வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
————————————————–
யார் இந்த ஹம்சா?
பத்ரு போரிலே முக்கியமான தளபதியாக நின்றவர், மூவர் சண்டையில் தனது தந்தை உமையாவுக்கு எதிராக நின்று சண்டையிட்டு தனது தந்தையைக் கொன்றவர்.
மிக முக்கியமாக ஹம்சா (ரலி) அவர்கள் நபி அவர்களின் சிறிய தந்தை. மேலும் நபிகளாருக்கும் இவருக்கும் ஒரே வயது தான். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தனர், முதன் முதலில் இஸ்லாத்தை சொன்னதிலிருந்து நபி அவர்களுக்கு வலதுகரமாக இன்று வரை இருந்து வருகிறார்கள். ஆகவே ஹம்சா (ரலி) அவர்களின் மரணம் எதிரிகளுக்கு மிக முக்கியமானதாகப்பட்டது. நேருக்கு நேராக நின்று தோற்கடிக்க முடியாது என்பதைத் தெரிந்த ஹிந்தா, அவருக்குத் தெரியாமல் தூரத்திலிருந்து தான் கொல்ல வேண்டும் என்பதால் ஈட்டி வீரரான வகுஷியை தயார் செய்தார்.
பத்ரு போர் முடிந்ததுமே அடுத்த போருக்கு மக்கா தயாரானது. அப்போதிருந்தே பொருளாதாரத்தை சேமிக்கத் தொடங்கினார்கள். பல்வேறுபட்ட முன்னெடுப்புகளைச் செய்து கொண்டே இருந்தார்கள்.
இப்படியாக ஒவ்வொருத்தரும் தனித்தனியான வன்மத்துடன் மதினாவை நோக்கிக் கிளம்பிச் சென்றார்கள்.
*
நபியவர்களும் தனது நண்பர்களிடம் முன்கூட்டியே இதைப்பற்றி ஆலோசனை நடத்தினார்கள். எத்தனைதான் கடவுளின் தூதராக இருந்தாலும், ஒரு நாட்டினுடைய மன்னராக இருந்தாலும், இதுதான் சரி என்று தனக்குத் தெரிந்திருந்தாலும் நபிகளாருடைய பண்பு என்னவென்றால்… கூட இருப்பவர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பது. வீடாக இருந்தால் வீட்டில் இருப்பவர்களிடமும் மனைவியிடமும் ஆலோசிப்பது. பல நேரங்களில் இதுதான் அவர்களுக்கு கை கொடுத்தது. நபிகளாரை, கூட இருந்தவர்கள் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
‘நாம் இந்த வீட்டின் தலைவராக இருக்கிறோம். நாம் எடுப்பதுதான் முடிவு. அந்த முடிவுக்கு நம் வீட்டினர் அத்தனை பேரும் கட்டுப்பட வேண்டும் என்பதெல்லாம் கூடாது! அவர்களிடமும் ஆலோசனை செய்ய வேண்டும்.’ என்பது நபி அவர்கள் கற்றுத் தந்தது.
எல்லோரும் “பத்ரு போலவே மதினாவிற்கு வெளியே அவர்களை எதிர்கொள்வோம்” என்பதாகவே கருத்தைச் சொன்னார்கள். அந்த கருத்துக்கு உடன்பட்ட நபியவர்கள், முதலாவதாக கவச உடையை அணிந்து வெளியே வந்தார்கள். உடனே அத்தனை பேரும் தயாரானார்கள்.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொண்ட வீரர்களுடன் கிளம்பினார்கள். ஆனால் ஏதோ காரணத்தால் அப்துல்லாஹ் பின் உபைப் என்பவர் தனது ஆதரவாளர்கள் 300 பேரை திருப்பி அழைத்துச் சென்று விட்டார். மீதம் இருப்பது 700 முஸ்லிம்கள். படை பலகீனம் அடைந்தாலும் அவர்களின் உறுதியும் நம்பிக்கையும் குறையவில்லை.
மதீனாவிற்கு வெளியே உஹது மலையின் அடிவாரம் சென்று சேர்ந்தார்கள். முன்பு போலவே உஹது மலை அடிவாரத்தில் மேடான ஒரு பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டது. பின்புறம் மலைகள் பாதுகாக்க, முன்புறமாக எதிரிகளை எதிர்கொள்வது என்ற முடிவில் இருந்தார்கள்.
எதிரிகள் 3000 பேர் வந்து சேர்ந்தார்கள். இம்முறை தனித்தனியாக தளபதிகளை கொண்ட குழுக்களாக நின்றார்கள். முஸ்லிம் படைகளின் முன்பாக, இடது புறம், வலது புறம் என மூன்று பிரிவுகளாக பிரிந்து நின்றார்கள்.
முஸ்லிம் படைகளின் இடது புறம் சற்று தூரத்தில் அந்த குன்றின் ஓரத்தில் ஒரு சிறிய குதிரைப் படை நின்றிருந்தது. அதற்குத் தலைமை ஏற்று காலித் பின் வலீத் என்பவர் நின்றிருந்தார்.
இதைப்பார்த்த நபிகளாருக்கு ஏதோ தவறாகப்பட்டது. உடனே அங்கிருந்த வில் வீரர்கள் 50 பேரைக் குன்றிற்கு மேலே நின்று கண்காணிக்கச் சொன்னார்கள். கூடவே அவர்களை எச்சரித்தார்கள்.
” நாங்கள் இங்கு இருப்பவர்களை நேருக்கு நேராக சந்திக்கிறோம். இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எக்காரணம் கொண்டும் கீழே இறங்கக் கூடாது. நாங்கள் தோற்று எங்கள் உடல்கள் கீழே கிடந்து, எங்கள் உடல்களைக் கழுகுகள் கொத்தித் தின்றாலும் நீங்கள் குன்றை விட்டு கீழே இறங்கக் கூடாது! அங்கிருந்த வண்ணம் குன்றைச் சுற்றி யார் வந்தாலும் அம்பெய்ய வேண்டும்” என்று நபிகளார் கட்டளையிட்டார்கள்.
கிபி 625, ஹிஜ்ரி 3(ஹிஜ்ரி என்பது நபியவர்கள் மதினா வந்த நாளை குறிப்பது), போர் ஆரம்பித்தது. எதிரிகள் மூர்க்கத்தனமாக மோதினார்கள். பழி தீர்க்கும் எண்ணத்தில் அவர்களுடைய தாக்குதலிருந்தது அதெல்லாம் முஸ்லிம் படைகளின் முன்பாக ஒன்றுமில்லாமல் ஆகியது.
கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் எதிரிகள் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட ஆரம்பித்தார்கள்.
அதைப் பார்த்த முஸ்லிம்களின் படை அவர்களைத் துரத்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த குன்றின் மேல் நின்ற வில் வீரர்களும் “நாம் வெற்றி பெற்று விட்டோம். இனி ஏன் இங்கு நிற்க வேண்டும்? நாமும் கீழே சென்று அவர்களிடம் சண்டையிடுவோம்” என்றார்கள்.
நபிகளாருடைய வார்த்தைகள் மீறப்பட்டது. வில் வீரர்களின் குழுத் தலைவர், நபிகளாருடைய வார்த்தைகளை எடுத்துக் கூறியும் அங்கு இருந்த சிலர் கேட்கவில்லை கீழே இறங்கி வந்து விட்டார்கள்.
வில் வீரர்களின் தலைவர் மற்றும் சிலரைத் தவிர அனைவரும் கீழே இறங்கி விட்டதை கவனித்த காலித் பின் வலீத், குதிரை வீரர்களை கூட்டிக்கொண்டு குன்றைச் சுற்றி வந்து நபிகளாருக்கும் விரட்டிச் சென்ற முஸ்லிம்களுக்கும் இடையிலே வந்து நின்றார்.
இதைப் பார்த்து விரட்டிச் சென்றவர்கள் திகைத்து நிற்க ஓடிய எதிரிகள் திரும்பி வர என்று ஒரு பெரும் குழப்பம் ஆகிவிட்டது. இரண்டு படைகளும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டது. யார் எதிரி? யார் நண்பன்? என்பது தெரியாமல் போய்விட்டது.
இச்சூழலில் ஒரு குழு நபிகளாரை நோக்கி மேலே ஏறியது. கூட்டத்தில் கடுமையாக போர் புரிந்து கொண்டிருந்த ஹம்சா (ரலி) அவர்களைத் தேடி வந்த வகுஷி தூரத்திலிருந்து ஈட்டியை எய்து ஹம்சா அவர்களைக் கொன்றார்.
இதற்கிடையில் எதிரிகள் திடீரென்று ‘முஹம்மது இறந்துவிட்டார் கொன்று விட்டோம்’ என்று பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள். திகைத்த முஸ்லிம்களுக்கு அது பொய்யான செய்தி என்பது தெரிந்ததும் மீண்டும் கடுமையாகச் சண்டையிட்டார்கள்.
எதிரிகளின் படை நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து இருந்தது. ஆனாலும் அவர்களை கிட்டே நெருங்க விடாமல் தோழர்கள் சூழ்ந்து நின்றார்கள். அதையும் தாண்டி நபிகளாருடைய ஒரு பல் உடைக்கப்பட்டது. ‘மூர்க்கத்தனமாக போரிடும் அந்த நபிகளாரின் தோழர்களையும் தாண்டி நபிகளாரை தொட முடியாது’ என்பதைப் புரிந்து கொண்ட எதிரிகள் அங்கிருந்து பின்வாங்கத் துவங்கினார்கள்.
மீதமிருந்த முஸ்லிம்களைத் தாக்குப் பிடிக்க முடியாத எதிரிகள் வந்த வேலை முழுமையாக முடியாத தோல்வியில் மீண்டும் அந்த இடத்தை விட்டு மக்காவிற்குப் பயணமானார்கள்.
கிளம்புவதற்கு முன் ‘நாங்கள் மீண்டும் அடுத்த ஆண்டு வருவோம்’ என்று அபுசுபியான் கூறி விட்டுச் சென்றார்.
முஸ்லிம்களுக்கு முதலில் வெற்றி பிறகு தோல்வி என்ற போதிலும் இன்றோடு முஸ்லிம்களை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எதிரிகளின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆனாலும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சேதாரம் ஏற்பட்டிருந்தது. சிறிய தந்தை ஹம்சா உட்பட எழுபது தோழர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்களை மூடுவதற்குக் கூடத் துணிகள் இல்லை. இலை தழைகளைப் போட்டு மூடினார்கள்.
தன்னை நம்பி வந்தவர்கள் வேரருந்த மரங்களாகக் கிடப்பதைப் பார்த்துப்பார்த்து கண்ணீர் விட்ட நபிகளார் அத்தனை பேரையும் அங்கேயே அடக்கம் செய்தார்கள். பெரும் சோகத்துடன் அனைவரும் மதினாவிற்குத் திரும்பினார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்