பகுதி – 10
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க…
பகுதி-1 : பகுதி-2 : பகுதி-3 : பகுதி-4
பகுதி-5 : பகுதி-6 : பகுதி-7 : பகுதி-8
பகுதி-9
*********
மதி நெருப்புக்கோழியைப் போல மெதுவாய் அடியெடுத்து வைத்து திரும்பிச் சென்றபோது ஜல் ஜல் எனச் சத்தம் கேட்டது. அப்போதுதான் கவனித்தேன்… சேலை மட்டுமல்ல அவரது கால்களில் சலங்கைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரைப் பின்தொடர்ந்து பூசாரியோடு வந்த நபர்களும் பழையபடி அந்த அறையினுள் சென்றுவிட்டனர்.
மதி பார்த்த பார்வை என் கண்களை விட்டு அகலாமல் தீப்பொறியாய் கனன்றுக் கொண்டிருந்தது.
“சுத்தி வயக்காடு இல்லையா, நாமதான் கவனமா இருக்கணும். நல்ல வேளை கால் மேல ஏறிப்போனது உன்ன ஏதும் சீண்டல! பாத்து பத்திரமா இருந்துக்கப்பா!” பெரியவர் இங்கே பாம்புகள் இழைவது சாதாரணம், நாமதான் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தி என்னைத் தேற்ற முயற்சித்தாலும் அதில் என்னால் எளிதில் சமாதானம் அடைய முடியவில்லை.
அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் சரி. நான் ஏன் சம்பந்தமில்லாமல் இந்த மாதிரி பாதுகாப்பில்லாத இடத்தைச் சகித்துக்கொண்டு இங்கே வேலை செய்ய வேண்டும்..? அதுவும் மதியின் அசாதாரணமான இந்த நடவடிக்கைகளை எல்லாம் கண்ட பிறகு இது சாதாரண இடம் போல எனக்குத் தோன்றவில்லை.
இது என்ன விதமான பூஜை..?
மதி ஏன் சேலையெல்லாம் கட்டிக்கொண்டு பெண்கள் சாமியாடுவது போல் சத்தமிட வேண்டும்..?
வாரவாரம் நடக்கும் என்று சொன்னார்களே.. எதற்காக இந்த மாதிரி பூஜையெல்லாம்..?
கேள்விகளுக்கு மேல் கேள்விகளும் சந்தேகங்களும் தொட்டடுத்துச் செல்லும் எறும்புகள் போல நீண்டுக் கொண்டே சென்றன.
என் நிலைமையைப் புரிந்துக் கொண்டவராய் பெரியவர், “சரி.. சரி.. பயப்படாதே! வா உன் ரூமிற்குள் செல்லலாம்..! ரெஸ்ட் எடு எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.
மெல்ல முயற்சித்ததில் என்னால் எழுந்து நிற்க முடிந்தது.
அறைக்குள் வந்ததும் சுப்பா ராவ் அழகாக பாயை விரித்து, தலையணையை தட்டி சரிசெய்தான். படுக்கச் சொல்லி, போர்வையை உதறி போர்த்திவிட்டு ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிட்டனர்.
எனக்கு தூக்கம் வருவதாக இல்லை. நான் அழவில்லை; ஆனால் கண்ணோரங்களில் நீர்த்துளிகள் கசிந்து தலையணையைப் பொட்டுப் பொட்டாய் ஈராமாக்கிக் கொண்டிருந்தன. கடந்த பதினைந்து இருபது நிமிடங்களில் ஒரு விபத்து போல நடந்து முடிந்த அத்தனையும் கனவு போல் தோன்றியது.
கரிய அரிவாள் போல மீசைகளை வைத்துக்கொண்டு பயமுறுத்தும் ஊர்ப்புற எல்லைச் சாமிகளை விட, மீசை மழிக்கப்பட்ட மதியின் முகத்தில் முடிச்சுகளும் மர்மங்களும் அடங்கியிருப்பதாகப்பட்டது.
இதையெல்லாம் தெரிந்து கொள்ளவா நான் இங்கே வந்தேன்..?
அப்போதுதான் சட்டென நினைவுக்கு வந்தது. இன்று பிளாண்ட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு இன்னொருவரிடம் ‘புது ஆளுங்க மாறி மாறி வந்தாலும் யாரும் ரொம்ப நாள் தங்க மாட்டுக்குறாங்களே..! அதுதான் ஏன்னு தெரியல. இவரு எத்தனை நாளைக்கோ..! ஓனரும் மாறி மாறி யாரையாவது இங்கே கொண்டு வந்திர்றாருப்பா!’ என்றார்.
உறக்கம் வரவில்லை.
எழுந்து அமர்ந்தேன்.
அந்த அறையிலிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.
மணியைப் பார்த்தேன் பதினொன்று.
நாளைக்கே இங்கிருந்து புறப்படுவதென முடிவெடுத்தேன்.
எஃப் எம் கேட்போம் என்றாலும், என் பலகீனமான மனநிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. கொண்டு வந்திருந்த வார இதழ்களை வெறுமினே கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்தேன். எதிலும் மனம் உய்க்கவில்லை. அலுத்து, விளக்கை அணைத்துவிட்டு உறக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் ஓசைக் கேட்டது.
அதைத் தொடர்ந்து “சார்..! சார்..!” என்று பெரியவரின் குரல்.
எழுந்து போய் திறந்தேன்.
“எப்போ இங்கிருந்து போகப் போறீங்க..? சீக்கிரம் போயிருங்க!” குரல் மட்டும் வந்தது ஆள் யாரும் அங்கேயில்லை!
திடுக்கிட்டேன்.
அப்போதுதான் புரிந்தது அது கனவென்று.
புரண்டு கொண்டிருந்தவன் எப்படியோ தூங்கிவிட்டேன் போலும்.
மீண்டும் மணியைப் பார்த்தேன்.
இரவு ஒன்று! முதல் நாளே இப்படி தூக்கம் பறி போயிக் கொண்டிருப்பது என்னைக் கவலைக்குள்ளாக்கியது.
வெளியில் யாரோ நிற்பது போன்றொரு பிரம்மை. கதவைத் திறந்து பார்க்கவும் உள்ளுக்குள் பயம்.
அங்கே யாரோ நடப்பது போன்றும் உணர்ந்தேன்.
பீதியில் வியர்க்க தொடங்கியது.
“பிரபா…” மெல்லிய சத்தம் – அது மதியின் குரல்தான்.
“மதி…” – இது… இது… சுப்பாராவின் குரல்லவா..?! எனக்கு ஒன்றும் புரியவில்லை..!
“பிரபா ஏண்டா இப்டி பண்ணின..?”
“…”
“பேசு!”
“இந்த கேள்விய ஆயிரம் முறை கேட்டிருப்ப!” சுப்பாராவ் மதியோடு இப்படி ஒருமையில் எல்லாம் பேசுவானா..?
ஆமாம் ஏன் மதி, அவனை பிரபா என்று அழைக்கிறார்..?
நான் கேட்பது எல்லாம் நிஜமா அல்லது இதுவும் கனவா இல்லை மதியின் சித்து விளையாட்டுகளா..?
“இன்னைக்கு அந்த மஞ்சள் புடவையில ரொம்ப அழகா இருந்தே!” சுப்பாராவ்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“உனக்குதான் மஞ்சள்னா ரொம்ப பிடிக்குமே பிரபா!”
“…”
“எத்தனை முறை பாத்துருக்கேன். நீ மஞ்சள் பூசி பள்ளிக் கூடத்திற்கு வரும்போது எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கல்ல!” மதியின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது.
“…”
“சாரிடா!” இப்போது அழ ஆரம்பித்தார்.
“…”
அங்கே என்ன நடக்குது என்று எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. அதே சமயம் இதெல்லாம் அனுமானுசியமாகவும் இருக்கலாம் என்ற பயமும் என்னைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
பேய்க்கதைகள், பார்த்த படங்கள் எல்லாம் கதவை மட்டும் திறந்து விடாதே என என்னை எச்சரிக்கை செய்தன.
“ரொம்ப கஷ்டப்பட்டுட்டீல்ல… பிரபா!” மறுபடியும் மதியின் அழுகை.
ஆனால் மதி பேசுவதற்கு பதில் குரல் எதுவும் வராமல் இருந்ததைக் கண்டு எனக்கு திகைப்பாக இருந்தது. யார் அந்த பிரபா..? சுப்பாராவை ஏன் அப்படி அழைக்கிறார்..? இல்லை நான் இன்னும் கனவிலேயேதான் கிடக்கிறேனா? ஆனால் எனக்கு விழித்திருப்பது போல்தான் தோன்றியது.
ஒரு வேளை நான் கனவில் இருந்தால் கதவைத் திறந்துப் பார்த்தால் என்னவாகிவிடப் போகிறது..?
அப்படி நினைத்த போது இல்லை இல்லை இது கனவில்லை எல்லாம் நிஜம்தான் என புரிந்தது.
என்னயிருந்தாலும் கதவைத் திறந்து பார்த்துவிடுவது என முடிவு செய்தேன்.
எழுந்து விளக்கைப் போட்டேன்.
கதவருகே சென்றபோது சத்தங்கள் நின்றுவிட்டது போல தோன்றிற்று.
மெல்லத் திறந்துப் பார்த்தேன்.
அங்கே யாருமே இல்லை.
இந்த இடத்தில் இனியும் இருப்பது எனக்கு பாதுகாப்பாக படவில்லை.
காலை விடிந்ததும் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என முடிவெடுத்தேன்.
அப்போது அடுத்த அறையிலிருந்து அவர்கள் இருவரும் சிரிக்கும் சத்தம் கேட்டது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
செவ்வாய்கிழமை தொடரும்