கடா ப்ரஷாத்

வெங்கட் நாகராஜ்

டா ப்ரஷாத்…

தலைநகர் தில்லியில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கும், குருத்வாரா என அழைக்கப்படும் தலங்கள் நிறைய உண்டு – அவற்றில் சில புதியவை என்றாலும் பல குருத்வாராக்கள் மிக மிக பழையவை. ஷீஸ் கஞ்ச் குருத்வாரா, டம் டமா சாஹிப் குருத்வாரா, மஜ்னு கா டில்லா குருத்வாரா, ரகாப் கஞ்ச் குருத்வாரா, பங்க்ளா சாஹிப் குருத்வாரா என நீண்டதொரு பட்டியல் உண்டு.

இந்த குருத்வாராக்களில் தலைநகர் தில்லியின் புது தில்லி பகுதியில் பாபா கடக் சிங் சாலை மற்றும் அஷோகா சாலை ஆகிய இரண்டு சாலைகளை இரண்டு பக்கங்களில் கொண்டு அமைந்திருக்கும் பங்க்ளா சாஹிப் குருத்வாரா தனியிடமும் தனிச்சிறப்பும் பெற்றது. சீக்கிய குருமார்களில் எட்டாவது குருவான ஸ்ரீ குரு ஹர்கிஷன் சாஹிப் ஜி அவர்களின் தில்லி விஜயத்தின் போது உருவானது இந்த குருத்வாரா.

ஸ்ரீ குரு ஹர்கிஷன் சாஹிப் ஜி அவர்களை முகலாய மன்னர் ஔரங்கசீப் அவர்களும் அம்பர் மிர்சா ராஜா ஜெய் சிங் அவர்களும் குருவை தலைநகர் தில்லிக்கு வர அழைக்க, அவரும் டெல்லிக்கு வர ஒப்புக்கொண்டார். ராஜா ஜெய் சிங், தனக்குச் சொந்தமான ஜெய்சிங்க்புரா மாளிகையில் தங்க வைத்தார். அப்போது குருவின் வயது எட்டு மட்டுமே!

அதே மாளிகை தான் பிறகு பங்க்ளா சாஹிப் குருத்வாராக மாற்றப்பட்டது. ராஜாவின் மனைவி குரு சாஹிப்பின் ஆன்மீக சக்தியை சோதிக்க நினைத்து, ஒரு பணிப்பெண்ணாக மாறுவேடமிட்டு உதவியாளர்கள் மத்தியில் அமர்ந்தார். குரு சாஹிப் ராணியை அடையாளம் கண்டு அவள் மடியில் அமர்ந்தார். இந்த நிகழ்வு ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி மற்றும் அவரது உண்மையான சீடர்களின் ஆன்மீக சக்திகளை அவளுக்கு உணர்த்தியது.

குரு ஹர்கிஷன் ஜி தில்லிக்கு விஜயம் செய்த அந்த நாட்களில் டெல்லியில் தொற்றுநோயான சின்னம்மை நோய் வெகு தீவிரமாக பரவிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக பலரும் மரணம் அடைந்தனர். குரு சாஹிப், துன்பச் சாகரத்தில் ஆழ்ந்திருந்த மனிதகுலத்தின் மீதான அன்பு மற்றும் இரக்கத்தால், தனது புனித பாதங்களை தண்ணீரில் நனைத்து, சிறிய (ch)சௌபாச்சாவில் (தொட்டி) சரண் அமிர்தத்தை ஊற்றினார்.

(ch)சௌபாச்சாவிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தியவர்கள் அனைவரும் நோயிலிருந்து குணமடைந்தனர். இதனால் டெல்லி மக்கள் அந்த தொற்றுநோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர். நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பக்தர்கள் தொலைதூரத்தில் இருந்து வந்து புனிதநீரில் நீராடி துன்பங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

இப்போதும் அந்த இடம் சரோவர் என்ற பெயரில் குருத்வாரா வளாகத்தில் இருக்கிறது. அந்த இடத்திலிருந்து பெறும் நீர் அம்ருத் பானி என்ற பெயரில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப் படுகிறது.

இதைப் போலவே எல்லா குருத்வாராக்களிலும் கடா ப்ரஷாத் என்ற ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய் சொட்டச் சொட்ட இருக்கும் இந்த கடா ப்ரஷாத் மிகவும் சுவையானது. ஒரு துளி கிடைத்தால் கூட அதன் சுவை நீண்ட நேரம் உங்கள் நாவில் நிலைத்திருக்கும் விதத்தில் இருக்கும் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

குருத்வாரா செல்லும் போது சில நியமங்கள் கடைபிடிக்க வேண்டியிருக்கும் – குறிப்பாக ஆண், பெண் என இருபாலரும் தலை முடியை ஒரு துணியால் மூடியிருக்க வேண்டும். இந்த பங்க்ளா சாஹிப் குருத்வாரா எல்லா நாளும் திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணங்கள், கட்டண தரிசனம் என எதுவும் அற்றது! தவிர தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இங்கே வழங்கப்படும் லங்கர் எனும் உணவு மிகவும் சுவையானது. இங்கே ஒரு சிறு மருத்துவமனையும், பள்ளியும் செயல்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *