கேலக்ஸியின் கலை இலக்கியக் குழும மாதாந்திர நிகழ்வு, கதைப்போமா – சனி (12/10/2024) – அபுதாபி
கேலக்ஸி கலை இலக்கியக் குழுமத்தின் மாதந்திர ‘கதைப்போமா’ நிகழ்வு ஹாட்ரிக் அடித்திருக்கிறது. ஆம்… தொடர்ந்து மூன்று மாதங்கள்… ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் அடுத்த மாதம் இந்தத் தேதியில் இந்த இடத்தில் நிகழும் எனச் சொல்லி நடைபெறும் சிறப்பான ஒரு கூட்டமாக மாறியிருக்கிறது. கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் நான் இந்தக் கதை / நாவல் / கட்டுரை குறித்துப் பேசுகிறேன் என வரிசையில் நிற்பது சிறப்பு என்றால் பெரும்பாலானோர் மகிழ்வாய் குடும்பங்களுடன் வந்து கலந்து கொள்வது அமீரகத்தில் நிகழும் மற்றுமொரு சிறப்பு.
இந்தக் கூட்டத்தில் இந்தக் கதைதான்… இன்னார் எழுதியதைத்தான் பேசவேண்டும் என்பதெல்லாம் இல்லை ஊர்க்கதை முதல் உலகக் கதை வரை அவரவர் தங்களைக் கவர்ந்த கதைகளைப் பற்றி விரிவாய் பேசுகிறார்கள். ஆங்கில நாவல்களை எல்லாம் அவ்வளவு அழகாக பேசும் போது ஆங்கில நாவல்கள் பக்கம் தலை வைத்துப் படுக்காத எனக்கெல்லாம் ஒரு திரைச் சுருக்கம் கேட்டது போல் அத்தனை மகிழ்வு. சகோதரர் பிலால் அலியாரின் குழந்தைகள் முதல் பெரும் பேச்சாளர்களான பாலாஜி அண்ணன், சகோதரி ஜெசிலா வரை அனைவரும் சிறப்பாகப் பேசுகிறார்கள்.
இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு… நிகழ்வு முடிந்த அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அனைத்து வீடியோக்களையும் தொகுத்து மிக அழகாகப் பதிவேற்றம் செய்து விடுகிறார் பாலாஜி அண்ணன். வீடியோக்கள் கேலக்ஸி யுடியூப் சேனலில் இருப்பதால் இங்கு விரிவாக எழுத வேண்டிய வேலை எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன். இந்த முறை பேச்சாளர்களின் பேச்சுக்கள் எல்லாத்தையும் எழுதவில்லை, கொஞ்சம் கொஞ்சம் தொட்டு எழுதியிருக்கிறேன். வீடியோவில் பார்க்கும் போது இந்த எழுத்தைவிட இன்னும் சிறப்பாக இருக்கும். கேலக்ஸி யுடியூப் சேனலில் வீடியோக்களைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
சகோதரர் பால்கரசு, சிறப்பாக படமெடுக்கிறார். அருமை, அழகு என்ற இரண்டு சொற்கள் கொடுத்த உற்சாகத்தில் நேற்றெல்லாம் 600, 700 படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார் மனிதர். காலையில செல்போன் திணறுச்சு என்னாச்சு… மண்டையைப் போடப் போகுதான்னு யோசிக்கும் போதே சகோதரி ஜெசிலா அவர்கள் போட்ட கருத்தில் இவ்வளவு படங்களா… என்னோட போன் திணறுதுன்னு சொன்னதும்தான் அப்ப நம்ம போனையும் பால்கரசுதான் தாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது. வைரஸாக இல்லாமல் வசீகரிக்கும் படங்களால் தாக்கியிருப்பது சிறப்புத்தான். சிறப்பான படங்களுக்கு வாழ்த்துகள் பால்கரசு.
அபுதாபியில் விழா என்றதும் எங்கு வைக்கலாம் என சதீஷ் பல இடங்களில் முட்டி மோதி இறுதியில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தார். அவருக்கு அலுவலகப் பணி என்பது இத்தனை மணிக்கு முடியும் என்பதெல்லாம் இல்லை, எப்போது முடிகிறதோ – பெரும்பாலும் இரவு பத்துக்கு மேல்- அதன் பிறகு ஒரு விழாவுக்கான வேலைகளைப் பார்ப்பது என்பது எல்லாராலும் முடியாத காரியம். அவர் பார்த்திருந்த இடத்தை நானும் அவரும் போய் பார்த்து, பேசிவிட்டு வந்தோம். அங்கு அவருக்கு இருந்த மரியாதையைப் பார்த்தபோதுதான் ஒரு பெரிய கை… நம்மகிட்ட இத்தனை அன்பாகப் பழகுகிறது என்பது புரிந்தது. மனுசனுக்கு இப்படியான நட்புக்களைவிட வேறெதுவும் பெரிதில்லை. பின்னர் பிர்தோஷ் பாஷா அங்க எதுக்குங்க… இங்கயே வச்சிக்குவோம் என அதீஃப் குழும அலுவலகத்தில் நிகழ்வு நடத்த அனுமதி வாங்கியிருந்தார். அவர்களும் இன்முகத்துடன் இடம் கொடுத்ததுடன் நிகழ்வுக்கு வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்து, பாலாஜி அண்ணனுக்கும் சகோதரி ஜெசிலா அவர்களுக்கும் புத்தகப் பரிசு கொடுத்து மகிழ்ந்தார்கள். மேலும் தங்கள் அலுவலகப் பணியாளர்களையும் உதவிக்கு அமர்த்தித் தந்தார்கள். மிகச் சிறப்பான அரங்கம்… அன்பான மனிதர்கள்… நட்புக்கு மரியாதை செய்த அதீஃப் குழுமம், சதீஷ் மற்றும் பிர்தோஷ் பாஷாவுக்கு நன்றி.
அதீஃப் குழுமத்துக்கு கேலக்ஸியின் வெளியீடான கலைஞர் உரையுடன் வந்த திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. அதைத் திராவிடப் போர் வாள் பிலால் அவர்கள் கேலக்ஸி சார்பாக வழங்கினார். பிலால் மேடையேறினால் அரசியல் இல்லாமல் பேசலாமா… கூடாதே… திருக்குறளுடன் கழகத்தை இணைத்து ஒரு சிறு உரையை, தொண்டை கட்டியிருந்த போதும் கொட்டுக்காளி சூரி போல் பேசிவிட்டே இறங்கினார்.
நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னர் அதீஃப் அலுவலகத்தில் நடைபெற்றதால் அரசு நடைமுறைப்படி பாதுகாப்பு குறித்த வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதன்பின் எப்பவும் போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. நிகழ்வை அவர்களின் ஊழியர் ஒருவர் மிகச் சிறப்பாக போட்டோவும் எடுத்துக் கொண்டிருந்தார்.
மொத்தம் 11 பேர் பேசுவதாக இருந்தது. அதீஃபா வரவில்லை என்றாலும் பதிமூன்று பேர் பேசியதால் நிகழ்வு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. பேச்சாளர்கள் அதிகம் என்பதால் பத்து நிமிடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாலாஜி அண்ணன் சொல்ல, அதெல்லாம் அதிகம் எட்டு நிமிடம் போதும் என்ற தொகுப்பாளர் நாஷ் முதற்கொண்டு பெரும்பாலானோர் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளத்தான் செய்தார்கள். அப்படி அவர்கள் கதையை சொன்னதுதான் சிறப்பு. எட்டு நிமிடம், ஏழு நிமிடம் எனச் சுருக்கும் போது சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டு விடுவார்கள். இதில் பால்கரசு நேரம் கருதி நிறைய விஷயங்களை விட்டு விட்டேன்னு முடிக்கும் போது பனிரெண்டு நிமிடங்களைக் கடந்திருந்தார், அவர் இப்பத்தான் கதைக்குள் வருகிறேன் என்று சொன்னது ஏழாவது நிமிடத்தில் என்றாலும் அனைவரின் பேச்சும் சிறப்பு, என்னைத் தவிர.
கலைஞன் நாஷ்… கேலக்ஸி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். சென்ற கூட்டத்தைவிட இந்த முறை அடித்து ஆடினார். பொறுப்பைக் கொடுத்துட்டா கொஞ்சம் ஓரமா நில்லுங்கண்ணே… நான் பேசுவேனுல்ல என பாலாஜி அண்ணனை அடிக்கவும் செய்தார்… சில இடங்களில் அதிரடியாகப் பேசி ஆடவும் செய்தார். சிறப்பு. மகிழ்ச்சி.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க இருந்த அதீஃபா கதீஜா பிலால் வரவில்லை என்பதால் சகோதரர் இராஜாராம் வசம் களம் ஒப்படைக்கப்பட்டது. போன முறை கன்னிப் பேச்சு என்றாலும் மழலைப் பேச்சால் அனைவரின் மனதையும் கவர்ந்த அதீஃபா பேசாதது வருத்தமே. இராஜாராம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் போனில் பேசும் போது ஏதாவது ஒரு விசயம் குறித்துப் பேச ஆரம்பித்தால் அதன் ஆணி வேர் வரை அலசி ஆராய்வார். அப்படிப்பட்டவரின் கையில் உப்பு வேலி கிடைத்தால் 4000 கிலோ மீட்டர் உப்பு வேலியையும் ராய் மார்க்ஸ்ம் ஆராய்ந்ததை விட, அதன் புள்ளி விபரங்களைக் குறுக்கு வெட்டுத் தோற்றமாய் அழகாய் எடுத்து வைத்தார்.
ராஜா பேசும்போது கிட்டத்தட்ட 14 அடி உயரத்துக்கு அடர்த்தியான முள்வேலி, இந்த முள்வேலியைத் தாண்டி மறுபக்கம் யாரும் போகமுடியாது. இதை ஆங்கிலேயன் எதற்காக வைத்தான் என்றால் சர்க்கரையை எல்லாரும் பயன்படுத்தமாட்டோம் என்றாலும் உப்பை எல்லாரும் பயன்படுத்தியே ஆவோம் என்பதால் உப்பு மேல் வரியை விதித்தார்கள். இதனால் மிகவும் நலிவடைந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றார்.
மேலும் இதில் இருக்கும் நிறைய விசயங்களை வாசிக்கும் போது நான்கூட வெள்ளைக்காரர்களின் இந்தியா குறித்த பார்வை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தான் ஆனால் அவர் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் என்றார். கிட்டத்தட்ட சீனப் பெருஞ்சுவரின் பராமரிப்புச் செலவுக்கு ஆனதொகை இந்த வேலியைப் பராமரிக்க ஆனதாக அன்றைக்கு பொதுப்பணித்துறையில் இருந்த அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதையும் இதில் எழுதியிருப்பதாகச் சொன்னார். ராஜா மிகச் சிறப்பாக நிகழ்வின் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தார். உப்பு வேலி அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ராஜா சொல்லி, அவர் கொடுத்துத்தான் நானும் ஒரு வருடத்துக்கு முன்னர் வாசித்திருக்கிறேன்.
அடுத்ததாக தொகுப்பாளர் பணி செய்து கொண்டிருந்த நாஷ், எழுத்தாளர் ரபீக் ராஜா அவர்கள் எழுதிய ‘ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கனவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ‘அப்பா’ என்னும் கதையைப் பற்றிப் பேசினார். சிறுவயது முதல் அப்பா மீது பாசமில்லாத ஒரு மகனின் பார்வையில் நகரும் கதை குறித்துப் பேசினார். அப்பாவின் மரணத்துக்கு அவன் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லி, சோகமான கதைகளை எல்லாம் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் எனச் சொன்னார்.
மேலும் அவர் பேசும்போது நாலு மணிக்கு அவனோட அம்மா கதவைத் தட்ட, தூக்கத்தில் இருந்து எழுந்தவன் அப்பா செத்துட்டாரோ… இப்பப் போய் நான் அழுகணுமா என நடித்துப் பார்த்துக் கொண்டே கதவைத் திறக்க, அப்பாவுக்கு நினைவு வந்திருச்சு… உன்னயப் பார்க்கணுமாம் என அம்மா சொல்ல, என்னைய எதுக்கு இந்த மனுசன் பார்க்கணும்… எப்பவும் வஞ்சுக்கிட்டே இருப்பாரே என நினைத்துக் கொண்டே செல்ல, கண்ணால் அழைத்து நான் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியாது… நான் இறந்ததும் என்னை அடக்கம் செய்யும் செலவை எல்லாம் நீதான் பண்ணனும் என்று சொல்ல, இதை ஏன் என்னிடம் சொல்லணும்… நான் எவ்வளவு சம்பாரிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். அப்படியிருந்து எதுக்கு இதை, அதுவும் எல்லார் முன்னிலையிலும் சொல்லணும் என இவன் யோசிக்க, அப்பாவோ மீண்டும் நினைவிழக்கிறார். இவனோ புலம்ப ஆரம்பிக்கிறான் எனக் கதையை மிகச் சிறப்பாக விவரித்தார். நாஷ் இந்தக் கதையை அவ்வளவு ரசித்துச் சொன்னார். இந்தப் புத்தகத்தை அவருக்குக் கொடுத்த கௌசருக்கு நன்றி சொல்லவும் அவர் மறக்கவில்லை.
அடுத்துப் பேச வந்தவர் எழுத்தாளர் தெரிசை சிவா, இவரது எழுத்தும் பேச்சும் எப்போதும் ரசிக்கவும் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும் வைக்கும். ஜெயமோகனின் ‘கணக்கு’ என்ற சிறுகதையைப் பற்றிப் பேசினார். ஒருவன் சொல்லும் கணக்கு அது எதைப்பற்றி என்றாலும் அத்தனை சரியாக இருக்கும் என்றாலும் கணக்கில் ஏமாற்றும் கணக்கப்பிள்ளையிடம் சொன்ன கணக்கில் தப்பு வருவதையும் அவனின் கணக்கு சரியே என்றாலும் ஏமாற்றுபவனின் பித்தலாட்டம் தெரியாமல் அவன் அழுது கொண்டே உக்கி போட்டு, அழுதபடியே வீட்டுக்குப்போவதையும் அவர்களது வட்டார வழக்குப் பேச்சில் மிகச் சிறப்பாகச் சொன்னார்.
அவர் பேசும்போது காளியான் என்பவன் தங்கள் வீட்டில் இருக்கும், தனது தாத்தாவுக்கு அரசர் கொடுத்த பரிசான மரப் பலாப்பழத்தை அச்சுதன் நாயர் என்ற கணக்குப்பிள்ளையிடம் விற்க வருவதாகவும் அப்போது எங்க தாத்தா கணக்குக் கண் உள்ளவர். ஒரு வயல்ல கொண்டு போய் அவரை நிறுத்தினால் அதில் எத்தனை நாற்று இருக்கு என்பதை அவர் சொல்லிடுவார். அந்த அளவுக்கு கணக்குக் கண் உள்ளவர் என்று சொல்வான். அதைக் கேட்ட அச்சுதனுக்குப் பெரும் ஆச்சர்யம், நானே கணக்கப்பிள்ளை என்னால் முடியாததை இவனின் தாத்தா எப்படிச் சொல்லமுடியும் என யோசிக்கிறான்.
அதன் பின் அவன் அவங்க தாத்தா பற்றிச் சொன்னதும் அவன் கேட்ட தொகையை தருவதாகச் சொல்லி, இருந்தாலும் இது எப்படிப்பா சாத்தியம் இந்தளவுக்கு கணக்குக் கண் உள்ள ஆட்கள் இருக்காங்களா..? என அச்சுதன் ஆச்சர்யமாகக் கேட்க, சுடலை அருளாளே நானும் கொஞ்சம் கணக்குக் கண் உள்ளவன்தான் என்று காளியன் சொல்ல, ஒரு பெண்ணோட தலையில் எத்தனை முடியிருக்குன்னு உன்னால் சொல்ல முடியுமான்னு கேட்க, முடியும் என்று சொல்கிறான். உடனே வீட்டுக்குள்ள போய் ரெண்டு பை நிறைய உளுந்து எடுத்துக் கொண்டு வந்து இதில் எவ்வளவு இருக்கு என்று கேட்க, அவன் சுடலை மாடனைத் துணைக்கு அழைத்து எண்ணி ஏழாயிரத்துச் சொச்சம் எனச் சொன்னதும் சரியா இருக்குமான்னு அச்சுதன் கேட்க, சரியா இருக்காது பத்து கூடுதல் கொறச்சல் இருக்கலாம் ஏன்னா உளுந்து ஒரே அளவுல இல்லையில்ல எனக் காளியான் சொல்கிறான். உடனே தனது பணியாட்களை எண்ணச் சொல்ல, ஆறு உளுந்து கூடுதல் இருக்கு… கணக்குச் சரி என்று சொல்லி நகரும் கதை குறித்து இன்னும் விரிவாகப் பேசினார். சிவாவின் பேச்சு எப்போதும் சிறப்பு, ரசனையாய் கேட்கலாம் என்பதை பார்வையாளர்களின் பக்கமிருந்து வந்த சிரிப்பொலி சொல்லியது.
அடுத்ததாய் வைரமுத்துவின் ‘பெய்யெனப் பெய்யும் மழை’யோடு வந்தார் ஆசிரியை ஆண்டாள் ரேவதி. வாத்தியாருக்குப் பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன… கவிதைகளை எல்லாம் கதைகளாக்கி மிகச் சிறப்பாகப் பேசினார். அவர் பேசும் போது இங்க பேசுனவங்க எல்லாம் சிறப்பாகப் பேசினார்கள். அதைப் பார்த்ததும் இப்ப எனக்குத் தோணுது நாமளும் சிறுகதையை எடுத்து வந்து இன்னும் விபரமாப் பேசியிருக்கலாமோன்னு… இருந்தாலும் நாம் ஒரு இடத்தில் பேசும் போது நமக்குப் பிடித்த எழுத்தாளரின் எழுத்தைப் பற்றிப் பேசுவது சிறப்பாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதனால் எனக்குப் பிடித்த கவிஞரின் எழுத்தைப் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு ரொம்பப் பிடித்த துறை ஆசிரியர் பணி… வைரமுத்து அவர்களின் மனைவி கிட்டத்தட்ட இருபத்தியோரு ஆண்டுகள் சென்னை மீனாட்சி கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்று வரும்போது வைரமுத்து அவர்கள், ஒரு மாலையில் மாலையோடு வந்த போது மாலை மாலையாய் அழுதாள் என்று எழுதியிருப்பார் என்றார்.
எறும்புகளுடனான பேச்சு வார்த்தை என்னும் கவிதையில் ஒரு எறும்பும் மனிதனும் பேசிக் கொண்டால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி எழுதியிருப்பார். அதில் நின்று பேசி நேரம் கழிக்க நான் என்ன மனிதனா… என்னுடன் ஊர்ந்து கொண்டே வாருங்கள் என எறும்பு சொல்வதாக எழுதியிருப்பார் என்றும், உன்னுடைய ஆயுள் காலம் எவ்வளவு என மனிதன் கேட்கும் போது ஆறிலிருந்து பத்து வாரம் இருக்கும் என எறும்பு சொன்னதும் இதுக்குத்தான் நீ இவ்வளவு பாடுபடுறியா என ஏளனமாய் என மனிதன் கேட்க, இது சிறிது காலம்தான் என்றாலும் இதில் உட்கார்ந்து பேசவோ, தலை சாய்க்கவோ ஓய்வுக்கோ எனக்கு நேரமில்லை. உங்களை மாதிரி எனக்கு ஒரு வயிறு இல்லை… இரண்டு வயிறு, ஒன்று செரிமானத்துக்கு, அது எனக்கானது, மற்றொன்று சேமிக்கக் கூடியது, அது மற்றொரு எறும்புக்கானது என்று சொல்லும் என இன்னும் சில கவிதைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசினார். நல்லதொரு பேச்சு… குழுமத்தில் முதல் பேச்சு அவருக்கு. சிறப்பு.
அடுத்துப் பேச வந்த நண்பர் சதீஷ், சிறுகதையை அலசி ஆராய்ந்து பேசக் கூடியவர் என்பதை நாங்கள் போன கூட்டத்தில் ‘தீபாவளிக் கனவு’ல உணர்ந்திருந்தோம். இந்த முறை அவர் எடுத்தது மதுரையைச் சேர்ந்த, கென்யாவில் இருக்கும் ராகவன் அண்ணன் வலைப்பூவில் எழுதிய சிறுகதைகளில் ஒன்றான ‘சுனை நீர்’. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாளைய விடியலின் நினைவுகளைப் பேசும் கதை இது. கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவனின் அன்புக்கு ஏங்கும் ஒரு பெண்ணுக்கு அது கானல் நீராய் இருக்கும் போது தன்னுடைய அப்பா, அம்மா, நட்பு எனப் பலரின் நினைவுகள் வந்து போகும். அப்படித்தான் அவள் அன்றைய நாள் முழுவதும் நினைவுகளில் மூழ்கிப் போகிறாள் என்பதை மிக விரிவாகப் பேசினார். அவர் கதையைப் பேசும் போது கதையின் நாயகியான பூஞ்சோலை மதுரையில் இருக்கும் போது, அவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் பையன் பெயர் மாது. வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல் இந்தக் கதாபாத்திரம் ரொம்பப் பரிவுடனும் பாசத்துடனும் உரிமையுடனும் எல்லாருடனும் பழகும். மாது கல்லூரியில் படிக்கும் போது பூஞ்சோலை பத்தாம் வகுப்பு படிப்பதால் அவளுக்கு கணக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கும் போது மிகவும் அன்பாகப் பார்த்துக் கொள்வதால் இப்போது அவன் இருந்தால் நல்லாயிருக்குமே என்ற நினைவு அவளுக்கு வருகிறது. கணவனுக்கு வாழைப்பூ வடை செய்து கொடுக்கலாம் என்று எடுத்து வைத்ததை எடுத்து அதில் இருக்கும் நாறை எடுக்கும் போது மாதுவுக்கு இது ரொம்பப் பிடிக்குமே என்று நினைத்துப் பார்க்கிறாள் என்றும் அதன் பின்னான கதை நிகழ்வுகளையும் சுவைபட பேசிக் கொண்டே வந்தார். மேலும் சுனைநீர் என்னும் இந்தக் கதையில் ரெண்டு சுழி, மூனு சுழி என எதைப் போட்டாலும் இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி சுனை நீர் என்றால் இயற்கையான, மழை ஊற்றுக்களில் இருக்கும் நீர்… அதாவது தன் உள்ளத்தில் இருப்பது சில நேரங்களில் ஊற்றாய் பொங்கி வரும். அதனால்தான் மாது தன் வயிற்றைத் தொட்டதும் உடைந்து அழுகிறாள். மூனு சுழியாக இருந்தால் தொடர்வதை உணரும் சக்தி, அதாவது சொரணை என்பது சரியாக இருக்கும் என்றவர் உறவு முறைகளில் அன்பு பாராட்டுவோம் என முடித்துக் கொண்டார்.
பதினோரு பேரில் ஒருபாதி பேச்சு முடிந்ததும் கேலக்ஸி அடுத்து வெளியிட இருக்கும் ‘மருள்’, ‘தகர்’ மற்றும் ‘தாதி’ ஆகிய நூல்களின் அட்டைப்படம் அறிமுகம் செய்யப்பட்டது. மருத்துவர் பெனடிக்ட் அவர்கள் தனது பணிக்கு – ஒரு இருதய ஆபரேசன் முடித்துவிட்டு – இடையே விழாவுக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று, தங்களது கேலக்ஸி புத்தகங்களை வெளியிடுவது குறித்துப் பேசிய பாலாஜி அண்ணன் முதலாமாண்டு இறுதியில் 12 புத்தகங்கள் வெளியிட்டிருந்த கேலக்ஸி இரண்டாம் ஆண்டு இறுதியில் 40 புத்தகங்கள் என்னும் எண்ணிக்கையை எட்டியது ஒரு சாதனைதான். இப்போது எங்களின் கணக்கு இன்னும் வேகமாகக் கூடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னார். ஆம் நாங்கள் சிறப்பாக நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற எட்டு நாவல்களும் சென்னைப் புத்தகக் கண்காட்சி வெளியீட்டிற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அது போக ஷார்ஜா புத்தகக் கண்காட்சி, மேலும் பல மொழி பெயர்ப்புகள் என கேலக்ஸி நேற்றைய இந்திய வங்கதேச டி20 போல் அதிரடியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நான் எழுதியிருக்கும் ‘மருள்’ நாவலின் அட்டைப் படத்தை அதீஃப் குழுமத்தின் வசீர் அவர்களும் இம்தியாஸ் அவர்களும் வெளியிட்டார்கள். அமீரகத்தின் மிகப்பெரும் குழுமத்தின் சகோதரர்கள் வெளியிட்டதில் மகிழ்ச்சி. அடுத்ததாக தெரிசை சிவாவின் ‘தகர்’ நாவலின் அட்டைப் படத்தை டாக்டர் பெனடிக்ட் அவர்களும் சதிஷ் அவர்களும் வெளியிட்டார்கள். மலையாள எழுத்தாளர் ஆர்.ஷஹானா அவர்கள் மலையாளத்தில் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழியாக்கமான ‘தாதி’யை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் வெளியிட்டார்.
அதீஃப் குழுமத்தின் திரு. வசீர் அவர்கள் தனது சிறப்புரையில் தமிழில் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. எங்கள் அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்கிறோம். நாங்க இந்த இடத்தில் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்கிறோம். இன்றுதான் தமிழ்ல அதிகமாகப் பேசி இந்த இடத்தில் கேட்டிருக்கிறோம் என்று ஆரம்பித்து அதுவரை பேசியவர்கள் அனுபவப்பூர்வமாகப் பேசினார் என ஒவ்வொருவரையும் சொல்லி, அவர்கள் பேசியதைப் பற்றிச் சொல்லியது சிறப்பு. அந்த இடத்தில் அவ்வளவு அழகாக எல்லாருடைய பேச்சையும் ஒரு தொகுப்பு போல சொன்னது ஆச்சர்யம்… மிகச் சிறப்பாகப் பேசினார்.
கிடைத்த சிறிது நேர இடைவெளியில் டாக்டர் பெனடிக்ட் அவர்கள் ஏ.ஐயை வச்சு தனக்கான பல மெடிக்கல் குறிப்புகளைத் தயார் செய்வதாகவும், அதை வைத்து ஒரு நாவல் எழுத முடியுமா என்றும் கேட்டார். அவருக்கு ஐ.டி. மேனேஜரான சதீஷ் சில விளக்கங்கள் கொடுக்க, நாம் இருவரும் சேர்ந்து ஏ.ஐ. மூலம் ஒரு நாவல் எழுதலாம் என்று சொன்னார். விரைவில் எழுதுவார்கள் என்று நம்புவோம்.
அடுத்து திரு. இம்தியாஸ் அவர்கள் பேசும்போது தனக்கு எப்போதும் வாசிப்பின் மீது அதீத ஈடுபாடு உண்டு என்பதைச் சொல்லி, தங்கள் ஊரில் படிக்கும் காலத்தில் பெரும்பாலான நேரங்களில் அதாவது தினமும் நூலகத்தை பூட்டும் வரை தான் அங்கே போய் வாசித்ததாகவும் நிறைய புத்தகங்களை வாசித்ததாகவும் சொல்லி, ‘பொய்யெனப் பெய்யும் மழை’ என்னும் புத்தகத்தை வாசித்ததைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அதிலிருக்கும் வட்டி என்னும் சிறுகதையில் ஒரு கிராமத்தில் பக்கத்துப் பக்கத்து வீடு, ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றொரு வீட்டில் ஒரு ஆண், பெண். இரு குடும்பமும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள்.
முதலாவது வீட்டு அக்காவுக்குத் திருமணம் ஆகி வேறு ஊர் சென்று விடுகிறார். இரண்டாம் வீட்டுப் பையன் மதரஸாவுக்குப் படிக்கப் போகிறான். காலம் நகர, இந்தப் பையன் அந்த அக்காவைப் பார்க்க வருகிறான். அந்த அக்காவோ அவன் தண்ணீர் கேட்டதும் வீட்டில் இருந்து எடுத்துக் கொடுக்காமல் வெளியில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். அவனுக்குச் சந்தேகம் வருகிறது என்றாலும் சாப்பிட நினைக்கிறான்… அவளோ அவனை அங்கு சாப்பிடவிடாமல் தடுக்க நினைக்கிறாள். எதற்காக அப்படிச் செய்கிறாள்…? அதை அவனிடம் அவள் எடுத்துச் சொன்னாளா..? என்பதை மிகச் சிறப்பாகச் சொன்னார். எப்போதோ படித்த கதையை இப்போது சொன்னது சிறப்பு. மற்றவர்கள் கதை சொன்னதைப் பார்த்ததும் தானும் கதை சொல்ல வேண்டும் என இம்தியாஸ் அவர்கள் விரும்பியதுதான் கேலக்ஸியின் கதைப்போமாவின் வெற்றி.
அடுத்து டாக்டர் பெனடிக்ட் அவர்கள் பேசும் போது நாம் தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தைக் கலப்பு அதிகம் வருகிறது. இங்கிருக்கும் அரபிகள், மலையாளிகள் எல்லாம் வேறு மொழி கலப்பில்லாமல் பேசுகிறார்கள் எனவே நாம் நம்முடைய அடுத்த கூட்டங்களில் யார் அதிகமான ஆங்கில வார்த்தை பேசுகிறார்களோ அவர்களுக்கு ஒரு சாக்லெட் கொடுத்துடலாம் என்றார். அவர் இதைச் சொன்னபோது நிறைய ஆங்கில வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். மேலும் ஏ.ஐயை வச்சி நானும் ஐடி புரபஸர் சதீஷ் அவர்களும் சேர்ந்து எதாவது பண்ணலாம் என்றவர் பண்ணலாம் என்பது எனக்கு அவ்வளவாக பிடிக்காத வார்த்தை, செய்யலாம் என்பதே பிடித்த வார்த்தை என்றார். ஆமாம் பண்ணலாம் என்பதைவிட செய்யலாம் நல்லாத்தானே இருக்கு.
இன்னொரு மகிழ்வான விஷயம் என்னன்னா… அதீஃப் குழுமத்தில் மொழிவாரியாக சிறு நூலகம் அமைத்திருக்கிறார்கள். தமிழில் பத்துப் புத்தகங்களுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் ஒன்றாய் என்னுடைய காளையன் நாவலும் இருந்ததைப் பார்த்த போது ரொம்ப மகிழ்வாக இருந்தது. அதீஃப் குழுமத்தின் அன்சாரி அண்ணன் சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தசரதனிடம் வாங்கினார். அந்தப் புத்தகம் ஒரு பிரபல நிறுவனத்தின் நூலகத்தில் இருப்பது மகிழ்ச்சி. அதீஃப் குழுமத்துக்கு நன்றி.
பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் – நாளை மற்றவர்களின் பேச்சு குறித்து எழுதுகிறேன்.
நன்றி.
நன்றி – புகைப்படங்கள் பால்கரசு சசிகுமார்.
(பெரிய பதிவு எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்)
-பரிவை சே.குமார்.