(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 14
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா… இவனா… அவனா… என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக வருண் மற்றும் பொன்னம்பலத்துடன் சிவராமனை பார்க்க ஊட்டிக்கு விரைகிறார்.
நடப்பது:
ஊட்டி.
தணிகாசலம் கொலை செய்யப்பட்ட வீட்டில் வருண், சுகுமாரன் மற்றும் பொன்னம்பலம் அமர்ந்திருந்தனர்.
“வருண்… டாக்டர் சிவராமனுக்கு போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்க…” என்று சுகுமாரன் சொன்னதும் அவருக்குப் போன் செய்தான் வருண்.
“என்னப்பா வருண்… வந்துட்டியா..?” எதிர்முனையில் சிவராமன்.
“வந்துட்டேன் அங்கிள்…”
“நான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன்… இங்க வர்றியா…? இல்லயில்ல வேண்டாம்… நீ வீட்டு வாசல்ல வெயிட் பண்ணு… நான் உடனே கிளம்பி வாறேன். பிரஷ் பண்ணி குளிச்சிட்டு போலீஸ் ஸ்டேசனுக்குப் பொயிட்டு அப்புறம் நாம் ஹாஸ்பிடல் வரலாம்…”
“இல்ல அங்கிள்… நான் இப்போ நம்ம பண்ணை வீட்லதான் இருக்கேன்… இன்ஸ்பெக்டரும் இருக்கார்… இங்க வந்திருங்களேன்…”
“அங்கயா…?” என்று கொஞ்ச நேரம் யோசித்தவர் “சரி… வாறேன்…” என்றபடி போனைக் கட் பண்ணினார்.
டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த நாகராஜ், “தம்பி வீட்ல எல்லாச் சாமானும் இருக்கு… அந்தப் பொண்ணு லதாவுக்கு போன் பண்ணி சமையலுக்கு ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வரச் சொல்லவா… வந்து சமைச்சிக் கொடுத்துட்டுப் போகும்…” என்றான்.
“வேண்டாண்ணே… வெளியில சாப்பிட்டுக்குவோம்…” என்றதும் “சரி தம்பி” என்றபடி வெளியேறினான்.
சிறிது நேரத்தில் சிவராமனின் கார் வந்து நிற்க, வருண் மரியாதை நிமித்தமாக வாசலுக்குச் சென்றான். அதிலிருந்து இறங்கிய சிவராமன் ரொம்பச் சோர்வாகத் தெரிந்தார்.
“வாங்க அங்கிள்… என்ன ரொம்ப டல்லா இருக்கீங்க…”
“என்னப்பா பண்ணச் சொல்றே… உங்க அத்தை விழுந்துல இருந்து எனக்கு சரியான தூக்கமில்லை… எங்களுக்கு ஒண்ணுன்னா பாக்க யார் இருக்கா சொல்லு… அவளுக்கு நான்… எனக்கு அவ… அதுதானே எங்களுக்கு விதிச்ச வாழ்க்கை…” என்றபடி உள்ளே நுழைந்தவர் “வாங்க சார்” என்றபடி சோபாவில் அமர்ந்திருந்த சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் கை கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்தார்.
“சொல்லுங்க சார்… ஏதாவது துப்பு கிடைச்சதா..?”
“துப்பா… ஆளையே நெருங்கிட்டோம் சார்…” என்றார் பொன்னம்பலம்.
“ஆளையே நெருங்கிட்டீங்களா…? அப்ப பிடிக்க வேண்டியதுதானே… ஆமா கொலைகாரன் யார்…? எதுக்காக கொலை செய்தான்…?” சிவராமன் பதட்டமில்லாமல் கேட்டதும் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன சார் முழிக்கிறீங்க…? எவனா இருந்தாலும் பிடிச்சி உள்ள போட வேண்டியதுதானே…?” என்றதும் வருண் எழுத்து அறைக் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு “பிடிச்சி உள்ள போட்டுடலாம்… ஆனா அதுக்கு முன்னாடி எதுக்காக கொலை பண்ணினேன்னு கொலைகாரன் சொல்லணுமில்ல…” என்றான்.
“கொலைகாரன் சொல்லணுமின்னா… இங்க நாமதானே வருண் இருக்கோம்… இதுல யாரு…. கொலை…” கொஞ்சம் யோசனையோடு பேச்சை நிறுத்தியவர் “அப்ப நாந்தான் கொலைகாரானா…? அதுக்குத்தான் இங்க வரச்சொன்னீங்களா..? என்னப்பா சொல்றீங்க..?”
“நடிக்காதீங்க சார்… இங்க உங்களுக்கு யாரும் ஆஸ்கார் அவார்டு தர மாட்டாங்க…” என்றார் சுகுமாரன்.
“இன்ஸ்பெக்டர்… நா.. நான்…”
“இங்க பாருங்க… நீங்கதான்னு நாங்க முடிவு பண்ணியாச்சு…. வருணோட அம்மா, அவங்க அப்பா பத்தி தப்புத்தப்பா சொன்னதுல கூட ஒரு நியாயம் இருக்கு… ஆனா நீங்க எதுக்கு அவருக்கிட்ட தணிகாசலத்தைப் பற்றி தப்புத்தப்பாச் சொல்லணும்..? அதுபோக தர்ஷிகாவுக்கு வாங்கின மாதிரி வைர மோதிரம் நண்பனோட மனைவியான உங்க மனைவிக்கு தணிகாசலம் எதுக்கு வாங்கிக் கொடுக்கணும்..? இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு…. சமுதாயத்துல நல்ல பேர் எடுத்திருக்கிற டாக்டர் நீங்க… உங்க தொழிலுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு… நீங்களே நடந்ததைச் சொல்லிட்டா கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வேண்டி இருக்காது… இல்லேன்னா…”
“இன்ஸ்பெக்டர் என்ன இது…. இப்படி இங்க வரவச்சி என்னைய குற்றவாளி ஆக்குறீங்க… ஏம்ப்பா வருண் நீயும் இவங்க கூட சேர்ந்து பேசுறே…?”
“அங்கிள்…. இவங்க சந்தேக வட்டத்துல முதல்ல தர்ஷிகா… ஏன்னா அப்பா கொலை செய்யப்பட்ட இந்த வீட்ல இருந்து வைர மோதிரம் எடுத்திருக்காங்க… அப்புறம் அம்மா சொன்னதையும் நீங்க சொன்னதையும் சொல்லப்போய் நான்… என்னைய கொலைகாரன்னு முடிவே பண்ணி கைது பண்ண நினைச்சாங்க… அதுக்கப்புறம்தான் நீங்க எதுக்கு அப்பா பத்தி தப்புத்தப்பாச் சொல்லணும்… அப்பா எதுக்கு ஆண்டிக்கு வைர மோதிரம் வாங்கிக் கொடுக்கணும்… அதை நீங்க வாங்கச் சொல்லி வாங்கினாரா… இல்ல ஆண்டிக்கு தனிப்பட்ட முறையில வாங்கிக் கொடுத்தாரான்னு சந்தேகம் வர இப்ப உங்கக்கிட்ட வந்திருக்கோம். உண்மையைச் சொல்றதும் மறைக்கிறதும் உங்ககிட்டதான் இருக்கு… ஆனா மறைக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஏன்னா அப்பா செத்துப் பொயிட்டாரு… இது சொத்துக்காக நடந்த கொலையோ முன்விரோதக் கொலையோ இல்லை… நம்பிக்கைத் துரோகம். ஆமா அப்படித்தான் சொல்லணும்… நம்பிக்கையை கொன்னிருக்கீங்க. உங்களை நம்பித்தானே அவரு இங்க வந்தாரு… சொல்லுங்க. இதை நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா கேசை நானோ வாபஸ் வாங்கிட்டு போயிடுவேன்… இங்க அப்புறம் நான் வரப்போறதில்லை… இந்த வீட்டையும் வித்துட்டு ஊட்டிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போயிடுவேன். உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமின்னு எல்லாம் எனக்கு எண்ணமில்லை அங்கிள். உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து அது தர்ஷ்க்கு தெரிஞ்சா அவ இன்னும் உடைஞ்சிருவா… எனக்கு அவதான் முக்கியம். பட் எங்கப்பாவை எதுக்காக கொன்னீங்கன்னு எனக்குத் தெரியணும்… அதுவும் இப்பவே தெரியணும்…”
வருண் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் அவனைப் பார்த்த சிவராமன் தனது தலையைத் தாழ்த்திக் கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
“இங்க பாருங்க சார்… இங்க நாம நாலு பேர்தான் இருக்கோம்… நடந்ததைச் சொல்லுங்க… இனி மறைச்சிப் பலனில்லை… இங்க வேண்டாம் ஸ்டேசனுக்குப் போவோம்ன்னு நினைச்சீங்கன்னா அங்க போயிடுவோம்… ஆனா அங்க விசாரணை முறை வேற மாதிரி இருக்கும்… வருண் உங்களை அப்படி எல்லாம் விசாரிக்க கூடாதுன்னு சொன்னதாலதான் இங்க உக்காந்து விசாரிக்கிறோம்….”
நன்றிப் பெருக்கோடு வருணைப் பார்த்த சிவராமன் வேகமாய் “வே… வேண்டாம்… சொல்லிடுறேன்… நான் சொல்லிடுறேன்…” என்றபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக கன்னத்தில் இறங்கியது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(திங்கக்கிழமை – விசாரணை தொடரும்)
Leave a reply
You must be logged in to post a comment.