(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 5
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். லதா, டாக்டர் சிவராமன் என விசாரணையை நடத்திவிட்டு பாடியை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பி விட்டு கிளம்புகிறார்.
நடப்பது:
பொன்பலத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டு மதியத்துமேல்தான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார் சுகுமாரன். அதற்கு இடையே டி.எஸ்.பி வேறு போன் செய்து ‘என்னாச்சு…? எதுவும் தடயம் கிடைத்தாதா…?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு இருக்க டென்சனை இன்னும் அதிகமாக்கிவிட அதை வந்ததும் வராததுமாக ஸ்டேசனில் இருந்த கான்ஸ்டபிளிடம் காண்பித்து விட்டு அவர் வாங்கிக் கொண்டு வந்த டீயைக் குடித்தபடி யோசிக்கலானார்.
‘எந்த ஒரு கொலை என்றாலும் ஏதாவது ஒரு தடயம் கிடைத்து விடும். அதை வைத்து நூல் பிடித்தாற்போலச் சென்றால் எப்படியும் கொலையாளியைப் பிடித்து விடலாம். ஆனால் இந்தக் கொலையில் எல்லாம் கிளீன்… ஒரு தடயமும் கிடைக்கவில்லை. தடயம் இல்லாமல் எந்தப் பொறியை வைத்து கொலையாளியைப் பிடிப்பது..? ஒரு தடயமும் விடாமல் மிகவும் துல்லியமாக கொலை செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட திறமைசாலியாக இருக்கணும்..? எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது..?’ அவரின் யோசனையைக் கலைத்தது செல்போன்.
“என்ன மாமா… சொல்லுங்க?” என்றவர் “என்னது இந்த வாரமா? சான்ஸே இல்லை… இங்க ஒரு கொலை… செத்தது பெரிய பிஸினஸ்மேன்… கொலை நடந்து இன்னும் முழுசா ஒருநாள் கூட முடியலை… அதுக்குள்ள டி.எஸ்.பி. கூப்பிட்டு காட்டுக் கத்தாக் கத்துறாரு… ஆளு கொஞ்சம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்ன்னு தோணுது… மேலிடத்துப் பிரஷர் வேற… எங்கிட்டும் நகர முடியாது… கொலைக்கான மோட்டிவ் என்ன..? கொலையாளி யார்…? அப்படின்னு கண்டுபிடிக்காம எனக்கு ஊருக்கெல்லாம் வர நேரமே இல்லை… முடிஞ்சா கவியை அனுப்பி வைக்கிறேன்… சாரி மாமா…” என்றவர் எதிர்முனை சொல்லியதைக் கேட்டுவிட்டு “ஓகே அப்புறம் கூப்பிடுறேன்…” என்று கட் செய்தார்.
‘எங்கிருந்து ஆரம்பிப்பது…? பேசாமல் டிடெக்டிவ் முருகனை இதுல இறக்கலாமா..?’ என்று யோசித்தவர் ஒரு பேப்பரில் வட்டமிட்டு அதில் வலம் இடம் மேலிருந்து கீழ் என கோடு போட்டு நாலாகப் பிரித்தார். லதா, டாக்டர், வாட்ச் மேன் என ஒவ்வொரு பெயராக எழுதினார். மீதமிருந்த கால் பகுதியில் கேள்விக்குறி போட்டு வைத்தார். அதையே ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இந்தக் கொலைக்கும் இவர்கள் மூவருக்கும் சம்பந்தம் இருக்குமா? இவர்கள் இல்லையென்றால் நாலாவதாக கேள்விக்குறிக்குள் மறைந்து நிற்கும் அந்த நபர் யார்? உறவா… பழக்கமா… பகையா… அல்லது காசுக்காக கொலையா?’ என மண்டையைப் போட்டுக் குடைந்தார்.
‘சமையக்காரி லதாவை சந்தேக வட்டத்துக்குள் வைக்க முடியலை… ஏன்னா அவளோட பதில்களும் பார்வையும் அவளை வெளியில் நிறுத்தச் சொன்னது. அடுத்தது டாக்டர்… ஆனா சமூகத்துல அந்தஸ்தோட இருக்க அவரு எதுக்காக இதைச் செய்யணுமின்னு யோசிக்க வேண்டியிருக்கு… இருந்தாலும் ஒரு கண் வைப்பது நல்லது… மூணாவதாக வாட்ச் மேன்… இவனுக்கு தெரியாம அங்க யாரும் வந்திருக்க முடியாது.. பொன்னம்பலம் சொன்னதைக் கேட்டு ஏன் இவனை விசாரிக்காமல் வந்தேன்… டாக்டர் வரவும் இவனை மறந்துட்டேனா…? அப்ப இதுல முக்கியமான ஆள் இவன்தானா..? இவனை விசாரித்தால் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கும் விசாரணைக்கு ஒரு வழி கிடைக்குமா…?’ என்று யோசித்தபடி அவனின் பெயரை சிகப்பு இங்கினால் வட்டமிட்டார்.
செல்போனை எடுத்து பொன்னம்பலத்தைக் கூப்பிட்டார்.
“சார்… சொல்லுங்க சார்…” எதிர்முனையில் பொன்னம்பலம் மரியாதையோடு பேசினார்.
“என்ன எல்லாம் முடிஞ்சதா?”
“இன்னைக்கி போஸ்ட் மார்டம் பண்ணி ஈவ்னிங் ரிசல்ட் தர்றேன்னு சொல்லிட்டாங்க… கைரேகை ரிப்போர்ட்டும் ஈவ்னிங் வந்திரும் சார்…”
“அவரு பசங்க வந்தாச்சா..?”
“வந்தா ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு வரச்சொல்லி கான்ஸ்டபிள்க்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன் சார்… எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திருவாங்க சார்…”
“சரி… சரி… இப்ப நீங்க அங்கே இல்லையா…? எங்க இருக்கீங்க…?”
“ஹாஸ்பிடல் வந்தேன் சார்… டாக்டரிடம் பேசினேன்…”
“ஓ…. அப்புறம் அந்த வாட்ச் மேன்….?” மெதுவாக இழுத்தார்.
“அவனுக்கு என்ன சார்…”
“இல்லை அவன விசாரிச்சா கொஞ்சம் கிளியராகும்ன்னு தோணுது..?”
“நான் விசாரிச்ச வரைக்கும் அவனுக்கு இதுல சம்பந்தம் இருக்க மாதிரி தெரியலை சார்… அவரோட பசங்க வரட்டுமே…”
“இல்லை ஒரு சந்தேகம்… விசாரிக்கலாமே…. நமக்கும் மூடியிருக்க கதவு திறக்குதான்னு பாக்கலாம்… ஏன்னா தீவிரமா விசாரித்தான் நம்மளால என்னங்கிறதை பாயிண்ட் அவுட் பண்ண முடியும்…”
“ம்… சரி சார்”
அப்ப நீங்க ஒண்ணு செய்யிங்க… அப்படியே ஸ்பாட்டுக்குப் போயி வாட்ச் மேனை கூட்டிக்கிட்டு வாங்க…”
“சரி…சார்… ஆனா என்ன மோட்டிவ்வால நடந்திருக்குங்கிற க்ளூ நமக்கு கிடைக்கவேயில்லையே சார்…”
“அதைக் கண்டுபிடிக்கத்தானே நாம இருக்கோம்… எப்படியும் பிடிக்கத்தானே போறோம்… என்ன ஆளு மதுரையில பெரிய பிஸ்னஸ்மேன்…. மேலிடத்துல இருந்து பிரஷர் வர ஆரம்பிச்சிருச்சு… டி.எஸ்.பி. வேற புடுங்க ஆரம்பிச்சிட்டாரு… அவருக்கென்ன தெரியும் நாமதானே அலையணும்… எனிவே… நீங்க வாட்ச்மேனோட வாங்க…. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்”
“ஓகே சார்…”
நேரம் நகர்ந்து கொண்டிருக்க, பொன்னம்பலம் ரெத்தினத்துடன் வந்து சேர்ந்தார்.
“நீதான் ரெத்தினமா?” எதிரே ஒடிசலாய் நின்றவனைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.
“ஆ…ஆமா…சார்…”
“என்ன தண்ணி அடிச்சிருக்கியா?”
“ம்…. ஐயாவோட சாவைத் தாங்கமுடியலை சார்… அதான் கொஞ்சமா ஊத்திக்கிட்டேன்…” தலையைச் சொறிந்தான்.
“கவலைக்கும் தண்ணி… சந்தோஷத்துக்கும் தண்ணி… அப்படித்தானே…?”
ஒன்றும் பேசாமல் மீண்டும் தலையைச் சொறிந்தான்.
“ஆமா இது உண்மையிலேயே கவலையா… இல்லை சந்தோஷமா…?” நக்கலாய்க் கேட்டதும் ரத்தினத்துக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது.
“சா… சார்… எங்கம்மா சத்தியமா புண்ணியவான் செத்துட்டாரேன்னு கவலைதான் சார்… எதுக்கு சார் நான் சந்தோஷப்படணும்…” கண்ணீரோடு கேட்டான்.
“சரி.. அழுது நடிக்காதே… இது சினிமா இல்லை. அடிச்சி துவைச்சி காயப்போட்டுடுவேன்… கேக்குற கேள்விக்கு சரியான பதில் வரணும்… என்ன..?” பார்வையில் கோபத்தை வைத்து வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார்.
“ம்…” தலையை ஆட்டினான்.
“ஆமா… நீதான் ஐயாவுக்கு எல்லாமுமாமே?”
அவரின் கேள்வி புரியாமல் விழித்தான்.
“என்ன பாக்குறே… அவரு இங்க வர்றப்போ பொண்ணு, தண்ணி எல்லாத்தையும் நீதான் அரேஞ்ச் பண்ணுவியாமே..?”
“சார்… ஐயாவுக்கு பொண்ணுங்க பழக்கமெல்லாம் இல்லை…. அதே மாதிரி அவரு பாரின் சரக்குத்தான் அடிப்பாரு… மொத்தமா வாங்கி வச்சிருப்பாரு….”
“உனக்குக் கொடுப்பாரா?”
“எப்பவாச்சும் கொடுத்து அடிடாம்பாரு…”
“ம்…. நேத்து ராத்திரி யாரு வந்தாங்கன்னு தெரியுமா?”
“எப்பவும் வர்ற டாக்டர் சார் வரலை…. ஐயா தனியாத்தான் இருந்தாரு. லதாப்பொண்ணு போனதும் ஏழு மணி வாக்குல என்னைக் கூப்பிட்டு இருநூறு ரூபாய் கொடுத்து போயி எதாவது சாப்பிட்டு வந்து படுத்துத் தூங்குன்னு சொல்லிட்டு கதவை சாத்திக்கிட்டார்.”
“எதுக்கு பணம் கொடுத்தாரு… எப்பவும் கொடுப்பாரா..?”
“சம்பளம் நல்லாக் கொடுப்பார்… எப்பவாச்சும் சந்தோஷமா இருந்தா காசு கொடுப்பார். நேத்து சந்தோஷமா இருந்தது மாதிரி தெரிஞ்சது….”
“அவரு சந்தோஷத்துக்கு என்ன காரணம்?”
“தெரியலை…”
“ம்… நீ போயி தண்ணி அடிச்சிட்டு வந்தே இல்லையா?”
“ஆமா… வந்து மெயின் கேட்டைப் பூட்டிட்டு முன்னால எரிஞ்ச லைட்டெல்லாம் அமத்திட்டு பின்னால என்னோட ரூம்ல போயி படுத்துட்டேன்…”
“நீ மட்டுமா இல்ல கொலைகாரங்களுமா..?”
“சார்…”
“பின்ன என்னய்யா நீ வாட்ச்மேன்தானே… நைட்ல முழிச்சிருக்க மாட்டியா..?”
“இங்க பயமில்லை சார். நைட்டு லேட்டாப் படுக்கப் போயிருவேன். எதாவது சத்தம் கேட்டா மட்டும் எழுந்து ஒரு ரவுண்ட் போயிட்டுப் படுப்பேன். அதான் சொன்னேனே ஐயா என்னைய சாப்பிட்டுப் படுத்துக்கச் சொன்னாருன்னு”
“அப்ப நீ வாட்ச்மேனில்லை… ஆளில்லாத வீட்டுக்கு பகல் காவக்காரன்… அப்படித்தானே…”
“ஆ… ஆமா… சார். செடி, கொடி காஞ்சு போகாம தண்ணி பாச்சிக்கிட்டு, தோட்டத்தச் சுத்தமா வச்சிக்கிறதுதான் என்னோட வேலை. அந்த வீட்டைப் பாத்துக்கிறதால வாட்ச்மேன்னு சொல்லுவாங்க… அதுவும் கெத்தா இருக்கதால நானும் அப்படியே பார்மாயிட்டேன்” வெற்றிலைக் கறை பற்கள் தெரியச் சிரித்தான்.
சுகுமாரன் முறைத்ததும் தலை தாழ்த்திக் கொண்டான்.
“அப்ப நீ படுக்கப் போற வரைக்கும் அந்த காம்பவுண்டுக்குள்ள வேத்தாளு வரலை”
“இல்லை சார்…”
“உன்னோட ரூம்ல நீ மட்டும்தான் இருந்தே…”
“ஆ… ஆமா…. சார்… நா…நா… ன் மட்டுந்தான் இருந்தேன்…” அவனுக்கு வியர்த்தது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
( திங்கள்கிழமை – விசாரணை தொடரும்)
Leave a reply
You must be logged in to post a comment.