அணிந்துரை : எழுத்தாளர் அண்டனூர் சுரா
(அப்துல் அஹத் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல்)
இது நாவல் காலம்! நாவலுக்கு மட்டுமே இலக்கியப் பரப்பில் மதிப்பும் பரந்த வாசகர் வட்டமும் இருக்கிறது என்பதல்ல இதன் பொருள். இன்று உலக மொழிகள் யாவற்றுக்கும் உயிர்ப்பாய்ச்சும் வகைமை இலக்கியமாக நாவல் திகழ்கிறது. எந்தவொரு வாழ்வையும் முழுமையாகச் பதிவுசெய்யவும் அதை மக்கள் மொழியில் எழுதிச் செல்லவும் இலகு மொழியாக நாவல் இருக்கிறது. ஆகவேதான் இலக்கிய பரப்பிற்கு இது நாவல் காலம் என்கிறேன்.
வெளிநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும் என்றார் மகாகவி பாரதி. அதுமட்டும் போதுமா, வெளிநாட்டில் வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளின் வாழ்வைத் தமிழ்மொழியில் எழுதவேண்டிய கடமைப்பாடும் நமக்கு இருக்கிறது. இந்தக் கடமையைத் தன் எழுத்தின் வழியே பதிவு செய்திருக்கிறார் துரை. அறிவழகன் அவர்கள். இவரது ‘தொன்ம அறம்’ எனும் குறுநாவல் திரைகடல் தாண்டியவர்களின் வாழ்வை அனுபவப் பாடமாக எழுதிச் செல்கிறது.
திரைகடல் தாண்டி ஒருவர் வேறொரு புலத்தில் நுழைய விசா புகவுச்சீட்டு தேவை. இது நேர் வழி நுழைவுக்கானது. விசா இன்றியும் வேறொரு நாட்டிற்குள் நுழைய முடியும். கடலை நீந்தி, கள்ளத் தோணியில், கப்பல் சரக்குப் பெட்டிக்குள் பதுங்கி,…இப்படியாக. இவை உயிரைப் பணயம் வைத்து நுழையும் வாழ்வா, சாவா எனும் சாகச வழி. எழுத்தாளர் துரை.அறிவழகன் மூன்றாவது ஒரு வழியை நமக்குக் காட்டுகிறார். அது இலக்கிய வழி. தன் எழுத்தின் வழியே வாசகனைக் கடல்தாண்டி அழைத்துச் செல்லும் எழுத்துவழி. எழுத்தாளர் துரை. அறிவழகன் மலேசியா நாட்டிற்குள் தோட்ட விசாவில் நுழைந்து சுற்றுலா விசாவில் வெளியேறியவர். இவரது வாழ்வின் ஒரு பகுதி மலேசியாவில் கழிந்திருக்கிறது. அந்த வாழ்வை கலை அம்சத்தோடு தொன்ம அறம் எனும் குறுநாவலாக புனைவாக்கம் செய்துள்ளார்.
குறுநாவலின் முதன்மைக் கதாபாத்திரமான ஒண்டிவீரன் தொடக்கத்திலேயே வாசகனை விரல் பிடித்து விசா இல்லாமல் மலேசியா நாட்டிற்குள் அழைத்துச் செல்கிறான். இவன் காட்டும் மலேசியா பிரமாண்டம், வானைத்தொடும் உயர்க்கோபுரங்கள், மாடமாளிகை, கேளிக்கை, சூதாட்ட அரங்கு,.. என்றில்லாமல் ரப்பர்த் தோட்டமும் அதில் உழைத்து வதையும் தொழிலாளர்களுமாக இருக்கின்றன. ஆதி குரல்கள் கரைந்த காட்டாறாக ஓடும் கீசாங் ஆற்றின் கரையில் அந்த ஆற்றின் வேகத்தை எதிர்த்து நிற்கும் ஒண்டி வீரன் வாசகனைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்குகிறான். அப்படியான எதிர்பார்ப்புக்கு கதையின் மொழி காரணமாக இருக்கிறது. அவனது கூர் ஈட்டியும் கம்பீரம் தொய்த்த நடையும் கொத்துக் கொத்தாக துறைமுகத்தில் இறக்குமதியாகும் தமிழர்களினூடே வாசகனை அழைத்துச்செல்கிறது.
ஒண்டிவீரனைப் போலவே மற்றொரு கதாபாத்திரம் தண்டாசி. பெயருக்கேற்ப பாத்திரப் படைப்பு. தமிழர்களைக் கொத்தடிமையாக வேலை வாங்கும் வெள்ளைக்காரத் துரைகளுக்கு எல்லா வகையிலும் நம்பிக்கைக்குரியவனாக இருக்கும் இவனிடமிருந்து தமிழகப் பெண்கள் எப்படி அவர்களது கற்பைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறார்களோ என்கிற கவலையும் தவிப்பும் வாசகனைத் தொற்றிக்கொள்கிறது. ஒரு சொட்டும் ஈரமற்று அதேநேரம் இவனது வசீகர பேச்சுக்கும் விரிக்கும் வலைக்கும் எந்தப் பெண்ணும் விழுந்துவிட நாச்சி என்னாகிறாள் என்பதே இக்கதை.
ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வும் அவர்களின் ஒவ்வொரு நாள் கழிதலும் இரத்தமும் சதையுமாக சொல்லப்படுகிறது. கதையில் ஓரிரு இடத்தில் வரும் முள்கற்றாழை கதை முழுக்க தண்டாசி உருவத்தில் பெண் பாத்திரங்களின் பின்னே முட்களாகத் துரத்திச் செல்கிறது. பிற்பகுதியில் வரும் காட்டுப்பன்றியும் தேன் கொத்தி எனும் முரட்டுப் பறவையும் தொழிலாளர் வாழ்வோடு இணங்கி அவைகளும் கதாப்பாத்திரம் கொள்கின்றன. வெள்ளாத்தா பாத்திரம் ஆதிகுடி மனித வாழ்வின் சுவடு என்று சொல்லலாம். உடும்பைத் துண்டாக வெட்டி அதை தேனில் ஊறவைத்து சாப்பிடும் சுவை இந்நாவலை வாசிக்கும் யார் நாவிலும் எச்சில் அரும்பவே செய்யும். ஆவுடைநாச்சி எனும் பெண் பாத்திரம் பெண்களின் காம உணர்வு எத்தகையதென்றும் அது மேலெழும்பும் நேரத்தையும் உணர்த்திச் செல்கிறது.
பெண்களின் வியர்வை வாடையாக பழுத்து நாறும் துரியன் பழத்தின் வாடை புராதானத்தினூடே கிளைக் கதையாக நாவலைக் கனப்படுத்துகிறது. ‘குலசாமி நம்மைத் தேடி கடல் தாண்டி வராது, நாமதான் சாமியைத் தேடி போக வேண்டும்’ என்கிற இடமும் ‘ உனக்கு வழிகாட்ட ஈர மண்புழு நம்ம மண்ணுலதான் இருக்கு. அதைத் தேடியே நீ போகணும்’ என்கிற வரியும் கடல்தாண்டி திரவியம் தேடிப் போனவர்களின் மனக்குரல்கள்.
நத்தையைப் போல மலேசியாவிற்குள் இழைந்து நகரும் ஒண்டிவீரன் மண்புழுவைத் தேடி தாய்மண் திரும்பினானா, மலேசியா நிலத்தை புலம்பெயர்வு மண்ணாக ஏற்றானா என்கிற கேள்விக்குப் பதில் தந்து நாவல் நிறைவு கொள்கிறது.
இக்கதையை எழுத்தாளர் ராக்கெட் தத்துவப் பாணியில் எழுதியுள்ளார். ராக்கெட் மேலே செல்ல செல்ல ஒவ்வொரு குப்பிகளாக விடுவித்துக்கொண்டு பயணிப்பதைப் போல பாத்திரங்கள் ஒவ்வொன்றாக கதையிலிருந்து விடுவித்துக்கொண்டு ஒண்டிவீரனை ஓரிடத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. இக்கதை துரை. அறிவழகனின் ஒரு பருவ வாழ்வு என்பதாலும் அவரது வாழ்வின் பெரும் பகுதி என்பதாலும் கதைமொழியும் உவமைகளும் வாழ்தல் மொழியாகி உயிர்த்துவம் கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்நாவல் கேலக்ஸி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இப்பரிசுக்குரிய எல்லா தகுதியும் அம்சங்களையும் இந்நாவல் கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளர் இப்படியாக அங்கீகரிக்கப்படுவது எப்பொழுதேனும் அரங்கேறும் அரிய நிகழ்வு. அது துரை.அறிவழகனுக்கு அது நிகழ்ந்திருக்கிறது !
இந்நாவலின் தொடர்ச்சியாக இவர் தொடர்ந்து இலக்கிய வயலில் பயிர் செய்ய வேண்டுகிறேன். தொன்ம அறம் எனும் இக்குறுநாவல் தேர்ந்த மொழியும் வாழ்வும் கொண்ட அம்சங்களால் இலக்கியப் பரப்பில் தன் வரவை வைத்துக்கொண்டது.
நல்வாழ்த்துகள்!
——–
இந்த நாவலை வாங்கி வாசித்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் எழுத்தாளர் தன்னுடைய எழுத்தை மேம்படுத்திக் கொள்ளவும், இன்னும் இதுபோல் நிறையப் புத்தகங்கள் கொண்டு வரவும் வாய்ப்பாக அமையும்.
—————————————-
தொன்ம அறம் (குறுநாவல்)
எழுத்தாளர் துரை.அறிவழகன்
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 100 /-
புத்தகம் வாங்க
வாட்சப் எண் : +91 9994434432
—————————————-