)   நிகழ்ச்சிகளில் முதல் வரிசையில் ஆடக்கூடிய திறமைசாலியாக வேண்டும்.

4)   சக குழு மாணவர்களுக்கு சற்றும் தரம் குறையக் கூடாது.

5) ஊடக நிகழ்ச்சிகளில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.

இவை தவிர,

1)   பயிற்சி பள்ளிகளுக்குச் செல்வதால் ஏற்படும் நேரச்செலவு

2)   உடல் சோர்வு மற்றும் அயர்வு

3)   ஊட்டக்குறைபாடு

4)   பள்ளி வீட்டுப்பாடம், படித்தல் போனறவற்றில் தடங்கல்

இதனையும் பிள்ளைகள் சமாளித்தாக வேண்டும்.

பெற்றோர்களும், பெரியவர்களும் பிள்ளைகளுக்கான ஊட்டம், நேர மேலாண்மை முதலியவற்றில் கவனம் செலுத்தி, ஒப்பிடுதல், முன்னிலையில் வருவதற்காக அதிக அழுத்தம் தருதல் போனறவற்றை கை விட்டால்,

திறன் பயிற்சிகள் பிள்ளைகளின் பலமாகும்.

நம் பிஞ்சு உலகத்தை , மன அழுத்தம் என்ற அரக்கனிடம் இருந்து நாம் தான் காப்பாற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *