வெங்கட் நாகராஜ்
2018ம் வருடத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில் பதினோறு மணி நேரம் அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறேன் – உடம்பு முழுவதும் ஓய்வு கொடுக்கச் சொல்லி கதறிக் கொண்டிருந்தது – கண்களும் கொஞ்சமாவது என்னை மூடிக்கொள்ள அனுமதி தா என்று கெஞ்சியது. வீட்டிற்குச் சென்று ஒரு குளியல் போட்டு சிம்பிளாக ஒரு அவல் உப்புமா செய்து சாப்பிட்டுப் படுக்க வேண்டியது தான் என நினைத்தபடி வந்து கொண்டிருந்தேன். பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தபோது எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரே கூச்சல் – சண்டை….
குடியிருப்புப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களை நான் அறிந்திருக்கவில்லை. யார் இருக்கிறார்கள், எங்கே வேலை செய்கிறார்கள் என எதுவும் தெரியாது. இருக்கும் பல குடும்பங்களில் நான் அறிந்த குடும்பங்கள் ஒற்றை இலக்கத்தில் தான். யார் எந்த வீடு என்பது கூடத் தெரியாது. எத்தனையோ பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கலாம் – வீட்டுக்கு வீடு வாசப்படி! நான் பகல் நேரம் முழுவதுமே வீட்டில் இருப்பதில்லை என்பதால் இந்த விவரங்கள் அவ்வளவாகத் தெரியாது. அப்படி ஒரு குடும்பம் தான் சண்டையில் ஈடுபட்டு இருந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை – இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்தும், தள்ளியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமும் – எதற்கு சண்டை என்று தெரியவில்லை.
சண்டை ரொம்ப நேரமாகவே நடக்கிறது போலும். பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆண் காவலர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரால் இந்தப் பெண்கள் சண்டையை விலக்க முடியவில்லை. அலைபேசி மூலம் பெண் காவலர்களை வரவழைக்கப் பேசிக் கொண்டிருந்தார். மாமியார், மருமகளை இழுத்துக் கொண்டு இருக்கிறார் – மருமகளோ மாமியாரின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டு, அவரை தள்ளிவிட முயற்சி செய்கிறார். இத்தனை நடந்து கொண்டிருக்கும்போதும் அவர் வீட்டிலிருந்து ஒரு ஆண் கூட வெளியே வரவில்லை – அந்தப் பெண்ணின் கணவர் உட்பட. பார்த்துக் கொண்டிருக்கும் யாருமே சண்டையை விலக்க முயற்சிக்கவில்லை – நான் உட்பட!
பக்கத்திலிருந்த பூங்காவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மூலமாகத் தெரிந்த விஷயம் – இது அடிக்கடி நடக்கும் சண்டை. மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆவதில்லை. ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் பெற்ற பிறகும் சண்டை ஓயவில்லை. ஆண் குழந்தையை மட்டும் வைத்துக் கொண்டு மருமகளையும், பெண் குழந்தையையும் விரட்டி விட்டார்களாம். எனது ஆண் குழந்தையைக் கொடு, என்று அவ்வப்போது அந்தப் பெண் வந்து கேட்க, சண்டை நடக்குமாம். இன்றைக்கும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதில் குடியிருப்பு வாசிகள் யாருமே தலையிட முடியாது. பல முறை காவல் நிலையத்திலிருந்தும், பெண்களுக்கான ஆதரவு கொடுக்கும் அரசுத்துறை அலுவலர்கள் வந்தும் சொல்லிப்பார்த்து விட்டார்கள். தீர்வே இல்லை என்றும் தெரிந்தது.
மாமியார், மருமகளை, குடியிருப்புப் பகுதியிலிருந்து எப்படியாவது இழுத்துக் கொண்டு வெளியே மந்திர் மார்க் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட முயற்சி செய்கிறார். இருந்த ஒரே ஆண் காவலர் சண்டையைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் நடந்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்கள் அங்கே இருந்தாலும் என்னாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை – யாரென்று தெரியாமல், எதற்குச் சண்டை என்றும் தெரியாமல் தலையிட எனக்கும் இஷ்டமில்லை. ஆனால் அந்த இடத்தில் இருந்த போது மட்டுமின்றி, சில நாட்கள் வரை என்னை ரொம்பவே பாதித்த ஒரு காட்சி உண்டு. அது…..
சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் பெண் குழந்தை, “எங்க அம்மாவை, பாட்டி அடிக்கிறாங்க, பாட்டி அடிக்கிறாங்க! அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க, பாட்டி அடிக்காதீங்க!” என்று அழுத காட்சியை என்னால் மறக்கவே இயலவில்லை. பெண்களின் சண்டையில் குடியிருப்பில் இருந்த மற்ற பெண்களே ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் உள்ளே புகுந்து சண்டையைத் தடுக்க முயற்சி செய்யத் தோன்றவுமில்லை. அதுவுமில்லாமல் தடுக்க வேண்டிய காவலரே சும்மா இருக்கும் போது நான் என்ன செய்து விட முடியும் என்றும் தோன்றியது. அங்கிருந்து அப்பெண் குழந்தையின் அழுகையைத் தடுக்க ஏதும் செய்ய இயலாத நிலையில் வருத்தத்துடன் வீடு நோக்கி நடந்தேன். பெண் காவலருடன் காவல் துறை வாகனம் வந்த சப்தம் கேட்டது.
நிற்காமல் வீடு வந்து சேர்ந்து விட்டேன். அலுப்புடன் இருந்தாலும் அந்தக் காட்சி தந்த அதிர்ச்சியிலும், அந்தப் பெண் குழந்தை சிறு வயதிலேயே படும் கஷ்டங்களையும் நினைத்து வருத்தம் தான் வந்தது. வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலை. என்னவோ போங்க, அந்தக் குழந்தையின் எதிர்காலம் நினைத்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது. திருமணம் புரிந்து, இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவனை நினைத்தால், இத்தனை பிரச்சனை நடக்கும்போதும் வீட்டுக்குள்ளிருந்து வெளியேவே வராத அந்தக் கணவனை நினைத்தால், கோபமும் வருகிறது. என்ன மனிதர்களோ…?
இப்போதும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற எண்ணம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.
நன்றி : படமும் பகிர்வும் திரு.வெங்கட் நாகராஜ்
One comment on “மனதை விட்டு அகலாத காட்சி…”
venkatnagaraj
எனது கட்டுரை ஒன்றை இங்கே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்...