அபு பர்ஹானா
கேஸ் அடுப்புகள் பரவலாக உபயோகத்திற்கு வருவதற்கு முன் விறகு அடுப்புகளும் (கட்டடுப்பு) மண்ணெண்ணெய் அடுப்புகளும் தான் புழக்கத்தில் இருந்தன. மண்ணெண்ணெய் அடுப்புகளிலேயே திரி அடுப்பு , பர்னர் அடுப்பு (ஏர் அடிக்கும் அடுப்பு ) என இரண்டு வகைகள் இருந்தது.
விறகு மற்றும் மண்ணெண்ணெய் குறித்த நினைவுகள் இன்னும் நினைவில் அப்படியேயிருக்கிறது. ஏர் அடுப்பில் தீயை வேகப்படுத்த பம்ப்படித்ததும் , நடுவில் பின்னை வைத்துக் குத்தியதும் அழகிய காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஒன்னாம் நம்பர், ரெண்டாம் நம்பர் என தனித்தனி பின்கள் எல்லாம் அப்போது கிடைத்தது.
பின் குத்தியதும் பரந்து விட்டு ஆக்ரோஷமாக எரியும் தீயின் சப்தம் ஆழி பேரலையின் சப்தம் போலிருக்கும். அந்த அடுப்பைப் பற்ற வைப்பதை எல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்த காலங்கள் எல்லாம் அழகிய கனாக் காலம். தீயின் சப்தமும் மண்ணெண்ணெய் வாசமும் ஒருவிதப் போதையை தரும்..
மண்ணென்ணெய் அடுப்புகளை விட கட்டடுப்பு எனும் விறகு அடுப்புகள் தான் நம்மோடு நீண்ட காலம் பயணித்து மறக்கவும் மறுக்கவும் முடியாத நினைவுகளைத் தந்திருக்கிறது. அடித்தட்டு மக்களின் நண்பனென்றால் அது கட்டடுப்பு தான்.
களிமண்ணால் செய்யப்பட்ட இரண்டு மூன்று அடுப்புகளை வைத்து ஒன்றாகக் கட்டிவிடுவார்கள். இதுதான் அடுக்களை எனும் சமையலறை. பெரும்பாலும் அடுக்களை வளவூட்டில் ( வீட்டின் பின்புறம்) தானிருக்கும்.
கட்டடுப்பில் எரிக்க விறகு, தேங்காய் சிரட்டை மற்றும் புகையிலை சண்டும் ( பீடிக்கு வெட்டியது போக மீதமுள்ள இலை துண்டுகள் ) பயன்படுத்துவார்கள். விறகிற்கு கருவேல மரங்கள் தான் முதல் தேர்வு. உட மரம் ( நீர் கருவை) மற்றும் புளிய மர விறகுகளும் பயன்படுத்துவதுண்டு.
ஒரு எடை , ரெண்டு எடை விறகு வாங்கி அதனைப் பிளந்துப்(வெட்டி) போட்டு வெயிலில் காயப்போட்டு வைத்திருப்பார்கள். காய்ந்த விறகுகளிலிருந்து அதிகத் தீயும் , குறைந்த புகையும் வரும். காய்ந்த விறகுகளை மரத்தையொட்டி அடுக்கி வைத்திருப்பார்கள்.
வெட்டிப்போட்ட விறகுகட்டை தான் எங்களின் முதல் பேட் மற்றும் ஸ்டெம்பு.
காய்ந்த விறகுகளை வீட்டிற்குள் கொண்டுச்செல்வது தான் அந்தக்கால சிறுவர்களுக்கு காசு கிடைக்கச் செய்யும் வழிமுறை. இரட்சகன் படத்தில் சுஷ்மிதா சென்னினை நாகர்ஜூனா தூக்கிட்டு போவதுபோல இரண்டு கைகளில் விறகுகளை அடுக்கியோ அல்லது சாக்கில் ( சாக்கு பையில் ) விறகுகளை அடுக்கி இருவர் சேர்ந்தோ தூக்கிட்டு போவார்கள்.
சுஷ்மிதாவிற்கு நுரையால் செய்த சிலையாவெனக் கவிதை எழுதிய கவிஞர் விறகு தூக்கும் சிறுவர்களுக்கு என்ன கவிதை எழுதியிருப்பாரோ !!
ரொம்ப நாள் உபயோகப்படுத்தாமல் போட்டு வைத்திருந்தால் விறகில் மஞ்சள் நிறத்தில் பொடியொன்று படிந்து விடும். பார்ப்பதற்கு கடலை மாவு போலவே இருக்கும். விறகு அடுக்கும் பொழுது இந்த பொடி கையில் படிந்து சந்தனக்கோடு போலக் காட்சியளிக்கும்.
கேஸ் அடுப்புள்ள இன்றைய கிட்சன்களில் நின்று கொண்டு தான் சமைக்க வேண்டியிருக்கு. ஆனால் அன்றைய அடுக்களையின் கட்டடுப்பில் உட்கார்ந்துக்கொண்டே சமைக்கலாம். அடுப்பாங்கரையில் உட்காருவதற்கென்றே சிறிய பலகையிருக்கும்.
எரிந்து கொண்டிருக்கும் தீயை வேகப்படுத்த தீக்குழல் இருக்கும்.
புல்லாங்குழல் துளையில் புகும் காற்று மெல்லிசையாகி மனங்களை கொள்ளையடிக்கும். தீக்குழலின் துளையில் நுழையும் காற்று தீயை தீப்பிடிக்க வைக்கும் !!!
கருப்பட்டி சாயா போடும்பொழுது , தீக்குழலால் கருப்பட்டியை உடைத்ததும் அதில் ஒட்டியிருக்கும் கருப்பட்டியை ருசிக்கையில் புகையோடு சேர்ந்த தீக்குழல் வாசமும் கருப்பட்டி வாசமும் சேர்ந்து மூக்கையும் நாக்கையும் கிறுக்குப் புடிக்க வைக்கும்.
அதிகமாக தீயெரிகையில் தீயை குறைக்கவும் , தீக்கங்குகளை எடுக்கவும் தீயெடுக்கி இருக்கும். மனித வரைபடத்தின் லைன் ஸ்கெட்ச் போலிருக்கும் தீயெடுக்கி அடுக்களையை விட்டு எங்கும் நகராமல் காதல் கொண்டிருக்கும்.
கட்டடுப்பில் வெந்நீர் போட்டால் கூட அம்புட்டு ருசியாயிருக்கும். மண்பானையில் போட்ட வெந்நீரோடு கலந்த புகை வாசம் நம்மை இன்னும் இரண்டு மொடக்கு அதிகமாக குடிக்கச் சொல்லும்.
எங்கூட்ல வெகுநாட்களாக கட்டடுப்பு உபயோகத்தில் இருந்தது. “தாத்தா ( அக்கா) ! கொஞ்சம் வென்னி குடுங்கனு ” தினமும் ஆள் வந்துட்டே இருக்கும்.
பக்ரீத் சமயங்களிலோ அல்லது வீட்டில் கறிவாங்கும் பொழுதோ ஈரல் வந்தால் , கல் பக்காத்தையும் (கல்லீரலை) மண் பக்காத்தையும் ( மண்ணீரல்) கழுவி கல் உப்பில் ஒரு பொரட்டு புரட்டி அப்படியே தீக்கங்கில் போட்டால் உப்பு சடசடவென சப்தத்தோடு தீயோடும் ஈரலோடும் சங்கமம் ஆகிவிடும்.
ஈரல் வேகும் பொழுது ஒரு வாசம் வருமே !! ப்பா சித்தமும் ஒரு நிமிடம் உச்சநிலைக்கு போய் விட்டு வரும். ஒரு சில நிமிட தீக்குளிப்பிற்கு பிறகு தீயெடுக்கியால் ஈரலை எடுத்தால் நமக்கு முன்னர் சாம்பல் ஈரலோடு ஒட்டி உறவாடி கொண்டிருக்கும் தரையில் இரண்டு முறை தட்டியதும் சாம்பலும் உப்பும் கழன்று விடும்.
சூடு ஆறுவதற்குள் அப்படியே ஒரு கடி.. இந்த பொழப்பு தான் நல்ல ருசிச்சி சாப்பிட கிடக்குது என்பது போல ஒரு சுவை. தீயில் சுட்ட ஈரல் நாக்கு வழியே வயிற்றுக்குள் சரிகமப கச்சேரி நடத்தும். இன்றைய ஆண்ட்ராய்ட் சமூகம் இந்தச் சுவையை முற்றிலும் இழந்து நிற்கிறது.
கட்டடுப்பு காலத்தில் பலாக்கொட்டை , பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, உப்புக்கண்டம், அப்பளம் என எல்லாவற்றையும் சுட்டுச் சாப்பிட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். அடுப்பில் சுட்ட பனங்கிழங்கு மற்றும் சீனிக்கிழங்கு வாசம் ரெண்டு தெரு தாண்டியும் மணக்கும்.
கேஸ் அடுப்புகள் புகுந்த பிறகு கட்டடுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.
சமைக்கும் முறை, பாத்திரம் , இடம் என எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தில் நாம் ரசித்த ருசித்த பல நினைவுகளும் உணவுகளும் பழைய கட்டடுப்போடு புதைத்து போய் விட்டது. அதன் ருசியையும் சுகந்தத்தையும் நாவும் நாசியும் CBI வைத்துத் தேடிக்கொண்டிருக்கிறது..
புகையடித்த சுவர்கள், சாம்பல் படிந்த அடுப்புகள், அடுப்புக்கரி, கவுத்தி போட்ட சோறாக்கும் பானை, மீன் சால்னா சட்டி , அடுப்பு மேல அடுக்கி போட்டிருக்கும் விறகு , தீக்குழல் , தீயெடுக்கி , பலகை , எனப் பழைய அடுக்களையின் அழகிற்கு முன்பு இன்றைய மாடர்ன் கிட்சன்கள் எல்லாம் அழகை கடனாகக் கேட்க வேண்டும்..
நன்றி : படம் இணையத்திலிருந்து