ஆர்.வி சரவணன்
‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’.
பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின்
அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள் எழுதிட்டு
அப்புறமாதான் நாவலுக்கு வருவாங்க. நீங்க என்ன எடுத்த உடனே நாவலை எழுதியிருக்கீங்க’ என்று கேட்டார்.
‘சினிமாவுக்கான கதைகளாகவே கற்பனை பண்ணி எழுதுவதால் சிறுகதைகள்
எழுத எண்ணம் இருந்தில்லை’ என்றேன். என் நாவலுக்கு அவர் கொடுத்திருந்த
அணிந்துரையில், ‘நான்கைந்து பக்கம் வருவது போல் சிறுகதைகள் எழுதி
பழகுங்கள். இது உங்கள் எழுத்துக்கள் மேம்பட உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொன்னதை விடாப்பிடியாக பிடித்து கொண்டு சிறுகதைகள் எழுத முயற்சித்ததன் பலன், கடந்த ஐந்து வருடங்களாக நான் எழுதிய 8 சிறுகதைகள்
தமிழ் வார இதழ்களிலும் ஒரு சிறுகதை இணைய இதழொன்றிலும் வெளியானது.
இந்த சூழ்நிலையில் தான் நண்பர் திரு. பரிவை சே. குமார் அவர்கள், திரு. பாலாஜி பாஸ்கரனின் கேலக்ஸி இணையதளத்தில் தொடர்கதை எழுதுமாறு அழைத்திருந்தார். அவர் சொன்னதன் பேரில் நான் இரண்டு தொடர்கதைகளை அதில் எழுதினேன்.
மேலும் பரிவை சே.குமார் அவர்கள் அத்தோடு நில்லாது, எழுதிய படைபபுகளில் ஏதேனும் ஒன்றை கேலக்ஸி பதிப்பகத்தின் மூலமாக புத்தகமாய் கொண்டு வாருங்களேன் என்று ஆர்வமூட்டினார். சிறுகதைகளைத் தொகுத்து நூலாக
வெளியிடும் எண்ணமிருக்கிறது என்றவுடன் அதைக் கொண்டு வருவோம் என்றார்.
கேலக்ஸியின் பாலாஜி அவர்கள் உடனே செய்யலாம் என்று சொல்ல, கூட்டு முயற்சியின் மூலம் நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சி வெளியீடாக வந்திருக்கிறது, ஏற்கனவே வெளியான ஒன்பது சிறுகதைகளுடன் புதிதாக ஒரு சிறுகதையை சேர்த்து பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாகியிருக்கிறது
இந்நூல்.
சிறுகதைகள் எழுத தூண்டுகோலாய் இருந்த எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கும், எனது சிறுகதைகளை வெளியிட்ட வார / இணைய இதழ்களின் ஆசிரியர்களுக்கும், நூல் உருவாக காரணமான நண்பர்
பரிவை சே. குமார் அவர்களுக்கும், நான் தொடர்ந்து எழுத ஊக்கமிளித்து
வரும் எனது குடும்பத்தினருக்கும், எழுத்து சம்பந்தமான விசயங்களில்
சலிக்காமல் ஆலோசனை தந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர்
அரசன் அவர்களுக்கும், இந்த சிறுகதை தொகுப்பைத் தனது கேலக்ஸி
பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட திரு. பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும்
இந்த தருணத்நில் எனது இதயம் நிறைந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
பூவ போல பெண்ணொருத்தி என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த
சிறுகதை தொகுப்பை, வாசகர்கள் படித்து தங்களது மேலான கருத்துகளை
பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
————————————————————-——
பூவ போல பெண்ணொருத்தி
(சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 125 /-
புத்தகம் வாங்க வாட்சப் எண் : +91 9994434432
——————————————————————-