அழகு ராஜா
ஆதி ஆயுதம், வேட்டை இரு சிறுகதை நூல்களின் தொகுப்பே இந்நூல்.
நண்பர் ஒருவர் என்னிடம் ஏன் நீங்க நாவல்,சிறுகதை,கவிதை நூல் வாசிக்குறீங்கே இந்த இலக்கியம் வரலாறு அரசியல் வாசிக்க மாட்டீங்களான்னு ? கேட்டார்.
சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கிற ஆர்வம் இருக்கத்தான் செய்தது என்றாலும் புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கத் தெரியாது. அவரிடம் முதலில் நம் மண்ணையும் மக்களையும் பற்றிப் பேசும் புத்தகங்களை வாசிப்போம், பிறகு மற்ற புத்தகங்கள் வாசிக்கலாம் என்றேன்.
இந்த நூலில் கூட எனது 34 வயது வரை நான் சந்தித்த மனிதர்களும் என் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் கதைகளாக உள்ளன.
நான் உசிலம்பட்டிக்காரன் வேலராமமூர்த்தி ஐயா ராமநாதபுரத்துக்காரர் இருவருக்கும் ஊர் தான் வேறு வேறே தவிர அவரின் கதை நாயகர்களின் அன்பும் ,கோபமும் ஒன்றே அதனாலே ஐயாவின் எழுத்து மீது எனக்கு காதல் அதிகம் ♥
ஹிட்லர் – எங்கள் ஏரியாவில் சோமசுந்தரம் அண்ணன் ஒருவர் இருந்தார். கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரின் அண்ணன் கல்யாணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடத்தி வைத்தார்கள். வசதியான குடும்பம்தான் என்றபோதிலும் அண்ணன் தம்பி இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. வேறு வேலைக்குச் செல்ல இயலாமல் ஏரியாவில் சொல்ற வேலையைச் செய்தார்கள். சாப்பாடு போட்டுக் கொடுக்கிற பணத்தை வாங்கிப்பாங்க அவர்களை போலத்தான் இந்தக் கதையில் வரும் கதையின் நாயகன்.
ஊரில் இருக்கிறவங்க சொல்ற வேலையைச் செய்து, கொடுக்கிறதை வாங்கிக் குடும்பத்தை நடத்தி வருபவன்தான் ஹிட்லர். இது ஊர் வைத்த பெயர் அவனின் பெற்றோர் வைத்த பெயர் ஆப்ரஹாம். அதை ஏனோ மறந்து சின்ன பயலுக கூட ஏலே ஹிட்லர் இங்க வாடான்னு கூப்பிட்டாச் சொல்லுங்கன்னு ஓடுவான்.
துரையும் இவனும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் அவன் மிலிட்டரியில இருந்து லீவுக்கு ஊருக்கு வந்திருப்பதாக டீக்கடையில் சொல்வதைக் கேட்டு அவனின் வீட்டை நோக்கி ஓடினான். வீட்டு வாசலில் நின்றவனை உள்ளே அழைத்து தனது மனைவியிடம் இவர் தான் ஆப்ரஹாம் என்னுடன் படித்தவர் எனத் துரை சொன்னதும் அழுகை வந்து விட்டது ஹிட்லர்க்கு.
ஏன் அழுகையைப் பார்த்து ஏன் ஆப்ரஹாம் அழறீங்க எனத் துரை கேட்டதும் நான் அழலேங்க… என்னையும் ஆப்ரஹாம்ன்னு கூப்பிட ஆள் இருக்குன்னு சந்தோஷப்படுறேன் என்பான்.
அவனுடன் சேர்ந்து நாமும் சந்தோசப்படுவோம்.
இருளப்பசாமியும் 21 கிடாயும் – ஒரு காலத்தில் மதுரை மாவட்டத்தில் – வானம் பார்த்த பூமி – வயிற்று பிழைப்பிற்காக சாராயம் காய்ச்சி ,களவில் ஈடுபட்டு காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்களின் இன்றைய தலைமுறையினர் பலர் காவல்துறையில் அடிமட்டத்தில் இருந்து உயர் பதவிகள் வரை வகிக்கிறார்கள்.
இருளாண்டி தேவர் தலைமையில் ஆட்டைக் களவாடப்போன இடத்தில் ஊர் சனத்திடம் மாட்டாமல் தப்பி வந்தாச்சு. ஆனா கிராம மக்கள் ஒன்னு சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் தர, முதல் நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க என எல்லா ஆம்பிள்ளைகளுக்கும் கம்பியைக் காயவைத்து கன்னம், தொடை, கழுத்து, வயிறு, முதுகுன்னு சூடு வச்சாங்க.
அந்தத் தழும்பை தடவியபடி பழசை நினைத்துக் கொண்டு இருளாண்டித் தேவர் மந்தையில் படுத்து இருக்க,
‘ஏப்பா மூத்தவர் மகன் சேது வந்திருக்குதாம்’ என்று ஒருவர் சொல்ல, மந்தையில் இருந்த எல்லாரும் சேதுவைப் பார்க்க மூத்தவர் வீட்டுக்கு போனார்கள்.
‘எங்கப்பா வேலை’ என விசாரிச்சுப் பேசி கிட்டு இருக்கிறப்ப. ‘உங்க அண்ணன் எங்கப்பா’ என்றதும் ‘எனக்குச் சப்இன்ஸ்பெக்டர் வேலை கெடச்சா இருளப்பசாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக்கடன் அதான் கிடாக்குட்டி வாங்கப் போயிருக்கு’ என்றான் சேது.
கன்னத்தில் இருந்த தழும்பைத் தடவிக் கொண்டே ‘என்னது கிடாக்குட்டி வெலக்கி வாங்கப்போனாராம்முல்ல நம்ம வீட்டுப்பிள்ளைக்கு சப் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு நம்ம சனம் எல்லாம் சேர்ந்து ஒன்னு இல்ல இருபத்தியோரு கிடாய் வெட்டுறோம்’ என்றார் இருளாண்டித் தேவர்.
‘எதுக்கு மாமா வேண்டாம்’ எனச் சேது சொல்ல, ‘கள்ள ஆடு இல்ல மருமகனே எல்லாம் நம்ம சொந்த ஆடு’ என்று சொன்னதும் சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது.
காலமெல்லாம் காயம்பட்ட சனங்கள்.
தம்பி சேது இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை சப்இன்ஸ்பெக்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு எங்க எல்லாரோடையும் நீ உக்காந்து பேசனும் என்ற கோரிக்கை எழ,
சேது சப் இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வர, எல்லோரும் தோளில் கிடந்த துண்டைக் கக்கத்தில் அடுக்கியபடி திண்ணையை விட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்.
நெஞ்சுப் பின்னல் – மாடசாமி ஏகாலிக்கு மகள் லட்சுமி என்றால் உயிர். பெஞ்சாதி மாடத்தி செத்து ஏழெட்டு வருடமிருக்கும்.
ஒன்பதாவது போனப்ப வயசுக்கு வர இளவட்டங்கள் பள்ளிக்கூடத்தில் கேலி பேச பள்ளி போவதை நிறுத்தினாள்.
துவைத்த துணிகளை வீடு வீடாகக் கொண்டு போய் மாடசாமி தான் காெடுப்பார்.
லட்சுமி ஒரே ஒரு வீடு தான் போவாள் ராணுவத்தில் வேலை பார்க்கும் துரை வீட்டுக்கு. வேலை முடிஞ்ச பின் துரை மனைவி தமயந்தியிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பாள்.
தமயந்திக்கு ராஜேஷ், ராதிகா என இரண்டு பிள்ளைகள். ராஜேஷ் சொன்னதைக் கேட்க மாட்டான், ஓரு வேலை செய்ய மாட்டான். ராதிகா சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து விடுவாள்.
விடுமுறைக்குத் துரை ஊருக்கு வந்து இருந்தார். அப்போது லட்சுமி அழுது கொண்டே அவர்கள் வீட்டுக்கு வந்தாள்.
என்னடி ஆச்சுன்னு தமயந்தி விசாரிக்க நான் தண்ணிக் கெணத்துக்குப் போயிருந்தேன் நான் கட்டி இருக்கிற சேலை தலையாரி சம்சாரம் சேலைன்னு கயிறாலே அடிச்சுட்டாங்கன்னு சொல்கிறாள்.
மாடசாமி பதைபதைத்து ஓடி வந்தவன் தமயந்தியிடம் தாயி சிறுகச் சிறுக சேர்த்து வச்ச முந்நூறு ரூவா இருக்கு என் மகளுக்கு சேலை எடுத்துக் கொடுங்கம்மா. நான் போனா ஏழை பயன்னு நல்ல சேலை எடுத்து தர மாட்டாங்கன்னு சொல்கிறான்.
கடைத்தெருவில் இருக்கும் ஜவுளிக்கடையில் தமயந்தி வீட்டுக்கு நல்ல பழக்கம் இருப்பதால் யாராவது போய் அம்மா சொல்லி விட்டாங்கன்னு சொன்னா இருப்பதில் நல்லதாய், நல்ல கலராய் சேலைகளை எடுத்துக் கட்டிக் கொடுத்து விடுவார்கள். பிடித்ததை எடுத்துக் கொண்டு மற்றதை திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.
துரை கூட ராதிகாவும் ராஜேஷும் கடைக்குப் போய் சேலைகளைக் கொண்டு வந்தாங்க.
ராஜேஷ் தலையில் இருந்த பொட்டலத்தை இறக்கி சேலைகளை பார்க்க. இதுல சின்ன பூ இருந்தா நல்லா இருக்கும் என்ற தமயந்தி ராஜேஷிடம் சொன்னாப் போகமாட்டான் என்பதால் ராதிகாவைப் போகச் சொல்கிறாள். ஆனால் நீ இரு நான் போய் மாற்றி வாங்கி வருகிறேன் என ராஜேஷ் கிளம்பினான்.
சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தான். அவள் விரும்பிய சேலை கிடைத்ததும் மற்றவற்றைக் கொடுத்து விட்டு வாவென ராஜேஷிடம் சொல்லிவிட்டு ஒரு வேலை பார்க்காத எம்மகன் இப்ப இப்படி வேலை பார்க்கிறானே என ஆச்சர்யப்பட்டுச் சொல்கிறாள்.
தலையில் துணிப் பொட்டலத்தோடு திரும்பித் தன் தாயாரைப் பார்த்து ராஜேஷ், ஊராரோட அழுக்குத்துணியை காலமெல்லாம் இந்த அக்கா சுமக்கிறாங்களே அவங்களுக்காக புதுத்துணிப் பொட்டலத்தை நான் ஒரு நாள் சுமந்தால் என்ன ? என்று சொன்னதும் தமயந்திக்கும் லட்சுமிக்கும் ‘குபுக்’ என கண்ணீர் இறங்கியது என்று எழுதியிருக்கிறார்… நமக்குந்தான்.
இது போல மண்ணின் வாழ்வியலைப் பேசும் 38 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
வேலராமமூர்த்தி கதைகள்
வேலராமமூர்த்தி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்: 280
விலை: 300
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.