ஆசிரியர் : சசி எம். குமார்
மதிப்புரை : கரந்தை ஜெயக்குமார்
திண்ணை இருந்த வீடு
இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு வழி காட்டுச்சு.
பாப்பாவுக்கு ஆவணியில கல்யாணம் வச்சுருக்கிறேன். முத பத்திரிக்கையை அய்யனாருக்கு வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.
செல்வி அக்காவும், முருகேசன் மாமாவும் பத்திரிக்கையை வச்சு, சாமி கும்பிட்டுவிட்டு சென்ற பிறகு, அந்த கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.
பெண்ணின் தாய் மாமன் பெயராக, எங்கள் ஊரில் உள்ள ஏழு சாதி மக்களும் இருந்தார்கள்.
—
படித்தவுடன் உள்ளத்தில் ஒரு பெருமிதம் பொங்குகிறது.
கிராமத்து மனிதர்கள் அனைவருமே உறவாய்த்தானே வாழுகிறார்கள். உறவு இல்லாத போதும், மாமன், மச்சான், மாப்பிள்ளை என்று அழைத்து உறவாகிப் போனவர்கள் வாழ்ந்த, இன்றும் வாழ்கின்ற மண் அல்லவா, நமது மண்.
—
இந்த உலகம் மண் சார்ந்தே இயங்குகிறது. மண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
அவர் மண்தான் சாமி என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
மண்ணை அள்ளி வாயில் போட்டு சிறிது நேரம் மென்றுவிட்டு, துப்பிவிட்டுக் கூறுவார்.
மணியாரே, மண்ணுல சத்து இறங்கிடுச்சி. கீதாரிய வரச்சொல்லி ஒரு பாச்ச கிடையப் போடுங்க அல்லது கொழுஞ்சிய தூவுங்கள்.
—
மண்ணை மென்று பார்த்தே, மண்ணின் தன்மை கூறும் மனிதர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே வியப்பாக இருக்கிறது.
இன்று வயல் வெளிகள் எல்லாம், வாழிடங்களாக, கான்கிரீட் காடுகளாக மாறுவது வேதனையைத்தான் வாரி வாரி வழங்குகிறது.
—
அவரிடம் இருந்து ஒரு இனம் புரியாத வாசம் வரும்.
என்ன வாசம் தாத்தா என்று கேட்டால். அது மரத்தின் வாசனை பெரியவனே என்பார்.
எல்லா மரத்தையும் கிள்ளிப் பார்த்து, அதில் வரும் பாலை மோர்ந்து பார்த்து சொல்லி விடுவார்.
இந்த மரத்தை வெட்டலாம்.
இந்த மரம் வைரம் பாய்ந்த மரம்.
இது வைரம் பாயாத மரம்.
கிராமத்தில் ஒதியன் மரம் ஒன்னுக்கும் ஆகாது என்பார்கள். ஆனால் ஒதியன் பலகையில் செய்த கட்டிலில் படுத்தால், ஒரு நோயும் அண்டாது என்பார்.
அவர் மரத்தைப் பற்றி பிரமிப்பூட்டும் பல அரிய தகவல்களைச் சொல்வார்.
நம்ம ஊரே புன்னை மரம் செழித்து வளர்ந்த புன்னைக் காடுடா பெரியவனே என்பார்.
தாத்தா கள்ளு குடிப்பது தப்புதானே என்று கேட்டேன்.
மரம் எப்படிடா, நமக்கு தப்பானதைக் கொடுக்கும், நமக்கு நல்லதை மட்டுமே கொடுக்கும் மரம் ஒன்றும் மனுஷ பய கிடையாதுடா.
—
மரத்தை, மண்ணைப் போற்றிய, தங்கள் உயிருக்கு உயிராய் நேசித்த மனிதர்கள் இன்று குறைந்துதான் போய்விட்டார்கள்.
—
கலைஞர் வருகிறாரா, கூப்பிடுங்கள் காடியை.
ஜெயலலிதா வருகிறாரா, கூப்பிடுங்கள் காடியை.
மூப்பனார் வருகிறாரா, கூப்பிடுங்கள் காடியை.
தளபதி வருகிறாரா.
இலக்கிய விழாவா,
வைரமுத்து வருகிறாரா,
திருமண விழாவா,
தலைவன் படம் நாளைக்கு ரிலீசா,
யாராவது இறந்து விட்டார்களா,
முதலில் தேடுவது காடியைத்தான்.
காடி, தஞ்சையில் போஸ்டர் ஒட்டுபவர்.
அண்ணே, எத்தனை போஸ்டர் இதில இருக்கு. எந்தெந்த இடத்தில் ஒட்ட வேண்டும் சொல்லிட்டுப் போங்கள் என்பார்.
காலையில் பார்த்தால், சொன்ன இடமும், கொடுத்த போஸ்டரும் சரியாக ஒட்டியிருக்கும்.
அதனால்தான் அவரை, இன்றும் தேடி வருகிறார்கள்.
நேற்று வசந்த் வந்தான், வாருங்கள் சசி, காடியைப் பார்த்துவிட்டு வருவோம்.
ராஜா கலையரங்கத்தில், திரைக்கு முன்பு போஸ்டரில் படுத்து இருந்தார்.
பரஸ்பர விசாரிப்பிற்குப் பிறகு, வசந்த் மூவாயிரம் பணத்தை காடியிடம் கொடுத்தான்.
காடி பணத்தை வாங்கவில்லை.
இது எல்லாம் சிரமமே கிடையாது அண்ணே.
புதுசா சிரமத்தைப் பார்ப்பவர்களுக்கு, இது சிரமமாகத் தெரியும்.
நாங்கள் சிரமத்தோடு வாழ்ந்து, சிரமத்தோடு வந்தவர்கள்.
எங்கள் தாத்தா பர்மாவில் இருந்து, மாட்டு வண்டியில், எங்க அப்பா, எங்க அப்பாவோட கூடப் பிறந்த சித்தப்பா மூன்று பேர், அத்தை இரண்டு பேரோடு புறப்பட்டோம்.
வரும் வழியில், வண்டி மாடு, தாத்தா மற்றும் சித்தப்பா இரண்டு பேர், ஒரு அத்தை எல்லாம் செத்துப் போய்விட்டார்கள்.
இங்கு வந்த ஒரு அத்தையும், கல்யாணத்துக்குப் பிறகு சிலோனுக்குப் போனுச்சு. அது உசிரோடு இருக்கா இல்லையா என்றே தெரியவில்லை அண்ணே.
இந்தக் காலத்துல சிரமம் என்று புலம்புபவர்கள், சிரமத்தைப் பார்க்காதவர்கள் அண்ணே.
இந்தப் பணத்தை, மேம்பாலம் அனாதை இல்லத்தில் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு, பிம்பங்கள் அற்ற திரையின் முன்பு, விரிக்கப்பட்ட போஸ்டரில் போய் படுத்துக் கொண்டார்.
—
போஸ்டர் காடி.
படிக்கப் படிக்க மெய்சிலிர்த்துப் போய்விட்டேன்.
காரணம், இந்த போஸ்டர் காடியை நன்கறிவேன்.
இன்றும் என் அலைபேசியில், போஸ்டர் காடியின் எண் பத்திரமாய் இருக்கிறது.
சற்றேரக்குறைய இருபது வருடப் பழக்கம்.
கரந்தைத் தமிழ்ச் சங்க விழாக்களுக்கானப் போஸ்டர்களை, காடியிடம், நான்தான் கொண்டுபோய் கொடுப்பேன்.
போஸ்டர்கள் அச்சிடும் அச்சகத்தில் தாமதமாகும் என்று தெரிந்தால், காடியிடம் சொல்லிவிட்டால் போதும்.
இரவு எவ்வளவு நேரமானாலும், அவரே அச்சகத்திற்குச் சென்று, போஸ்டர்களைப் பெற்று, விடிவதற்குள் தஞ்சாவூர் முழுவதும் ஒட்டிவிடுவார்.
இவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் தீவிர ரசிகர்.
இவருக்குத் தன் பிறந்த நாள் நினைவிருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர்., அவர்களின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், போஸ்டர் காடி எனத் தன் பெயர் போட்ட போஸ்டர்களை, தஞ்சை முழுவதும் ஒட்டிக் கொண்டே இருக்கிறார்.
நான் அறிந்த காடியை, இந்நூலில் சந்தித்ததும், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வறுமையிலும் நேர்மை.
செய்யும் தொழிலில் உண்மை.
இவர்தான் போஸ்டர் காடி.
—
திண்ணை
இருந்த எங்கள்
வீட்டில்
அப்பாயிகளும்
அம்மாச்சிகளும்
இருந்தார்கள்.
எதிர்வீட்டு
அத்தைகளும்
பக்கத்துவீட்டு
அக்காக்களும்
வந்துவிடுவார்கள்.
காணக்கிடைக்கா
சிரிப்பும் சில பல
கதைகளோடும்
தொடங்கப்படும்.
கீந்திண்ணையில்
தாயக்கட்டை
மேந்திண்ணையில்
பல்லாங்குழி.
இத்திண்ணை
உள்வாங்கிய கதைகளை
பெரும் இரவில் மிக
நேர்த்தியாக
எங்களுக்கு
கடத்திவிட்டார்கள்
அப்பாயிகளும்
அம்மாச்சிகளும்.
—
இன்று வீடுகளில், அப்பாயிகள், அம்மாச்சிகள், தாத்தாக்கள் இல்லை.
வீட்டில் திண்ணைகளும் இல்லை.
அன்று அடுத்தடுத்த இரு வீடுகளுக்கும் இடையே, பொதுவாய் ஒரே ஒரு சுவர்தான் இருந்தது.
இன்று ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும், தனித் தனி சுற்றுச் சுவர்.
ஒவ்வொரு வீடும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தனக்கான எல்லையினை வரையறுத்துக் கொண்டு, அனாதைபோல் தனித்து நிற்கிறது.
திண்ணை இருந்த வீடு
தஞ்சாவூர்க் கதைகள்
படிக்கப் படிக்க மனதுள் ஓர் இனம் புரியா உணர்வு ஊடுருவி உள்ளத்தை உலுக்குகிறது.
இன்று அகவை அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
திண்ணையோடும், மண்ணின் வாசத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வை என் பெற்றோர் எனக்கு அளித்திருக்கிறார்கள்.
எங்கள் தெருவே, மாலை நேரங்களில், எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடும், கதைகள், சிரிப்புகள் சில்லறையாய் சிதறும்.
மண்ணில் புரண்டிருக்கிறேன், ஆற்றில் நீச்சல் அடித்து மகிழ்திருக்கிறேன்.
என் பெற்றோர் எனக்குக் கொடுத்ததை, என்னால் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க இயலவில்லை.
இன்று என் மகனும், மகளும் நான்கு புறமும் சுற்றுச் சுவருடன் கூடிய வீட்டில் வளர்கிறார்கள்.
திண்ணை இருந்த வீடு
படிக்கப் படிக்க மனம் பின்னோக்கிப் பறக்கிறது.
இளமைக்கால நினைவலைகளில் மூழ்கித் திளைக்கிறது.
அதே சமயம், என் பெற்றோர் எனக்குக் கொடுத்ததை, நான் என் பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லையே எனும் குற்ற உணர்வும் உள்ளத்தே எழத்தான் செய்கிறது.
திண்ணை இருந்த வீடு
சமூகத்தில புலப்படும் புறக்கூறுகளைக் கண்டு, அதைத் தன் மனதில் ஆண்டாண்டு காலமாய் தேக்கி வைத்திருந்து, வாய்ப்பு கிட்டியவுடன், வெள்ளைத் தாளில், காட்டாற்று வெள்ளமென ஓட விட்டிருக்கிறார்.
செம்மண்ணால் திண்ணைகள் எழுப்பி, அதன்மேல் மாட்டுச் சாணம் மொழுகி, அந்தக் குளிர்மையில் உறங்குவோமே, ஒரு உறக்கம், அது இனி கிட்டாதா என ஏங்கித் தவிக்கிறார்.
இப்பொழுது நான் வசிக்கும், தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதியில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும், தஞ்சையின் மனோஜ்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.
திரைப்படத் துறையில் இணை இயக்குநராய் பணியாற்றி வருபவர்.
நான் எதுவும் செய்யவில்லை.
நான் எதுவும் எழுதவில்லை.
எல்லாம் இந்தக் காவிரிதான் எனக்குக் கொடுத்தது.
காவிரி வண்டல்களை மட்டும் தரவில்லை.
முண்டாசு கட்டிய வெள்ளந்தி மனிதர்களை, புள்ளி வைத்த கோலங்கள் நிறைந்த தெருக்களை, திண்ணையில் கதைகள் பேசி, கதைகளாகிப் போன அப்பாயிகளை, அம்மாச்சிகளை, தாத்தாக்களைத் தந்தது இந்தக் காவிரிதான்.
காவிரியில் இருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
நான் பெற்றது சிறிதே என்கிறார் சசி எம்.குமார்.
சின்னச் சின்னக் கதைகளாக 23 கதைகள்.
கதைகள் என்பது கூட தவறு.
வாழ்வியல் அனுபவங்கள்.
திண்ணை இருந்த வீடு
சசி எம்.குமார் அவர்களின் எழுத்து வழியே, என் இளமைக்கால வாழ்வியலுக்குள் மீண்டும் புகுந்து பயணித்து, கடைசிப் பக்கத்தைத் தாண்டிய பிறகும், நூலில் இருந்து வெளியே வர இயலாமல் தவித்துத்தான் போய்விட்டேன்.
இந்நூல், இந்நூலின் ஆசிரியருக்கு இருக்கும் ஆசையை, வரும் காலத்தில் திண்ணை வைத்த, கதவு சாத்தப்படாத வீடு ஒன்று கட்ட வேண்டும், எனும் நூலாசிரியரின் ஆசையை, எனக்குள்ளும் எழுப்பி விட்டிருக்கிறது, தூண்டி விட்டிருக்கிறது.
வாய்ப்பும் பொருளும் கிடைக்கும்போது, சுற்றுச் சுவருக்குள் அடங்கிய வீடாக இருந்தாலும், என் வீட்டிலும் ஒரே ஒரு திண்ணையினையாவது எழுப்பிவிட வேண்டும் எனும் உறுதி பிறந்திருக்கிறது.
திண்ணை இருந்த வீடு
படித்துப் பாருங்கள்.
வெள்ளந்தி மனிதர்களைச் சந்தித்து ஏங்கிப் போவீர்கள்.
—————————————————
திண்ணை இருந்த வீடு
சசி எம்.குமார்
சந்தியா பதிப்பகம்,
விலை ரூ.110
படங்களும் பகிர்வும் : கரந்தை ஜெயக்குமார்.