இராஜாராம்
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கும் போது பலதரப்பட்ட தகவல்களுடன் வித்தியாசமாய், எதார்த்தமாய் பயணித்து, கடைசி வரி சூட்சமத்தை ரசித்துச் சிலாகிக்க முடிகிறது. அவரின் ‘கடைநிலை ஊழியன்’ என்ற சிறுகதையை நாலைந்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் பலமுறை வாசிக்க வேண்டிய கதை அது. அதுபோல நான் வாசித்ததில் இரண்டு கதைகளைக் குறித்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
1945ல பொறந்து 1981ல் இறந்துவிட்டார் பாப் மார்லி, ஆனால் அவரை எனக்கு ஒரு பத்து வருடத்துக்குள்ளதான் தெரியும். நான் பார்த்த காணொளி ஒன்றில் ஏதோ பணம் பற்றி பேசியிருப்பார்,. அதன் பின் அவரைப் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பியதில்லை. அவர் ஒரு பாடகராமே விக்கிபீடி இஸ் இன்பர்மேசன் டூ ஆல்.(உண்மையானு தெரியாது, ஆனால் பெரும்பாலும் தெரியாதுனு சொல்லாது ஏதாவது ஒரு பதில் வச்சிருக்கானுக).
எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்கள் எழுதிய “வந்துவிடு டுப்புடு” என்ற சிறுகதையை வாசிச்சேன். ஒரு எழுத்தாளரும், வாசகரும் சந்திச்சிக்கிற ஒரு சாதாரண கதைக்களம்தான். ஆனால், அதில்தான் எவ்வளவு தகவல்கள்…, உவமையாகவும், உதாரணமாகவும் அள்ளிக் கொட்டிச் சொல்லி வச்சிருக்கார்.
கௌரவக் கொலையச் சொல்றாரு. சதாம் உசேன் படிச்ச கடைசி நாவலான ‘கிழவனும் கடலும்’ பற்றி சொல்றாரு. நோபெல் பரிசு பெற்ற அந்த நாவலை எழுதிய எழுத்தாளர் ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டார்னு சொன்னது சாதாரணமாக தெரியும், ஆனால், அந்த வேதனை அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும்.
அந்த வாசகன் “தரமணி” படம் பார்த்தேன்னு சொல்வான், ஆனால் இவரோ அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதுங்குறார். அந்தப் படத்தின் தொடக்கத்தில் அ முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றி சொல்லியிருப்பார்கள். அதைப் படம் பார்த்த எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியாது. அவரெழுதிய ‘தொடக்கம்’ சிறுகதை கொடுத்த உந்துதல்தான் தரமணி படமாம்.
அப்படியே அவனின் அணிந்திருக்கும் சட்டைக்கு சிலப்பதிகாரத்தில் வரும் ‘மெய்பை’ என்ற வார்த்தையை ஒப்பிடுகிறார்.
ஆரம்பிச்சது பாப் மார்லியில… பயணித்தது வேறு பக்கமாய். சரி அவர்என் நினைவு வந்ததுக்கு காரணம் என்னன்னா… அந்த வாசகனின் முடியைப் பற்றி முத்துலிங்கம் அவர்கள் சொல்லும்போது நம்மூரு சடை சாமியார் எனக்கு நினைவுக்கு வரல. காரணம், அந்த மாதிரி முடிய வச்சுக்கிட்டு யாரு ஜீன்ஸ் பேண்ட், மொடா மொடா சட்டைப் போட்டுகிட்டு திரியிறா. அதான் எனக்கு மார்லி மனதிற்குள் வந்தார்.
அந்த முடியைச் சின்னச் சின்ன பாம்புக் குட்டி மாதிரி இருக்குனு சொல்றாரு, அதுக்கும் கிரேக்க புராணத்தில் கடல் கடவுள் பொசைடொன் மெடூசாவை கற்பழித்து விடுவாராம். அதற்கு தண்டனையாக அதீனா தேவதை மெடூசாவோட முடிய குட்டிப் பாம்பா மாற்றிடுவாராம். (எனக்கும் அதான் ஷாக்கு, மெடூசாதான் குற்றவாளியாம்)
மனித இனத்தின் தொட்டில் எத்தியோப்பாங்கிறதை அழுத்தமாய்ப் பதிவிடுறார். அப்படியே ராகுல சாங்கிருத்யாயன் எழுதுன ‘வால்காவிலிருந்து கங்கைவரை’யைத் தொட்டு எழுதியிருக்கிறார்.
ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு தேடலைப் புதைத்து விட்டுச் செல்கிறார் பாருங்கள்.
கதையின் முடிவை முதலிலேயே சொல்லிட்டார். அப்படி ஆரம்பிப்பது கூட ஒரு சவால்தான் என்றாலும் சுவராஸ்யம் குறையாமல் நகர்த்திச் செல்லும் கலை தெரிந்தவர்கள் ஜெயிப்பார்கள். முத்துலிங்கம் அவர்கள் கதைகளில் ஜெயிக்கிறார், நம் மனங்களை ஈர்க்கிறார்.
உண்மையில் ஒரு வாசகர் எழுத்தாளரைச் சந்திப்பது நல்லது அல்ல. ஒருசில கற்பனைகள் இருவருக்குமே உடைந்து போகும் என்கிறார்.
அட ஆமால்ல…
‘துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடத் தொடங்குவோம். எந்த திசை என்று இல்லை. எந்தப் பக்கம் ஓடினாலும் ஒரு காட்டில்தான் முடியும். இரண்டு நாட்கள் நாங்கள் மரத்திலே தங்கினோம். நான் கீழே இறங்கவில்லை. அப்பா பழங்களும் கிழங்குகளும் பறித்து தந்தார். யாரிடம் இருந்து மறைந்து வாழ்ந்தோம் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. பக்கத்து மரத்திலே தங்கிய பெண் மரத்திலேயே ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார். அது இரண்டு நாள் வாழ்ந்தது. மூன்றாவது நாள் அந்த மரத்தின் அடியிலேயே புதைத்தார்கள்.’
‘அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை’ – என்னும் கதையில் இப்படி எழுதியிருக்கிறார்.
இப்படி தான் சந்தித்த, கேட்ட, விடயங்களை பதிந்து வருகிறார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள். அவர் தன்னுடைய சிறுகதைகளில், சிறுகதைக்கான நாம் வரைந்து வைத்திருக்கும் எந்த வட்டத்துக்குள்ளும் அவர் சொல்வதில்லை. ஆனால், மிக ஆழமான கனத்த விடயங்களை எவ்வித அடிக்கோடில்லாமல் சொல்லிக் கடந்து விடுகிறார். வாசிப்பவர்கள்தான் அங்கே ஒரு நிமிடம் உறைந்து விடுகிறோம்.
ஒரு இடத்தில் ஒரு சோமாலிய அகதி கனடா செல்வதற்கு பலமுறை நிராகரிக்கப்பட்டு விரக்தியில் இப்படி சொல்கிறார் அந்த அதிகாரியின் கேள்விக்கு : “நான் வறுமையில் வாடி சாகவேண்டும். மரத்தில் இருந்து கீழே விழுந்து சாகக்கூடாது. கொலைபட்டு சாகக்கூடாது. போராளிகள் சண்டைபோடும்போது இடையில் புகுந்து குண்டடிபட்டு சாகக்கூடாது இவ்வளவுதான் கேட்கிறேன்” என்று பதிவிடுகிறார். ஆனால், அப்போதும் அனுமதி கிடைக்கவில்லை. நிராகரிப்புத் தொடரத்தான் செய்கிறது.
இந்தக் கதையை வாசித்த போது கணிதம் தொடர்ப்பாக பல தகவல்களைத் தருகிறார். கணிதமேதை இராமானுஜன் கண்டுபிடித்த பல தேற்றங்கள் முன்னரே கண்டுபிடித்தவைதான் என்பதைச் சொல்கிறார். அதேபோல் கணிதப் பின்புலம் இல்லாத, லத்தீனும் கிரேக்கமும் மட்டுமே படித்த அமெரிக்காவின் இருபதாவது ஜனாதிபதியான ஜேம்ஸ் கார்ஃபீல்டு பிதாகரஸ் தேற்றத்தின் நாலாவது தேற்றத்தைக் கண்டுபிடித்தார் என்பதையும் சொல்லிச் செல்கிறார்.
இப்படியாகப் பயணிக்கும் கதையின் கடைரி வார்த்தை… ஆம் ஒரு வார்த்தைதான் அதுவரை கணிதத்தின் பின்னே பயணித்த மனதை அப்படியே கலங்கடித்து விடுகிறது. இப்படித்தான் எல்லாக் கதையின் முடிவிலும் வாசிப்பவன் எதிர்பார்க்காத முடிவைக் கொடுக்கிறார்.
இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நாவலையோ, நெடிய வரலாற்றையோ பதிவிட்டு வருகிறார்.
ஒரு யானையின் வயிற்றுக்குள் மிகப்பெரிய காடு இருப்பதைப் போல.
இவரின் கதைகளின் வாசிப்பனுபவம் வித்தியாசமானது.