தசரதன்
மார்கழியில் கோவிலுக்கு போவதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று கோவிலுக்கு போகலாமென்று யோசிப்பதற்கும் அருகே உள்ள கோவிலிலிருந்து ஒரு பக்தி பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. அதுவே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியாக தோன்றியது. பீரோவை திறந்து எந்த புடவையை கட்டலாமென தேடியதில் பழைய புடவை ஒன்று அடுக்கிலிருந்து பிதுங்கி காலில் விழுந்தது.
கல்யாணம் வரைக்கும் எனக்கு புடவை கட்ட தெரியாது. இப்பவும் சரியாக கட்ட வராது என்பது வேறு கதை. கல்யாணமாகி கொஞ்ச காலம் சுடிதாரிலே பொழப்பு ஓடியது. முக்கியமான நபர் யாரோ விருந்துக்கு அழைத்திருந்தார்களென கிளம்பினோம். இந்த முறை ‘சுடிதார் போடாத. புடவை கட்டு’ எனக் குரல் கேட்டது. இந்த மனுசனுக்கு எப்படி புரிய வைப்பேன். எனக்கு புடவை கட்டவே வராதென யோசிப்பதற்குள் ‘ஆச்சா….’வென மீண்டும் அதே குரல்.
சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வது போல புடவையை சுற்றிக் கொள்ள முடியுமா? அது எவ்ளோ பெரிய ப்ராஸஸ். ஒரு பெண்ணாய் இந்த கஷ்டமெல்லாம் இந்த மனுசனுக்கு எங்கே புரிய போகிறது. ஆச்சான்னு ஒரு குரல் கொடுத்தா நடுங்கிட்டு ஓடனுமா என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்த பொழுது கதவை திறந்து உள்ளே வந்திருந்தான்.
“அரைமணி நேரமா என்ன பண்ணுற? இன்னுமாடி புடவை கட்டல?”
கட்ட தெரிஞ்சா கட்டமாட்டோமா என நினைத்துக் கொண்டே நேரத்தை பார்த்தேன். அரை மணி நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
“கட்ட வரல…. ” என்றேன்.
லேசாக சிரித்தவன்… புடவை எந்த பக்கம் முந்தானை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, முந்தானை இல்லாத பகுதியை பாவாடைக்குள் சொருகி எப்படி கட்டுவது என்று சொல்லி கொடுக்க ஆரம்பித்தான்.
எனக்கோ அவிழ்ந்து விடுமோ என்ற பயம்.
புடவையின் நுனியில் சிறு முடிச்சி போட்டு சொருகிக் கொள்ளவும் அவன் தான் கற்றுக் கொடுத்தான். சிறு முடிச்சி போடுவதை எனக்கு ஒரு விதமான பாதுகாப்பான உணர்வை தந்தது.
“இந்த ப்ளீட்டுக்கு எவ்ளோ வைக்கனும்” என்றேன்.
‘உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரம்’ என்று சிரித்தவனை பார்த்து கோவப்பட முடியவில்லை.
மானம் கப்பலேறிக் கொண்டிருந்தது.
எனக்கு சுடிதாரே போதும் என்று சொல்லி புடவையை களைய முற்பட்ட பொழுது….
“ஏய்…. ஏய்… இருடி… மலை ஏறிடாத. உன்னை சமாதானம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். ஒரு ப்ளீட்டுக்கு 4 விரல் அளவு தான்” என சொல்லி முடித்தான்.
அந்த கணம் அவனை பார்க்க பாவமாகவும், பொறாமையாகவும் கூட இருந்தது.
அப்படி ட்ரெயினிங் கொடுத்து புடவை கட்ட சொல்லி தந்த புடவை தான் ஒரு நினைவுக்காக வைத்திருந்தேன். பீரோவை திறந்ததும் அடுக்கிலிருந்து நழுவி காலில் விழுந்து கிடக்கிறது.
தூங்கிக் கொண்டிருந்தவனை பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கி சிரித்தவாறே கோவிலுக்கு கிளம்பினேன்.
மூலவரை சந்தித்து விட்டு கோவில் பிரகாரம் சுற்றி வருகையில் துளசி செடி அருகே பேப்பரில் பிரார்த்தனையை எழுதி வேண்டுதலை அருகே இருந்த மரத்தில் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.
ஏனோ புடவை ஞாபகத்தில் வந்தது. ப்ளீட்களில் பூ பூவாய் வரும்படி ஒரு புடவை வாங்கனும். அதை நேர்த்தியாக கட்டி அவனுக்காக மலர வேண்டுமென யோசனை இருந்தது. அதற்குள் நிற்பது கோவிலென புரிய, கோவிலுக்குள் என்ன இப்படி ஒரு யோசனை என தலையில் அடித்துக் கொண்டு புடவை என பேப்பரில் எழுதி உருட்டி பிரார்த்தனைக்காக கட்டி வைத்து விட்டு துர்கை அம்மனிடம் வந்து நின்றேன். யாரோ பூஜையில் மும்முரமாக இருந்தார்கள். அம்மனை தரிசித்து திரும்பவும் அவர்கள் கூப்பிடவும் சரியாக இருந்தது.
ஒரு தட்டில் புடவையும், வளையலும் வைத்து கொடுத்தார்கள்.
வாங்கிக்கம்மா… என்ற குரல் கேட்டு நடுங்கி விட்டது.
விளையாட்டாக எழுதி வைத்து கோவிலை விட்டு போக கூட இல்லையே என யோசிக்கும் போது குங்குமத்தை நெற்றில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அனிச்சியாக கை நீட்டி தட்டை வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் என உளறினேன் பிரஞ்சை இல்லாமல்….
வீட்டிற்கு வந்ததும் புடவையை பிரித்து பார்த்தேன். வெளீர் ரோஸ் நிறத்தில் புடவையின் கீழ்பாகத்தில் வானவில் கலரில் பெரிய பூ பூவாய் அழகாய் இருந்தது சேலை.
இந்த விடியல் அழகாய் தான் பூத்திருக்கிறது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.