அணிந்துரை : பேராசிரியர் – கவிஞர் ம. கார்மேகம்
“சான்றோர் பக்கமே சார்ந்திருப்போம்!”
எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், மனிதநேயம் மிக்கவர் என்னும் பன்முக ஆற்றல் கொண்டவர் அன்பிற்குரிய அண்ணன் மு.பழநி இராகுலதாசன் அவர்கள்.
பல்வேறு சான்றோர்களைப் பற்றித் தாம் எழுதிய கட்டுரைகளைப் பல இதழ்களின் வாயிலாக வெளியிட்டுள்ள பேராசிரியர் “சான்றோர்… பாலர்” என்ற தலைப்பில் ஒரு நூலாகத் தொடுத்துள்ளார். அத்தனை சான்றோர்களும் எழுத்துப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தேசியப் பணி ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பெருமைகளை இத்தொகுப்பில் எடுத்துரைக்கின்றார் பேராசிரியர்.
தாம் அறிந்து கொண்டவற்றை, அனுபவித்துப் பெருமை கொண்ட செய்திகளை இத்தொகுப்பில் தந்துள்ளார். சில பெருமக்களோடு பழகிய பாங்கினையும் எடுத்துரைக்கின்றார். ஆழ்ந்த அறிவாற்றலோடு நினைவாற்றலும் பெற்றவர் திரு. இராகுலதாசன் அவர்கள் என்பதைக் கட்டுரைகளை நாம் படிக்கும் போது உணர முடிகிறது. இந்த உணர்வை அவருடைய எழுத்தின் மூலமாகவே உணரலாம்.
புகழை விரும்பாதவர் இவர்; எளிமையே பெருமிதம் என்றும் பெருமை பெருமிதம் இன்மை என்றும் இவர் எழுதியுள்ள சொற்கள் இவருக்கும் பொருந்தும். இடைவிடாது படிக்கவும் எழுதவும் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டவர் இவர். இவருடைய சான்றோரைப் பற்றி அவர் குறிப்பிடும் தொடர் இவருக்கும் பொருந்தும். லெனின் படித்தார், படித்தார், தேடித் தேடிப் படித்தார் என்று இவர் எழுதிய தொடர் போன்று பேராசிரியர் பழநி அவர்களும் தேடித் தேடிப் படித்துத்தான் இந்தக் கட்டுரைகளைத் தந்துள்ளார்.
“சுயநலம் கருதாத தன்மையும் தாராள சிந்தனையும் கைக்கொண்டிருக்கும் சமூகத்தாரிடையே மதக்கட்சி ஏற்படுவதில்லை என்ற சிந்தனை, இனவேறுபாடு கருதாத தன்மை இராமகிருஷ்ணருக்கு இருந்ததைத் தம்முடைய குணமாகக் கெண்டவர் அண்ணன் பழநி அவர்கள்.”
“எழுத்தாளர் பட்டாளமே சுற்றிச் சுழன்று கொண்டே இருந்தது; அவர்களுக்காக உழைப்பது, அவர்களுடன் உழைப்பது என்பதில் கார்க்கி சளைத்ததும் இல்லை; சலித்ததும் இல்லை”. பேராசிரியர் அவர்களும் அப்படியே.
பழநி அண்ணன் அவர்கள் பொதுவுடைமைச் சித்தாந்தத்திலும் காந்தியச் சிந்தனையிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர் என்பதைப் பல கட்டுரைகளில் காணமுடிகிறது. அரசியலும் ஆன்மிகமும் மனிதாபிமானப் பேரம்சங்களும் பொருளாதார விடுதலையும் உழைப்பதற்கு நிலமில்லாத ஏழை பற்றிய கவலையும் நிறைந்திருப்பதைப் பல இடங்களிய சுட்டுகிறார். நிலமென்னும் நல்லாள் பற்றிப் பேசும் போது காந்தியமும் மார்க்சியமும் பேசப்படுகின்றன.
கவிஞர் மீரா, கே.எம்.எஸ், சா. பூவநாதன் முதலானோர் பற்றிக் கூறும் போது தமது உணர்வு ஓட்டங்களால் அவர்களோடு இணைந்து பழகியதை உருக்கமாகக் காட்டுகிறார்.
திரு கே.எம். எஸ் அவர்கள் குன்றக்குடி மடத்தின் மீது கொண்ட அன்பினையும் அருள்நெறித் தந்தை அடிகளாரோடு கொண்ட நட்பினையும் பேசும்போது மடமும் மார்க்சியமும் இணைந்த ரகசியம் பற்றியும் விளக்குகிறார். மடத்தைப் பற்றி எழுதும் போது மனம் நெகிழ்ந்து விடுகிறார் அண்ணன் பழநி. காரணம் சந்நிதானத்தின் அன்பிற்குப் பாத்திரமானவர் அண்ணன் பழநி. நெகிழ்ச்சி இருக்கத் தானே செய்யும்! அந்தக் கட்டுரையில் தான் “சான்றோர் பாலர் ஆப” (புறம் : 218) என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அத்தொடரையே இந்தத் தொகுப்பிற்கும் தலைப்பாக்கியிருக்கிறார்.
சான்றோர்கள் சான்றோர் பக்கமே சார்ந்திருப்பார்கள் என்பதாகவும் சான்றோரைச் சார்ந்தவர்கள் அந்தச சான்றோர்களின் சிந்தனையோடும் நெருங்கியவர்களே என்பதாகவும் இத்தொடர் அமைகிறது. அந்த வரிசையில் பேராசிரியர் பழநி இராகுலதாசன் அவர்களும் சான்றோர் பாலராகவும் திகழ்வதை இந்தத் தொகுப்பு நூலின் வழியாக நாம் அறியலாம்.
கவிஞர் மீரா அவர்கள் பழநி அண்ணன் மீது கொண்ட நம்பிக்கை போல என் மீதும் நம்பிக்கையும் அன்பும் கொண்டு இவர்தம் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு பணித்துள்ளமை அண்ணனின் அன்புதான். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் இந்த நூல் பல சான்றோர்களைப் பற்றி அறியாதவர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
————————————————————-
சான்றோர்… பாலர் (கட்டுரைத் தொகுப்பு)
பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 260.
புத்தகம் வாங்க வாட்சப் எண் : +91 9994434432
————————————————————-